farmers land

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்ட திருத்தத்திற்கு மாநிலங்களவையின் ஒப்புதல் பெற முடியாத நிலையில் மத்திய அரசு மீண்டுமொரு அவசரச் சட்ட திருத்தத்தை அறிவித்திருக்கிறது.

பாராளுமன்றம் கூடாத நிலையில் அரசு முன்மொழியும் சட்ட வடிவம்தான் அவசரச் சட்டம் என்பது. அப்படி முன்மொழியப்படும் அவசரச் சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆறு மாதங்களுக்குள் ஒப்புதல் பெற்றாகவேண்டும். இல்லையெனில் அந்த அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும். இதனை தவிர்ப்பதற்கு மாநிலங்களவைக் கூட்டத்தை வேண்டுமென்றே ஒத்தி வைத்துவிட்டு மத்திய அரசு முந்திய அவசரச் சட்டம் காலாவதியாவதற்கு ஓரு நாள் முன்பு இந்த புதிய அவசரச் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது!

எதிர்கட்சிகள் பலவும் எதிர்கின்ற இந்த அவசரச் சட்டத்தை பா.ஜ.க அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் நோக்கம் என்ன? இந்த அவசரச் சட்ட திருத்தம் கூறும் சாரம்சமான விடயங்கள் என்ன?

1894ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை ஆங்கிலேய அரசு இந்தியத் துணைக்கண்டத்தில் உள்ள வளங்களை கொள்ளையடிப்பதற்காகவும் ரயில்பாதை, நெடுஞ்சாலைகள் போன்றவைகளை அமைத்து தங்களின் நிர்வாகத் தேவைக்காகவும் இச்சட்டத்தை அமல்படுத்தியது. கேள்வி முறையின்றி நிலத்தை, குறிப்பாக விவசாய நிலங்களையும் பழங்குடிகளின் வாழ்விடங்களையும் கையகப்படுத்த கொண்டுவரப்பட்ட இச்சட்டத்தை விவசாயமக்களும் பழங்குடியினரும் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். மக்களின் போராட்டங்களுக்கு ஓரளவு இசைகின்ற வகையிலும் இழப்பீட்டினை உயர்த்தி பொது தேவைகளுக்காக என்னும் பெயரில் நிலத்தை கையகப்படுத்தும் நோக்கத்தோடு முந்தைய காங்கிரஸ் அரசு மேற்படிச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து அச்சட்டத்தை 2013ம் ஆண்டு நிறைவேற்றியது. நிறைவேற்றப்பட்ட அச்சட்டம் “வளர்ச்சி திட்டங்களை” அமல்படுத்துவதற்கு தடையாக இருக்கிறது என்று கூறி பா.ஜ.க அரசு 2013இல் அமலாக்கப்பட்ட அச்சட்டத்தில் ஒன்பது திருத்தங்களை கொண்டு வந்து 2014 திசம்பரில் அதனை ஓர் அவசரச் சட்டமாக அறிவித்தது. எதிர்கட்சிகளின் வலுவான எதிர்ப்பின் காரணத்தால் இச்சட்டம் பாராளுமன்றத்தின் ஓர் அவையான ராஜ்ஜிய சபையில் நிறைவேற்ற முடியாத காரணத்தால் மீண்டுமொரு அவசரச்சட்டத்தை ஏப்ரல் 3ம் தேதி அறிவித்திருக்கிறது பா.ஜ.க அரசு.

பொது தேவைகளுக்காக என்று இந்திய துணைக் கண்டத்தில் இதுவரை நிலம் கையகப்படுத்தியதன் விளைவு என்ன?

பிரம்மாண்டமான அணைகள், சுரங்கங்கள், வன விலங்கு சரணாலாயங்கள், தொழிற்பேட்டைகள் என்னும் பெயரில் 6 கோடி மக்கள் தங்களின் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 40 சதவிகிதத்தினர் பழங்குடியின மக்கள். வெளியேற்றப்பட்ட மக்களில் 75 சதவிகித்தினருக்கு எவ்வித இழப்பீடோ மறுவாழ்வோ வழங்கப்படவில்லை. நிலம் கையகப்படுத்த அரசு எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக பழங்குடியின மக்களும் விவசாயிகளும் போராடினார்கள். நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டங்களில் தம் இன்னுயிரை ஈந்தனர். இதன் விளைவாக நிலம் கையகப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மையும் நியாயமான இழப்பீடும் மற்றும் மறு வாழ்வும் மாற்று வாழ்விடமும் உறுதிப்படுத்தும் சட்டம் 2013ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. (The Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act, 2013 (LARR 2013). இச்சட்டம் மக்கள் தங்கள் நிலங்களை தக்க இழப்பீடு கிடைக்காத காரணத்தால்தான் தர மறுக்கிறார்கள் என்ற தவறான புரிதலின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டது. ஆகவே மக்களுக்கு “நியாயமான இழப்பீட்டை” சட்ட ரீதியாக உத்தரவாதப் படுத்தினால் போதும் என்னும் தவறான கண்ணோட்டத்திலிருந்து இச்சட்டம் அமல்படுத்தப்பட்டது. நிலத்தை கையகப்படுத்தும்போது வழங்கப்பட வேண்டிய இழப்பிடு, புனர்வாழ்வு ஆகியவை பற்றி 2013ஆம் ஆண்டுச் சட்டம் விரித்துரைக்கிறது.

பல்வேறு சட்டங்களின் கீழ், குறிப்பாக கீழ்காணும் 13 சட்டங்களின் கீழ் நிலம் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டிருந்தாலும் ஜனவரி மாதம் 2015க்குள் 2013இல் அமல்படுத்தப்பட்டச் சட்டம் இவ்வெல்லாச் சட்டங்களுக்கும் பொருந்தும் என்ற ஓர் அரசாணையை மத்திய அரசு பிறப்பித்திருக்க வேண்டும். அதனை பிறப்பிக்காத காரணத்தால் 2013 ஆண்டுச் சட்டத்தில் உள்ள நல்ல அம்சங்கள் மேற்படி 13 சட்டங்களுக்கு கிடைத்தற்கரியதாக உள்ளது. புதிதாக பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரச் சட்டம் இதற்கு வழி வகுத்திருப்பதாக அறிகிறோம். ஆனால் இது பாராளுமன்றத்தின் இரு அவைகளாலும் ஏற்கப்படவில்லை என்றால் மத்திய அரசு மீண்டுமொரு அவசரச் சட்டத்தை கொண்டுவரவேண்டும்.

(1) The Ancient Monuments and Archaeological Sites and Remains Act, 1958, (2) The Atomic Energy Act, 1962, (3) The Damodar Valley Corporation Act, 1948, (3) The Indian Tramways Act, 1886, (4) The Land Acquisition (Mines)Act, 1885, (6) The Metro Railways (Construction of Works)Act, 1978, (7) The National Highways Act, 1956; ( 8) The Petroleum and Minerals Pipelines (Acquisition of Right of User in Land) Act, 1962; (9). The Requisitioning and Acquisition of Immovable Property Act, 1952; (10) the Resettlement of Displaced Persons (Land Acquisition) Act, 1948; (11) The Coal Bearing Areas Acquisition and Development Act, 1957 (12) The Electricity Act, 2003; (13) The Railways Act, 1989.

’பொதுத் தேவை’யும் (Public Purpose) நிலம் கையகப்படுத்தும் சட்டமும்

பொதுத் தேவைகளுக்காக நிலத்தை கையகப்படுத்துவது என்பதை பொருத்தவரை 1894 ஆம் ஆண்டின் சட்டம் அரசு எது “பொது தேவைக்கானது” என்று கருதுகிறதோ அதனை அமல்படுத்தலாம். 2013ஆம் ஆண்டின் சட்டம் ’பொது தேவை’ என்பதை விரிவாக பட்டியிலிடுகிறது. இந்த பட்டியலில் கீழ்காணும் திட்டங்கள் அடங்கும்: இராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு; தொழிற் பேட்டைகள், சுரங்கம் உட்பட உள்ள உள்கட்டமைப்புத் திட்டங்கள்; நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு; அரசு உதவிப் பெறும் பள்ளிகள்/ஆய்வகங்கள், விளையாட்டு; ஆரோக்கியம், சுற்றுலா; போக்குவரத்து; மற்றும் அரசால் அறிவிக்கப்படும் பிற திட்டங்கள் அனைத்தும் இதில் அடங்கும். தனியார் மருத்துவ மனைகளும் கல்வி நிறுவனங்களும் இதில் அடங்காது. அறிவிக்கப்பட்ட திட்ட செயற்பாட்டின் விளைவாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான திட்டங்கள்; குறிப்பிட்ட வருமானம் மட்டுமே பெறும் குழுக்களுக்கான வீட்டுமனை திட்டம்; திட்டமிட்ட வளர்ச்சி திட்டங்கள் அல்லது கிராம வளர்ச்சி திட்டங்கள்; ஏழை எளிய மக்களுக்கான வீட்டு வசதி திட்டங்கள் என இந்த பட்டியல் நீளுகிறது. ஆனால் 2014 ஆம் ஆண்டின் சட்ட திருத்தத்தில் இவற்றோடு தனியார் மருத்துவ மனைகளும் கல்வி நிறுவனங்களும் “பொது தேவைகள்” பட்டியலில் அடங்கும் என்று கூறியது. பிறகு எதிர்கட்சிகளின் எதிர்ப்பின் விளைவாக 2015ம் ஆண்டு அவசரச் சட்டத்தில் இது நீக்கப்பட்டிருக்கிறது.. ஆக, “பொது தேவை”, என்ற பெயரில் எந்த திட்டத்தையும் நிலத்தை கையகப்படுத்துவதற்கு, குறிப்பாக தனியார் நிறுவனங்களுக்கு நிலத்தை தாரை வார்க்க வழிவகுத்திருக்கிறது இப் புதிய அவசரச்சட்டம்.

பல் பயிர் விவசாய நிலங்களுக்கு ஆபத்து:

1894 ஆண்டு சட்டத்தின்படி எத்தகைய நிலத்தையும் அரசு கையகப்படுத்தலாம். ஆனால் 2013 சட்டம் உணவு பாதுகாப்பை முன்னிறுத்தி பல் பயிர் நிலங்களை கையகப்படுத்த இயலாது என்று கூறுகிறது. இதனை மாற்றி பா.ஜ.கவின் அவசரச் சட்டம் தேச பாதுகாப்பிற்காகவும் இராணுவத் தேவைகளுக்காகவும் பல் பயிர் விவசாய நிலங்களையும் கையகப்படுத்தலாம் என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்துள்ளது.

1894 ஆம் ஆண்டுச் சட்டம் அவசரத் தேவைகளுக்காக அரசு எந்த நிலத்தையும் எவ்வித முன்னறிவிப்புமின்றி நிலங்களை கையகப்படுத்தலாம் என்று கூறுகிறது. 2013 ம் ஆண்டு சட்டத்தில் தேசிய பாதுகாப்பிற்காகவும் இராணுவத் தேவைகளுக்காக மட்டுமே அவசரகதியில் நிலத்தை கையகப்படுத்தலாம் என்ற திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது.

நிலத்தை யாருக்காக கையகப்படுத்தலாம் என்னும்போது 1894ம் ஆண்டு சட்டத்தின்படி அரசின் தேவைக்காகவோ, தனியார் கம்பனிகளின் தேவைக்காகவோ, கூட்டுறவு நிறுவனங்களின் தேவைக்காகவோ நிலத்தை கையகப்படுத்தலாம் என்று கூறுகிறது. 2013 ஆம் ஆண்டுச் சட்டம் அரசின் தேவைகளுக்கு பொது நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து மேற்கொள்ளும் திட்டங்களுக்கான தேவைகளுக்கு மட்டுமே நிலத்தை கையகப்படுத்தலாம் என கூறுகிறது. 2015 இன் அவசரச்சட்டம் தனியார் கம்பனிகள் ”Private Companies” என்பதற்கு பதிலாக ’Private Entities” அதாவது தனியார் அமைப்புகள் என்ற பதத்தை பயன்படுத்துகிறது. தனியார் அமைப்புகள் என்னும் பெயரில் கம்பனிகள் மட்டுமின்றி தனியாள் உடமை நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள், கார்ப்பரேட் கம்பனிகள் என எல்லா வணிக ரீதியாகவும் சேவை என்கிற பெயரிலும் செயல்படும் அனைத்து தனியார் நிறுவனங்களின் தேவைகளுக்காகவும் நிலத்தை கையகப்படுத்தலாம் என்று கூறுகிறது. ஆக, பொது தேவைகளை நிறைவுச் செய்ய வேண்டிய அரசின் கடமையை தனியாரின் வணிக நோக்கிற்கு தாரை வார்க்க நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம் வழிகோலுகிறது.

சமூக பாதிப்பிற்கான ஆய்வை மறுக்கும் அவசரச் சட்டம்

1894 ஆம் ஆண்டின் சட்டத்தின்படி யாரிடமிருந்து நிலம் கையகப்படுத்துகிறதோ அந்த நபருக்கு மட்டும் அரசு நிர்ணயிக்கும் இழப்பீடு வழங்கப்படும். 2013 ஆம் ஆண்டு சட்டம் நிலம் கையகப்படுத்தப் படுவதால் பாதிப்பிற்குள்ளாகக் கூடிய தனி நபர், அவர்தம் குடும்பம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகியவைகளை கணக்கில் கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறது. சமூக பாதிப்பு ஆய்வில் நிலத்தை இழந்த உரிமையாளர்கள் மட்டுமின்றி நிலத்தோடு நேரடியாக சார்ந்திருக்கின்ற விவசாயக் கூலித் தொழிலாளர்களும், மறைமுகமாக சார்ந்திருக்கும் கைவினைஞர்கள், சவரத் தொழிலாளிகள் உட்பட அனைவருக்கும் ஏற்படவுள்ள பாதிப்புகள் அனைத்தும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். நிலம் கையகபடுத்தப்படுவதால் ஏற்படவுள்ள சமூகப் பாதிப்பை ஆறு மாதங்களுக்குள் ஆராய்ந்து தெரிந்து கொள்ளவேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது நிலம் கையகப்படுத்தப்படுவதால் சமூகத்திற்கு ஏற்படும் பொது நன்மை என்ன? இதனால் எவ்வளவு குடும்பங்கள் பாதிப்பிற்குள்ளாவார்கள், எத்தனைபேர் புலம் பெயர நேரிடும்? எந்தளவு பொது நிலங்கள் தனியார் நிலங்கள், வீடுகள், குடியிருப்புகள், மற்றும் பொது வாழ்விடங்கள் பாதிக்கப்படக்கூடும்? கையகப்படுத்தப்படும் நிலத்தின் அளவு திட்டமிட்ட செயற்பாட்டிற்கு குறைந்தளவுதானா? தேர்ந்தெடுக்கபடும் நிலம் எல்லாவகையிலும் பொருத்தமானதா? இறுதியாக மேற்கொள்ளப்படும் திட்டத்தினால் ஏற்படவிருக்கும் சமூக பாதிப்பு என்ன? போன்ற விடயங்கள் ஆறு மாதத்திற்குள் பரிசீலிக்கப்படவேண்டுமென 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டம் கூறுகிறது. ஆனால் 2015 ஆம் சட்டமோ சமூகப் பாதிப்பிற்கான ஆய்வை மேற்கொள்வது என்பது திட்டச் செயற்பாட்டை அமல்படுத்த காலம் தாழ்த்தி சீர்குலைக்கும் என்று கருதுகிறது. குறிப்பாக இராணுவ உற்பத்தி, ஊரக கட்டமைப்பு, குறைந்த செலவிலான குடியிருப்புகள், தொழிற் பேட்டைகள், தனியார்-பொதுத்துறை கூட்டு முயற்சிகளில் மேற்கொள்ளப்படும் சமூக கட்டமைப்பு திட்டங்கள் ஆகியவற்றிற்கு சமூக பாதிப்பு ஆய்வுகள் அறவே தேவையில்லை என கூறுகிறது.

நிலம் கையகப்படுத்த நில உரிமையாளர்களின் ஒப்புதல் வேண்டாமா?

1894 ஆண்டு சட்டமோ நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளர்களின் ஒப்புதல் பெறவேண்டியதேயில்லை என்கிறது. 2013ம் ஆண்டு சட்டமோ பொது தேவைகளுக்காக நிலம் கையகப்படுத்தும்போது நில உரிமையாளரிடமிருந்து இசைவு பெறவேண்டியதில்லை என்கிறது. ஆனால் தனியார் தேவைகளுக்கான திட்டங்கள் மேற்கொள்ளும்போது பாதிப்பிற்குள்ளாகக் கூடிய குடும்பங்களில் குறைந்தது 80% மக்களின் ஒப்புதலை பெறவேண்டும். அதேபோல், பொதுத்துறை-தனியார் கூட்டுமுயற்சியில் மேற்கொள்ளப்படும் திட்டமாக இருந்தால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறப்படவேண்டுமென கூறுகிறது. 2015ம் ஆண்டு அவசரச் சட்டமோ பாதிக்கப்படும் குடும்பங்களின் (80% அல்லது 70%) ஒப்புதலை குறிப்பாக ஐந்து சிறப்பு திட்டங்களுக்கு அறவே பெறத் தேவையில்லை என்று கூறுகிறது. அதாவது இராணுவம், ஊரக கட்டமைப்பு, குறைந்த செலவிலான குடியிருப்புகள், தொழிற்பேட்டைகள், பொதுத்துறை-தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் பொதுத் தேவை திட்டங்கள் - நிலம் அரசின் வசம் இருக்கும்பட்சத்தில் - ஒப்புதல் பெறத் வேண்டியதில்லை என கூறுகிறது.

இழப்பீடு தொடர்பாக இச்சட்டங்கள் என்ன சொல்கின்றன?

1894 சட்டத்தை பொருத்தவரை கையகப்படுத்தும் நிலத்திற்கு அருகாமையில் விற்கப்பட்ட நிலம் என்ன விலைக்கு விற்பனை பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அந்த தொகையை இழப்பீடாக வழங்க பரிந்துரைகிறது. பதிவு செய்யப்பட்ட விலையானது யதார்த்த விலையிலிருந்து மிகவும் குறைந்திருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. 2015ஆம் ஆண்டு சட்டமோ ஊரகப்பகுதிகளில் தற்போது சந்தையில் நிலவும் விலைக்கு நான்கு மடங்கும், நகரப்புற நிலங்களுக்கு இரண்டு மடங்கும் இழப்பீடாக வழங்க வேண்டுமென கூறுகிறது. நிலத்திற்கான உரிமையாளர்கள் மட்டுமின்றி பாதிக்கப்பட்ட குடும்பங்களை சமூக பாதிப்பிற்கான ஆய்வின் மூலம் கண்டறிந்து பாதிப்புக்குள்ளாகக் கூடிய பகுதியில் பிற அசையா சொத்துக்கள் உடையவர்கள், தம் வாழ்வாதாரத்திற்காக சுற்றியுள்ள நிலங்களை நம்பி வாழ்க்கை நடத்தும் தொழிலாளர்கள், கைவினைஞர்கள், குடியானவர்கள் ஆகியோருக்கும் உரிய இழப்பீடு வழங்கவேண்டுமென இச்சட்டம் கூறுகிறது. ஆனால், 2015ம் ஆண்டு சட்டமோ சமூக பாதிப்பு ஆய்வினை மேற்கொள்வதற்கு மேற்சொன்ன ஐந்து வகை திட்டங்களுக்கு விதிவிலக்கு அளித்திருக்கிறது. ஆகவே, சமூக பாதிப்பிற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் உரிமையாளர்கள் தவிர வேறு யாருக்கும் இழப்பீடோ, மறுவாழ்வோ, மாற்றிடமோ வழங்கப்பட மாட்டாது. மேலும், இழப்பீடு வழங்குவதற்கு காலக்கெடு ஏதும் இல்லாத நிலையில் இழப்பீடு கிடைக்கும்போது அது சந்தை விலையைவிட மிகவும் குறைவாகவே இருக்கும். வாழ்வு மற்றும் மாற்றிடம் வழங்குவது தொடர்பாக சட்டங்களின் நிலைப்பாடு என்ன?

மறுவாழ்வு பற்றியோ மாற்றிடம் வழங்குவது பற்றியோ 1894 ஆண்டு சட்டத்தில் ஏதும் இல்லை. 2013 ஆம் சட்டம் இதற்கு சட்ட ரீதியாக வழி வகை செய்திருக்கிறது. ஒரு திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்தும் கம்பனிகளுக்கு இடம் பெயர்ந்தவர்களுக்கான மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்த வேண்டிய பொறுப்பு இல்லை என்கிறது. ஆனால் அரசு மேற்கொள்ளும் மறுவாழ்வு திட்டத்திற்கானச் செலவை கம்பனி ஏற்கவேண்டும். மறுவாழ்வு திட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான சான்றிதழ் வழங்கப்படாமல் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை கம்பனி பயன்படுத்த முடியாது. 2015 சட்ட திருத்தத்தில் இதில் மாற்றம் இல்லை என்றாலும், மறுவாழ்வு திட்டம் நிறைவாக நிறைவேற்றப்பட்டுள்ளதற்கான சான்றிதழ் யார் வழங்குவார்கள் என்ற கேள்விக்கான விடை இல்லை.

கையகப்படுத்திய பிறகு பயன்படுத்தப்படாத நிலத்தின் நிலை என்ன?

1894 சட்டம் படி கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசுக்கு சொந்தமானது. கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படவில்லை என்றால் நிலத்தின் மூல உரிமையாளருக்கு மீண்டும் ஒப்படைக்க தேவையில்லை. அந்நிலத்தை வேறு பயன்பாட்டிற்கு அரசு வைத்துக் கொள்ளலாம் அல்லது சந்தை விலைக்கு அதனை விற்றுவிடலாம். ஆனால் 2013ம் சட்டத்தின்படி கையகப்படுத்தப்பட்ட நிலம் குறிப்பிட்ட தேவைக்காக ஐந்து ஆண்டுகளுக்குள் பயன்படுத்தவில்லை என்றால் நில உரிமையாளருக்கு அந்நிலம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டும் அல்லது அரசு உத்தேசிக்கும் எதிர்கால பயன்பாட்டிற்காக அந்நிலத்தை நில வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும். 2015ம் ஆண்டு அவசரச் சட்டம் கையகப்படுத்தப்பட்ட நிலம் உத்தேசிக்கப்பட்ட திட்டம் நிறைவேற்றப்படும் வரையிலோ அல்லது ஐந்தாண்டுகளுக்கு பின்னரோ நில உரிமையாளருக்கு திரும்ப ஒப்படைக்கலாம் என்ற திருத்தத்தை கொண்டு வந்திருக்கிறது. திட்டம் செயற்படும் காலத்திற்கு உச்சவரம்பு இல்லாத நிலையில் கையகப்படுத்தப்பட்ட நிலம் தவறாக பயன்படுத்துவதற்கோ, நில முதலைகளின் சூதாட்டத்திற்கோ வழிவகுக்க வாய்ப்பிருக்கிறது..

மத்திய அரசின் தணிக்கை அலுவலரான (கம்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல்) நவம்பர் 2014 இல் பாராளுமன்றத்திற்கு கொடுத்துள்ள அறிக்கையில் பொதுத் தேவை என்ற பெயரில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்காக கையகப்படுத்தப் பட்ட நிலங்களில் பயன்படுத்தாத நிலங்களில் பல தனியார் கம்பனிகளுக்கு விற்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது. அவர்களின் தணிக்கை அறிக்கைப்படி சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 62.42% நிலங்கள் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது என்று கூறுகிறது. (கையகப்படுத்தப்பட்ட 45,635.63 ஹெக்டேர் நிலங்களில் 28,488.49 ஹெக்டேர் நிலம் மட்டுமே பயன்பாட்டிற்கு வந்திருக்கின்றது).

சட்டம் தவறாக பயன்படுத்தப்படும்போது.....

பெரும்பாலும் எல்லா சட்டங்களிலும் எந்த ஒரு அதிகாரியும் சட்ட நடவடிக்கை எடுக்கும்போது அவரது நடவடிக்கை “நல்லெண்ண’” அடிப்படையில் எடுக்கப்பட்டதாக கருதப்படும். அத்தகைய நடவடிக்கைகளை எதிர்க்கும்போது அந்நடவடிக்கைகள் நல்லெண்ண அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை என்பது நிருபிக்கப்பட வேண்டும். 1894ம் சட்டத்தின் படி அரசின் இசைவு இல்லாமல் எந்த அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க இயலாது. 2013 ம் ஆண்டு சட்டப்படி சட்டம் தவறாக பயன்படுத்தப்படுமேயானால் சம்மந்தப்பட்ட துறைத் தலைவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். துறைத் தலைவருக்கு தெரியாமல் அந்த தவறு நடந்தது என்றோ அத்தகைய தவறுகள் நடக்கா வண்ணம் தாம் தக்க நடவடிக்கை எடுத்திருந்தார் என்றோ நிரூபிக்கப்பட்டால் அவர் மீது தொடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையிலிருந்து தப்பலாம். தற்போதைய 2015ம் ஆண்டு அவசரச் சட்ட திருத்தம்படி அரசு அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தின் முன் அனுமதி தேவை. ஆக, அரசு அதிகாரிகளின் தவறான நடவடிக்கைகளை பாதுகாக்கும் நோக்கோடு இந்த அவசரச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இறுதியாக....

அவசரச் சட்டத்தின் மக்கள் விரோத அம்சங்களை எதிர்க்கும் அரசியல் கட்சிகளையும் சமூக இயக்கங்களையும் நாட்டு வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்றும் வளர்ச்சி திட்டங்களை முடக்குவதற்கு களம் இறங்கியிருக்கும் தேச துரோகிகள் என்றும் மத்திய பா.ஜ.க அரசு பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஊழியம் செய்வதற்கான திட்டங்களை அமல்படுத்த சட்ட திருத்தங்களை முறையாக பாராளுமன்றத்தில் கொண்டு வருவதற்கு பதிலாக அவசரச் சட்டங்களாக கொண்டுவருவதன் நோக்கம் என்ன? யாருக்காக இந்த அவசரம்?

பொருளாதார வளர்ச்சி காண சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்கு தங்கு தடையின்றி நிலத்தை கையகப்படுத்த சட்ட திருத்தம் வேண்டுமென கோரும் மத்திய அரசு, நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயத்தை காப்பாற்றவும், உணவு பாதுகாப்பை உறுதிபடுத்தவும் சிறப்பு விவசாய மண்டலங்களையும் (Special Agriculture Zones - SAZ) சிறப்பு மீனவ மண்டலங்களையும் (Special Fisheries Zones - SFZ) சிறப்பு குறுந்தொழில் மண்டலங்களையும் (Special Small & Tiny Sector zones) நிறுவுவதற்கு முன் வருமா?

அதேபோல், புவி வெப்பமாதலிலிருந்து பூமி பந்தை காப்பாற்றவும், சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிபடுத்தவும், பல்லுயிர் பாதுகாப்பிற்காகவும், பழங்குடி மக்களின், விவசாய மக்களின் வாழ்வாதாரத்தை காக்கவும் வனப் பகுதியை விரிவாக்கவும், மேய்ச்சல் நிலங்களை விரிவாக்கவும், வனவிலங்குகளின் வழித் தடங்கள் மீதுள்ள தனியார் நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வனம் சார்ந்த நிலங்களை கையகப்படுத்த மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர முன்வருமா? பொதுத் தேவை பட்டியலில் மேய்ச்சல் நிலங்கள், ஊரக சந்தைப் பேட்டைகள், சமூக காடுகள், பல்லுயிர் காடுகள், வன உயிர் வாழ்விடங்கள், கூட்டுறவு பண்னைகள், கூட்டுறவு ஆலைகள், கூட்டுறவு காடுகள், குப்பை கிடங்குகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை இணைக்க அரசு முன் வருமா?

மக்கள் விரோத சட்டத்தை அமலாக்குவதற்கு எதிராக அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் எதிர்த்து போராடிக்கொண்டிருக்கும் போது அ.தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர்கள் நிலம் கையகப்படுத்துவதற்கான சட்ட திருத்தத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர். மத்திய பா.ஜ.க அரசு பன்னாட்டு நிறுவனங்களுக்கான ஆட்சியை (Corporetocracy) நடத்த அரசியல் சாசனத்தையே மாற்றியமைக்க எத்தனிக்கிறது. மாநில அ.தி.மு.க அரசோ Kleptocracy என்னும் கொள்ளையர் (திருடர்கள்) ஆட்சியை கட்டமைத்து வருவதைத்தான் இந்த கூட்டு மெய்ப்பிக்கிறது.

மத்தியில் பா.ஜ.க ஆட்சியையும் மாநிலத்தில் அ.தி.மு.க ஆட்சியையும் தூக்கியெறிய அனைத்து மக்களும் ஒன்றிணைவது வரலாற்றுக் கடமையாகும்.

நிலம் கையகப்படுத்துவதில் மத்திய அரசின் மக்கள் விரோத அவசரச் சட்டத்தை அம்பலப்படுத்துவோம்!

பன்னாட்டு நிறுவனங்களின் ஆட்சிக்கும் கொள்ளையர்களின் ஆட்சிக்கும் முடிவு கட்டுவோம்!!

- பொன்.சந்திரன்

Pin It