‘ஆயிரங்கண் போதாது வண்ணக்கிளியே
குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே’

‘பாவை விளக்கு’ திரைப்படத்தில், சிதம்பரம் ஜெயராமன் குரலில், சிவாஜி கணேசன் திரையில் பாடுவதாக வருகின்ற அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும், செவியில் இன்பத் தேன் பாயும்; திகட்டாது. இப்படி எத்தனையோ பாடல்கள் குற்றாலத்தை நமக்கு நினைவூட்டுகின்றன.

குற்றாலத்துக்கு அருகிலேயே பிறந்தவன் என்பதால், நினைவு தெரிந்த நாள் முதல் எத்தனை முறை குற்றாலத்தில் குளித்து இருக்கிறேன் என்பதற்குக் கணக்கே இல்லை. அருவியில் தண்ணீர் விழுகிறது என்று யாராவது சொன்னாலே போதும், உடனே கிளம்பி விடுவோம். குற்றாலத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள வல்லத்தில், என் மனைவியின் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பார்த்தால், நேராக உள்ள குற்றாலம் அருவியில் எவ்வளவு தண்ணீர் விழுகின்றது என்பது தெரியும்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, குற்றாலத்தில் ஒருமுறை கூடக் குளித்தது இல்லை. ரசித்துக் குளிக்கக் கூடிய நிலையிலும் இப்போது குற்றாலம் இல்லை. பல்வேறு காரணங்கள். சிலவற்றைக் குறிப்பிட விழைகிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, குற்றாலத்துக்குப் பேருந்து வசதிகள் அதிகம் கிடையாது. ஒருசில பணக்காரர்கள் மட்டும்தான் குடும்பத்தோடு கார்களில் வருவார்கள். வேன்கள், இருசக்கர வண்டிகளை எண்ணி விடலாம். எனவே, கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் மட்டுமே ஓரளவு கூட்டம் இருக்கும். எப்போது சென்றாலும், எவ்வித நெரிசலும் இன்றி, விரும்புகின்ற அளவுக்கு அல்லது தாக்குப் பிடிக்க முடிகின்ற அளவுக்கு அருவியில் நின்று குளிக்கலாம்.

90 களுக்குப் பிறகு, போக்குவரத்து வசதிகள் பெருகின. மக்களிடம் காசு, பணப் புழக்கமும் கூடியது; வண்டி, வாகனங்களின் எண்ணிக்கையும் கூடியது. ஐயப்பன் கோவிலுக்குப் போகின்ற அனைவரும், குற்றாலத்துக்கும் வந்து போவதை வழக்கமாக்கிக் கொண்டு விட்டார்கள். எல்லாம் சேர்ந்து, குற்றாலத்திலும் கூட்ட நெரிசல் உண்டானது.

முன்பெல்லாம் ஆயிரக்கணக்கானவர்கள் அருவிப் பகுதியில் நின்று இருந்தாலும், ஒன்றிரண்டு காவலர்களைக் கூடப் பார்க்க முடியாது. சில பானை வயிற்றுக்காரர்கள், மதுவைப் பருகி மதிமயங்கியவர்கள், அருவிலேயே சப்பணம் போட்டு அமர்ந்து, ஒரு மணி நேரம் வரையிலும் ஆடாமல் அசையாமல், உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து இருக்கின்றேன். இவர்களுக்கு மூச்சுத் திணறாதா? என்றுகூட எனக்கு வியப்பாக இருக்கும். பாறாங்கல் விழுவது போலத் தண்ணீர் விழும். அதையும் பொறுத்துக்கொண்டு இருப்பார்கள். எப்போதும் பெண்கள் கூட்டம் சற்றுக் குறைவாகத்தான் இருக்கும். ஐந்து அருவியில் மகளிருக்கு இரண்டு அருவிகள்தான் அவர்களுக்கு ஒதுக்கப்படும்.

இப்போது நிலைமை தலைகீழ். பெண்களுக்குத்தான் முதல் இடம். ஆண்கள் ஒரு ஓரமாகத்தான் நின்று குளிக்க முடிகிறது. அதற்கும் வரிசையில் நிற்க வேண்டும். அந்த வரிசையும் ஒரு கிலோ மீட்டருக்கு மேல் நீள்கிறது. இவர்கள் எல்லாம் எந்த நம்பிக்கையில் நிற்கிறார்கள் என்றே பார்ப்பேன். அப்படி வரிசையில் நின்று அருவியை நெருங்கினாலும், ஒருவருக்கு ஐந்து நிமிடங்கள் கூடக் கிடைக்காது. காவலர் தடிகொண்டு சாத்துவார். குளிக்கும்போது வெற்று உடம்பில் தடியடி விழுந்தால் சுளீரென வலிக்கும் என்று கருதுகிறேன். ஏனென்றால், நான் அப்படி அடி வாங்கியது இல்லை. அடிபட்டவர்களுக்குத்தானே தெரியும் அந்த வேதனை? ஆனால், மசாஜ் என்ற பெயரில், முறையாகப் பயிற்சி பெறாதவர்களிடம் ஒருமுறை மாட்டிக்கொண்டேன். உடலை முறுக்கிப் பிழிந்து விட்டார்கள். பிற்பகலில் வீட்டில் போய்ப் படுத்தவன், மறுநாள் காலையில்தான் தட்டுத்தடுமாறி எழுந்தேன். அப்போதும் வலி போகவில்லை. அடுத்து இன்றுவரையிலும், மசாஜ் பக்கம் போகவும் இல்லை.

செண்பகா தேவி

குற்றாலம், ஐந்து அருவி தவிர, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, செண்பகாதேவி, தேனருவி, பழத்தோட்ட அருவி எனப் பல அருவிகள் உண்டு. புலி அருவி செயற்கையாகக் கட்டப்பட்டது. பத்து அடிகள் உயரத்தில் இருந்துதான் தண்ணீர் விழும். குற்றாலத்தில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பழைய குற்றால அருவியும், மலையைச் செதுக்கி உருவாக்கப்பட்டதுதான். ஆனால், அகன்று பரந்த இடம். நின்று குளிப்பதற்கு மிகவும் வசதியானது, பாதுகாப்பானது. இந்த அருவிக்குச் செல்லும் வழியில் கிடைக்கின்ற இளநுங்கு சுவையானது. எண்ணிக்கை கணக்குப் பார்க்காமல் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடலுக்கு எந்தக் கேடும் இல்லை. அதைக் கண்டு கொள்ளாமல் வருபவர்கள் கொடுத்து வைக்காதவர்கள்.

திருக்குற்றால அருவியின் பக்கவாட்டில் அமைந்து உள்ள சிற்றருவியில் இரண்டு அறைகள் உண்டு. அதற்கு உள்ளே தண்ணீர் விழும். பத்து அல்லது பதினைந்து பேர்கள்தாம் நின்று குளிக்க முடியும். அதற்குப் பக்கத்தில் உள்ள மலைப்பாதை வழியாக மேலே ஏறி, அடர்ந்த காடுகளுக்கு ஊடாக உள்ள மண் சாலையில், மூன்று கிலோ மீட்டர்கள் நடந்து சென்றால் செண்பகா தேவி அருவி. வழிநெடுகிலும் இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டு, நண்பர்களோடு பேசிக்கொண்டே நடக்கலாம். செண்பகப்பூ உள்ளிட்ட பல்வேறு வகையான மலர்களின் மணம் நாசியைத் துளைக்கும்.

பத்துப் பதினைந்து ஆண்டுகளாகவே, கீழே உள்ள அருவிகளில் குளிப்பதைத் தவிர்த்துக் கொண்டு, நண்பர்களோடு பேசிக்கொண்டே செண்பகாதேவி அருவி வரையிலும் நடந்து சென்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தேன். செண்பகா தேவி அருவியில் அல்ல; அது சற்று ஆபத்தான இடம். எட்டாம் வகுப்பு படிக்கும்போது, என் பக்கத்து இருக்கையில் அமர்ந்து இருந்த நண்பன் ஈஸ்வரன், அந்த அருவி முன்பு உள்ள தடாகத்தில் குதித்துத்தான், பாறைகளுக்கு இடையில் சிக்கி உயிர் இழந்தான். இரண்டு நாள்களுக்குப் பிறகுதான் அவனது உடலை மீட்க முடிந்தது. அந்த அருவியைப் பார்க்கும்போதெல்லாம் அவனது நினைவு வந்து விடும். அப்படிப் பல பேர் அங்கே சிக்கி உயிர் இழந்து இருக்கின்றார்கள். ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. எனவே, அங்கே குளிப்பது இல்லை.

செண்பகாதேவி அருவிக்கு 500 மீட்டர்கள் முன்பாக ஒரு பெரிய தடாகம் உண்டு. அங்கே எவ்வித அச்சமும் இன்றி, நன்றாக நீந்திக் குளிக்கலாம். ஒன்றிரண்டு பாறைகளின் ஊடாக அருவி போல, சற்றே குறைவான உயரத்தில் இருந்து தண்ணீர் விழும். நன்றாக எண்ணெயைத் தேய்த்துக்கொண்டு, பாறைகளில் அமர்ந்து, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து, பின்னர் குளிக்கலாம். எந்தத் தொல்லையும் இருக்காது. இந்த இடத்தில் இருந்து அண்ணாந்து பார்த்தால், மூன்று புறங்களிலும் சிகரங்களின் பிரமாண்டத்தை ரசித்துக் கொண்டே இருக்கலாம். பச்சைப் பசேல் என, அடர்த்தியாக மரங்கள், விண்ணைத் தொடுகின்ற அளவுக்கு ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கின்றன. பெரிய தூக்குச் சட்டியில் கோழி அல்லது ஆட்டுக்கறிக் குழம்பு சமைத்துக் கொண்டு போய், பாறைகளில் இலையைப் போட்டு, கையில் தட்டு வைத்துக் கொண்டு, நண்பர்களோடு சேர்ந்து சாப்பிட்ட இன்பம், வாழ்நாளில் இறுதிவரையிலும், நினைவு இருக்கின்ற வரையிலும் எண்ணிப் பார்த்து மகிழத்தக்கது. பாறையில் துண்டை விரித்துப் படுத்து உறங்கி எழுந்து வருவோம். இடையிடையே சாரல் பெய்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் அந்தச் சாரல் வலுத்துப் பெய்தாலும், அதற்காக எங்கும் ஓடி ஒளிய முடியாது. நனைந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். அது ஒரு இனிமை.

தேனருவி

செண்பகாதேவி வரையிலும்தான் வழித்தடம் ஓரளவு நடக்கக்கூடிய நிலையில் இருக்கும். அதற்கும் மேலே இரண்டு கிலோமீட்டர்கள் நடந்து சென்றால் தேனருவி. சமதளத்தில் அல்ல, பல இடங்களில் பாறைகளைப் பற்றிப் பிடித்துக் கொண்டுதான் ஏற முடியும். சில இடங்களில், பாறைகளில் இருந்து கீழே இறங்கி, ஆங்காங்கே வழியில் ஓடுகின்ற ஓடைகளைக் கடந்து, சிறுசிறு பாறைகளில் குதித்துத் தாவி, அதற்குப் பிறகு மீண்டும் மேலே ஏறித்தான் செல்ல முடியும். தேனருவிக்கு மூன்று முறைதான் சென்று இருக்கிறேன். கல்லூரியில் படிக்கும்போது நண்பர்களோடு சென்றபோது, ஐம்பது பேர் ஒன்றாக ஏறி தேனருவிக்குச் சென்று குளித்தது மறக்க முடியாத நிகழ்வு. சுமார் 150 அடிகள் தொலைவுக்கு, இருபுறமும் உயர்ந்து ஓங்கிய பாறைகளுக்கு நடுவே நடந்து சென்று, 150 அடி உயரத்தில் இருந்து நேராகத் தண்ணீர் விழுவதைப் பார்ப்பதற்கே அச்சமாக இருக்கும். இங்கே தண்ணீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும். நடுங்கிக் கொண்டேதான் குளிக்க வேண்டும. அடுத்தடுத்த ஆண்டுகளில், ஐந்து பேர் பத்துப் பேர் சேர்ந்து போனாலும்கூட நடுக்கமாகத்தான் இருந்தது. இவ்வளவு சிரமப்பட்டு இங்கே வரவேண்டுமா என்ற எண்ணத்தில் தேனருவிக்குப் போவதை நிறுத்திக்கொண்டேன். ஆனால், செண்பகா தேவிக்கும் போக முடியாமல், கடந்த மூன்று ஆண்டுகளாக வனத்துறையினர் தடுத்து விட்டார்கள்.

எத்தகைய ஒரு இனிமையான நடைபயணம் அது!

இப்போதும்கூட, ஒருசிலர் கூட்டாகச் சேர்ந்து கொண்டு, காவலர்களைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து, செண்பகா தேவிக்குச் சென்று வருவதாக, சென்னையில் ஏடுகளில் வந்த செய்திகளில் படித்தேன். அப்படிப் போவதும் கூட இனிமையாக இருக்காது. தனிமையாகத்தான் இருக்கும். வேண்டுமானால், மதுமயக்கத்தில் போகிறவர்கள், தனியாக நடக்கப் பயந்து, கூச்சல் போட்டுக் கொண்டு விலங்குகளைப் போலப் போய்வரலாம்.

கலைவாணர் கலை அரங்கம்

தமிழகத்திலேயே பாறை மீது அமைந்து இருக்கின்ற ஒரேயொரு கலை அரங்கம், திரை அரங்கம், குற்றாலம் பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள கலைவாணர் கலை அரங்கம்தான். அங்கே பல படங்கள் பார்த்ததை மறக்கவே முடியாது. இப்போது அங்கே படங்களைத் திரையிடுவது இல்லை. திரை அரங்கத்துக்கு முன்பாக உள்ள பாறையில், குடும்பத்தோடு நண்பர்களோடு அமர்ந்து பேசிக் களிக்கலாம்.

தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு, ஆண்டுக்கு ஒருமுறை பத்துப் பதினைந்து நாள்கள் நடந்த குற்றாலம் சாரல் விழா, அந்தப் பகுதியிலேயே ஒரு பெரிய திருவிழா. அங்கே, நாடகக் காவலர் ஆர்.எஸ். மனோகர் அவர்களுடைய பல நாடகங்களைப் பார்த்து இருக்கின்றேன். புகழ் பெற்ற பல கலைஞர்கள் வருவார்கள். இப்போது சாரல் விழா நாள்களும் சுருங்கி விட்டன. பெயரளவில்தான் நடக்கின்றது.

கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், குற்றாலத்தில் தண்ணீர் விழுகிறது என்றால், அதற்காகவே ஒரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொண்டு, சென்னையில் இருந்து போய் வந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டில்தான் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கும் மேல் அருவிகளில் தண்ணீர் வெள்ளமாகப் பாய்ந்து ஓடுகிறது என்ற செய்திகளைக் கேட்டபோதும், ஏனோ குற்றாலத்துக்குச் செல்லும் எண்ணமே தோன்றவில்லை.

வைகோ அவர்களும் ஒரு குற்றாலப் பிரியர் என்றாலும், ‘கடைசியாகக் குற்றாலத்தில் குளித்து 18 ஆண்டுகள் ஆகின்றன’ என்று அண்மையில் ஒரு கூட்டத்தில் பேசுகையில் குறிப்பிட்டார்கள். அந்த நாள்களில், நானும் பலமுறை அவர்களுடன் சென்று இருக்கின்றேன். இப்போது, நாடு அறிந்த தலைவர் ஆகி விட்டதால், அருவியில் குளிக்கப் போனால், அவரைப் பார்க்க ஒரு கூட்டம் கூடி விடும். அதைத் தவிர்ப்பதற்காக, அருவிக் குளியலை நிறுத்திக் கொண்டார். பிரபலம் ஆனவர்கள் குற்றாலத்தில் குளிப்பதை எண்ணிப் பார்க்கவே முடியாது. இப்படியாக, குற்றாலத்தில் ஆனந்தக் குளியல் என்பது இப்போது அருகி வருகின்றது.

கும்பா உருட்டி

kumba_urutti

நான்கைந்து ஆண்டுகளாக குற்றாலத்தில் குளிக்க முடியாத வருத்தத்தில், செங்கோட்டைக்கு மேற்கே சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில், கேரள மாநிலத்துக்கு உள்ளே, கும்பா உருட்டி என்ற சிற்றருவி இருப்பதை அறிந்து, நான்கைந்து முறை அங்கே சென்று குளித்து வந்தேன். குற்றாலத்தில் பெற முடியாத அருவிக் குளியலை, கும்பா உருட்டியில் சுகமாக அனுபவிக்க முடிகின்றது. அங்கே, அருவியில் இருந்து தண்ணீர் விழுகின்ற இடத்தில், ஒரு தடாகம் இருக்கின்றது. ஒரு ஆள் உயரத்துக்கும் குறைவான ஆழம்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும், கூழாங்கற்களின் மீது நின்று கொண்டுதான் குளித்தோம். இப்போது, அந்த இடத்தில் காங்கிரீட் சிமெண்ட் தளம் அமைத்து விட்டார்கள். ஐந்து நட்சத்திர விடுதிகளில் உள்ள நீச்சல் குளித்தில் குளிக்கும்போதும்கூட அப்படி ஒரு குளியலை அனுபவிக்க முடியாது. இப்போது, கும்பா உருட்டியைப் பற்றியும் நிறையப் பேர் அறிந்து கொண்டார்கள். எனவே, அங்கேயும் கூட்டம் கூடி வருகின்றது. அடுத்த சில ஆண்டுகளில், கும்பா உருட்டிக்கும் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுமோ என்பதை நினைக்கையில் வருத்தமாக இருக்கின்றது.

பாபநாசம் கடந்து மணிமுத்தாறு அணைக்கட்டுக்குப் போய், சுமார் மூன்று கிலோமீட்டர்கள் படகில் பயணித்து அக்கரைக்குச் சென்றால், மணிமுத்தாறு அருவி உள்ளது. அருமையாகக் குளிக்கலாம். இப்போது, அங்கே செல்வதற்கும் தடை விதித்து விட்டார்கள்.

கொடிவேரி

இந்நிலையில்தான், கொடிவேரிக்குச் சென்று வருகின்ற ஒரு பயணத்திட்டத்தை வகுத்தேன். நீங்களும் கூட இதைப் பார்த்து இருக்கலாம் திரைப்படங்களில்! ஆம்; ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில், இந்த இடம் காண்பிக்கப்படுகிறது. ஆனால், இதுதான் கொடிவேரி என்பதை நீங்கள் அறிந்து இருக்க மாட்டீர்கள் அவ்வளவுதான்!

kodiveri_arunagiri_650

கொடிவேரி தடுப்பு அணையின் நடுவில் உள்ள சுவர் மீது, கதாநாயகனும், கதாநாயகியும் நடந்து வருவார்கள்; ஆடுவார்கள், பாடுவார்கள்; தனியாக அன்றி, குழுவாகவும் சேர்ந்து ஆடிப் பாடுவார்கள்.

இப்போது நினைவுக்கு வருகின்றதா? ஆம்; அதுதான் கொடிவேரி. நீங்கள் இதுவரை பார்க்கவில்லை என்றால், ஒரு இரண்டு நாள்கள் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படுகின்ற பாடல் காட்சிகளை சற்றே உற்றுப் பாருங்கள். கொடிவேரியைப் பார்த்து விடலாம். உடனே பார்க்க வேண்டும் என்றால், இணையத்தில் ஒரு நொடியில் படங்களைப் பார்க்கலாம்.

படங்களில் மட்டும் பார்த்தால் போதுமா? எந்த ஒரு இடத்தையும், நேரில் பார்த்து ரசிப்பதே ஒரு தனி அழகு. அப்போது கிடைக்கின்ற உணர்வுகளை விவரிக்க முடியாது. அதுதான் பயணங்களின் வெற்றி.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையத்துக்கு வடமேற்கில், சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில், சத்தியமங்கலம் செல்லும் சாலையில், கொடிவேரி அமைந்து உள்ளது. ஆகஸ்ட் 25 ஆம் நாள், ஈரோட்டில் நடைபெற்ற முகநூல் நண்பர்கள் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஈரோடு சென்றேன். அன்று காலையில் கொடிவேரி சென்று வரத் திட்டமிட்டேன். நண்பர் பென்னாகரம் அசோகன் அவர்களும் ஈரோடு வருவதாகச் சொன்னார். அவரையும் அழைத்தேன். இருவரும் சென்றோம். பழனிச்சாமி என்ற உள்ளூர் ம.தி.மு.க. தோழர், எங்களை எதிர்பார்த்துச் சாலையில் காத்து இருந்து அழைத்துச் சென்றார்.

எவ்வளவு அருமையான அருவி! நாங்கள் சென்ற காலை வேளியில், எட்டு மணிக்குக் கூட்டம் குறைவாகத்தான் இருந்தது. ஐம்பது பேர் கூட இல்லை. தண்ணீர் ஒரே சீராக விழுவதால், அருவிக்கு அருகே, தரையில் நன்றாக அமர்ந்து குளிக்க முடிந்தது. அடித்துக் கொண்டு போய்விடுமோ என்று அஞ்ச வேண்டியது இல்லை. ஆனந்தமாகக் குளித்தோம்.

சுமார் 300 அடிகள் நீண்ட ஒரு சிறிய தடுப்பு அணை. இருபுறமும், இருபது முப்பது அடிகள் வரையிலும், இரும்புப் பாளத்தை வைத்துத் தண்ணீரைத் தடுத்து இருக்கின்றார்கள். பெரும்பாலும் ஆண்டு முழுவதும் வற்றாமல், தொடர்ச்சியாகத் தண்ணீர் விழுவதால், இரும்புப்பாளம் இருப்பது தெரியாது. கடும் கோடையில், தண்ணீர் வறண்டால்தான் அதைப் பார்க்க முடியும். தடுப்பு அணையின் நடுவில் நீண்ட சுவர் உள்ளது. அதன் மேல்பகுதி சற்றே அகலமாக, ஒன்றரை அடி அளவில், நன்றாகக் கால் பதித்து நடக்கக்கூடிய அளவுக்கு இருக்கின்றது. இரும்புப் பாளத்தின் மீதும், சுவரில் இருந்தும் தண்ணீர் ஒரே சீராக விழுகின்றது. பிரமாண்டமான அணைக்கட்டுகளில் கூட, திறந்து விடும்போது தண்ணீர் பொங்கிப் பெருகி பெருவெள்ளமாகச் சீறிப் பாயும். ஆனால், கொடிவேரியில், தண்ணீர் விழுகின்ற அழகே அழகு. தண்ணீர் தேங்கி நிற்கின்ற பகுதியில், பரிசல் சவாரி உண்டு. இந்தத் தடுப்பு அணை, 17 ஆம் நூற்றாண்டில், மைசூரை ஆண்ட மன்னரால் கட்டப்பட்டது. இதன் பயனாக, இன்றைக்கும் இப்பகுதியில், கரும்பு, நெல், வாழை சாகுபடி செழுமையாக நடைபெறுகிறது.

kodiveri_arunagiri_370அருவியில் ஆனந்தக் குளியலை முடித்துக்கொண்டு புறப்படுகின்ற வேளையில், சில பெண்கள் வந்து, ‘மீன் சோறு சாப்பிடுங்கள்’ என்று அன்போடு அழைத்தார்கள். ஆங்காங்கே கற்களை அடுப்பாக ஆக்கி, சுள்ளிகளைப் போட்டு எரிக்கின்றார்கள். மசாலா தடவிய, வகைவகையான மீன்கள். கட்லா, ரோகு, விறால், ஜிலேபி, வாழை, கெளுத்தி என அடுக்கிக் கொண்டே போகிறார்கள். சிறிய துண்டு விலை குறைந்தது 25 ரூபாய்; சற்றே பெரிய துண்டு, ஐம்பது வரையிலும் போகிறது. ‘ஒகேனக்கல்லில் 15 ரூபாய்க்குக் கிடைக்கிறதே?’ என்றார் அசோகன்.

‘அண்ணா, இங்கே நாங்கள் அக்கரையில் இருந்து ஆற்றைக் கடந்துதான் வருகிறோம். எல்லாப் பொருள்களையும் தலைச்சுமையாகத்தான் கொண்டு வர வேண்டும். மீன் பிடிப்பதற்கு குத்தகைப் பணம் கொடுக்க வேண்டும். அதற்குப்பிறகுதான், மிச்சம் மீதி பார்க்க வேண்டும். பெரிதாக மிச்சம் மீதி பார்த்து விட முடியாது’ என்றார். அவர் சொல்வதும் சரி என்றே பட்டது. நாம் தேர்ந்து எடுத்துக் கொடுக்கின்ற மீன் துண்டுகளைப் பொறித்துக் கொடுக்கின்றார்கள். அருமையான கம்மங்கூழ் கிடைத்தது. சுவைத்துப் பருகினோம். குளிப்பதற்கு வசதியாக அரைக்கால் சட்டைகள், துண்டுகள், சோப்புகளும் கிடைக்கின்றன. இளநீர் பருகலாம். கொடிவேரி பகுதியின் இயற்கை அழகை ரசித்துக்கொண்டே ஈரோட்டுக்குத் திரும்பினோம்.

இதுவரையிலும், 15 நாடுகளில் பயணம் மேற்கொண்டு, நான்கு பயண நூல்களையும் எழுதி விட்டேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு மேற்கொண்ட ஜப்பான் பயணம் குறித்த நூல், இந்த ஆண்டின் இறுதிக்கு உள்ளாக வெளிவரும். தமிழகத்துக்கு உள்ளேயும், இந்தியாவின் பிற மாநிலங்களில் மேற்கொண்ட பயணங்கள் குறித்தும், விரிவாக எழுதி வைத்து உள்ளேன். விரைவில் ஒரு நூலாக வெளிவரும். தமிழகத்துக்கு உள்ளேயே பார்த்து ரசிக்க வேண்டிய, இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் எத்தனையோ உள்ளன. அப்படி ஒரு இடம் கொடிவேரி. பார்த்து ரசியுங்கள்; குளித்து மகிழுங்கள்!

- அருணகிரி