புதிதாக கட்டப்படும் அரசு கட்டிடங்களுக்கும், அரசு நடத்தும் விழாக்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட சமயத்தின் அடிப்படையிலான வழிபாடுகள் நடத்தும் பழக்கம் அண்மைக்காலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்து பார்ப்பனர்களைக் கொண்டு வேதங்கள் ஓதி பூசை நடத்துவது, பூமி பூசை நடத்துவது போன்றவை வாடிக்கையாகி விட்டன. இது இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளுக்கு முற்றிலும் எதிரானதாகும். இந்த நாடு சமயசார்பற்ற நாடு என்பதை நமது அரசியல் அமைப்புச்சட்டமும், எத்தனையோ உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தீர்ப்புக்களும் மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளன.

பல சமய, கலாச்சார, மொழி, இனக்குழுக்களைக் கொண்ட பன்மைத்துவம்தான் இந்திய நாட்டினுடைய மிகச் சிறப்பான அம்சம் என்பதை உலகமே வியந்து பாராட்டுகிறது. இந்த நாட்டின் மிகச்சிறந்த பாரம்பரியமே அதுதான். ஆனால், தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகள் அந்த தனிச்சிறப்பு வாய்ந்த தன்மையை அழித்தொழிப்பதாக அமைந்து வருகிறது. இந்த நாட்டின் நீதிமன்றங்களே அத்தகைய செயல்பாடுகளை முன்னின்று நடத்துவது கூடுதலாக நமது சமய சார்பற்ற பாரம்பரியத்திற்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

சில மாதங்களுக்கு முன் குசராத் உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டிட அடிக்கல் நாட்டு நிகழ்வில் இந்து சமய முறைப்படி பூமி பூசை போடப்பட்ட போது அதன் தலைமை நீதிபதியும் ஏனைய நீதிபதிகளும் கலந்து கொண்டனர். இது அரசு விழா. அதிலும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய நீதிமன்ற வளாகத்தில் நிகழும் நிகழ்வு. அதில் எப்படி ஒரு குறிப்பிட்ட சமய சடங்கு பின்பற்றப்படலாம்? அதில் எப்படி நீதிபதிகள் கலந்து கொள்ளலாம்? அரசியல் சட்ட அமைப்பாகிய நீதிமன்றத்தில் இப்படிப்பட்ட நிகழ்வு நடந்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்று அறிவிக்கவும், ஒரு குறிப்பிட்ட சமயசார்பான சடங்குகள் இனிமேல் அரசு விழாக்களில் நடத்தப்படுவதை தடை செய்யக் கோரியும், நீதிபதிகள், அமைச்சர்கள், அரசு ஊழியர்கள் போன்றோர் அத்தகைய நிகழ்வுகளில் பங்கேற்பதை தடை செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குசராத் உயர்நீதிமன்றத்திலேயே ஒரு வழக்கறிஞர் பொதுநல வழக்குத் தொடுத்தார். அந்த பொதுநல வழக்கானது குசராத் உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி முக்கோபாத்யாயா முன்பாகவே விசாரணைக்கு வந்தது.

தான் கலந்து கொண்ட விழாவை விமரிசிப்பதோடு தனக்கே ஒரு வழக்கறிஞர் அரசியலமைப்புச் சட்டத்தைப் பற்றி எடுத்தியம்புவதை தலைமை நீதிபதி விரும்பவில்லை. தான் அதை விசாரித்தால் சிக்கலாகி விடும் என்று அறிந்து அந்த வழக்கை வேறு இரு நீதிபதிகளடங்கிய நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் அத்தகைய வழக்கைத் தொடுத்ததற்காக வழக்கறிஞரைப் பாராட்டி அரசியல் அமைப்புச் சட்டத்தை செயல்படுத்த உத்தரவிடுவார் என்று வழக்கறிஞர் எண்ணினார். ஆனால், அந்த நீதிபதிகள் வழக்கறிஞருக்கு அபராதம் விதித்து வழக்கைத் தள்ளுபடி செய்தனர். இது இந்நாட்டின் சமயசார்பற்றத் தன்மைக்கு குசராத் உயர்நீதிமன்றம் அண்மையில் கொடுத்த சவுக்கடிகளில் ஒன்று.

1990 களில் அத்வானி நடத்திய ரதயாத்திரையும் அதனைத் தொடர்ந்து 1992 ல் நிகழ்த்தப்பட்ட பாபர் மசூதி இடிப்பும், மும்பை கலவரமும், நமது நாட்டில் சற்றே அடங்கிப் போயிருந்த மதவெறி நடவடிக்கைகளுக்கு மீண்டும் புத்துயிர் அளித்தன. தொடர்ந்து வட மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் மதவெறிப் பிரச்சாரம், 2002 குசராத்தில் இசுலாமியர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரசு மதவெறி பயங்கரவாதம், 2008 ல் காந்தாமாலில் கிறித்தவ பழங்குடியினர் மீது நிகழ்த்தப்பட்டக் கொடூரத் தாக்குதல், ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளில் வலது சாரி மதவெறி அமைப்பினர் சிறுபான்மையினர் மீது அப்போதைக்கப்போது நிகழ்த்தி வரும் வன்முறைத் தாக்குதல்கள் போன்றவை அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. நாட்டின் எந்தவொரு மூலையில் குண்டு வெடித்தாலும் உடனடியாக இசுலாமியர் மீது அபாண்டமாக பழி சுமத்துவது என்பது சாதாரணமாகிவிட்டது. அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டு அடக்கி ஒடுக்கப்படுகிறார்கள்.

டிசம்பர் 13, 2001 ல் நிகழ்ந்த பாராளுமன்ற தாக்குதல், ஜம்மு காஷ்மீர் மற்றும் மணிப்பூர் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து வரும் இராணுவத்தினரின் கட்டுக்கடங்காத வன்செயல்கள் போன்றவற்றிலும் நாட்டின் மதச்சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் நிகழ்ந்த 20 க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்பு நிகழ்வுகளில் எண்ணிலடங்காத அளவிற்கு சிறுபான்மையினர் கைது செய்யப்பட்டனர். மாலேகான் மற்றும் தானே பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கள் இந்து பாசிச மதவெறி அமைப்புக்களால் நடத்தப்பட்டது என்பதற்கு ஏராளமான சான்றுகளை தேசிய புலனாய்வு அமைப்பு சேகரித்து அதை உறுதி செய்த பிறகும், அந்த வழக்கில் பொய்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள 9 க்கு மேற்பட்ட இசுலாமிய இளைஞர்கள் பல ஆண்டுகளாக சிறையில் காலம் தள்ளினார்கள். கடந்த 5.11.2011 அன்றுதான் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேற்சொன்ன நிகழ்வுகளிலெல்லாம் சிக்கவைக்கப்பட்ட சிறுபான்மையினர் பெரும் பாதிப்புகளுக்குள்ளாகி நீதிவேண்டி நீதிமன்றங்களின் கதவுகளைத் தட்டிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் ஏனோ அவர்களுக்கு எல்லா நீதிமன்றங்களுமே ஒரே குரலில் நீதியை மறுக்கின்றன.

பாபர் மசூதி தொடர்பாக நீண்ட காலங்களுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் கன்னாபின்னாவென்று சட்டத்தின் நடைமுறையாக்கம், காரணகாரியங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்து விட்டு யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மூடநம்பிக்கையில் ஊறிப்போன ஓரு தீர்ப்பை வழங்கியது. அதனால் சிறுபான்மையினர் நீதிமன்றத்தின் மீது கொண்டிருந்த மிகக் குறைந்த நம்பிக்கையையும் தவிடுபொடியானது.

அதே போல பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் கொன்றொழித்த பிறகும், 4 நபர்களை உளவுத்துறை கைது செய்து புதிய கோணத்தில் வழக்கை சோடித்து அவர்கள் சதி செய்ததாக குற்றம் சாட்டியது. சதிக்கான எந்த ஆதாரமும் இல்லையென்று நீதிமன்றமே அறிவித்துவிட்டு இருவரை மட்டும் விடுதலை செய்தது. மேலும், ஒருவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கிறது. மற்றொருவரான அஃப்சல் குருவுக்கு மரணதண்டனையை உறுதி செய்தது. ஆதாரம் இல்லையென்று நீங்களே சொல்லிவிட்டு எந்த அடிப்படையில் தண்டனை வழங்குகிறீர்கள்? என்று கேட்டதற்கு, ‘இந்திய நாட்டு மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு அஃப்சல் குரு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்படுவது அவசியம்’ என்றார்கள்.

அஃப்சலுக்கு மரணதண்டனை வழங்க சொன்னது எந்த குடிமக்களின் உணர்வு? என்று விளங்கவில்லை. இந்திய மக்கள் என்று யாரை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டுகிறது என்பதும் புரியவில்லை. அப்படியானால், அஃப்சல்குரு இந்திய குடிமகன் இல்லையா? அவருக்கு இழைக்கப்பட்ட இந்தக் கொடுமைக்கெதிராக குரல் கொடுக்கும் பல இலட்சம் மக்கள் இந்தியக் குடிமக்கள் இல்லையா? அந்த தீர்ப்பின் மூலம் ‘சட்டத்தின் ஆட்சி’ என்பதை செல்லாக்காசாக்கி விட்டது உச்சநீதிமன்றம்.

குசராத்தில் இசுலாமியர்கள் மீது அரசு உதவியுடன் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையில் அகமதாபாத் குல்பர்க் வீட்டு வளாகத்தில் குடியிருந்த எசான் ஜாப்ரி எனும் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் 36 இசுலாமியர்கள் கொல்லப்பட்டனர்.

பிப்ரவரி 28, 2002 ல் நடைபெற்ற அந்த இனப்படுகொலை தொடர்பாக அவர் மனைவி ஜாகியா ஜாப்ரி ஜூன் 8, 2006 ஆம் ஆண்டு குசராத் உயர்நீதிமன்றத்தில் புகார் மனுவை அளிக்கிறார். இனப்படுகொலைக்கு காரணமான குசராத் முதல்வர் நரேந்திர மோடி மீதும் 62 பேர் மீதும் முதல் தகவல்; அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டி கேட்கிறார். அதை ஏற்றுக்கொண்டு நடுநிலையான புலன் விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு பதிலாக, 17 மாதங்களுக்குப் பிறகு நவம்பர் 3, 2007 அன்று அந்த மனுவை ஏற்க முடியாது என்றும் ஜாகியா ஜாப்ரி அந்த மனுவை நடுவர் நீதிமன்றத்தில்தான் புகார் அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.

குசராத்தில் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் கீழ்நிலை நீதிமன்றங்கள் நடுநிலையுடன் செயல்படும் சூழ்நிலை இல்லை என்பதை உயர்நீதிமன்றம் நன்றாக அறிந்திருந்தும் நீதி வழங்க மறுத்து விட்டது.

மார்ச் 26, 2008 ல் இனப்படுகொலை வழக்குகள் குசராத்தில் நடத்தப்பட்டால் நியாயம் கிடைக்காது என்பதை சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது. அதில் ‘குல்பர்க் வீட்டு மனை வளாக வழக்கு’ உட்பட 10 இனப்படுகொலை வழக்குகள் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க முன்னாள் சி.பி.ஐ. இயக்குநர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது. மே 14, 2010 ல் அந்தக் குழுவும் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் காணப்படும் சாட்சியங்களில், ‘மோடி இனப்படுகொலைக்கு காரணமாயிருந்தார் என்பது நன்றாக வெளிப்பட்டுள்ளது. ஆனால், மோடி மீது எந்தக் குற்றமும் இல்லை’ என்பதாக இறுதி அறிக்கை தயாரிக்கப்படுகிறது. மே 5, 2011 ல் உச்சநீதிமன்றம் நீதிமன்ற ஆலோசகர் (யுஅiஉரள ஊரசயைந) என்ற முறையில் ராஜூ ராமச்சந்திரனை தனிப்பட்ட முறையில் அந்த அறிக்கையை வாசித்து தனது சட்டரீதியான கருத்தை தெரிவிக்குமாறு உத்தரவிட்டது. ஜூலை 25, 2011ல் ராமச்சந்திரனும் தனது கருத்தை அறிக்கையாக உச்சநீதிமன்றத்திடம் அளிக்கிறார்.

நியாயமாக அந்த அறிக்கைகளை சீர்தூக்கிப் பார்த்து உச்சநீதிமன்றம் தானே சட்ட நடவடிக்கைகளை தொடர்ந்திருக்க வேண்டும். அல்லது அந்த வழக்கு விசாரணையை குசராத்திற்கு வெளியிலுள்ள ஒரு பாதுகாப்பான நீதிமன்றத்தில் நடத்த உத்தரவிட்டிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக, எவ்வித மனசாட்சியுமின்றி குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்டி தன்னை அவ்வழக்கிலிருந்து விடுவித்து கொண்டது உச்சநீதிமன்றம். அறிக்கையை சம்பந்தப்பட்ட நடுவர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் இதில் உச்சநீதிமன்றம் செய்வதற்கு ஒன்றுமில்லை என்பதாகவும் கூறி தங்களது பொறுப்பிலிருந்து 3 நீதிபதிகளும் தங்களை விடுவித்துக் கொண்டுள்ளனர். இதன் மூலம் உச்சநீதி மன்றம் இந்த வழக்கை பழைய நிலைக்கு தள்ளிவிட்டு, செப்டம்பர் 12, 2011 அன்று நீதியை சிதைத்துள்ளது.

ஏற்கனவே மார்ச் 2, 2010ல் ‘குசராத்திலுள்ள விசாரணை நீதிமன்றம் ஒன்று இனப்படுகொலை குற்றவாளிகள் மீது மிகுந்த இணக்கத்துடன் நடந்து கொள்கிறது. எனவே இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்காது’ என்று அறிவித்து அதில் சிறப்பு வழக்கறிஞர்களாக நியமிக்கப்பட்ட ஆர்.கே.ஷாவும், நைனா பட்டும் பதவி விலகினார்கள். ‘அதையெல்லாம் தெரிந்திருந்தும் உச்சநீதிமன்றம் இப்படிப்பட்ட முடிவு எடுத்திருப்பது அதன் உண்மை முகத்தைக் காட்டுவதாகவே அமைந்துள்ளது’ என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்.

இந்த முடிவைத்தான் மோடியும், பா.ச.க.வும் மிகுந்த உற்சாகமாக கொண்டாடுகிறார்கள். உற்சாக மிகுதியில் மோடி நாட்டு அமைதிக்காக 3 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கிறார். தனது பாசிச முகத்தை மறைக்க வேண்டி தொடர்ந்து பல உண்ணாவிரதங்களை அறிவிக்கின்றார். இனப்படுகொலை புரிந்தவன் அமைதிப்புறாவாக வேடம் பூண்டுள்ளதை நாட்டு மக்கள் அமைதியாக கவனித்து வருகிறார்கள்.

சமயசார்புடையதாக நீதிமன்றங்களின் மனநிலையும் கெட்டுப்போய்விட்டதை மேற்சொன்ன அணுகுமுறைகள் வெளிப்படுத்துகின்றன. நீதிமன்றத்தின் இந்தப்போக்கு திருத்தப்படாவிட்டால், அது நாட்டுக்கு பெரும் கேட்டினையே விளைவிக்கும்.

- அ.சகாய பிலோமின் ராஜ், வழக்கறிஞர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It