இந்த நாட்டை யார் ஆண்டாலும், எது ஆண்டாலும் இராமாயணத்தில் கூறி இருப்பது போல ஒரு ஜதை செருப்பு ஆண்டாலும் கூட எங்களுக்குக் கவலை இல்லை. எங்கள் கவலை எல்லாம் எங்களுக்கு இருக்கின்ற ஜாதிக் கொடுமைகள், இழிவுகள் ஒழிய வேண்டும் என்பது தான்!

இப்போது பெரிதாக அடிபடும் தேர்தலில் நின்று சட்டசபைக்கோ, பார்லிமென்டுக்கோ நிற்க வேண்டும் என்று ஆசைப்படுப்படுபவர்கள் அல்லர். ஆசைப்பட்டால் கிடைக்காதவர்களும் அல்லர். எங்கள் கட்சியின் கொள்கைகளில் ஒன்றே என்பது தான். நாங்கள் யாருக்கு ஒட்டுப் போட வேண்டும் என்று கூறுகிறோமோ அவர்களையெல்லாம் ஜெயிச்சு வைத்து காட்டி இருக்கிறோமே!

மற்றவன் பேசுவதை விட நாங்கள் பேசுவது தான் உண்மையானது என்பதை மக்கள் உணர முடியும். எங்களுக்குத்தான் சுயநலம் கிடையாது. எங்களுக்குத்தான் ஒட்டுப் பெட்டி இல்லை. மற்ற எந்தக் கட்சிக்காரன் மேடையேறினாலும் பேசுகின்றதை எல்லாம் பேசி விட்டுக் கடைசியில் எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று தான் கேட்பான்.

நாங்கள் எப்போதாவது ஓட்டுக் கேட்கிறோம் என்றால் எங்களுக்காக அல்ல. சமுதாயக்கேடர்கள் உள்ளே வராமல் தடுக்க இன்னாருக்கு ஒட்டு அளியுங்கள் என்று வேண்டுமானால் கூறுவோம். எங்களை ஒர் அரசியல் கட்சிக்காரர்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள். எங்களுக்கு உங்கள் ஒட்டு தேவை இல்லை.

இரண்டாவது, தேர்தலுக்கு நிற்கின்ற கட்சிகளில் காங்கிரஸ் தான் கொஞ்சம் பரவாய் இல்லை. மற்றக் கட்சிகள் எல்லாம் கேடானவைகள் என்பதை உணர்ந்தே இதனை மக்களுக்கு எடுத்து விளக்கி ஆதரிக்கச் சொன்னோம். இதுவே எங்கள் வேலையும், இலட்சியமும் அல்ல. தேர்தல் முடிந்ததும் எங்கள் வேலைக்கு அதாவது சமூதாயத் தொண்டுக்கு வந்து விட்டோம்.

இன்றைய காமராசரின் காங்கிரஸ் ஆட்சியானது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வி, அறிவு சற்று இருந்த நமது சமூதாயத்துக்குக் கல்வி அளிக்க முன் வந்து பாடுபடுகின்றது.

அடுத்து ஜாதி ஒழிப்புக்கான பணி. இந்தச் ஜாதி ஒழிப்புக்கு இந்த நாட்டில் 2000- ஆண்டுகளாக எங்களைத் தவிர எவனுமே முன்வரவில்லை.

எங்களுக்கு முன் காட்ட வேண்டுமானால் 2500- ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புத்தரைக் கூறலாம். இவர் தான் தோன்றி கடவுள், மதம், ஆத்மா இவற்றைக் கண்டித்து அறிவுப் பிரச்சாரம் செய்து வந்தவர். அவரையும், அவர் மார்க்கத்தையும், பார்ப்பனர்கள் தந்திரமாக ஒழித்துக் கட்டி விட்டார்கள். அவருக்குப் பிறகு நாங்கள் தானே வேறு எவனும் இல்லை.

தோன்றியவன் எல்லாம் ஜாதியையும், முட்டாள்தனத்தையும் பாதுகாத்து நாம் என்றென்றைக்கும் தலை எடுக்காமல் அடக்கிக்கிடக்கவே பாடுபட்டார்களே ஒழிய, நமது முன்னேற்றத்துக்காக சிறிதும் பாடுபடவே இல்லை.

இப்படி பார்ப்பானுக்கு நல்ல பிள்ளையாக நடந்தவன்கள் எல்லாம் பார்ப்பனனால் ஆழ்வாராகவும், நாயன்மார்களாகவும், அவதார புருஷர்களாகவும் ஆக்கப்பட்டார்கள். நாங்கள் தான் இந்தச் ஜாதியையும், மூடப்பழக்க வழக்கங்களையும் ஒழிக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு உயிருடன் இன்னும் இருக்கின்றோம்.

இன்றைய ஆட்சிதான் இதுவரை எந்த ஆட்சியும் இதற்கான காரியங்களைச் செய்யாததைச் செய்து வருகின்றது.

------------------------------

21.11.1962- அன்று தாம்பரம் பொதுக்கூட்டத்தில் பெரியார் ஈ.வெ.ரா சொற்பொழிவு.- "விடுதலை", 30.11.1962

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா

Pin It