vedanthangal_1_620

செங்கல்பட்டு புறவழிச் சாலையில் வண்டியை நிறுத்தி ஆசுவாசப்படுத்திக் கொள்ள இறங்கியபோது, எங்கள் நண்பர்கள் பறந்து போய்க் கொண்டிருந்தனர். சரி, எப்படி இருந்தாலும் அவர்களது வீட்டுக்குச் சென்று பார்க்கத் தானே போகிறோம் என்று தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டோம்.

தேசிய நெடுஞ்சாலை 45ல் வையாவூர் சென்றடைந்த போது மேகங்களுக்கு நடுவில் இருந்து எட்டிப் பார்த்து சூரியன் கண்சிமிட்டினான். வானில் ஆரஞ்சு, இளஞ்சிவப்பு வண்ணங்கள் வாரியிறைக்கப்பட்டிருந்தன. அதற்கு எதிரே இருந்த வேடந்தாங்கல் சாலையில் வண்டியை ஓட்டினோம்.

வீண் பரபரப்பு தொற்றிக் கொள்ளாத அந்த சிற்றூரின் உள்ளே நுழைந்து ஊரின் கிழக்கு எல்லையை அடைந்தால், அமைதியாக வீற்றிருக்கிறது அந்தப் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம். பெரிய பந்தோபஸ்து எதுவும் இல்லை. உள்ளூர் மக்கள் புதியவர்களை சிநேகமாகவே பார்க்கிறார்கள்.

‘ஏரிகள் மாவட்டம்’ என்று புகழ்பெற்ற செங்கல்பட்டு மாவட்டத்துக்கு அண்டை மாவட்டமான காஞ்சிபுரம் மாவட்டத்திலும் ஏரிகள் நிறைந்திருக்கின்றன. பண்டைகாலம் தொட்டே ஏரிகள் நன்கு பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. வேடந்தாங்கல் ஏரி மற்றவற்றில் இருந்து கொஞ்சம் மாறுபட்டது. அங்கு பறவைகள் கூடுகின்றன. இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அமைக்கப்பட்ட முதல் பறவை சரணாலயம்.

சரணாலயத்துக்குள் கால் பதித்தபோது சில ஊசிவால் வாத்துகளும், நீர்க்கோழிகளும் வரவேற்றன. அது ஏரியின் ஓர் எல்லை.

சிறிது தொலைவு நடந்தவுடன் தொலைநோக்கி கோபுரம் இருந்தது. படிகளில் ஏறுவதற்கு முன் பெரிய பறவைகளின் குரல்கள் கலவையாக ஒலித்து ஆர்வத்தை தட்டியெழுப்பின. நாரைகள், அரிவாள்மூக்கன்கள், சுரண்டிவாயன்கள் குரல் எழுப்பும் தன்மை உள்ளவை. வேகமாக படிகளைக் கடந்து கோபுரத்தின் உச்சிக்குச் சென்றோம்.

‘அப்பப்பா, என்ன அது!’

மரங்களிலும் செடி கொடிகளிலும் பூக்கள் மலர்வதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இது பறவைகள் பூத்த மரங்களாக அல்லவா காட்சி தருகின்றன! எங்கு நோக்கினும் பறவைகள் கூட்டங்கூட்டமாக – ஏரியில் இரை தேடிக் கொண்டு சில, மீண்டும் கூட்டுக்குப் பறந்து கொண்டு சில, வண்ண வண்ண இறக்கைகளை அசைத்தவாறு வானை அளந்து கொண்டு சில, ஒரு மரத்தில் இருந்து மற்றொன்றுக்கும் ஒரு கிளையில் இருந்து மற்றொன்றுக்குமாக தாவிக் கொண்டு சில இப்படி பல்வேறு செயல்பாடுகளில் நீர்ப்பறவைகள் தங்கள் அன்றாடப் பணிகளை வழக்கம் மாறாமல் தொடங்கியிருந்தன.

மார்கழி மாதக் கடைசி நாள். அடுத்த நாள் கதிரவனை வழிபடும் பொங்கலை கோலாகலமாகக் கொண்டாட கிராமங்கள் தயாராகிக் கொண்டிருந்தன. எதிரே வரும் ஆள் தெரியாத அளவு மார்கழிப் பனி பெய்து கொண்டிருந்தது.

இரண்டு பேரை சுமந்துகொண்டு செல்லும் திறன் பெற்ற ‘நம்ம ஊரு வண்டி’ ஒன்றில் வயல்வெளிகளிடையே நெளிந்து வளைந்து சென்ற பாதையில் நானும் நண்பரும் வேடந்தாங்கல் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தோம். நடுநடுக்கிய அந்தக் காலைப் பொழுதில் அந்தப் பகுதிக்கு அந்நியமான, பனிக்குப் பயந்து முகத்தை மூடியிருந்த எங்களை அப்பகுதி மக்கள் வியப்பாகப் பார்த்தது இயல்பான ஓர் எதிர்வினையே. அவர்களைத் தாண்டி வண்டி நகர்ந்தது.

வேடந்தாங்கல் சரணாலயம் எப்பொழுதுமே இப்படித்தான். காலை நேரங்களில் அமைதியின் திருவுருவமாக இருக்கும். சரணாலயத்துக்குள் கால் பதித்தவுடன் பெரிய ஆச்சரியம் உங்களை திக்குமுக்காடச் செய்யும் என்று சொல்ல முடியாது. ஆனால் சில பத்தடி தூரம் நடந்து சென்ற பிறகும் இதே உணர்வு நீடிக்காது. நீங்கள் உங்களை மறந்து போவீர்கள்.

கோபுரத்தின் உச்சியில் இருந்து பறவைகளை நன்கு பார்க்க முடியும். அங்கு தொலைநோக்கி வைக்கப்பட்டிருந்தது. வரிசையில் நின்று பறவை தரிசனம் பெறலாம். கோபுரத்தில் நின்றால் பறவைகள் முன்னும் பின்னுமாக நடந்து செல்வதை நெருக்கமாகப் பார்க்கலாம். அவை பறக்கும் வேகம் காரணமாக படமெடுப்பது கடினம். மேலும் கூர்மையான லென்ஸ் கொண்ட ஔிப்படக் கருவிகள் தேவை.

இந்த கோபுரம் தவிர சரணாலயத்தின் பிற பகுதிகளில் ஆங்காங்கே கண்காணிப்பு மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. பரந்த கண்காணிப்பு மேடை ஒன்றிலும் கூர்மையான தொலைநோக்கி வைக்கப்பட்டிருந்தது.

தை மாதத்துக்கு கட்டியம் கூறுவது போல, மெல்ல மேகங்களை விலக்கி காலைச் சூரியன் கண்விழித்துக் கொண்டிருந்தான். வடக்குப் பக்கம் இருந்த மரங்களில் பெரும்பூக்களைப் போல மலர்ந்திருந்தன நீர்ப்பறவைகள். அவற்றில் பெரும்பாலானவை மஞ்சள் மூக்கு நாரைகள் (Painted Stork). தமிழ்நாட்டின் இரு கோடிகளில் அமைந்துள்ள வேடந்தாங்கல், கூந்தங்குளம் பறவை சரணாயலங்களில் வலசை காலங்களில் இந்த நாரைகள் அதிக எண்ணிக்கையில் கூடுகின்றன.

கோடையில் நாட்டின் பிற பகுதிகளில் வாழும் மஞ்சள் மூக்கு நாரைகள் வடகிழக்குப் பருவமழை தொடங்கும்போது வேடந்தாங்கலை வந்தடைகின்றன. கூடமைத்து குஞ்சு பொரிக்க ஏற்ற நீர்மரங்கள், குஞ்சுகளுக்கும் வளர்ந்தவைகளுக்கும் தேவைப்படும் மீன்கள், தவளைகள் வேடந்தாங்கலில் அபரிமிதமாகக் கிடைப்பதே இதற்கு அடிப்படைக் காரணம்.

முந்தைய இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2006ம் ஆண்டில் மஞ்சள் மூக்கு நாரைகள், நத்தை குத்தி நாரைகள், சின்ன கொக்குகள், உண்ணிக் கொக்குகள் அதிக எண்ணிக்கையில் இருந்தன. ஓரளவு தென்படக் கூடிய கூழைக்கடாகள், நீர்க்காகங்கள், முக்குளிப்பான்கள், சிறகுகள் குறைந்த எண்ணிக்கையில் சரணாலயத்தில் உள்ளடங்கி காணப்பட்டன.

வித்தியாசமான தோற்றம் கொண்ட அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், பாம்புத்தாரா சாதாரணமாக அதிக எண்ணிக்கையில் கூடுவதில்லை. இவற்றின் பெயரும் நடத்தைகளும் சுவாரசியமானவை.

spoonbill_370சாம்பல் நாரை, குருட்டுக் கொக்கு, இராக் கொக்கு போன்ற கொக்கு வகைகளையும் இங்கு பார்க்கலாம். பலரும் பார்க்க ஆவலாக இருக்கும் பூநாரைகள் (Flamingo) கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கே வருகின்றன. வேடந்தாங்கலுக்கு அவை வருவதில்லை. பண்டைக் காலத்தில் திருப்பாலைவனம் என்ற துறைமுகமாகத் திகழ்ந்த பழவேற்காடு சரணாலய கழிமுக ஏரிக்கு ஜனவரி மாதம் சென்றால் இப்பறவைகளை பார்க்கலாம்.

கூட்டிக் கழித்துப் பார்த்தால் தமிழக நீர்ப்பறவைகளில் பெரும்பாலானவற்றை வேடந்தாங்கலில் பார்த்துவிடலாம் என்பது இந்தச் சரணாலயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும்.

ஏரியின் கரைப்பகுதிக்கு அருகேயிருந்த மரம் ஒன்றுக்கு வந்த மஞ்சள் மூக்கு நாரை நாங்கள் நின்றதை பொருட்படுத்தாமல் கிளையை முறிக்க முயற்சித்துக் கொண்டிருந்தது. கூந்தங்குளத்தில் மிகவும் சிநேகமான, மனிதர்களின் இருப்பை பொருட்படுத்தாமல் இயல்பாக உலாவரும் பறவைகளை பார்க்க முடியும். வேடந்தாங்கலிலும் அப்படிப்பட்ட பண்பை அப்போது உணர முடிந்தது.

பறவைகளை நோக்க இரு கண்ணோக்கி அவசியம். பறவைகள் அளவில் சிறியவை என்பதாலும், நீர்நாரைகளில் உள்ளடங்கி இருப்பதாலும் இரு கண்ணோக்கி இன்றி பறவைகளை அனுபவித்து பார்க்க முடியாது. இரு கண்ணோக்கி நம்மிடம் சொந்தமாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பறவை ஆர்வலர்களிடம் இரவல் பெற்றுச் செல்வது நல்லது. அதன் மூலம் பறவைகளைப் பார்ப்பது ஓர் அருமையான அனுபவம். காட்சிகள் பகுதி பகுதியாக தனித்தனி படங்கள் போல விரியும். கண்ணோக்கியின் எல்லைக்குள் இருக்கும் ஒவ்வொரு பொருளும் தனித்தனியாகப் பிரிந்து தெரியும்.

வேடந்தாங்கல் சரணாலயம் ஏரியில் அமைந்திருப்பதால் யாரும் பறவைகள் அருகே செல்ல முடியாது. கர்நாடகாவில் உள்ள ரங்கண்ணத்திட்டு சரணாலயத்தில் ஏரியின் உள்ளேயே படகுகள் அனுமதிக்கப்படுகின்றன. இது போல வேடந்தாங்கல், கூந்தங்குளத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. இப்படிச் செய்வது பறவைகளின் வாழ்க்கையில் தொந்தரவை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அருகில் சென்றால் பறவைகள் பறந்து செல்லவும் வாய்ப்பு உண்டு.

இந்த சரணாலயத்தின் பாதுகாப்புப் பாரம்பரியம் சில நூற்றாண்டுகளுக்கு நீளும் வரலாறு கொண்டது. வேடந்தாங்கல் இந்தியாவின் பழைமையான நீர்ப்பறவை சரணாலயம்.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் 1798ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழைமையான, உலகின் பழைமை வாய்ந்த பறவைகள் சரணாலயங்களில் ஒன்று இது. நினைவு தெரியாத காலம் தொட்டே ஒவ்வோர் ஆண்டும் பருவமழைக்குப் பின் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை வேடந்தாங்கலுக்கு பறவைகள் வந்து செல்கின்றன. இப்பறவைகள் இயற்கையின் ஒரு பகுதியாக, தங்கள் நண்பர்களாகவே இப்பகுதி மக்கள் பார்க்கின்றனர். இயற்கையுடன் மக்கள் கொண்ட உறவின் தொடர்ச்சியாகத்தான் சங்ககாலத்தில் சத்திமுற்றப் புலவர் ‘நாராய். நாராய் செங்கால் நாராய்’ என்று பாடினார். அந்தப் பாரம்பரியம் இங்கு தொடர்கிறது.

சரணாலயம் அமைக்கப்படுவதற்கு முன்பிருந்தே இங்கு வரும் பறவைகளை காக்கும் உரிமையை ஆங்கிலேய அதிகாரிகளிடம் கோரிக்கை முன்வைத்து, இந்த ஊர் மக்கள் பெற்றுள்ளனர். பல நூற்றாண்டுகளாக பறவைகளுக்குத் தொந்தரவு தராமல், தொந்தரவு செய்ய முயற்சிப்பவர்களை தடுக்கும் பணியை கிராம மக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வேடந்தாங்கல் வரலாறு

பண்டைக் காலம் தொட்டே தென்னிந்தியாவில் நீர்நிலைகள் அல்லது கிராமப் பகுதிகளில் நீர்ப்பறவைகள் அமைக்கும் கூடுகளை பாதுகாப்பது அந்தந்தப் பகுதி மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது. நம் நாட்டின் பாரம்பரிய பண்பாடான பாதுகாப்புப் பணியை, நிறைவேற்ற வேண்டிய கடமைகளுள் ஒன்றாகக் கருதி மக்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.

வேடந்தாங்கலின் 1790க்கு முந்தைய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. அதற்கு முன்னர் இப்பகுதி எந்த ஆட்சியின் கீழ் இருந்தது என்ற தெளிவின்மையே இதற்குக் காரணம். அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் நிலையான அரசு இல்லை. 18ம் நூற்றாண்டில் வேடந்தாங்கல் கிராம மக்கள், செங்கல்பட்டின் முதல் கலெக்டராக கிழக்கிந்திய கம்பெனியால் நியமிக்கப்பட்டிருந்த லியேனெல் பிளேஸ் (Lionel Place) இடம் கூலி பெற்றதாக குறிப்பு உள்ளது. வேடந்தாங்கல் குளத்தில் கூடமைத்துள்ள பறவைகளை கண்ணி வைத்து பிடிக்க, துப்பாக்கியால் சுடுவதைத் தடுப்பதற்கு இந்தக் கூலி வழங்கப்பட்டுள்ளது. இடையில் இந்தக் கூலி கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. 1858ம் ஆண்டு இந்த உரிமை புதுப்பிக்கப்பட்டது. 1858ம் ஆண்டு ஆவணம் ஒன்று இந்தக் கூலி பற்றி குறிப்பிடுகிறது. அத்துடன் குளத்தின் நடுவில் பறவைகள் கூடமைக்கும் சமுத்திரப் பாலை மரங்கள் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

சில நூற்றாண்டுகளாக பறவைகளை பாதுகாத்து வந்த உரிமையை இந்த மக்கள் பெற்றிருந்ததை வைத்துப் பார்க்கும்போது, 200 ஆண்டுகளாக வேடந்தாங்கல் ஒரு சரணாலயமாக இருந்து வருகிறது  எனலாம். 1936ம் ஆண்டில் செங்கல்பட்டு கலெக்டர் இந்தப் பகுதியை சரணாலயம் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த சரணாலயத்தை பராமரிக்க அரசு செலவு செய்வதற்கான அனுமதியையும் வழங்கினார்.

வேடந்தாங்கலைக் சுற்றி 35 கி.மீ. சுற்றளவுக்கு பறவைகள் வேட்டையாடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையாணை பிறப்பிக்கப்படுவதற்கு முன் பெருமளவு பறவைகள் சுடப்பட்டு வந்தன.

200 ஆண்டுகளுக்கு மேலாக வேடந்தாங்கல் சரணாலயத்துக்கு பதிவு செய்யப்பட்ட வரலாறு இருந்தாலும், இத்தனை மாற்றங்களுக்கு மத்தியில் பறவைகளைப் பாதுகாப்பதில் இந்த மக்கள் காட்டி வரும் இயல்பான ஆர்வம், பல நூறு ஆண்டுகளைக் கடந்த அந்த மக்களின் கூர்மையான கண்காணிப்பு காரணமாகவே இன்றளவும் இத்தனை பறவைகள் இங்கு வந்து கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. பறவைகள் வருகைக்கு கிராம மக்கள் அளிக்கும் ஒத்துழைப்பு முக்கிய காரணம்.

வேடர்கள் தங்குமிடமாக இருந்த காரணத்தால் வேடந்தாங்கல் என்ற பெயரைப் பெற்ற இந்த கிராமம், காட்டுயிர் பாதுகாப்பு பாரம்பரியத்தைப் பேணி, இன்று வரைப் பறவைகளை பாதுகாத்து வருவது போற்றப்பட வேண்டிய ஒரு செயல்.

கூலி வேலை பார்க்கும் தேவராஜன், தட்சிணாமூர்த்தி, மாரியப்பன் ஆகிய மூவரும் வேடந்தாங்கலில் வளையவரும் பறவை நண்பர்கள்.

Vedanthangal_Darter_370“பறவைகள் இயற்கையின் அவதாரம். இங்கு வரும் பறவைகள் 40, 50 கி.மீ. சுற்றுப்பரப்புக்கு இரைதேடிப் போகும். அவற்றைக் கொல்லும் வேட்டையாடிகளை நாங்கள் தடுக்கிறோம். வெசக்காலி பாம்புகள், கருடப் பருந்து, கறுப்பு காக்கை ஆகியவை அவற்றுக்கு எதிரிகள். தவிர ஒரு மருந்துக் கம்பெனியின் மாசும் சேர்ந்து கொண்டுள்ளது.” என்கிறார்கள் இவர்கள் மூவரும். வேடந்தாங்கல் கிராம மக்களிடம் உள்ள மனப்பான்மைக்கு இவர்கள் சிறு எடுத்துக்காட்டு.

மழை பொழிவது முதல் உணவு உற்பத்தி வரை இயற்கையில் எல்லாமே ஒரு சுழற்சி முறையில் தான் இயங்குகிறது, மனிதத் தலையீடு இல்லாத வரை.

இக்கிராம மக்களுக்கு இயற்கையின் கொடை போல ஏரி நீர் விளங்குகிறது. ஆயிரக்கணக்கான பறவைகள் தங்கள் எச்சங்களை ஏரியினுள் இடுகின்றன. இதனால் அந்த நீர் ஊட்டச்சத்து மிக்கதாக, இயற்கை உரம் போல ஆகிவிடுகிறது. இந்த நீரை வயலுக்கு பாய்ச்சும்போது பயிர்கள் கூடுதல் வளம் பெறுகின்றன. ஏரியில் உள்ள மண் கூட ஊட்டச்சத்து மிக்கதாகக் கருதப்படுகிறது.

வழக்கமாக மரங்களுக்கு அதிக தண்ணீர் ஊற்றினால் அழுகிவிடும். அதேநேரம் நீர்நிலைகளில் செழித்து வளரும் மரங்கள் உள்ளன. அவற்றில் நீர்க்கருவை, சமுத்திரப் பாலை மரங்கள் ஏரியினுள் இயற்கையாகவே அதிகம் வளர்ந்துள்ளன. இவை நமது பாரம்பரிய மரங்கள், பறவைகளின் வருகையை பராமரிக்கும் பொருட்டு வனத்துறையும் இந்த மரங்களை நடுகிறது. வேடந்தாங்கல் ஏரிக்கு உத்திரமேரூர், வந்தவாசியில் இருந்து கால்வாய் வெட்டி நீர் இருப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளப்படுகிறது. பறவைகளுக்கு உணவாகும் மீனும் வளர்க்கப்படுகிறது.

ஏரியில் அதிக நீர் இல்லாத காலத்தில் வெளிநாட்டு ஒளிப்பட கலைஞர்கள் ஏரியின் பக்கவாட்டு பகுதிக்குச் சென்றும் படமெடுப்பது உண்டு. பரப்பை கணக்கில் கொண்டால் கூந்தங்குளம் பெரிது, வேடந்தாங்கல் சிறியது என்றாலும், இங்கு பறவைகளை அதிக எண்ணிக்கையில், தெளிவாக பார்க்க முடியும். கூந்தங்குளத்தில் மரங்கள் நடுப்பகுதியை மையமிட்டிருக்கும். அங்கு நீண்ட காலத்துக்கு அதிக பறவை வகைகளைப் பார்க்க முடியும்.

வேடந்தாங்கல், கூந்தங்குளம் ஆகிய பறவை சரணாலயங்களுக்கு முதன்முறையாக செல்பவர்கள் போக்குவரத்து வசதிகள், அத்தியாவசியத் தேவைகள் தொடர்பாக தெளிவாக விசாரித்து விட்டுப் போக வேண்டும். பறவை நோக்குதல், கானுலா போன்றவற்றில் ஒரு சில இடர்ப்பாடுகள் இருக்கத்தான் செய்யும். அந்தப் பயணங்கள் தரும் அரிய அனுபவத்தை கணக்கில் கொண்டே இவற்றை மதிப்பிட வேண்டும். எந்தப் பகுதிக்கு செல்வதற்கு முன்னும் சிறிது நேரம் செலவழித்து முன் தயாரிப்பு செய்தால் பிரச்சினையின்றி சென்று வரலாம்.

இரண்டு ஊர்களுக்கும் குறிப்பிட்ட நேரங்களில் தான் பேருந்து வசதி உள்ளது. இந்த வசதிகளை அதிகரிக்க வேண்டும். அதேநேரம் சரணாலயங்களில் பறவைகளுக்கு தொந்தரவு தராமல், இணக்கமாக நடந்து கொள்ளும் முறை பற்றி சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Pin It