கைது செய்யப்பட வேண்டிய நபரைத்தேடி, இடத்தைச் சோதனையிடல்:

கைது செய்யப்பட வேண்டிய நபரைத் தேடி, ஒரு இடத்தில் சோதனை மேற்கொள்ளும்போது அனைவரும் தேவையான உதவி புரிய வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 47 வற்புறுத்துகிறது. சோதனை மேற்கொள்ளும் போது எந்தவொரு கதவையும் ஜன்னலையும் உடைத்துத் திறக்கவும், தன்னையும் கட்டிடத்திற்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள வேறு எந்த நபரையும் விடுவித்துக் கொள்ளவும் காவல்துறை அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது.

கைது செய்யப்பட்ட நபரைச் சோதனையிடல்:

ஒரு நபரை கைது செய்த பின்பே, அவரைச் சோதனையிடும் உரிமை காவல்துறை அதிகாரிக்கு வருகிறது. சோதனையிட்ட பின்பு, அந்த நபரிடமிருந்து எடுக்கப்பட்ட எல்லாப் பொருட்களையும், பாதுகாப்பில் காவல்துறை அதிகாரி வைத்திருக்க வேண்டும். பொருட்களைப் பெற்றுக் கொண்ட தற்கான ரசீது, கைதியிடம் தரப்படவேண்டும்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்படும் சோதனை கண்ணியத்துடன் இருப்பது அவசியம்.

ஒரு பெண் மற்றொரு பெண்ணாலேயே சோதனையிடப்பட வேண்டும் (குற்றவியல் நடை முறைச் சட்டம் பிரிவு 51).

கைது செய்யப்பட்ட நபரை மருத்துவர் சோதனை செய்தல்:

ஒரு குற்றத்தை நிரூபிப்பதற்குச் சாட்சியளிக்கக்கூடும் எனத் தோன்றினால், உதவி ஆய்வாளர் தகுதிக்குக் குறையாத காவல்துறை அதிகாரி கைது செய்யப்பட்ட நபரை மருத்துவப் பரி சோதனை செய்யக் கோரலாம் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 53).

  • மருத்துவப் பரிசோதனை செய்வதற்காக, அவர் நியாயமான அளவில் தேவைக்கேற்ப பலவந்தப்படுத்தலாம்.
  • குற்றம் சாட்டப்பட்ட நபர், குற்றவியல் நீதித்துறை நடுவரிடம், தான் குற்றம் புரியவில்லை என வேண்டுகோள் விடுக்கலாம் (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 54).
  • பெண் மருத்துவரால், தான் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ள பெண்ணுக்கு உரிமை உண்டு (குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 53(2), 54).
  • போலீஸ் காவலில் உள்ளபோது சித்திரவதைக்குள்ளாவோர் இச்சட்டப்பிரிவைப் பயன் படுத்திக் கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட நபர், காவல்துறையினரால் சித்திரவதைக் குள்ளானதை நிரூபிக்கத் தன்னை மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ள வேண்டும்.

சோதனை ஆணை:

கீழ்க்கண்ட நோக்கங்களுக்காக, சோதனை ஆணை. குற்றவியல் நீதித்துறை நடுவரால் வழங்கப்படுகிறது.

  • ஏதோ காரணத்தினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாதிருக்கும் ஒரு ஆவணம் அல்லது பொருளைக் கைப்பற்றுவதற்காக;
  • களவுப் பொருட்கள், போலி ஆவணங்கள் போன்றவை இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படும் வீட்டைச் சோதனையிடுடவதற்காக;
  • அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட வெளியீடுகளைக் கைப்பற்றுவதற்காக;
  • தவறான முறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நபரைத் தேடிக்கண்டுபிடிப்பதற்காக;
  • தேவைப்படும் இடத்தைச் சோதனையிடவும் ஆட்சேபகரமான பொருட்களைக் கைப்பற்றவும் காவல்துறை அதிகாரிக்கு சோதனை ஆணை அதிகாரம் அளிக்கிறது. காவல் துறையினர் தாம் யார் என்பதையும் வந்த காரணத்தையும் கூறி உள்ளே நுழைய விடுமாறு கேட்டு, நியாயமற்ற முறையில் மறுக்கப்பட்டால், சட்டப்பூர்வமாக வீட்டில் நுழைய பலாத்காரத்தையும் பயன் படுத்தலாம்.
  • சோதனை ஆணையை நிறைவேற்றும் காவல்துறை அதிகாரி, குறிப்பிட்ட நபர் உள்ள இடத்தையும் தேடப்படும் பொருள் அவரிடமே மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகச் சந்தேகப் பட்டால் அந்த நபரையும் சோதனையிடலாம். சோதனையிடப்படும் நபர் ஒரு பெண்ணா யிருந்தால், மற்றொரு பெண்ணால் கண்ணியமாகச் சோதனையிடப்பட வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை:

சோதனையிடும் அதிகாரி:

  • அந்தப் பகுதியில் வசிக்கும் இரண்டு அல்லது அதற்கு மேலான மரியாதைக்குரிய நபர்களை சோதனையில் உடனிருக்கவும் காணவும் அழைக்க வேண்டும். உடனிருக்கத்தவறுவது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 187-ன்படி குற்றமாகும்.
  • அவர்கள் முன்னிலையில் சோதனையிட வேண்டும். கட்டிடத்தின் உள்ளே சோதனை நடைபெறும்போது சாட்சிகளை வெளியே நிறுத்தி வைத்திருந்தால், அந்த சோதனை சட்ட விரோதமானதாகி விடும்.
  • கைப்பற்றிய பொருட்கள் மற்றும் அவை எங்கிருந்து கைப்பற்றப்பட்டன என்ற விவரப்பட்டியலைத் தயாரிக்க வேண்டும்.
  • அந்த விவரப்பட்டியலில் சாட்சிகளின் கையொப்பம் பெற வேண்டும்.
  • அவ்வீட்டில் குடியிருப்பவரை, சோதனையிடும்போது உடனிருக்க அனுமதிக்க வேண்டும். அவர் கேட்டுக் கொண்டால், கைப்பற்றிய பொருட்களின் பட்டியல் நகலைத் தர வேண்டும்.
  • நீதிமன்றம் தனியே அழைப்பாணை விடுத்தாலன்றி அந்த சாட்சிகள் நீதிமன்றத்தில் வந்து சாட்சியளிக்கத் தேவையில்லை.

சோதனையிடப்படும் இடத்தில் குடியிருப்பவரின் உரிமைகள்:

  • எந்தவொரு குற்றச்சாட்டிலும் தன்னைச் சம்பந்தப்படுத்தக் கூடிய எந்தவொரு ஆவணத்தையும் அல்லது பொருளையும் ஒப்படைக்கும்படி குற்றவாளியாகக் கட்டாயப்படுத்த முடியாது. எனவே, நீதிமன்றம் வழங்கும் சோதனை ஆணையை காவல்துறை பெற வேண்டியுள்ளது.
  • உங்கள் சம்மதமின்றி உங்கள் இடத்தில் நுழையவோ அல்லது சோதனையிடவோ காவல்துறைக்கு பொதுவான அதிகாரம் இல்லை.
  • எந்தவொரு குறிப்பிட்ட இடத்தைச் சோதனையிட வேண்டும் என்பதை சோதனை ஆணையில் நீதிமன்றம் குறிப்பிடலாம்.
  • சோதனைக்கு காவல்துறையினரை அனுமதிக்கும் முன்பு சோதனை ஆணையைப் பார்ப்பதும் அதில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கவனத்தில் கொள்வதும் முக்கியமாகும்.
  • உங்கள் இடத்தில் நுழைவதற்கு சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லாவிட்டால், நீங்கள் காவல்துறையினரை நுழைய விட மறுக்கலாம்.
  • உள்ளே இருப்பதற்கு சட்டpபூர்வமான அதிகாரம் அவர்களுக்கு இல்லாதிருப்பின் அவர்களை வெளியேற்ற நியாயமான அளவில் பலாத்காரத்தைப் பயன்படுத்த உங்களுக்கு சட்டப்படி உரிமை உண்டு (இந்திய தண்டனைச் சட்டம் 97).
Pin It