நம்முடைய தமிழகத்தில் கலைகளின் அரும் பொக்கிஷங்களையெல்லாம் தன்னகத்தே கொண்ட ஆலயங்கள் பல உள்ளன.  குறிப்பாக, சிற்பத்திலும், கட்டிடக்கலையாலும் சிறப்பான உலகப்புகழ்பெற்ற ஆலயங்கள் பல நம் தமிழகத்தில் உள்ளன.  அவற்றுள் உலகப் பிரசித்திபெற்ற ஆலயம் குடுமியான் மலை.

இன்றும் உலகின் பல நாடுகளிலிருந்தும் ஆய்வுமாணவர்கள் குடுமியான் மலையில் காணப்படும் சிற்பங்களை ஆய்வு செய்த வண்ணம் உள்ளனர்.  மேலும் குடுமியான் மலையில் காணப்படும் இசைக்கல்வெட்டுதான் தமிழ்நாட்டிலேயே இசைக்குறியீடுகள் அடங்கிய முதல் கல்வெட்டு ஆகும்.

இன்றும் உலகின் பல பாகங்களில் இருந்தும் இசை ஆய்வுமாணவர்கள் இக்கல்வெட்டைக் கண்டு வியந்து போற்றுகின்றனர்.

முகப்பு மண்டம்

குடுமியான்மலை இராஜகோபுரத்தை அடுத்து உள்ளே நுழைந்தால் கண்ணுக்கும், சிந்தைக்கும் நிறைவளிக்கும் சிற்பங்களை இரு மருங்கிலும் காண முடிகின்றது.  முன்புறம் விஷ்ணுவின் அவதாரங்கள் காணப்படுகின்றன. மற்றும் ஆஞ்சநேயர், விபீடணன், வாலி, சுக்ரீவன் சிலைகள் காணப்படுகின்றன்.

இச்சிற்பங்கள் அனைத்தும் மிக அற்புதமாகவும், நேர்த்தியாகவும் சிற்பக்கலையின் பெருமையை பறைசாற்றுவிதமாகவும் உள்ளன.

இவற்றுள் வாலி, சுக்ரீவன் சிலைகள் மிக அற்புதமாகவும், நுணுக்கமாகவும் காணப்படுகின்றன. இரு சிலைகளுக்கிடையேயும் உள்ள வேறுபாட்டை தெளிவாக எடுத்துக்காட்டும் வண்ணம் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வாலிக்கு அவன் அரசனாக இருந்ததால் (சுக்ரீவனுடன் போர் செய்யும் பொழுது) தலையில் கிரீடம் இருப்பது போலவும், சுக்ரீவன் தலையில் கிரீடம் இல்லாமலும் படைத்திருப்பது சிற்பக் கலையின் சிகரங்களை தொடுகின்றது.

மேலும் முன்புறம் விஷ்ணுவின் அவதாரங்களை குறிக்கும் மச்ச, வராக, கல்கி அவதார சிலைகள் சிறப்பாக உள்ளன.

ஆயிரங்கால் மண்டபம்

முகப்பு மண்டபத்தை அடுத்து ஆயிரங்கால் மண்டபம் உள்ளது.  இவற்றில் தற்போது ஆயிரத்திற்கும் குறைவான தூண்களே உள்ளன.  எஞ்சிய தூண்கள் காலத்தில் சிதைந்திருக்கலாம் என அறிய முடிகின்றது.

முகப்பு மண்டபமும், ஆயிரங்கால் மண்டபமும் நாயக்க மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டவை என கருதப்படுகின்றது.

வசந்த மண்டபம்

வசந்த மண்டபம் நீண்ட நெடியதாகவும், இரு மருங்கிலும் சிந்தையை குளிர்விக்கும் சிலைகளையும் உடையதாகவும் உள்ளன. தாடிக்கொம்பு, பேரூர் போன்ற ஆலயங்களில் காணப்படுவது போல் கல்லில் பிறந்த காவியங்களாக இச்சிலைகள் காண்போர் சிந்தையை கவர்கின்றன.

சிற்பங்கள் ஒவ்வொன்றும் மிகுந்த நுணுக்கமான வேலைப்பாடுகளும், அற்புதமான அமைப்புகளுடனும் காணப்படுகின்றன. இச்சிற்பங்களின் அம்சங்களையும், சிறப்புக்களையும் விரிவாக எழுதத்துவங்கினால் ஒவ்வோர் சிற்பத்தையும் குறித்து ஒவ்வோர் தனிபுத்தகமே எழுதி விடலாம்.

குறிப்பாக ரதி சிற்பத்தில் அவள் கையில் அணிந்திருக்கக்கூடிய மோதிரங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வோர் விதமாக அழகுபடுத்தப்பட்டு உள்ளது.  மேலும் இரதியின் நெற்றிசுட்டு, காதணி, கழுத்தில் உள்ள நகைகள் உடலை மறைத்துள்ள மெல்லிய துணி போன்றவை மிகமிக சிறப்பாக செதுக்கப்பட்டுள்ளன.

பல பல காப்பியங்களாலும் சொல்ல முடியாத விஷயங்களையும், பிரமிப்பையும், உணர்வுகளையும் இந்த சிற்பங்கள் சிலநொடிகளில் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றன. 

சங்கர நாராயணர் சிலையில் ஒருபாதியில் சிவபெருமானையும், மறுபாதியில் நாராயணைனையும் அவரவர்களுக்குரிய அடையாளங்களையும் சிற்பி வேறுபடுத்தி காட்டியிருப்பது மிகுந்த நுணுக்கமான வேலையாகும்.

ஊர்த்துவ தாண்டவர் சிற்பத்தில் அவர்முகத்தில் ஆவேச பாவத்தையும், கோதண்ட ராமர் சிற்பத்தில் அவர் முகத்தில் சாந்த பாவத்தையும் வேறுபடுத்தி காட்டியுள்ள இச்சிற்பங்களின் பெருமைக்கு ஈடுஇணையே இல்லை.

இவ்விதம் இச்சிற்பங்களில் ஈடுஇணையற்ற தன்மைகளை காணும் போது, இவற்றை செதுக்கிய சிற்பிகளை நாம் மனதாரப் போற்றாமல் இருக்க முடியாது.

மோகினி அவதாரம் குறித்த சிலையும், அதற்கு எதிர்புறம் பெண்சிலையும் உயரத்திற்கு தக்கவாறு மாறுபட்ட சாமுத்திரிகா லட்சணங்களை சித்தரிப்பது சிந்திக்க வேண்டிய செயலாகும்.

இவ்விதம் இங்கு வல்லப கணபதி, ஆறுமுகர், இராவணன், நரசிம்மர், கண்ணப்பர், துர்க்கை, கோதண்ட இராமர், சங்கர நாராயணர், அக்னி வீரபத்திரர், அகோர வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர்,  தில்லைக்காளி,  இந்திரஜித், லட்சுமணன், மகாவிஷ்ணு, லட்சுமி, கருடாழ்வார் (அமர்ந்தநிலை) போன்ற சிறந்த சிற்பங்கள் உள்ளன.

இங்குள்ள சிற்பங்களின் முகத்தில் காணப்படும் தெய்வீக அழகு,  அவைகளின் கைவிரல்கள், கால்விரல்கள் போன்றவற்றில் அணிந்துள்ள அணிமணிகளின் நுணுக்கமான வேலைப்பாடு, அங்கங்களின் துல்லியமான அம்சங்கள், ஆபரணங்களின் சிறந்த அம்சங்கள், மேலும் அவை வெளிப்படுத்தும் காவியக்காட்சிகள், அனைத்திலும் பெருகியுள்ள பேரெழில் நம்மை மீண்டும் மீண்டும் வியந்து போற்றும் வண்ணம் உள்ளது.

ஆனால் மேலே கண்ட அனைத்து சிறப்புகளுக்கும் திருஷ்டி பரிகாரமாக அனைத்து சிலைகளிலும் சிலபகுதிகள் உடைக்கப்பட்டுள்ளன.  அடுத்து சபாமண்டபத்தை தாண்டி மகாமண்டபத்திற்கு வந்தால் அதன் மையத்தில் மேல் சுவரில் அறுகோண வடிவில் மேல் சுவர் அமைக்கப்பட்டிருப்பதை காணலாம்.  இதிலிருந்தும் இது பாண்டியர்களின் திருப்பணி என்பதை அறியலாம்.

அடுத்து கர்ப்ப கிருகத்திற்கு செல்லுமுன்  நாம்  தல வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.  அப்போது குடுமிநாதர் என்ற பெயர்க்காரணத்தை அறிய முடியும்.தல வரலாறு

முன்பொருகாலத்தில் இங்குள்ள பெருமானுக்கு ஓர் அர்ச்சகர் தவறாது பூசை கிரமங்களை செய்து வந்துள்ளார். அக்காலத்தில் அரசன் தினந்தோறும் தவறாது இரவு அர்த்த ஜாம பூசையில் கலந்து கொள்ளும் பழக்கம் உடையவனாக இருந்துள்ளான்.  பின்பு அப்பூசை பிரசாதங்களை அக்கோவிலின் தாசிக்கு கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது.

அப்போது ஒருநாள் இறைவன் இரவு பூசைக்கு வர கால தாமதம் ஆகியுள்ளது.  பூசை நேரத்திற்குள் அரசன் வர தவறி விட்டதால் அர்ச்சகர் பூசையை முடித்து வழக்கம்போல் பிரசாதத்தை தாசிக்கு அனுப்பி வைத்தார். அச்சமயம் அரசன் எதிர்பாராது வரவே, அர்ச்சகர் செய்வதறியாது திகைத்து, பூசை இன்னும் முடியவில்லை எனக்கூறி, தாசியிடமிருந்து பிரசாதத்தை வரவழைத்து அரசனுக்கு கொடுத்தார்.

அப்போது அப்பிரசாதத்தில் ஓர்முடியைக் கண்டு ஐயற்ற வேந்தன், அது குறித்து கேட்க, அர்ச்சகர் இப்பெருமானுக்கு தலையில் முடி உண்டு என்று கூறிவிட்டார்.  அதைக்கேட்ட அரசன்,  காலை நான் வந்து சுவாமியை பார்ப்பேன் தாங்கள் கூறியவாறு முடி இல்லையாயின் தங்களை தண்டிப்பேன் என்று அர்ச்சகரிடம் கூறிச் சென்றான்.

அரசன் சொல்லைக் கேட்ட அர்ச்சகர் அளவற்ற துயரம் எய்தி, ஆண்டவன் திருவடிகளை பணிந்து தன்னை அபயமளித்து காக்குமாறு வேண்டினார். அர்ச்சகரின் வேண்டுதலுக்கிரங்கிய ஆண்டவன், மறுநாள் அரசன் வரும்போது தன்னை முடிஉள்ளவனாக மாற்றி காட்சி கொடுத்துள்ளாரானெ தலபுராணம் கூறப்படுகிறது.

இவ்விதம் அர்ச்சகரின் வேண்டுகோளுக்கிரங்கி, சிகை (அல்லது) முடியுடன் காட்சியளித்ததால் இத்தலத்தில் சிவபெருமானுக்கு சிகாபுரீஸ்வரன் அல்லது குடுமிநாதர் என பெயர் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்தே இவ்வூரும் குடுமியான் மலை என வழங்கப்படுகின்றது.

இங்குள்ள கர்ப்பக்கிரகத்தில் லிங்க வடிவம் இருக்கிறது.  சுவாமி குடுமிநாதரின் பெயருக்கு ஏற்ப லிங்கத்திலும் முடிஇருப்பது போன்ற அமைப்பு காணப்படுகின்றது.

சுற்றுப் பிரகாரம்

இக்கோவிலின் சுற்றுப் பிரகாரம் சோழர் அல்லது நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சுற்றுச்சுவர்களில் காணப்படும் ஓவியங்கள் நம் சிந்தையைக் கவர்வனவாக உள்ளன.

மேலும் இச்சுற்றுப் பிரகாரத்தில் உலகில் வேறு எந்த தலத்திலும் காண இயலாத ஓர் அற்புதக்காட்சியைக் காண முடிகின்றது.  உலகில் வேறு எந்த கோவிலிலும் இப்படி ஓர் காட்சியை காண இயலாது.

சுற்றுபிரகாரத்தில் எங்கும் அறுபத்து மூவர் விக்கிரகங்கள் மற்றும் சுவாமி, அம்பாள் விக்கிரங்கள் இல்லை. மாறாக சுற்றுப்பிரகாரத்தில் நின்று பின்புறம் உள்ள மலையை பார்த்தால் அதில் சுவாமி, அம்பாள் ரிஷபாரூடராக அறுபத்தி மூவருடன் காட்சியளிக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ள காட்சியை காண முடிகின்றது.இப்படி ஓர் கற்பனையை சிருஷ்டித்த அந்த சிற்பியை நாம் எவ்விதம் வியந்து போற்றினாலும் ஈடாகாது. நினைந்து, நினைந்து வியக்கும் வண்ணம் இக்காட்சி ஓர் அற்புத அனுபவமாக அமைந்துள்ளது.

மேலும் சுற்று பிரகாரத்தில் சுப்ரமண்யர் சப்தமாதார்கள், சந்நிதிகள் உள்ளன.

சுற்று பிரகாரத்தை முடித்து விட்டு பள்ளியறைக்கு சென்றால் அங்கு நாம் காணும் ஓவியங்கள் நம்மை திகைப்பில் ஆழ்த்துகின்றன. பள்ளியறையின் இருமருங்கிலும் இருதலைகளையுடைய அன்றில் பறவைகளின் ஓவியங்கள் காணப்படுகின்றன.  பள்ளியறைக்கு முன்புறம் உள்ள மேற்சுவரில் பன்னிரு ராசிகள் பொறிக்கப்பட்டுள்ளது மிகவும் சிறப்பாக உள்ளது.

அம்பாள் சந்நிதி

இங்குள்ள அம்பாளின் பெயர் அகிலாண்டேஸ்வரி ஆகும்.

அம்பாள் சந்நிதிக்கு முன்புறம் உள்ள மண்டபத்தில் தான் மன்னர்கள் முடிசூட்டும் வழக்கம் இருந்து வந்துள்ளது. மன்னர்கள் முடிசூட்டும் காரணத்தால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை.

அம்பாள் சந்நிதியின் மண்டபத்தின் வெளியில் உள்ள கல்சாரம் ஆவுடையார் கோவிலைப் போன்று சிற்ப கட்டிட வேலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது.

அம்பாள் சந்நிதியின் பின்புறம் உள்ள கற்கள் முன்புறத்திலிருந்து மாறுபட்டு உள்ளன.  இவை விஜய நகரப் பேரரசால் திருப்பணி செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது.  மேலும் அதற்கேற்ப இங்கு ஓர் தெலுங்கு கல்வெட்டு ஒன்றும் உள்ளது.

இனி கோவிலின் பின்பக்கம் செல்வோம்.  அங்குள்ள இசைக்கல்வெட்டு மற்றும் குடவரைக் கோவிலான மேற்றளி சிவன் கோவில் மற்றும் அம்பாள் கோவிலின் சிறப்புக்களை காணலாம்.

இசைக் கல்வெட்டு

கோவிலுக்கு பின்புறமுள்ள மலையில் இசைக் கல்வெட்டு காணப்படுகின்றது.  இது உலகப் புகழ்பெற்ற தொன்மைவாய்ந்த இசைக்கல்வெட்டு ஆகும்.  உலகிலேயே முதல் இசைக்கல்வெட்டு என்று சிறப்பிக்கப்படும் பெருமை வாய்ந்தது.  உலகிலேயே வேறு எங்கும் காண முடியாத சிறப்பானதாகும் இக்கல்வெட்டு மிகவும் தெளிவாக இசைக் குறியீடுகளுடன் சிறப்பான முறையில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது.  இது பாலி கிரந்தம் எழுத்துக்களால் வெட்டப்பட்டுள்ளது.

இக்கல்வெட்டை பாராட்டி சோழ மன்னர்கள் சிறப்பித்துள்ள 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அருகிலேயே காணப்படுகின்றது. இக்கல்வெட்டின் பெருமையைக் கேள்விப்பட்டு அதனை ஆய்வு செய்ய இந்திய, வெளிநாட்டு இசை மேதைகள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர்.

மேலும் இக்கல்வெட்டில் நாட்டிய சம்பந்தமான விஷயங்களும் இருப்பதாக சொல்லப்படுகின்றது. மிக தெளிவாகவும், இடைவெளிவிட்டும் ஏற்ற இறக்கம் இல்லாமல் இசைக் குறியீடுகளுடன் உள்ள இக்கல்வெட்டு மிகவும் சிறப்பானதாகும்.

இக்கல்வெட்டில் உள்ள இசை அமைப்புகள் அனேகமாக 'பரிவாதினி' எனும் யாழில் மீட்டக்கூடிய வண்ணம் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. மேலும் இக்கல்வெட்டின் சிறப்புக்களை விவரித்தால் அதற்கே ஓர் தனிக்கட்டுரை தேவைப்படும்.  எனவே, அடுத்து சிவன் கோவிலுக்கு செல்வோம்.

மேற்றளி சிவன் கோவில்

இசைக் கல்வெட்டிற்கு அருகிலேயே இக்கோவில் உள்ளது.  இதுவே ஆதி (முதல்) சிவன் கோவிலாக இருந்திருக்கலாம் என்ற கருதப்படுகின்றது. இக்கோவில் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம்.

இது ஓர் குடவரைக்கோவில் ஆகும்.

இக்கோவில் திருமூலத்தனம் என்று வழங்கப்பட்டுள்ளது.  திருமூலத்தனத்து பரமேஸவரர், திருமூலத்தனத்து நாயனார், திருமூலத்தனத்து பெருமானடிகள், திருமூலத்தனத்து பரமேஸ்வரர் போன்ற பெயர்கள் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன.

இக்கோவிலில் மூலஸ்தானத்தில் சிவபெருமான் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கின்றார்.  இந்த லிங்கத்தில் ஆவடை சதுர வடிவமாக உள்ளது. இதனையடுத்து இங்கு தமிழகக்கோவில்கள் எதிலும் காணமுடியாத ஓர் சிறப்பம்சம் உள்ளது.

இக்கோவிலில் துவாரபாலகர்கள் சிரித்த வண்ணம் உள்ளனர்.  இவ்விதம் துவாரபாலகர்கள் சிரித்தது போன்ற அமைப்பு வேறு எங்குமே கிடையாது.  இது சாளுக்கிய பாணி ஆகும். மற்ற கோவில்களில் துவாரபாலகர்கள் ஆவேசமாக இருப்பார்கள்.  மேலும் இங்கு துவாரபாலகர்கள்  தனிக்கற்களில் செதுக்காமல்,  குகையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல் குகையை குடைந்து உருவாக்கப்பட்ட ஓர் வலம்புரி விநாயகர் சிலையையும் நாம் காண முடிகின்றது. இவ்விநாயகர் சிலைக்கு அருகில் பரிவாதினி என்று பாலி எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கல்வெட்டு காணப்படுகின்றது. இது பரிவாதினி யாழைக் குறிக்கும் வகையில் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

இனி இதற்கு அருகில் இருக்கும் அம்மன் கோவிலைக்காணலாம்.. இக்கோவில் கருங்கல் பணி ஆகும்.

அம்பாள் கோவில்

இக்கோவில் கட்டப்பட்டது பற்றிய சுவாரஸ்யமான செய்தி ஒன்று உள்ளது.  இக்கோவில் பாண்டிய மன்னன் 2-ஆம் சடையவர்மன் காலத்தில் கட்டப்பட்டது ஆகும்.  இக்கோவிலை கட்டியவள் ஓர் தாசி ஆவாள்.  அவள் பெயர் துர்க்கையாண்டி மகள் உமையாள் வழி நாச்சியார் ஆகும்.

இக்கோவில் நிலங்களை ஊர்த்தலைவன் ஏலம் விடும்போது இந்த தாசிப்பெண் அருகில் உள்ள ஊரான பொன்னமராவதியில் தங்கியிருந்த மன்னனிடம் அனுமதி பெற்று இக்கோவிலை கட்டியதாக வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது.

இக்கோவிலில் எழுந்தருளியுள்ள அம்பாள் பெயர் திருக்காமக்கோட்டத்து அறிவுடை நாச்சியார் என்பதாகும்.  இக்கோவில் கட்டப்பட்ட காலம் 13-ஆம் நூற்றாண்டு ஆகும்.  இக்கோவிலின் இராஜகோபுரம் பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்டது ஆகும்.

இவ்விதம் உலகச்சிறப்பு வாய்ந்ததும்,  சிறப்பான பல அம்சங்களை அடக்கியதுமான குடுமியான் மலையின் சிறப்புக்களை மேலே அறிந்து கொண்டோம்.

இக்கட்டுரையை படிக்கும் தமிழன்பர்கள்,  சுற்றுலா பிரியர்கள் அங்கு அவசியம் சென்று ரசித்து இன்புற வேண்டும்.

Pin It