தென்கொரியாவின் தலைநகர் சியோலில் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் எங்கள் மாப்பிள்ளை, மகள், பேரன்களைக் காண்பதற்காக ஆகஸ்ட் 15ம் நாள் சியோல் வந்து சேர்ந்தோம்.

south korea flagஅன்று தான் தென்கொரியாவிற்கும் "சுதந்திர தினம்" என்பதால் எங்கு பார்த்தாலும் அவர்களது கொடி பறந்து கொண்டிருந்தது.

வெண்மையான கொடியின் நடுவில் ஒரு வட்டம். நமது புடவைகளில் இருக்குமே, அந்த மாதிரி மாங்காய் டிசைனில், சிவப்பு நிறத்திலும், நீலநிறத்திலும் இரண்டு மாங்காய்களைச் சேர்த்து ஒரு வட்டம் செய்தது போல் இருந்தது. அதைச் சுற்றி நான்கு புறமும் கருப்பு நிறத்தில் மூன்று கோடுகள்.

இந்தக் கொடி 1948ல் தான் புழக்கத்திற்கு வந்திருக்கிறது. கொரிய மொழியில் கொடி "தேகுக்கி" (T'aegukki)என்று கூறப்படுகிறது. "தேகுக்" (t'aeguk) வட்டத்தின் நடுவில் இருக்கும் இணைந்த "கமா" (interlocked comma) (,) (நம்மூர் மாங்காய்) வைக் குறிக்கிறது. "கி"(ki) என்றால் கொடி.

கொரியாவின் கொடி கீழை நாடுகளின் தத்துவக் கருத்துக்களைக் குறிப்பதாக உள்ளது. நீல, சிவப்பு நிறக் கமாக்கள் "யின்", "யாங்"(yin yang) கீழை நாட்டுத் தத்துவத்தின் அடிப்படையாக உள்ளது. எங்கும், எதிலும் நிறைந்திருக்கும் பிரபஞ்ச இரட்டைகளைக் குறிக்கின்றது. பெண் ஆண், நீர் நெருப்பு, இரவு பகல், இருள் ஒளி, படைப்பு அழிப்பு, நேர் சக்தி (பாசிட்டிவ்) எதிர் சக்தி (நெகட்டிவ்),_ இந்த இரண்டு கமாக்களும் வட்டத்திற்குள் இருப்பது, முடிவில்லாத பிரபஞ்சம் மாறிக்கொண்டே இருந்தாலும், அதிலும் ஒரு இசைவு (harmony) இருப்பதைக் காட்டுகின்றது.

சுற்றி இருக்கும் கோடுகளைக் கூர்ந்து நோக்கினால், இடது மேற்புறம் உள்ள பிளவுபடாத கோடுகள் வானத்தையும், பிளவுபட்ட, வலது கீழ்ப் புறக் கோடுகள் _பூமியையும் _குறிக்கின்றன. வலது மேற்புறம், இரண்டு பிளவுபட்ட கோடுகள் நடுவில் முழுமையான கோடு நீரையும், இடது கீழ்ப்புறம் இரண்டு முழுமையான கோடுகள் நடுவில் பிளவுபட்ட கோடு நெருப்பையும் குறிக்கின்றன‌.

இந்தத் தத்துவங்கள் "book of changes" என்ற பழைய சீனப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன. அதில் பிரபஞ்ச ரகசியத்தைப் புரிந்து கொள்ள "யின் யாங்" (yin yang) தத்துவமும்_ அதாவது எதிரெதிர் சக்திகள் தத்துவமும், எதிர்ப்பும் அதைச் சமன் செய்வதும் (opposition and balance)விளக்கப்பட்டிருக்கின்றன.

சியோலில் இந்தியக் கொடி

"Our nation honours her sons and daughters who answered the call to defend a country they never knew and a people they never met"

"தங்களுக்குத் தெரியாத ஒரு தேசத்தையும், தாங்கள் சந்தித்திராத அந்த தேசத்து மக்களையும் காப்பதற்கு உதவி செய்த மகன்களையும், மகள்களையும் எங்கள் நாடு பெருமைப்படுத்துகிறது."

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் இருக்கும் கொரிய போர் நினைவகத்தின் ஒரு சுவரில் எழுதப்பட்டிருக்கும் வார்த்தைகளே இவை.

war memorial of Korea

கொரியாவில் இருக்கும் எங்கள் மகள் வீட்டிற்கு வந்திருக்கும் நாங்கள், கொரியப் போர் நினைவகத்தைப் (The War Memorial of Korea) பார்த்தோம். அங்கு சரித்திர காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்து கொரியாவில் நடந்த போர்கள், அவற்றில் பயன்படுத்திய ஆயுதங்கள், அயல் நாட்டினர் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போரிட்டவர்களின் வீரச் செயல்கள் எல்லாம் தொகுத்து வைக்கப்பட்டிருக்கின்றன.

பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட மற்றும் தற்போது பயன்படுத்தப்படும் கப்பல்கள், விமானங்கள், டாங்குகள் போன்றவற்றின் மாதிரிகள் வைக்கப்பட்டிருக்கின்றான. 3டி, 4டி போன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் நாமே போர் நடக்கும்போது, கப்பலில், விமானத்தில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகின்றது. மேலும் கப்பல் போன்றவற்றை நாமே குறிபார்த்துச் சுடுவது, படகை ஓட்டுவது போன்ற நிகழ்ச்சிகள், சிறுவர்களும் உற்சாகமாகப் பங்கேற்று, போரைப் பற்றி அறிந்து கொள்ளும் வகையிலும், நாட்டுப் பற்றை ஊட்டும் வகையிலும் அமைக்கப் பட்டுள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப்பின் வட கொரியா தென்கொரியா என்று பிரிக்கப்பட்டது. 1950இல், வடகொரியா, தென்கொரியாவை ஆக்கிரமிக்க, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் பல நாட்டுப் படைகள் தென்கொரியாவிற்கு உதவுவதற்காகச் சென்றிருக்கின்றன. அவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாகத்தான் முதலில் குறிப்பிட்ட வார்த்தைகள் எழுதப்பட்டிருந்தன.

அப்பொழுது, இந்தியா, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக இருந்தது. இந்தியா 329 பேர் கொண்ட மருத்துவ உதவிக் குழுவை அனுப்பி இருக்கிறது. 20.11.1950லிருந்து 23.2.1954 வரை பணியாற்றி இருக்கின்றனர். நமது கொடியுடன், அனைத்து விவரங்களையும் படங்களுடன் வைத்துள்ளனர்.

அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஒரு இந்தியரும் படம் எடுத்துக் கொண்டிருந்தார். துஷார் என்ற அவர், தன் தந்தை ஜெனரல் ராஜன்சௌத்திரி அந்தக் குழுவில் பணியாற்றியதாகவும், தற்பொழுது ஆக்ராவில் இருப்பதாகவும், அமெரிக்காவில் இருக்கும் தான் பணி நிமித்தமாக சியோல் வந்திருப்பதால், தந்தை கூறியபடி, இந்த நினைவகத்தைப் பார்க்க வந்ததாக‌க் கூறினார்.

எங்கேயோ இருக்கும் சியோலில் பார்த்த அந்த வார்த்தைகளும், நம் இந்தியக் கொடியும், நமது பங்களிப்பும், அதில் பங்கேற்ற ஒருவரின் மகன் துசார் என்பவரைப் பார்த்ததும், மனத்தைச் சிலிர்க்க வைத்தது. உலகம் எவ்வளவு சிறியதாகிக் கொண்டு வருகிறது!!

(தொடரும்)