சில தினங்களாக 'மனித உரிமை' என்ற வார்த்தையை தமிழகத்தில் பயன்படுத்துவதை கெட்ட வார்த்தையை சொல்வது போன்று பார்க்கிறார்கள். தமிழகம் முழுவதும் 'மனித உரிமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அரசு சாராத அமைப்புகள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாகவும், தங்களது சுயநலத்திற்காக அதிகாரத்தில் உள்ளவர்களை மிரட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து 'மனித உரிமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி எந்த அமைப்பும் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2009-ம் ஆண்டு பரிந்துரை செய்த பின்பு சங்கங்கள் பதிவுச் சட்டத்தில் 'மனித உரிமைகள்' என்ற வார்த்தைகளை பயன்படுத்தக் கூடாது என்று திருத்தத்தையும் தமிழக அரசு கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது.

Human Rightsஇந்தச் சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட அமைப்பு 'மனித உரிமை' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பாக செயல்படுவதால் அவர்களது மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் சங்கங்கள் பதிவுச் சட்டத் திருத்தத்திற்கு பிறகு இதுவரை கட்டப்பஞ்சாயத்துகளில் ஈடுபடும் அமைப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று அரசைக் கேட்டதால், இதுதான் சமயம் என்பது போல் தமிழக காவல் துறை ஆயிரக்கணக்கான வழக்குகளை உண்மையாக மனித உரிமைக்காக போராடும் அப்பாவி மனித உரிமை போராளிகள் மீது புதிதாக பதிவு செய்துள்ளது. அரசின் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடினால் வழக்கு பதிவு செய்யப்படும் என்ற பயத்தை உருவாக்கும் விதத்தில் காவல் துறை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வருகிறது.

'மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம்' என்ற அமைப்பு மூலமாக உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றி வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த மனித உரிமைக் காப்பாளர் திரு. கந்தசாமி மீது இன்ஸ்பெக்டரே புகார் அளிக்கிறார், அவரே வழக்கு பதிவு செய்கிறார், அவரே கைதும் செய்கிறார். காரணம் கேட்டால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செயல்படுவதாக தெரிவிக்கிறார். காவல்துறை அராஐகத்தை எப்படி சொல்வதென்றால், உச்சநீதிமன்றம் அர்னேஷ் குமார் வழக்கில் கொடுத்த வழிகாட்டுதல் நெறிமுறை எதையும் பின்பற்றாமல் கந்தசாமியை ரிமான்ட் செய்த பின்பு, உடல்நிலை சரியில்லாத கந்தசாமி அவர்களை கால் செயின் கொண்டு மருத்துவமனையில் கட்டிப் போடுகிறார்கள். நீதிமான்கள் யாரும் இந்த மனித உரிமை மீறலை, மனிதத்தன்மையற்ற செயலை, மனிதனின் மாண்புரிமையை சிதைத்த காவல்துறை அராஐகத்தை கேட்கவே இல்லை.

இந்த நாட்டில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் போன்ற மனித உரிமைக்கான அமைப்புகள் செய்து வரும் மனித உரிமைகள் சார்ந்த பணிகளை எவரேனும் குறை சொல்லிவிட முடியுமா ? இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு மனித உரிமைகள் சார்ந்த அவசியம் ஏற்பட்டு அதற்காக உலக நாடுகள் அனைத்தும் ஒன்றுகூடி உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஏற்படுத்தி இன்று மனிதனுக்கான உரிமைகள் பல்வேறு நிலைகளில் வகைப்பட்டுள்ளது. மனித உரிமைகள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல் எவ்வாறு கல்வி உரிமையை, மாண்புரிமையை, ஏனைய அடிப்படை உரிமைகளைப் பேச முடியும்?

மனித உரிமை என்ற கோட்பாட்டை வளர்த்தெடுக்க ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள், எண்ணிலடங்கா உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பங்களிப்பை இந்த சமூகத்திற்காக வழங்கியுள்ளார்கள். நீதித்துறையில் கூட சில நீதிபதிகள் மீது லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதைத் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது. அதற்காக 'நீதித்துறை' என்ற அமைப்பையே ஒழித்து விட வேண்டுமா ? இதே போன்று ஐனநாயக அமைப்பில் மக்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சில அமைச்சர் பெருமக்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு பதவி விலகுகிறார்கள் அதற்காக அரசியல் அமைப்பையே ஒழித்து விட வேண்டுமா?

இந்த தேசத்தில் நடைபெறும் காவல்துறை அத்துமீறல்களை எதிர்த்துப் பேசும்போது மனித உரிமைகள் என்ற வார்த்தையைப் பேசாமல் எப்படி போராடுவது என்று தெரியவில்லை. தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மனித உரிமைக் காப்பாளர்கள் மீதான தாக்குதலுக்குப் பிறகு அரசின் அமைப்புகளுக்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நமது உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பல்வேறு வகையான உரிமைகளை மனித உரிமைகள் என்ற பதத்தின் கீழ்தான் வகைப்படுத்தியுள்ளது. நுகர்வேர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாவட்ட நுகர்வோர் ஆணையம், மாநில நுகர்வோர் ஆணையம், தேசிய நுகர்வோர் ஆணையம் போன்ற சில அமைப்புகள் அதே போன்ற பெயர்களை ஏற்படுத்தி தவறாக செயல்படுவதாக புகார் எழுந்தது. அதற்காக உண்மையாக நுகர்வோர் உரிமைகள் பற்றிப் பேசிய, அந்த உரிமைகளை நாடெங்கிலும் கொண்டு சென்ற நுகர்வோர் அமைப்புகளை தடை செய்து இருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று இச்சமயத்தில் சிந்திப்பது நன்று.

உலகளவில் மனித உரிமைகள் சார்ந்து, அதன் கோட்பாடுகள் வளர்ச்சியடைந்த பின்பு இந்திய அரசும் 1993-ம் ஆண்டு மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கியது. இந்த சட்டத்திலும் மனித உரிமைகள் கோட்பாடு வரையறுக்கப்பட்டுள்ளது. 'மாநில மனித உரிமைகள் ஆணையம்' என்று கர்நாடகாவில் செயல்பட்டு வந்த ஒரு தனியார் அமைப்பை நடத்திய நபர் ஒருவரை கர்நாடக அரசின் காவல்துறை சில ஆண்டுகளுக்கு முன்பு கைது செய்தது. இது போன்று தவறு செய்யும் நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

அரசின் எதேச்சதிகார போக்கினை, மனித உரிமை மீறல்களை தட்டிக் கேட்கும் மனித உரிமைகள் அமைப்புகளை கண்மூடித்தனமாக ஒழித்துவிட முயல்வது என்பதும், மனித உரிமைகள் என்ற வார்த்தையை பயன்படுத்தத் தடை செய்வதும் ஏற்புடையதல்ல! 1948-ல் ஐக்கிய நாடுகள் உருவாக்கப்பட்ட போது ஏற்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் கூட 'மனித உரிமைகள்' என்ற வார்த்தையுடன்தான் இணைந்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்த்தில் சொல்லப்பட்டுள்ள அனைத்து மனிதனின் அடிப்படை உரிமைகளையும் செயல்படுத்த பல்வேறு அரசு சாராத தன்னார்வ அமைப்புகள் சிறந்த பணிகளை செய்து வரும் சூழலில், களையைப் பிடுங்கி எறிய வேண்டுமே தவிர நெற்பயிரை அல்ல! எனவே, 'மனித உரிமை' என்ற வார்த்தை எல்லோருக்கும் பொதுவானதாகும், அதனை அனைவரும் பயன்படுத்துவது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை மனித உரிமை.

- இரா.கருணாநிதி, வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்