ta prohm

அடுத்து நாங்கள் சென்றது, ஏஞ்சலினா ஜோலி நடித்த "லாரா கிராப்ட்" படம் எடுக்கப்பட்டதால் பிரபலமடைந்த டா ப்ராம் (Ta Prahm) என்னும் இடமாகும். இது அங்கோர்தாம் நகர், பேயான் கோயிலைக் கட்டிய ஏழாம் ஜெயவர்மன் கட்டிய ராஜ விகாரம் என்னும் மஹாயான புத்த மதத்தைச் சேர்ந்த மடாலயமும் கலாசாலையும் ஆகும்.

அந்த அரசன் தன தாயார், சகோதரர், குரு நினைவாகக் கட்டியது. கருவறையில் உள்ள முக்கிய கடவுளான "ப்ரஜ்னப்ரமித்தா" மன்னரின் தாயார் சாயலில் அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது. அந்த அறையில் சுவரில் பல துளைகள் உள்ளன. அதில் முன்பு தங்கமும், பல விலையுயர்ந்த கற்களும் கொண்டு அலங்கரிக்கப் பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த மடாலயத்தில் 18 பெரிய குருமார்களும், 614 நடனக் கலைஞர்களும் அடங்கிய 12500 மக்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்க 8 லட்சம் மக்கள் இருந்த கிராமங்கள் சுற்றி இருந்திருக்கின்றன. ஆனால் தற்போது இருப்பதோ மரங்கள் மேவிய கட்டடங்களும், பாசி படிந்த பெரிய கற்களுமே.

இந்தக் கோயிலின் சிறப்பம்சம் - கோயில் கண்டு பிடிக்கப்பட்ட போது, மரங்கள் கற்கட்டடங்களின் மீதும், கற்கோபுரங்களின் மீதும் வளர்ந்த நிலையில் இருந்ததை அப்படியே வைத்திருப்பது தான். பெரிய பெரிய மரங்கள் தங்கள் வேர்களைக் கொண்டு கற்கட்டடங்களின் மேல் படர்ந்து நிற்பதே ஆச்சரியமான விஷயம். மரங்கள் கற்கோபுரங்களின் மேல் வளர்ந்து இருக்கும் சில இடங்களில் அருகில் நின்று படம் எடுக்கவும் வகை செய்திருக்கிறார்கள். மரங்கள் நிற்கும் கட்டடங்களுக்கு மரம், இரும்புத் தூண்கள் நிறுத்தி பாதுகாப்பும் செய்திருக்கிறார்கள்.

ta prohm

மனித முயற்சியின் மேல் இயற்கை மேவி நிற்கும் இந்த இடம் தான் பார்வையாளர்களை அதிகம் ஈர்க்கிறது.

இந்த இடத்தை இருந்தபடியே சீரமைக்கும் நம் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சித் துறை, அப்சரா நிறுவனத்துடன் (authority for the protection and management of angkorwat and the region of siamreap) சேர்ந்து பணியாற்றி இருக்கிறது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு செழிப்புடன் இருந்து, பின் செல்வாக்கிழந்து, இயற்கையால் சிதிலமடைந்து இன்று கண்டுபிடிக்கப்பட்ட பல இடங்கள், அதிலும் நம் கலை, கலாச்சாரத்துடன் தொடர்பு கொண்ட இடங்களைப் பார்த்த மகிழ்ச்சியில் சயாம்ரீப்பிலிருந்து கிளம்பினோம்.

அங்கிருந்து சிங்கப்பூர் வந்து, எனக்கு மிகவும் பிடித்த இடமான சிங்கப்பூர் ஷங்கி விமான நிலையத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு சென்னை வந்து சேர்ந்தோம்.

இவற்றையெல்லாம் பார்க்கும் போது நம் நாட்டில் பல நூறு வருடங்கள் பெருமை வாய்ந்த எத்தனை இடங்கள் இருக்கின்றன! அவற்றில் எத்தனை இடங்களை மற்றவர்களைக் கவரும் வண்ணம் பராமரித்து வைத்து இருக்கிறோம்! நம் அடுத்த தலைமுறையினரும் நம் பழமையை அறிந்து போற்றுவதற்கு என்ன செய்திருக்கிறோம்? என்றெல்லாம் நினைத்தால் சற்று சிரமமாகத்தான் இருக்கிறது.

நமது பராம்பரிய இடங்களைப் பற்றிய பெருமைகளை நம் மக்கள் அனைவரும் அறியும்படி எடுத்துச் சொல்ல வேண்டும். அந்த இடங்களை மற்ற நாட்டினரும், ஏன் முதலில் நாமும் பார்த்து ரசிக்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.

(முற்றும்)