நமது சட்டங்களுக்கு எல்லாம் அடிப்படையான இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த இடத்திலும் இடம்பெறாத பொதுநலன் வழக்காடும் முறையை காலத்தின் தேவையறிந்து இந்திய உச்சநீதிமன்றம் நமக்கு அறிமுகப்படுத்தியது. நம் இந்திய தேசம் பிரதமர் இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை காலத்திற்கு பிறகு அரசியலமைப்புச் சட்டத்தைக் கொண்டு ஐனநாயகம் உயிர்ப்புடன் இருக்குமா என்ற அச்சத்தில் இருந்தபோது, உச்சநீதிமன்றத்திற்கு நீதிபதிகளாய் வந்த நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் பி.என். பகவதி ஆகிய இருவரும் தங்களது நீதித்துறை அதிகாரத்தைக் கொண்டு அரசியலமைப்புச் சட்டத்தில் எங்குமே எழுதப்படாத பொது நலன் வழக்கு முறையினை நம் நாட்டில் நிலை பெறச் செய்தனர்.

supreme court 600அரசியலமைப்புச் சட்டத்தில் எங்குமே சொல்லப்படாத பொதுநலன் வழக்காடும் முறையை உச்சநீதிமன்றம் தன்னுடைய சொந்த அதிகாரத்தின் மூலம் பொதுநலன் வழக்காடும் முறையை உருவாக்கிக் கொண்டது. பாதிக்கப்பட்டவர்தான் வழக்கு பதிவு செய்ய முடியும் என்ற முறையை தூக்கியெறிந்து சமூகத்தின் நன்மைக்காக யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்திற்கு வரலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டது. சமூகத்தின் பலவீனப்பட்டவர்கள் நெருங்கமுடியாத உச்சநீதிமன்றத்தை பொதுநல வழக்கு முறையை அறிமுகப்படுத்தி புரட்சிகரமாக நீதிமன்றத்தின் கதவுகளை சாமான்ய மக்களுக்காக திறந்து வைத்ததில் இந்த இரண்டு நீதிபதிகளின் பங்களிப்பு மிக அதிகம். இந்த தேசத்தின் சுற்றுப்புறச்சூழலை காப்பாற்றுவதில், அரசின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்பதில், வாழ்வு மற்றும் சுதந்திரம் போன்ற அடிப்படை மனித உரிமைகளை பாதுகாப்பதில் என பொதுநலன் வழக்கின் பங்களிப்பு மாபெரும் மகத்துவம் பெறுகிறது. 

 1979-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் நாளன்று, நாற்பதாயிரம் சிறைவாசிகள் பீகார் சிறையில் எவ்வித விசாரணையும் இல்லாமல் மனிதத்தன்மையற்;ற முறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டது. முதன்முதலாக உசைனா கார்ட்டுன் என்பவரது பெயரில் ஹேப்பியஸ் கார்பஸ் என்ற ஆட்கொணர்வு மனுவை கபிலா ஹிங்கோரானி என்ற பெண் வழக்கறிஞர் பதிவு செய்தார். இவ்வழக்கில்தான் உச்சநீதிமன்றம் அதிகாரத்தின் மேல்மட்டத்திலிருந்து கீழிறிங்கி வந்து பொதுமக்களின் பிரச்சனைகளுடன் பயணிக்க வேண்டிய சூழலை புரிந்து கொண்டது. நீதிமன்றம் விசாரனையில்லாமல,; ஐhமீன் இல்லாமல் அவதிப்பட்டுக் கொண்டிருந்த சிறைக்கைதிகளை விடுதலை செய்ய பீகார் அரசுக்கு உச்சநீதிமனறம் உத்தரவிட்டது. (உசைனாரா காட்டுன் -எதிர்- பீகார் அரசு (1980(1) எஸ்.சி.சி 81).

அரசியலமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியுள்ள ஷரத்து 32-ஐ உச்சநீதிமன்றம் விசாலமாக்கி பொது மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, நீதிமன்றத்தை அனுகுவதில் உள்ள நடைமுறைகளை எளிதாக்கத் தொடங்கியது. இந்த சமூகத்தில் உள்ள எந்த ஒரு நபரும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் அரசியலமைப்புச்சட்டத்தில் சொல்லப்பட்ட உரிமைகள் மீறப்படும் போது நீதிமன்றத்தை அனுகலாம் என்றும் அவர்களுக்கு சமூக பொருளாதார காரணம் தடையாக இருக்கக்கூடாது என என உச்சநீதிமன்றம் நீதியின் கதவுகளை திறந்து வைத்து முதன்முதலில் 'பொது நலன்' என்ற வார்த்தைக்கு விளக்கமளித்தது. (எஸ்.பி.குப்தா-எதிர்-மத்திய அரசு (1982 (2) எஸ்.சி.ஆர். 365). 

பொதுநல வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் ஆரம்ப காலகட்டத்தில் நீதிபதிகள் வி.ஆர். கிருஷ்ணய்யர் மற்றும் பி.என். பகவதி ஆகிய இருவரும் அதிகளவில் ஏற்றுக்கொண்டு விசாரித்தார்கள். மக்கள் தங்களின் பிரச்சனைகளளை தீர்ப்பதற்கு உச்சநீதிமன்றத்திற்கு வருவதற்கு ஏற்றவகையில் நடைமுறை சிக்கல்கள் அனைத்தும் எளிமையாக்கபட்டது. ஒரு தந்தி அல்லது ஒரு தபால் அட்டையில் எழுதி அனுப்பினால் கூட அதனை வழக்காக எடுத்துக்கொள்ளும் 'இபிஸ்லோட்டரி ஐPரிஸ்டிக்ஸன்'; முறையை உச்சநீதிமன்றம் புது நடைமுறையாக்கியது. பொதுநல வழக்கின் தேவையை முதன் முதலில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அதிகம் வலியுறுத்தி வந்தபோதும், பொதுநலன் வழக்கினை பல்வேறு வகையில் எளிய முறையில் வடிவமைத்த பெருமை பி.என். பகவதியை சேரும். ஒரு தனிமனிதனுக்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்குகோ அடிப்படை உரிமை மீறப்படும் போது, பாதிக்கப்பட்டவர்தான்; நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்ற அவசியமில்லை; பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக நல்லெண்ணத்தின் அடிப்படையில் யார் வேண்டுமானாலும் பொது நல வழக்குத் தொடராலாம் என்றும் நீதிமன்றத்தினை அனுகுவதற்கு ஏழ்மை மற்றும் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என பந்துவா முத்த மோர்ச்சா வழக்கில் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.(பந்துவா முக்தி மோர்ச்சா –எதிர்-மத்திய அரசு(1984(3)எஸ்.சி.சி.161)). 

இந்நாட்டின் விளிம்பு நிலையில் உள்ள பொதுமக்கள் நீதியை பெறுவதற்கு உருவாக்கபட்டதுதான் பொதுநல வழக்காடும் முறையானது உயர்நீதிமன்றம் அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 226-ன் கீழும், உச்சநீதிமன்றம் ஷரத்து 32-ன் கீழும் பொதுநல வழக்குகளை விசாரித்து வருகிறது. இன்றைய நாட்களில் சராசரியாக பதிவு செய்யப்படும் வழக்குகளில் குறைந்தது நாளொன்றுக்கு ஐந்து சதவீத பொதுநல வழக்குகள் நீதிமன்றத்தில் ஒவ்வொரு நாளும் பதிவு செய்யப்படுகின்றன. இதுதவிர்த்து நீதிமன்றம் தானே முன் வந்து எடுக்கும் பொதுநல வழக்குகள், தனிநபர் மற்றும் தன்னார்வ அமைப்புகள் அனுப்பும் கடிதங்கள் மூலமாக, பத்திரிக்கைச் செய்திகள் மூலமாக, என பொதுநலன் வழக்குகள் நீதிமன்றத்தில் குவிகின்றன. அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் தனது அதிகார எல்லையை மீறி உச்சநீதிமன்றம் பொதுநலன் வழக்காடுதல் முறையை ஏற்றுக்கொண்டு செயல்படுகிறது என்று விமர்சனம் செய்யப்பட்டது. ஆனால், சட்டமியற்றும் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டாண்டுக்கு மேல் தண்டணை பெற்றால் எந்தப்பதவியை வகித்தாலும் பதவி விலக வேண்டுமென்று அதிரடியாக பொதுநல வழக்கொன்றில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து சில மாநிலத்தின் முதல்வர்கள் பதவியை இழந்தார்கள்.

 பொதுவாக அரசுப் பணிகள் தொடர்பான வழக்குகளை பொதுநலன் வழக்காக நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. அதுபோன்று தனிப்பட்ட நலனுக்காக, சுய லாபத்துக்காக பொதுநலன் வழக்குகளை விசாரித்து தள்ளுபடி செய்வதோடு அதனை தொடர்ந்த மனுதாரருக்கு அபராத தொகையும் விதித்துதான் நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்கின்றன. பொதுநல வழக்குகளில் பொதிந்துள்ள பொதுநலன் மட்டுமே முக்கியம் என்பதால் வழக்கிட்டவர் நீதிமன்றத்தின் அனுமதியின்றி தான் பதிவு செய்த வழக்கினை திரும்ப பெறமுடியாது என உச்சநீதிமன்மறம் கூறியுள்ளது. (ஷீலா பார்ஸ் -எதிர்-மத்திய அரசு ((1988(4)எஸ்.சி.சி.226). பொதுநலன் சார்ந்த வழக்குகளை விசாரிப்பதற்கு சிவில் நடைமுறை சட்டங்களை எல்லாம் பின்பற்ற வேண்;டிய அவசியமில்லை என உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது. சட்ட உதவி கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும், கைதிகளுக்கு அவர்களி;ன் மான்புரிமை மீறும் வகையில் கைவிலங்கு அணிவிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் பொதுநலன் வழக்குகளின் வழியே தீர்ப்பளித்தது.(பிரேம்சந்த் சுக்லா –எதிர்-டெல்லி அரசு(1980(3)எஸ்.சி.சி.526)). 

 மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசனின் நாட்டையே உலுக்கிய 2-ஐp அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு, கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு குறித்த வழக்குகள் அனைத்தும் பொதுநலன் வழக்காக உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டவையாகும். யாணைமலை, கீழவளவு போன்றவற்றில் உள்ள வரலாற்று புராதான சின்னங்கள் அழிக்கப்படாமல் பாதுகாப்பாய் இருப்பதற்கு இன்றும் பொதுநலன் வழக்குதான் காரணமாய் உள்ளது. இந்திய ஐனநாயகத்தின் அடிப்படையான தேர்தலில் 49-ஒ சேர்ப்பது முதல் கைது செய்யப்படும் பேர்து காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய கட்டளைகளை வழங்கியது வரை அனைத்துமே பொதுநலன் சார்ந்த வழக்குகள்தான். அதுமட்டுமின்றி நீலாபதி பேகரா எனும் வழக்கில் ஒரு தாய் எழுதிய கடிதத்தை வழக்காக ஏற்று மாவட்ட நீதிபதியை விசாரணைக்கு அமர்த்தி காவல் துறையினர் அடித்து துண்புறுத்தி ரயில்வே தண்டவாளத்தில் அந்த தாயின் மகனை தூக்கி வீசியதை தற்கொலை அல்ல கொலை என சொன்னதும் இழப்பீடு வழங்கியதும் இந்திய நீதித்துறையின் ஒரு வரலாற்று சகாப்தம்; (நீலாபதி பேகரா-எதிர்-ஒரிசா அரசு ((1993(2)எஸ்.சி.சி.746). அதோடு நின்றுவிடாமல் வங்கதேசத்து பெண் ஒருவர் பாலியல் வண்புணர்ச்சியால் பாதிக்கப்பட்ட போது, இழப்பீடு கேட்டு கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் சந்திரமா தாஸ் என்ற வழக்கறிஞர் பதிவு செய்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் அயல் நாட்டினராக இருப்பினும் அரசுதான் பொறுப்பு என்று கூறி பத்து இலட்சம் நிவாரணத்தை கல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்கியதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. (சேர்மன் ரயில்வே போர்டு-எதிர் சந்திரமாதாஸ் ((2000(2)எஸ்.சி.சி.465).

அதே போன்று இலங்கையை சேர்ந்த குடிமகன் மதுரை மத்திய சிறை முன்பு சுடப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பொதுநலன் வழக்கு பதிவு செய்ததில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையும் இறந்தவரின் குடும்பத்திற்கு வட்டி தொகையுடன் இழப்பீடு வழங்கியது. இவ்வழக்கில் மறு தீர்ப்பு தடை என்ற ரெஸ்ஐpடிகேட்டா கோட்பாடு பொதுநலன் வழக்குகளுக்கு பொருந்தாது என்று நீதிபதி வெ. இராமசுப்ரமணியன் மற்றும் நீதிபதி டி. ஹரிபரந்தாமன் அடங்கிய அமர்வால் சொல்லப்பட்டது. (டி.சேசகரன்-எதிர்- தமிழக அரசு (2010 ரிட் லா ரிப்பேர்டர்). என்ற பொதுநலன் வழக்கு முறையின் மூலம்தான் தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்திற்கு விதிகளும் மற்றும் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு பெறுவதற்கான விதிகளும் இயற்றப்பட்டது. 

 சட்டம் இயற்றி மக்களை பாதுகாக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கூச்சல் சத்தம் போட்டுக் கொண்டு மக்களின் பிரச்சனைகளை பேசாத போது உச்சநீதிமன்றமும்; உயர்நீதிமன்றமும் உயர்ந்த சேவைகளை செய்து வருகிறது. சென்று கொண்டிந்த பேருந்தின் ஓட்டையில் இருந்து விழுந்து இறந்த பள்ளிச் சிறுமியின் வழக்கை தானே முன்வந்து எடுத்த சென்னை உயர்நீதிமன்றம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டு பள்ளிகல்வித்துறைக்கு பல்வேறு உத்தரவுகளை வழங்கியது உள்ளிட்ட எண்ணற்ற மகத்தான விஷயங்களை நீதித்துறை பொது நல வழக்குகளின் மூலம் செய்துள்ளது. தற்போது கல்வி முற்றிலும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு வரப்படுகிறது. மருத்துவ வசதி காசு உள்ளவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற சூழல் வந்துவிட்டது. வேளாண்மை செய்யும் விவசாய சமூகம் தற்கொலை செய்து கொல்வது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள ஏழ்மை மக்கள் தங்களின் வாழ்வு அடிப்படை மனித உரிமைகளுடன் வாழ்வதற்கு நீதிமன்றங்கள் இன்னும் அதிகமாய் பணியாற்ற வேண்டிய சூழல் தற்போது உள்ளது.

சட்டம் இயற்றும் சட்டத்துறையும் அதனை செயல்படுத்தும் நிர்வாகத் துறையும் மக்கள் நலன்களுக்காக குறிப்பாக அடிப்படை வாழ்வுரிமைகளான சுதந்திரம், சுகாதாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான விஷயங்களை செயல்படுத்த தவறும் போது அவைகளை பொதுநலன் வழக்குகள் மற்றும் பிற வழக்குகள் மூலம் மக்களுக்காக சரிசெய்ய வேண்டிய பொறுப்பு நீதித்துறைக்கு உள்ளது.

- ர.கருணாநிதி, உயர்நீதிமன்றம் , மதுரை கிளை