கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்து உள்ள மூணாறு, இயற்கை எழில் கொஞ்சும் பகுதி. விண்ணைத் தொடும் மலைச்சிகரங்கள், உயர்ந்து ஓங்கிய மரங்கள், பள்ளத்தாக்குகள், மலைச்சரிவுகளில் பச்சைப்பசேல் என தேயிலைத் தோட்டங்கள் பூமிக்குப் பச்சைப் பட்டு உடுத்தியது போலப் பரந்து விரிந்து கிடக்கின்றன. எனவேதான், இதைத் ‘தென்னகத்தின் காஷ்மீர்’ என்றும் மூணாறை அழைக்கிறார்கள். ஆனால், காஷ்மீர் போன்ற போராட்ட சூழல் இங்கு இல்லை. இது அமைதிப் பள்ளத்தாக்கு!

munnar_620

மாட்டுப்பட்டி ஆறு, கன்னிமலை ஆறு, நல்லதண்ணி ஆறு ஆகிய மூன்று ஆறுகள், ஒன்றாகக் கலக்கின்ற இடம்தான் மூணாறு. ஆங்கிலத்தில் ‘முன்னார்’ (Munnar) என்று எழுதுகிறார்கள்.

கடல் மட்டத்தில் இருந்து 4000 அடிகளுக்கு மேலே, 8,000 அடிகளுக்கு இடைப்பட்ட உயரங்களில், மூணாறு மலைத்தொடர்கள் அமைந்து உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைகளிலேயே மிக உயர்ந்த சிகரமான ஆனைமுடி, மூணாறுக்கு அருகில் உள்ள ராஜமலை எஸ்டேட் பகுதியில்தான் அமைந்து உள்ளது.

சங்கரன்கோவிலில் பள்ளியில் படிக்கும்பொழுதே மூணாறைப் பற்றிய நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன். எங்கள் பகுதியில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள், மூணாறு தேயிலைத் தோட்டங்களில் தொழிலாளிகளாகப் பணிபுரிகிறார்கள். மாஞ்சோலை எஸ்டேட், கூடலூர் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள மேலும் பல தேயிலைத் தோட்டங்களிலும் பணிபுரிகிறார்கள்.

இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, மூணாறில் பகுதியில் நல்ல கல்வி வசதிகள் இல்லாததால், அவர்களுடைய குழந்தைகளை நல்ல தரமான கல்வி பெறுவதற்காக, சொந்த ஊரில் படிக்க வைத்தார்கள். அப்படித் தேயிலைத் தோட்டப் பள்ளிகளில் தொடக்கக் கல்வி படித்துவிட்டு, சொந்த ஊருக்குத் திரும்பி வந்து என்னுடன் சேர்ந்து படிக்க வந்து ராஜேந்திரன் என்ற மாணவர், எனது பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்தார். மூணாறைப் பற்றி அவர் சொல்லுவதை நிறையக் கேட்டு இருக்கிறேன். வாய்ப்புக் கிடைத்தால், மூணாறுக்குப் போய்வர வேண்டும் என்று எண்ணிக்கொண்டு இருந்தேன்.

தேனி, போடி, போடிமெட்டு, பூப்பாறை வழியாகத்தான் மூணாறு செல்ல வேண்டும். உடுமலைப்பேட்டையில் இருந்தும் மூணாறுக்கு நேரடியாக மலைவழி ஒன்றும் உள்ளது.

சுருளி அருவி சென்னையில், அண்மையில் மறைந்த என்னுடைய பெரியம்மா சரஸ்வதி அம்மையார், சுற்றுலாவில் மிகுந்த நாட்டம் உடையவர். இந்தியா முழுவதும் சுற்றி வந்து இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன்னர், சங்கரன்கோவிலுக்கு வந்து இருந்தபோது, கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்குப் போக வேண்டும் என்று சொன்னார். அப்போதே, அவர் அந்த அருவியைப் பற்றி அறிந்து வைத்து இருந்ததை, இப்போது நினைத்தாலும் வியப்பாக இருக்கிறது. ஏனெனில், அவருக்கு செய்தித்தாள்கள் படிக்கின்ற வழக்கம் கிடையாது. படிப்பு அறிவு குறைவுதான். எல்லாமே கேள்விச் செல்வம்தான்.

நானும்,பெரியம்மாவும், சங்கரன்கோவிலில் இருந்து கம்பம் செல்லும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகப் பேருந்தில் ஏறினோம். இப்போது, தமிழ்நாடு மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயங்குகிறது அல்லவா? இடைப்பட்ட காலத்தில், இதற்கு ‘திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்’ என்று பெயர் இருந்தது.

கூகை இலையில் உணவு

ஒரு மாலைப் பொழுதில் கம்பம் போய்ச் சேர்ந்தோம். பேருந்து நிலையத்துக்கு எதிரே இருந்த ஒரு விடுதியில் அறை எடுத்துத் தங்கினோம். உணவு அருந்தச் சென்றோம். வழக்கமாக உணவகங்களில் உணவு பரிமாறுகின்ற வாழை இழைக்குப் பதிலாக, கம்பம் உணவகத்தில் வேறு ஒரு இலையை விரித்தார்கள். ஒரு இலை அல்ல, வரிசையாக மூன்று சிறிய இலைகளை ஒன்றாகச் சேர்த்து விரித்து, அதில்தான் உணவு பரிமாறினார்கள். ‘இது என்ன இலை?’ என்று கேட்டேன். ‘கூகை இலை’ என்று சொன்னார்கள். அங்கேதான், முதன்முறையாக அந்த இலையில் சாப்பிட்டேன். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும், ஒவ்வொரு வழக்கம். சில பகுதிகளில், பாக்கு இலைகளில் உணவு பரிமாறுகிறார்கள். சில காலத்துக்கு முன்புவரையிலும், சென்னையில் தாமரை இலைகளில் உணவு பரிமாறினார்கள்; வடை, வடைகறியைக் கட்டித் தந்தார்கள். இப்போது, அதைப் பார்க்கவே முடியவில்லை. விதவிதமான பிளாஸ்டிக் தட்டுகள், பேப்பர் வாழை இலைகள் வந்து விட்டன.

சுருளி அருவியில் குளித்து மகிழ்ந்து, கம்பம் பகுதியைச் சுற்றிப் பார்த்துத் திரும்பினோம்.

மூணாறு பயணம்

2009 மே மாதம், தேனியில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் பங்கு ஏற்பதற்காகச் செல்ல வேண்டி இருந்தது. அப்படியே மூணாறையும் பார்த்து விடலாம் என்று திட்டமிட்டேன். இரண்டு நண்பர்களையும் சேர்த்துக் கொண்டேன். 2009 மே மாதம் 11 ஆம் தேதி இரவு 10 மணிக்கு, சங்கரன்கோவிலில் இருந்து தேனி செல்லும் பேருந்தில் ஏறினோம். கூட்டம் குறைவாகவே இருந்தது. நான் கடைசி சீட்டில் படுத்துக் கொண்டேன். நண்பர்கள் குருக்கள்பட்டி சுதா பாலசுப்பிரமணியன், இடைகால் கருணாநிதி இருவரும், ஓட்டுநருக்கு அருகில், முன் இருக்கையில் அமர்ந்து இருந்தார்கள்.

கல்லுப்பட்டிக்குத் தெற்கே சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வந்து கொண்டு இருந்தபோது, திடீரென பலத்த சப்தம். வண்டி எங்கேயோ மோதி விட்டதோ? என்று பார்த்தேன். நாங்கள் பயணித்த பேருந்தின் டயர் வெடித்து விட்டது. ஓட்டுநர் சாமர்த்தியமாகப் பேருந்தை நிறுத்தியதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

munnar_621

நள்ளிரவில், சாலையில் நின்றுகொண்டு இருந்தோம். மாற்று வண்டி கிடைக்கவில்லை. ஏறத்தாழ ஒரு மணி நேரம் கழித்து வேறு ஒரு வண்டி வந்தது. அந்த வண்டியும் ஏற்கனவே, இராசபாளையத்தில் இருந்து தேனி சென்று கொண்டு இருந்த பேருந்துதான். அதுவும் இப்படி பஞ்சராகி, சரி செய்ய மூன்று மணி நேரம் ஆகி இருக்கிறது. அந்த வண்டியில் எங்களை ஏற்றினார்கள். பேரையூர், உசிலம்பட்டி வழியாக சுருக்கு வழியில் சென்றதால், இடையில் ஏற்பட்ட தாமதத்தைச் சரிசெய்து, நாங்கள் எதிர்பார்த்தது போலவே, சரியாக மூன்று மணிக்கெல்லாம், தேனி பேருந்து நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். இறங்கியவுடன், நேரே எதிரில் மூணாறு பேருந்து நின்றுகொண்டு இருந்தது. ஓடிப்போய் இடத்தைப் பிடித்தோம். நல்ல வசதியான இருக்கைகள் கிடைத்தன.

பூப்பாறா

பொலபொலவென விடியத் தொடங்கியபோது கண் விழித்தேன். ‘பூப்பாறை’ என்ற ஊரை நெருங்கிக் கொண்டு இருந்தது பேருந்து. ஏராளமான வளைவு நெளிவுகளில் திரும்பி, ஏற்ற இறக்கங்களில் ஏறி இறங்கி விரைந்து கொண்டு இருந்தது. வழியில், ‘பூப்பாறா’ என்ற ஊரின் பெயரைப் பார்த்தபோது, கொடைக்கானல் அருகே ‘பூம்பாறை’ என்ற ஊர் இருப்பது நினைவுக்கு வந்தது.

‘பூப்பாறை’ என்ற பெயரை, மலையாளத்தில் ‘பூப்பாறா’ என்று அழைக்கிறார்கள். தமிழுக்கும், மலையாள மொழிக்கும் ஒரு சிறிய வேறுபாடுதான். அவர்கள் ‘ஐ’ விகுதியைப் பயன்படுத்த மாட்டார்கள். நாம் ‘ஆலப்புழை’ என்று சொல்லுவதை, அவர்கள் ‘ஆலப்புழா’ என்பார்கள். அதுபோலத்தான் பூப்பாறையும், ‘பூப்பாறா’ ஆகி இருக்கிறது.

மூணாறு

அங்கிருந்து மேலும் அரை மணி நேரப் பயணத்தில், மூணாறு பள்ளத்தாக்கை நெருங்கினோம். பேருந்து நிறுத்தத்தில் இறங்கினோம். அங்கே எங்களை எதிர்பார்த்துக் காத்து இருந்து வரவேற்றார் ஜெயகுமார். அவரது ஜீப்பில் எங்கள் பைகளை வைத்துவிட்டு, அருகில் இருந்த தேநீர்க் கடையில், சூடாகத் தேநீர் அருந்தினோம். நண்பர் ஜெயகுமார், வைகோ ஆதரவாளர். 1996 ஆம் ஆண்டு முதல் வைகோ தேர்தலில் போட்டியிடுகிறபோதெல்லாம், ஒரு மாத காலம், தன்னுடைய ஜீப்பை பிரச்சாரத்துக்காகக் கொண்டு வந்து விடுவார். அவருடைய அழைப்பின் பேரில்தான், இந்த மூணாறு பயணத்தையே நாங்கள் திட்டமிட்டு இருந்தோம்.

மூணாறு நகரை, பழைய மூணாறு, புது மூணாறு என்று இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள். பழைய மூணாரில்தான் நாங்கள் தங்குகின்ற இடம். அங்கே, ‘கண்ணன் தேவன் ஹில் கிளப்’ என்ற ஒரு விருந்தினர் விடுதியில் தங்கினோம். இடைகால் கருணாநிதியின் நண்பர் ராஜன் என்பவர், எங்களுக்காக அங்கே அறை முன்பதிவு செய்து இருந்தார். விடுதியைச் சுற்றிலும் உள்ள பூங்காவை, முறையாக, அழகாகப் பராமரித்து வருவதால், பச்சைப் பசேல் என்ற ரம்மியமான சூழ்நிலை. சிறிய அறைதான். தொலைக்காட்சிப் பெட்டி இருந்தது. குளித்து முடித்து, அங்கேயே காலைச் சிற்றுண்டியை முடித்துக்கொண்டு, ஒன்பதரை மணிக்கெல்லாம் மலைகளைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பி விட்டோம். நண்பர் ஜெயக்குமாரின் ஜீப்பில்தான் பயணம்.

வழக்கமாக எல்லா வண்டிகளும் செல்லுகின்ற பெரிய சாலையில் எங்களை அழைத்துச் செல்லாமல், தேயிலைத் தோட்டங்களுக்கு ஊடாகச் செல்லுகின்ற உட்புறச் சாலையில் எங்களை அழைத்துச்சென்றார். அது பொது வழி அல்ல. உள்ளூர்க்காரர்கள் மட்டுமே செல்ல முடியும். மலைப்பகுதிகளில் சுற்றிப் பார்ப்பதற்கு, கதவுகள் இல்லாத, திறந்த கமாண்டர் ஜீப்புகள்தான் சரி. நாம் விரும்புகின்ற இடத்தில் வண்டியை நிறுத்தி, சட்டென்று இறங்கி ஏற வசதியாக இருந்தது.

ஜெயகுமார், ஒரு ஓட்டுநராக மட்டும் அல்லாமல், அந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு இடத்தைப் பற்றியும், எங்களுக்கு விளக்கிக் கொண்டே, ஒரு சுற்றுலா வழிகாட்டியாகவும் செயல்பட்டார். நாங்கள் கேட்காமலேயே தகவல்களைத் தருகின்ற, இதுபோன்ற நண்பர்கள் அமைவது, என்னைப்போன்ற எழுத்தாளர்களுக்கு வசதி. எனது சின்னஞ்சிறு குறிப்பு ஏட்டில், குறிப்புகளை எழுதிக்கொண்டே வந்தேன். ஆங்காங்கு வண்டியை நிறுத்தி, படங்கள் எடுத்துக்கொண்டே சென்றோம்.

வழியில் இருந்த தேயிலைத் தோட்டங்களில், தேயிலையை எப்படிப் பறிக்கிறார்கள் என்பதைப் பார்த்து, அவர்களைப் போல நானும் தேயிலையைப் பறித்து, படமும், வீடியோவும் எடுத்துக் கொண்டேன். ‘Youtube’ இணையதளத்தில் வெளியிட்டு உள்ளேன். பாருங்கள்.

தேயிலைத் தோட்டங்களைப் பகுதிகளாகப் பிரித்து, அவற்றுக்கு எண் கொடுத்து இருக்கிறார்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் கடைசியாகத் தேயிலை பறித்த நாள், அளவுகள், அடுத்து எப்போது அங்கே தேயிலை பறிக்க வேண்டும் என்பது போன்ற தகவல்களை ஆங்காங்கே மரங்களில் எழுதி வைத்து இருக்கிறார்கள்.

மூணாறின் கதை

மூணாறு தேயிலைத்தோட்டக் காடுகள் வளர்ந்த கதையை, நாங்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்த பெரியவர் ராஜன் சொன்னார். அவர், மதுரை மாவட்டம் எழுமலை என்ற ஊரைச் சேர்ந்தவர்.1954 ஆம் ஆண்டு, தனது 14 ஆவது வயதில் மூணாறுக்கு வந்த ராஜனுக்கு, இப்போது வயது, 66. மூணாறு பகுதியில் ஒரு ஒப்பந்தக்காரராக இருந்த இவரது சித்தப்பா, ராஜனை, எழுமலையில் இருந்து மூணாறுக்கு நடத்தியே அழைத்துக்கொண்டு வந்தாராம். இங்கேயே தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, பணி முடித்து, ஓய்வு பெற்று விட்டார். டாடா நிறுவனத்தின் தொழிலாளர் குடியிருப்பில்தான் வசிக்கிறார். மூன்று குழந்தைகள். வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்கள். ராஜனுக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கிறது. வாழ்க்கை மகிழ்ச்சியாகவே கழிகிறது.

ராஜன் நடந்து வந்தார். இன்றைக்கு நாங்கள், தேனியில் இருந்து இரண்டு மணி நேர மலைப்பயணத்தில், பேருந்தில் வசதியாக மூணாறுக்கு வந்து சேர்ந்து விட்டோம். முதன்முதலில் இந்தச் சாலையை எப்படி அமைத்தார்கள்? எப்போது அமைத்தார்கள்? என்பதைப் பற்றி, ராஜனிடம் கேட்டேன்.

1963 ஆம் ஆண்டில்தான் மூணாறுக்குத் தார் ரோடு போட்டார்களாம். அதற்கு முன்பெல்லாம், தொழிலாளர்களை, மலைக்கு நடத்தியே கூட்டி வந்து இருக்கிறார்கள். முதலில் 34 கிலோமீட்டர் தொலைவுக்கு ரோப் வே அமைத்து இருந்தார்களாம். அந்த ரோப் வேயை, 1965 ஆம் ஆண்டு எடுத்து விட்டார்களாம். அந்த ரோப் வே இருந்த இடத்தைப் பார்த்தேன். இன்றைக்கு அங்கே ரோப் வே அமைத்தால், அந்த இடம், இலட்சக்கணக்கான பயணிகளை உலகம் முழுவதிலும் இருந்து சுண்டி இழுக்கும். அவ்வளவு இயற்கை எழில் வாய்ந்த பகுதி. அதை மீண்டும் அமைப்பது குறித்து, கேரள மாநில சுற்றுலாத் துறையினர்தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும், அதுபோலவே கொடைக்கானலுக்கும் ரோப்வே அமைக்க வேண்டும். சுவிட்சர்லாந்து நாட்டில் இப்படித்தான் அமைத்து, கோடிக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறார்கள். தமிழகத்துக்கும் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கலாம்.

munnar_622

மூணாறு மலைக்கு நடந்தே வந்த தொழிலாளர்கள் எதைச் சாப்பிடுவது? எனவே, அரிசி, கருப்பட்டி மற்றும் உணவுப் பொருட்களையும், தலையிலும், முதுகிலும், தொழிலாளர்கள் சுமந்து கொண்டுதான் வந்து சேர்ந்து இருக்கிறார்கள். அவர்கள், எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதைக் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அப்படி நடந்தே அவர்கள், இங்கே வந்த பின்பு, நினைத்தவுடன் எளிதில் திரும்பிச் செல்லவும் முடியாது. மூணாறுவாசிகளாகவே ஆகி விட்டார்கள்.

மதுரை போடி தொடர் வண்டி

மதுரையில் இருந்து போடி நகருக்கு, தொடர் வண்டித் தடத்தை, ஆங்கிலேயர்களே அமைத்து இருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே, இந்த மலையில், தேயிலையைப் பயிரிடப் பழக்கி, ஏலக்காய், மிளகு போன்ற நறுமணச் செடிகளைப் பயிரிட்டு வளர்த்து, விளைபொருட்களை எடுத்துச் செல்வதற்கு ரயில் வழித்தடத்தையும் அமைத்து, மதுரைக்குக்கொண்டு சென்று, அங்கிருந்து, துறைமுகங்கள் வழியாக, ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்கள்.

ஆங்கிலேயர்களுடைய திட்டமிடலை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. அதற்காக நாம் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்படித்தான், அதே பகுதியில், தேக்கடியில் பென்னி குயிக், லண்டனில் தம் சொத்துகளை எல்லாம் விற்றுக் கொண்டு வந்து, முல்லைப்பெரியாறு அணையைக் கட்டினார். இன்றைக்கு வரலாற்றில் வாழ்கிறார்; தமிழர்களின் நன்றிக்கு உரியவராகத் திகழ்கிறார்.

நறுமணப் பொருள்களுக்கு ஐரோப்பிய நாடுகளில் எப்போதுமே கடுமையான பற்றாக்குறை நிலவி இருக்கிறது. இந்தியாவில் இருந்து தரைவழியாக ஐரோப்பியச் சந்தைக்கு வந்த மிளகின் விலை ஐந்து சென்ட் உயர்ந்ததால், இந்தியாவுக்குச் சென்று நாமே அவற்றை வாங்கி வர வேண்டும் என்பதற்காகத்தான், ஆங்கிலேயர்களும், இதர ஐரோப்பிய நாட்டவர்களும், இந்தியாவுக்கு நேரடியாகக் கடல் வழியைக் கண்டுபிடிக்க முனைந்தார்கள் என்பது வரலாறு.

ஏனெனில், அப்போது தரைவழியாக இந்தியாவுக்கு வருகின்ற வழியில், ஏராளமான நாடோடிக் கூட்டத்தார் வசித்து வந்தார்கள். அவர்களது தாக்குதலைச் சமாளித்து உயிர் தப்பி இந்தியாவுக்கு வந்துபோவதைவிட, கடல் வழியாக எளிதில் வந்து விடலாம் என்பதே ஐரோப்பியர்களின் கணக்கு. அதற்காகத்தான் அரும்பாடுபட்டுக் கடல் வழியைக் கண்டுபிடித்தார்கள். அப்படி அவர்கள் வணிகம் செய்வதற்காக வந்து, ஆட்சியைக் கைப்பற்றியது வரலாறு.

தேயிலைத் தோட்டங்கள்

இன்றைக்கு, மூணாறு பகுதியில் இருக்கின்ற பெரும்பாலான தேயிலைத் தோட்டங்கள் தனியாருக்குச் சொந்தமானவையே. அரசு புறம்போக்கு இடங்களும் இருக்கின்றன. தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை, தேயிலைத்தோட்ட நிறுவனங்கள் அறிவித்துச் செயல்படுத்தி வருகின்றன. இயந்திரங்களின் வருகையால், முன்பு, 200 தொழிலாளர்கள் வேலை பார்த்த இடங்களில் தற்போது 100 தொழிலாளர்கள்தாம் வேலை பார்க்கிறார்களாம். நிறையப் பேர், தேயிலை நிறுவனங்கள் கொடுத்த பணத்தை வாங்கிக்கொண்டு போய்விட்டார்களாம். ஒரு தோட்டத்தில் சில ஆண்டுகள் ஒரே பகுதியில் பணிபுரிந்த தொழிலாளர்களை, அடுத்த தோட்டத்துக்கு மாற்றுவார்களாம்.

நீண்டகாலமாகப் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு 5 செண்ட் மனை கொடுத்து இருக்கிறார்கள். அப்படிக் கிடைத்த மனைகளில், தொழிலாளர்கள் சொந்தமாக வீடு கட்டி வசிக்கிறார்கள். தேயிலைத் தோட்ட நிறுவனங்களின் தொழிலாளர்கள் குடியிருப்பில் வசிக்கின்ற தொழிலாளர்கள், தங்களுக்குத் தேவையான காய்கறிகளைப் பயிரிட்டுக் கொள்ள, சிறிது நிலத்தையும் ஒதுக்கித் தந்து இருக்கிறார்கள். முட்டைக்கோஸ், கேரட், முள்ளங்கி போன்றவற்றை அதில் பயிரிடுகிறார்கள். தங்களுக்குக் கிடைத்த மனைகளைப் பலர் விற்று விட்டார்கள். அதை வாங்கியவர்கள்தாம், அடுக்குமாடி வீடுகளைக் கட்டி இருக்கிறார்கள். பெரிய ஓட்டல்களையும் கட்டத் தொடங்கி விட்டார்கள். இப்படியாகத்தான் அந்த இடத்தில், இப்போது நாம் பார்க்கின்ற மூணாறு நகரம் உருவாகி இருக்கிறது.

மூணாறில் ஒரு திரை அரங்கம் இருந்ததாம். தொலைக்காட்சிகளின் வளர்ச்சியால், திரை அரங்குக்கு வருபவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டதால், இப்போது அதையும் ஒரு ஓட்டலாக மாற்றி விட்டார்கள். இருப்பினும், அந்த ஓட்டலுக்கு உள்ளேயும், ஒரு சிறிய மினி திரை அரங்கம் அமைத்து இருக்கிறார்களாம்.

சென்னையில், நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் சாந்தி திரை அரங்கம் பிரமாண்டமான அரங்கம். அங்கே கூட்டம் சேராமல், இப்போது, அந்தத் திரை அரங்கத்தின் பால்கனியையே தனியாகப் பிரித்து, ‘சாய் சாந்தி’ என்ற பெயரில் தனியாக ஒரு சிறிய அரங்கத்தை அமைத்து விட்டார்கள். அதைப்போல, தமிழகத்தில் உள்ள பெரிய திரை அரங்குகளில், பத்துப் பேர்களை வைத்துக்கொண்டு காலைக்காட்சியை ஓட்டிக் கொண்டு இருக்கின்றார்கள். அவற்றையெல்லாம் பிரித்து, சிறிய திரை அரங்கங்களாக மாற்றி விடலாம். அண்டை மாநிலங்களில், பிற்பகல் ஒரு மணிக்கு மேல்தான் திரை அரங்குகளில் காட்சிகள் காட்டுகிறார்களாம்.

ஊட்டி, கொடைக்கானலை விட மூணாறில் விலைவாசி குறைவுதான். மீன் குழம்பு, வறுவலுடன் ஐந்து பேர் சாப்பிட்டதற்கு, 270 ரூபாய்தான் பில் வந்தது.

மூணாறு ஆட்டோக்காரர்கள் நல்லவர்கள். கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய்தான் கட்டணம். பங்குத்தானிகளைப் (ஷேர் ஆட்டோ) போலத்தான் ஓடுகின்றன. பெரும்பாலும், கமாண்டோ ஜீப்புகள்தான். ஏனெனில், பராமரிப்புச் செலவு குறைவு. மூணாறு பகுதியில் தூசு இல்லாததால், வாகனங்கள் அடிக்கடி ரிப்பேர் ஆவது இல்லை. ஹைஸ்பீடு ஜீப்தான். நண்பர் ஜெயக்குமார் இரண்டு கமாண்டோ ஜீப்புகள் சொந்தமாக வைத்து இருக்கிறார்.

வரையாடுகள்

munnar_370ஒரு நாள் இரவு தங்கி மறுநாளும் சுற்றிப் பார்த்தோம். காலையில், ராஜமலா எஸ்டேட் சென்றோம். கேரள அரசின் சுற்றுலாத் துறைப் பேருந்து மட்டும்தான் இயங்குகின்றது. அதையும் ஒரு குறிப்பிட்ட தொலைவில் நிறுத்திவிட்டு, மேலே இரண்டு கிலோ மீட்டர் தொலைவு நடந்தே சுற்றிப் பார்க்கும்படிச் சொன்னார்கள். அந்தப் பகுதியில்தான் வரையாடுகள் இருக்கின்றன. பேருந்துகளின் சத்தம் அவற்றை விரட்டிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே இந்த ஆடுகள் காணப்படுவது ஒரு சிறப்பு. எனவேதான், தமிழக அரசு இந்த வரையாடுகளை அரசு விலங்காக அறிவித்து இருக்கிறது. நீலகிரி தார் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.

அடுத்து, மாட்டுப்பெட்டி அணைக்குச் சென்றோம். அங்கே ஒரு கரையில் நின்று கொண்டு சத்தம்போட்டுக் கத்தினால், மறுகரையில் உள்ள அடர்ந்த மரக்காடுகளில் பட்டு எதிரொலி கேட்கிறது. அணையில், அதிவிரைவுப் படகுகளை இயக்குகிறார்கள். விர்ரென்று தண்ணீரைக் கிழித்துக்கொண்டு பாய்கிறது. சுற்றுலாப் பயணிகள் ஏறி மகிழ்கிறார்கள். கட்டணம்தான் சற்றுக் கூடுதல். ஒரு சுற்றுக்கு 300 ரூபாய் சொன்னார்கள். ஐந்து பேர் ஏறிக் கொள்ளலாம். பத்துப் பதினைந்து நிமிடங்கள்தான் பயணம். புறப்பட்டுப் போன வேகத்திலேயே கரைக்குத் திரும்பி வந்து விடுகிறது. அதற்கு, மிதிபடகுகளில் நாமே மிதித்துக்கொண்டு கூடுதலாக நேரத்தைச் செலவழித்து மகிழலாம்.

மாட்டுப்பெட்டி அணைக்குப் போகின்ற வழியில்தான் சைலண்ட் வேலி என்ற இடம் உள்ளது. பல தமிழ்த் திரைப்படங்களின் பாடல் காட்சிகளை இங்கே படம் பிடித்து இருக்கின்றார்கள். பிரகாஷ்ராஜ் நடித்துத் தயாரித்து வெளிவந்த அபியும் நானும் என்ற படத்தில், ஒரு பாடல் காட்சியில் வந்த இடத்தைப் பார்த்து, நான் ஏதோ சுவிட்சர்லாந்தில் படம் பிடித்து இருப்பார்கள் போலும் என்று கருதிக்கொண்டு இருந்தேன். ஆனால், அந்தக் காட்சியை, இங்கேதான் எடுத்து இருக்கின்றார்கள்.

மூணாறு பஞ்சாயத்து

சில ஆண்டுகளுக்கு முன்பு, மூணாறுதான் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊராட்சியாக இருந்தது. இப்போது அதை, வட்டவடை, தேவி குளம், மூணாறு, மறையூர், மாங்குளம் (காந்தளூர்) என பல ஊராட்சிகளாகப் பிரித்து விட்டார்கள். மூணாறு பகுதிகள், திருவாங்கூர் சமஸ்தானத்துக்குச் சொந்தமாக இருந்த இடம். அவர்கள், தேயிலைத் தோட்ட நிறுவனங்களுக்கு, 99 ஆண்டுக் குத்தகைக்கு இந்த இடத்தைக் கொடுத்து இருக்கிறார்கள். வாங்கியவர்கள், அங்கு இருந்த காடுகளை அழித்துவிட்டு, தேயிலை பயிரிட்டு இருக்கிறார்கள்.

அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்கள் இருக்கின்றன. இப்போது, அந்த நிலங்களை, நிலம் இல்லாதவர்களுக்கு அரசு பிரித்துக் கொடுக்கிறது. ஊருக்குச் சற்றுத் தொலைவில் உள்ள காடுகள் என்றால் 10 சென்ட், ஊருக்கு அருகில் என்றால் 5 சென்ட் நிலம் கொடுக்கிறார்கள். அதற்காக குலுக்கல் முறையில் 1000 பயனாளிகளைத் தேர்ந்து எடுத்து இருக்கிறார்கள். ஆனால், இவ்வாறு கொடுக்கக்கூடாது என்று சிலர் நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று இருக்கிறார்கள். எனவே, இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது.

இங்கே பொது உடைமைக் கட்சிகள் மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் வலுவாக இருக்கின்றன. கடந்த இரண்டு முறை இடது முன்னணியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட பிரான்சிஸ் ஜோர்ஜ், 2009 தேர்தலில் தோற்றுப்போனார். காங்கிரசைச் சேர்ந்த, பி.டி.தோமஸ், வெற்றி பெற்று உள்ளார். இன்றைக்கும், மூணாறில் மலையாளிகள் மிகவும் குறைவு. எங்கு திரும்பினாலும், தமிழ்ப் பேச்சுதான், தமிழ் அறிவிப்புகள்தான்.

மாட்டுப்பெட்டி

மூணாறில் இருந்து கிழக்காக 13 கிலோ மீட்டர் தொலைவில் ‘மாட்டுப்பெட்டி’ என்ற இடம் உள்ளது. ‘மாட்டுப்பட்டி’ என்றும் சொல்கிறார்கள். இங்கே, இந்திய- சுவிட்சர்லாந்து கூட்டு நிறுவனமான, ‘மாட்டுப்பெட்டி டயரி ஃபார்ம்’, 300 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்து உள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளும், பசுக்களும் அங்கே வளர்க்கப்படுகின்றன. கலப்பு இனப் பெருக்க முறையில், உயர் ரக கன்றுகளை ஈன வைக்கிறார்கள். மாட்டுப்பெட்டி, குண்டளை, கல்லார்குட்டி, பன்னியார், ஆனை இறங்கல் அணை போன்ற இடங்களில் சிறுசிறு நீர்மின் திட்டங்கள் அமைத்து, மின்சாரம் பெறப்படுகிறது. மூணாறில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவில் ‘ஆத்துக்காடு அருவி’ உள்ளது. இங்கே, பல இடங்களில் வழுக்குப்பாறைகள் உள்ளன. சுற்றுலாப்பயணிகள் அந்தப் பாறைகளில் ஏறி நின்று ஆபத்தை எதிர்கொள்கிறார்கள். கால் இடறி பலர் விழுகிறார்கள்; பத்துக்கும் மேற்பட்டோர் இறந்தும் உள்ளனர்.

எனவே, இங்கே எச்சரிக்கை தேவை. சிறுத்தைகள், நரிகள் போன்ற காட்டு விலங்குகளின் நடமாட்டம் உள்ளது.

கண்ணன் தேவன்

‘கண்ணன் தேவன் டீ’ என்ற பெயரைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ருசித்துப் பருகி இருப்பீர்கள். அதன் உரிமையாளர்கள், டாடா தேயிலை நிறுவனத்தார். மூணாறில்தான், அவர்களது தேயிலைத் தோட்டம் அமைந்து உள்ளது. கண்ணன், தேவன் என்ற இரண்டு தொழிலாளிகளின் பெயரைத்தான் டாடா நிர்வாகம், தனது தேயிலை நிறுவனத்தின் பெயராக வைத்துக் கொண்டு இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறது அல்லவா?

munnar_623

‘அஞ்ச நாடு’ என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன், தேவன். ஆங்கிலேயருக்கு நிறைய உதவி இருக்கின்றனர். 1877 ஆம் ஆண்டு, அஞ்சு நாட்டில் உள்ள பூஞ்ஞார் அரசர், ஜெ.டி.மன்றோ என்ற வெள்ளைக்காரருக்கு, கண்ணன் தேவன் மலைகளில் சுமார் 227 சதுர மைல் நிலப்பரப்பை, குத்தகைக்குக் கொடுத்தார். 1878 இல், திருவாங்கூர் அரசர், அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டார். பெருங்காடுகளாக இருந்த இப்பகுதியில், வெள்ளைக்காரர்கள் எதையாவது விளைவிக்கட்டும் என்று திருவாங்கூர் மன்னர் கருதினார். எனவே, இலவசமாகக் கொடுப்பது போல, மிகக்குறைந்த விலைக்கே இந்த இடத்தைக் கொடுத்தார். அவர் விலைக்குக் கொடுத்த இந்தப் பகுதியில், அவருக்கோ, அரசாங்கத்தின் வேறு அமைப்புகளுக்கோ எதிர்காலத்தில் நிலம் தேவைப்பட்டால்கூட, அந்த நிலத்துக்கு நடப்பு மதிப்பில் பணம் பெற்றுக்கொண்டு நிலம் கொடுக்கலாம் என்ற நிபந்தனையோடுதான் செப்புப் பட்டயம் வழங்கினார். அதாவது, அந்த இடம் குத்தகை பாட்டத்துக்குக் கொடுத்தது அல்ல; முழுமையாக விற்கப்பட்ட இடம்’ என்று எழுதிக் கொடுத்தார். இவ்வாறு வெள்ளையர்கள், மூணாறு பகுதியில் கால் ஊன்றினார்கள்.

நிலத்தை வாங்கிய வெள்ளைக்காரர், அங்கே தேயிலை பயிரிட்டார். ஒரு நிறுவனத்தைத் தொடங்கி, ‘திருவிதாங்கூர் டீ கம்பெனி லிமிடெட்’ என்று பெயர் சூட்டினார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் தொழிலாளர்களைக் கொண்டு வந்து, தேயிலையும், ரப்பரும் பயிரிட்டார். ஆனால், ரப்பரில் எதிர்பார்த்த அளவு ஆதாயம் கிட்டாததால் அதைக் கைவிட்டு, முழுமையும் தேயிலையை மட்டுமே பயிரிட்டார். நிறுவனம் நன்கு வளர்ச்சி பெற்றது.

1947 ஆம் ஆண்டு இந்தியா விடுதலை பெற்றது. புதிய அரசு பொறுப்பு ஏற்றபின்பு, தொடர்ந்து நிறுவனத்தை நடத்திச் செல்ல அனுமதிக்காது என்று கருதிய அவர், நிறுவனத்தை விற்றுவிடத் திட்டமிட்டார். ஏ.வி.கிரி, ராம்பகதூர் தாகூர் ஆகிய இரண்டு பேர், விலைக்கு வாங்க முன் வந்தனர். ஒருவரிடம் டெல்லியில் வைத்தும், அடுத்தவரிடம் லண்டனில் வைத்தும், முன்பணம் பெற்றுக்கொண்டு, ஒப்பந்தம் போட்டுக் கொண்டனர். எனவே, இருவருக்கும் இடையே உரிமைப் போர் மூண்டது. 1976 ஆம் ஆண்டு, ராம் பகதூர் தாகூர், நிறுவனத்தைக் கைப்பற்றினார்.

1988 ஆம் ஆண்டு அவர் இறந்தபோது, 2,187 ஹெக்டேர்களில் தேயிலை, 368 ஹெக்டேரில் ஏலக்காய், 171 ஹெக்டேரில் காப்பி, 178 ஹெக்டேரில் நல்ல முளகும் பயிரிடப்பட்டு இருந்தது. பிரமாண்டமான 8 தேயிலைத் தொழிற்கூடங்களை உள்ளடக்கிய இந்தத் தோட்டங்களில், 8744 நிரந்தரத் தொழிலாளர்களும், 4093 தற்காலிகத் தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான தினக்கூலித் தொழிலாளர்களும் வேலை செய்து வந்தனர். ராம் பகதூர் தாகூரின் மறைவுக்குப் பின்னர், அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் சொத்துத் தகராறு மூண்டது. நிறுவனத்தை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டனர். இன்னமும் உரிமைப் பிரச்சினை நீடிக்கிறது.

தேயிலைத் தோட்டங்கள்

வண்டிப் பெரியார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மஞ்சுமலை எஸ்டேட், நெல்லிமலை எஸ்டேட், தேங்காய்க்கல் எஸ்டேட், கிராண்பி எஸ்டேட், மவுண்ட் எஸ்டேட். பீர்மேடு பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட பாம்பனார் எஸ்டேட். பசுமலை எஸ்டேட், தங்கமலை எஸ்டேட். ஏலப்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்டது கோழிக்கானம் எஸ்டேட். இதுபோன்று எத்தனையோ தேயிலைத் தோட்டங்கள் உள்ளன.

மேற்குத் தொடர்ச்சி மலை வழிகள்

மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் இடையில், 13 வழிகள் உள்ளன. குமரி மாவட்டம் களியக்காவிளை - நெல்லை மாவட்டம் செங்கோட்டை. தேனி மாவட்டம் போடி மெட்டு, கம்பம் மெட்டு, லோயர் கேம்ப், குமுளி ரோடு.

கோவை மாவட்டம் 1. உடுமலை வட்டம் ஒன்பது, ஆறு செக் போஸ்ட் 2.பொள்ளாச்சி வட்டம்

கோபாலபுரம் சாவடி 3. பொள்ளாச்சி வட்டம் வளந்தராயபுரம் சாவடி 4. பொள்ளாச்சி வட்டம்

நடுப்புளி சாவடி 5. கோவை தெற்கு வட்டம், வேலன்தாவளம் சாவடி 6. கோவை தெற்கு

கந்தேகவுண்டன் சாவடி 7. கோவை வடக்கு தாலுகா, ஆனை கட்டி சாவடி

மலைப்பயணங்கள்

நான், கன்னியாகுமரி, செங்கோட்டை, கம்பம் மெட்டு, போடி மெட்டு, குமுளி, மேட்டுப்பாளையம்- ஊட்டி, மைசூர்-கூடலூர்-ஊட்டி, வத்தலக்குண்டு-கொடைக்கானல்,பழநி-கொடைக்கானல், வால்பாறை, பாபநாசம்-மாஞ்சோலை, ஏலகிரி, சேலம்-ஏற்காடு, கல்வராயன் மலை, திருப்பதி ஆகிய மலை வழிகளில் பயணித்து இருக்கிறேன். வட இந்தியாவில் கல்கா-சிம்லா, மேற்கு வங்க மாநிலம் காகர் பிட்டா-காத்மண்டு (நேபாளத் தலைநகர்) மற்றும் பூடானிலும் மலைவழிகளில் பயணித்து இருக்கிறேன். காகர் பிட்டா-காத்மண்டு பயணம் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.

மூணாறில் இருந்த இரண்டு நாள்களும் நேரம் போனதே தெரியவில்லை. திரும்பி வரவும் மனம் இல்லை. வேறு வழி இன்றி, அரைகுறை மனதோடு புறப்பட்டோம்.

தமிழகத்தில், மூணாறு செல்லும் போடிமெட்டுப் பாதை, மற்ற வழிகளைவிட மாறுபட்டதாக அமைந்து இருக்கிறது. மற்ற இடங்களில், பாதை வளைந்து நெளிந்து அடுத்தடுத்த மலைகளுக்குச் சென்று விடும். ஆனால், ‘போடி மெட்டு’ என்ற இடத்தில் இருந்து இறங்குகையில், எதிரே நீண்ட தொலைவில் உள்ள மலையில் ஒரு வழி தெரிந்தது. அது வேறு ஊருக்குச் செல்கின்ற வழியாக இருக்கும் என்று கருதிக் கொண்டேன். அந்த அளவுக்குத் தொலைவில் இருந்தது. ஆனால், பேருந்து அந்த வழியாகத் தான் இறங்கி வந்தது. எனவே, நீண்ட நேரமாக ஒரே இடத்தில் செல்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியது.

கீழே இறங்கி வந்த பின்பு, போடி மெட்டை அண்ணாந்து பார்த்தேன். அந்த உயரத்தில் இருந்தா இறங்கி வந்தோம்? என்று மலைப்பாக இருந்தது. மூணாறு பயணம், மகிழ்ச்சியாக அமைந்தது!

- அருணகிரி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It