“அவர்கள் நம் நதிகளை விற்றார்கள். நமது கிணறுகளை, ஏரிகளை, ஏன் நம் தலைமேல் விழும் மழையை கூட விற்றுவிட்டார்கள். லன்டனிலும் கலிபோர்னியாவிலும் வசிப்பவர்களுடைய கம்பெனி நம் தண்ணீரை வாங்கியிருக்கிறது. இனிமேல் எதை திருடப் போகிறார்கள், நமது மூச்சுக்காற்றிலிருக்கும் நீர்த் துளிகளையா? அல்லது நெற்றியில் முகிழ்க்கும் வியர்வைத் துளிகளையா...?” (Even the Rain) என்கிற ஸ்பானிய திரைப்படத்தில் அதன் நாயகன் டேனியல் தண்ணீர் தனியார் மயத்தை எதிர்த்து போராடும் மக்களிடம் பேசிய வசனம் இது.

காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்க களியாட்டம். என்றான் பாரதி.

காக்கை குருவியும் கடலும் மலையும் தனது சொந்தமாக அறிவித்து அன்னியன் நம்மை, நம் வளங்களை கொள்ளையிட அனுமதியோம் என்று உரத்த குரலில் அறிவித்து சுதந்திர வேட்கையினை ஏற்படுத்திய தேசத்தில் இன்று நம் செல்வங்கள் பெரு முதலாளிகளின் கடை சரக்காக மாற்றப்படுவது அன்றாட நிகழ்வாகிறது.

குடிக்கின்ற நீரை பணம் கொடுத்து தான் வாங்க போகிறோம் என்று யாராவது 1980களில் சொல்லியிருந்தால் அவர்களை பைத்தியகாரன் என்று இழித்துரைத்திருப்பார்கள். ஆனால் இன்று சாதாரண மனிதன் கூட கையில் தண்ணீர் பாட்டில் இல்லாமல் பயனிப்பதில்லை என்பது நடைமுறையாக்கப்பட்டுள்ளது.

பணத்தை தண்ணீராக செலவழிக்காதே என்பார்கள். ஆனால் இன்று அந்த தண்ணீருக்காக நாம் பணம் செலுத்திட வேண்டிய நிலையினை நம் ஆட்சியாளாகள் நம் மீது திணித்திருக்கிறார்கள். இன்று தண்ணீர் என்பது மனிதனின் அடிப்படை உரிமை என்பதிலிருந்து அடிப்படை தேவையென மாற்றி வரையறை செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு இரண்டும் ஒன்று போல் தெரிந்தாலும் இரண்டுக்குமான சிறு வித்தியாசம்; நம்மை ஏய்க்கிறது.

உலகின் பல நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தினையும் மூலதன சுரண்டல்களையும் மூர்க்கத்தனமாக நடத்தி வரும் பன்னாட்டு நிறுவனங்கள் தண்ணீரையும் விட்டுவைக்கவில்லை.

1992ஆம் ஆண்டு டப்ளின் நகரில் நடந்த சர்வதேச நீர் மற்றும் சுற்றுச்சூழல் மாநாடு, நீருக்கு பொருளாதார மதிப்பு உள்ளதென்றும் எனவே இதனை வணிக பண்டமாக பாவிக்கவேண்டும் என முடிவு செய்தது.

உலகின் மிகப்பெரிய பன்னாட்டுத் தலைவர்களின் தலைமையில் 2000ஆம் ஆண்டு தி ஹேக் நகரில் நடைபெற்ற உலக நீர்மன்ற மாநாடு நீர் ஒரு வணிக பொருள் என்றும் அதன் போட்டி மிக்க பயன்பாட்டின் அடிப்படையில் அதன் பொருளாதார மதிப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்தது.

இவைகளின் பொருள் நீராதாரமும் நீரும் சந்தைப்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் இதன்மூலமாக அரசு என்பது தண்ணீரை வினியோகம் செய்யும் சேவை மையமாக இருக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் எனவும் அந்த பொறுப்பினை தனியாருக்கு விட்டுவிட வேண்டும் எனவும் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு வர்த்தக அடிப்படையில் நீர் உட்பட இயற்கை வளங்களை ஏற்றுமதி செய்வதை தடை செய்யக்கூடாது என்று உலக வர்த்தக கழகத்தின் காட் ஒப்பந்தம் வலியுறுத்துகிறது .

இவற்றின் விளைவாக நமது பாரதப் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய தலைநகர் டெல்லயில் தேசிய தண்ணீர் வார விழாவில் கலந்து கொண்டு துவங்கி வைத்து தேசிய நீர்க் கொள்கை 2012 என்ற கையேட்டினை வெளியிட்டு நீர் இலவசப் பொருளல்ல, அது ஒரு வணிகப்பொருள். உரிய விலை கொடுத்துதான் நிலத்தடி நீரை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை நாட்டுடைமையாக்கி, அதனை தனியார் வசமோ அல்லது தனியாரிடம் கூட்டு சேர்ந்தோ நிர்வாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இந்தியாவில் விவசாயிகளுக்கு இலவசமாக அல்லது மான்ய விலையில் மின்சாரம் வழங்குவதால் நீரின் முக்கியத்துவம் தெரியாமல் நீரை வீணாக்குகிறார்கள் என்றும் அதனால் நீர் வினியோகத்தினையும் பெறும் நிலப்பரப்புகளையும் தனியாருக்கு வழங்கினால் அவர்கள் சிக்கனமாக நீரைப் பயன்படுத்தி விவசாயம் செய்யும் விதத்தினை சொல்லிக்கொடுப்பார்கள் என்கிறார். அதற்கும் ஒரு படி மேலே போய் திட்ட கமிஷன் துணைத்தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா “இந்தியாவில் மிகவும் அடிமட்ட விலையில் விற்கப்படும் பண்டம் தண்ணீர் தான் என்றும் இதனை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் சொல்கிறார்.

ஏற்கனவே தேசிய நீர்க் கொள்கை அமுலில் இருக்கும் போது தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள தேசிய நீர்க் கொள்கை 2012 என்னதான் சொல்கிறது?

ரூ. 2 இலட்சத்திற்குக் குறைவான வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 80 கோடி பேர். அரசின் பெரும்பாலான சேவைகளில், ரயில் போக்குவரத்து, பொதுப் போக்குவரத்து மற்றும் பிற சமூக நலத் திட்டங்களில் பயன்பெறுபவர்கள் இவர்கள்தான். ஆனால், இவர்கள் ஏதும் நேரடி வரிக்குள் பொருந்துவது இல்லை;. எனவே, இவர்களை நேரடி வரி விதிப்பிற்குள் கொண்டுவரும் நோக்கோடு அவர்கள் அதிகம் பயன்படுத்தும் நீரின் மீது வரி விதிக்கலாம் என்கிறது இந்தக் கொள்கை.

இதன் மூலம் பெரும் பணக்காரர்களும், பணக்காரர்களும் மட்டும் வரி செலுத்துவது அநியாயம். அரசாங்கத்தைச் சார்ந்து வாழும் ஏழைகளும், பரம ஏழைகளும் அரசாங்கத்தைச் சார்ந்து சுகபோகமாக வாழ்கிறார்கள். இது நியாயமில்லை என்கிறார் திட்டக்குழு துணைத் தலைவர் மாண்டெக்சிங் அலுவாலியா. இந்திய நடுவணரசின் தேசிய நீர்க் கொள்கை அறிக்கையின் 13-வது பத்தியில் எங்கெல்லாம் பொருத்தமானதாக இருக்கிறதோ அங்கெல்லாம் திட்டமிடல், மேம்பாடு, மேலாண்மை என பல்வேறு வகைகளின் நீராதாரத் திட்டங்களில் தனியாரின் பங்கேற்பினை ஊக்குவிக்கலாம் என்றும் கூறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தற்போது குடிநீர் விநியோகம் செய்திட முறையான பணியிடம் ஏதும் அனுமதிக்காமல் அரசாங்கமே அதனை சீர்குலைத்துவிட்டு இப்போது தனியாரின் சேவைதான் சிறப்பானது என்று சொல்லி நீர் வளத்தினை தனியாருக்கு மடை மாற்றம் செய்கிறது.

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பது தூய்மையான குடிநீரை உள்ளடக்கியது. எனவே, தண்ணீர் வளத்தினை தனியாருக்கு விற்பனை செய்வதும் அந்த பொறுப்பிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்வதும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும்.

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாநிலப் பட்டியலில் உள்ள நீர் மேலாண்மையினை பொது பட்டியலுக்கு மாற்றிடவும் பின்னர் அதனை முழுமையாக மத்திய பட்டியலுக்கு மாற்றி தனியாருக்கு தாரை வார்க்கவும், இந்த சட்டம் வழி செய்கிறது. மேலும் இது 1982ம் ஆண்டு இந்திய சொத்துகள் மீதான உரிமை கட்டுப்பாட்டுச் சட்டத்தினை திருத்தி நிலத்தடி நீரின் மீதான உரிமை நில உரிமையாளருக்கு இல்லை என மாற்றிட வேண்டும் என்கிறது.

தண்ணீரைப் பாதுகாக்கும் வகையில் ஒவ்வொரு மாநில அரசும், தண்ணீர் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், இந்த ஆணையம் தண்ணீருக்கு, பயன்பாட்டிற்கு ஏற்ப கட்டணம் விதிக்க வேண்டும் என்றும் இந்தக் கட்டணம் ஆண்டுதோறும் மாற்றம் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறது.

2002-ம் ஆண்டு துவங்கி கடந்த 10 ஆண்டுகளாக ஒரு வடிவத்தினைப் பெற்றுள்ள இந்த தேசிய நீர்க்கொள்கை, "அரசோ அல்லது உள்ளாட்சி அமைப்புகளோ இனி குடிநீரை, பாசன நீரை வழங்காது. இதனை தனியார் அல்லது பன்னாட்டு நிறுவனம்தான் செய்யப் போகிறது" என்கிறது.

மளிகை போல தண்ணீரும் ஒரு வணிகப்பொருள் என்றும் ஆற்று நீர், நிலத்தடி நீர், பாசன நீர் எதுவாக இருந்தாலும் விலை நிர்ணயம் செய்யப்படும். வீட்டுப் பயன்பாடு, விவசாயம், தொழில் என்று தண்ணீர் பயன்பாட்டினை நிர்வாகம் செய்திட தண்ணீர் ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும் என்கிறது.

மேலும் மின் கட்டணத்தை உயர்த்துவது, இலவச மின்சாரத்தினை இரத்து செய்வது விவசாயத்திற்குப் பயன்படுத்தும் நீரை முறைப்படுத்துவதும் என்ற சொல்லும் இதில் அடங்கும்.

தனி நபர்களின் குடிநீர் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நாளொன்றுக்கு 40 லிட்டர் வீதம் இலவசமாக வழங்கிடவும், அதற்கு மேல் தேவையான நீரை கட்டணம் செலுத்தித்தான் பெற வேண்டும் என்கிறது.

கூடுதலாக, 200 லிட்டருக்கு மேல் நீரை பயன்படுத்துபவர்களுக்கு ஆடம்பர வரியும் விதிக்கப்படும் என்கிறது. தனி நபர்கள், விவசாயிகள் வெளியிடும் கழிவு நீருக்கும் வரி விதித்திட ஆலோசனை சொல்லும் இந்தக் கொள்கை நீர் விளையாட்டுப் பூங்காக்கள், பெரும் தொழிற்சாலைகள் வெளியிடும் கழிவு நீரைப் பற்றியும், சுத்திகரிப்பு பற்றியும் பேச மறுக்கிறது.

சோதனை முறையான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் கடும் தோல்வியினைச் சந்தித்தது. பொலிவியா நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தக் கொள்ளையின் காரணமாக ஏழை எளிய மக்களின் குடிநீரை மறுக்கப்பட்ட நிலையில் மழை நீரைக் கூட மக்கள் பிடித்து பயன்படுத்த அனுமதிக்காத தனியார் நிர்வாகத்தின் நெருக்கடியில் கழிவு நீரைக் குடித்து மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். இதனால் ஏற்பட்ட கலகம் புரட்சியாக வெடித்து ஆட்சியாளர்கள் அப்புறப்படுத்தப்பட்டு சோசலிச ஆட்சி அமைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் சட்டீஸ்கர் மாநில அரசு சியோநாத் ஆற்றின் குறிப்பிட்ட பகுதியில் ‘ரேடியல் வாட்டர் லிட்' என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. ஆற்றின் கரையோரத்தில் வாழும் மக்கள் ஆற்றுநீரைப் பயன்படுத்திடவும், அங்கு மீன்பிடித்து வாழ்ந்த மீனவர்களின் மீன்பிடி உரிமை மறுக்கப்பட்டு அங்கு பெரும் போராட்டம் வெடித்த பின்னரே அத்திட்டம் கைவிடப்பட்டது.

கேரளாவில் உள்ள பிளாச்சிமாடாவும், தமிழ்நாட்டில் மதுரைக்கு அருகில் உள்ள பரவை, சிவகங்கைக்கு அருகில் உள்ள படமாத்தூர் ஆகிய இடங்களில் வெளிநாட்டு தனியார் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய இடங்களில் மினரல் வாட்டர் மற்றும் குளிர்பானங்கள் தயாரிப்புக்கென்று மிகப்பெரிய எந்திரங்கள் மூலம் ராட்சச ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டு நீரை உறிஞ்சியதால் மக்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.

ஊரக உள்ளாட்சி மற்றும் நகராட்சி அமைப்புகள் வினியோகம் செய்யும் நீரை அசுத்தம் என்றும் அரசாங்க சேவை தரமற்றது என்றும் பொய் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டு Mineral water, RO water என்றும், இன்றைக்குப் புதிதாக Saline water என்ற ஏமாற்று விளம்பரங்களின் மூலமாக தூய்மையான நீரை வழங்குகிறோம் என்று சொல்லி நமது நீரை அரசிடமிருந்து அடிமட்ட விலைக்கு வாங்கி விற்பனை செய்யும் பெறும் நிறுவனங்களினால் பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் தண்ணீரில் ஆர்கட்னா குளோரின், ஆர்கட்னா பாஸ்பரஸ் ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகள் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புத் திசுவில் படியும் என்றும் இதனால் மத்திய நரம்பு மண்டலம், கல்லீரல், சிறுநீரகம், கணையம், விந்து சுரப்பி, மூக்கின் சளிபடலம் ஆகியவை பாதிக்கப்படும் என்றும் சொல்கிறது ஆய்வு.

உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் விவேண்டி, சூயஸ் லியோனைஸ் டெ மான்சான்டோ மற்றும் பெர்டெல் ஆகிய வெளிநாட்டு பெரும் நிறுவனங்கள் இந்தியாவில் தண்ணீருக்கு 2000 மில்லியன் பவுண்ட் சந்தை மதிப்பு இருப்பதாக மதிப்பீடு செய்து அதனடிப்படையில் தமது கழுகு பார்வையினை நம் நாட்டின் மீது திருப்பியுள்ளன.

இன்றைக்கு உலகமயம் தேசத்தினை களவு கொள்ளும் நிலையில் இந்த தேசத்தின் நீர் செல்வம் கொள்ளை போவது ஏற்கனவே துவங்கிவிட்டது. பெரும் நிறுவனங்களில் நடத்தப்படும் கேளிக்கை பூங்காக்களில் நீர் விளையாட்டுக்கென்று பெருமளவில் நீர் பயன்படுத்தப்படுவதை பார்த்து ரசிக்கும் அரசு இயந்திரம் ஏழை விவசாயி ஆற்றுப் படுகையில் நீர் இறைத்து விவசாயம் செய்கின்ற போது தடுத்து குற்றவியல் வழக்கு பதிவு செய்கிறது.

இத்தனை பிரச்சனைகளுக்கும் மத்தியில் மத்திய அரசு தண்ணீரை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, மக்கள் நலனுக்கு எதிராக பெருமுதலாளிகளுக்கு ஆதரவான நிலையினை எடுப்பதற்கு துணிந்துள்ளது.

இந்த கொள்கை அனுமதிக்கப்பட்டால்,

· நாடெங்கும் ATM இயந்திரங்கள் போல் குடிநீருக்கான இயந்திரங்கள் வைக்கப்படும்.

· குடிநீர் ஆதாரங்கள் போலீஸ் காவலுடன் இருக்கும்.

· ‘தவிச்ச வாய்க்கு தண்ணீர்' என்பதெல்லாம் திருத்தி எழுதப்படும்.

· விவசாயிக்கு தண்ணீர், தனியார் முதலாளிகளால் குவளையில் அளந்து விற்கப்படும்.

· மழை நீரில் நனைந்தாலும் வரிகட்டும் நிலை சேரும்,

· தாகம் எடுத்தால் பெக்டெல், வெண்டி டாடா ரிலையன்ஸ், கோகோ கோலா போன்ற நிறுவனங்கள் அனுமதித்தால் மட்டுமே தண்ணீரைக் குடிக்க இயலும்.

· மீறிக் குடித்தால் தேச ஒற்றுமையைக் குலைத்ததாக, புரட்சியாளனாக முதலாளித்துவ சக்திகளால் அடையாளம் காட்டப்படும்.

உலக நீர் ஆணையத்தின் தலைவரும் உலக வங்கியின் துணைத்தலைவருமான டாக்டர் இஸ்மாயில் செராஜில்டன் 21 ஆம் நூற்றாண்டில் ஏற்படும் போர்கள் நீருக்கானதாகவே இருக்கும் என்கிறார். மூன்றாம் உலக நாடுகளை தனியார் மயமாக்கம் தொடரும்போது விலை கொடுக்க இயலாதோர் சாக வேண்டியது தான் என்கிறார் மாட்பார்லோ.

அவர்கள் நம் நதிகளை விற்றார்கள். நமது கிணறுகளை, ஏரிகளை, ஏன் நம் தலைமேல் விழும் மழையைக் கூட விற்றுவிட்டார்கள். பெப்சியும், கோலாவும், டாடாவும், ரிலையன்சும் நம் தண்ணீரை வாங்கப் போகின்றன. இனிமேல் எதை திருடப் போகிறார்கள், நமது மூச்சுகாற்றிலிருக்கும் நீர்த் துளிகளையா? அல்லது நெற்றியில் முகிழ்க்கும் வியர்வைத் துளிகளையா . . . . .? என்ற Even the Rain படத்தின் நாயகனின் வசனம் இன்று நம்மை நோக்கித் திரும்பியுள்ளது.

“மரணமும் தோல்வியும் தனி நபருக்குத்தான், தொழிலாளி வர்க்கத்திற்கு அல்ல" என்றார் லெனின். அத்தகைய புரிதலோடு நம் வளங்களைக் காத்திட சூளுரைத்து களம்புகுவோம்.
 
- மு.வீரகடம்ப கோபு, திண்டுக்கல்

Pin It