இந்தியாவின் மிக முக்கியமான வாழ்வாதாரங்களில் ஒன்றான வன நிர்வாகத்தை பின்னோக்கி நகர்த்துகின்ற நிகழ்வுகள், திரைக்குப் பின்னால் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. தொழிற் முன்னேற்றத்திற்கு உதவுவது என்ற பெயரில், வெளிப்படைத் தன்மையற்ற, ஊழலில் திளைத்துள்ள அதிகார வர்க்கத்தை மேலும் அதிகாரப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது. நாட்டின் 23% நிலப்பரப்பை, சில அதிகாரிகளின் தங்கு தடையற்ற கட்டுப்பாட்டிற்குள் ஒப்படைப்பதை நியாயப்படுத்துகிறது. இது, மேலும் அதிக மோதல்களுக்கும், காலம் தாழ்த்துதல்களுக்கும், ஊழல்களுக்கும் இயல்பாகவே வழி வகுக்கும்.

tribes150 ஆண்டுகளுக்கு முன்னால் நாட்டின் வனத்தின் மீதான கட்டுப்பாட்டை பிரிட்டிஷ் அரசாங்கம் கைப்பற்றியது. இன்று வனத்தை நிர்வகிக்கும் சட்டமான வனச்சட்டம், 87 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது. அச்சட்டம் அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் அடங்கிய லைசன்ஸ் ராஜ்ஜியத்தை, ஊழல் மலிந்த கண்காணி மற்றும் காவல் துறையின் ஆட்சியதிகாரத்தை நிறுவியது. அவ்வகையில் 1927இல் வெள்ளையர் கொண்டுவந்த வனச் சட்டம் இன்றும் கோலோச்சுகிறது

இன்றைய பா.ஜ.க அரசாங்கம், மன்மோகன் சிங் ஆட்சியைப் போல, ராஜஸ்தான் அரசாங்கம் திட்டமிட்டுள்ள நில கையகப்படுத்தல் போன்று மீண்டும் காலனிய ஆட்சிக்காலத்திற்கு காலகடிகாரத்தின் முள்ளை பின்னுக்குத் தள்ள முனைகிறது. ஏற்கனவே ஓட்டாண்டிகளாக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்கள் மேலும் கொடுமைகளுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நூற்றாண்டில் வனச் சட்டத்தில் ஏற்பட்ட உண்மையான சீர்திருத்தமான வன உரிமைச் சட்டத்தை, மேலும் “சீர்திருத்தங்கள்” என்னும் பெயரில் சீர்குலைக்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதற்கான பின்னணியை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் ”வன உரிமைச் சட்டம்” என்பது என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

திட்டமிட்டுள்ள நில கையகப்படுத்தல் பற்றி சட்டம் என்ன சொல்கிறது?

வன (பாதுகாப்புச்) சட்டத்தின்படி மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் வன நிலங்கள் வனம் சாராத பயன்பாட்டிற்கு மாற்றலாகாது. வன உரிமைச் சட்டம் அமலாக்குவதற்கு முன்பு, வன நிர்வாகம் தில்லியில் அமர்ந்துகொண்டு முடிவெடுக்கும் எட்டு பத்து அலுவலர்களின் முழு அதிகாரத்தின் கீழ் இருந்தது. இதற்கு மாறாக, வன உரிமைச் சட்டம் இரண்டு முன் நிபந்தனைகளை வைத்தது. இது உச்ச நீதி மன்றத்தால் வேதாந்தா வழக்கில் மேலும் உறுதிப் படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

அதாவது:

• மக்களுடைய உரிமைகள் முதலில் பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வுரிமைகள் பாதிக்கப்படுகின்ற பகுதிகளில் உள்ள மக்கள் மன்றங்களால் (கிராம சபைகளால்), உறுதிப் படுத்தப்படவும் வேண்டும்.

• சம்மந்தப்பட்ட கிராம சபைகளின் அறிவார்ந்த ஒப்புதல் இல்லாமல் வன நிலங்கள் வனம் சாராத பயன்பாட்டிற்கு மாற்றலாகாது.

அரசாங்கம் செய்ய முனைவது என்ன?

முந்தைய ஐக்கிய முன்னணி அரசோ, தற்போதைய தேசிய ஜனநாயக அரசோ வன உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் முழுமையான அக்கறை காட்டவில்லை. வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு, மத்திய மாநில அரசுகள், குறிப்பாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன நிலங்களை தாரைவார்க்க முற்படுகின்றபோது இச்சட்டத்தை வளைப்பதில் முனைப்பு காட்டி வருகின்றன. (கீழே தரப்பட்டுள்ள கால அட்டவணை இதை பறை சாற்றும்)

திட்டங்கள் அமலாக்கப்படும் பகுதிகளில் மக்கள் யாரும் குடியிருக்கவே இல்லை என்று நாடகமாடி திட்டங்களை மக்கள் மீது திணித்துவிட்டு, அத்திட்டங்களை எதிர்த்து மக்கள் போராடுவதையும் நீதிக்காக வழக்காடு மன்றங்களை நாடுவதையும் வியப்பான செய்தியாக பார்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் திட்டங்கள் அமல்படுத்துவதற்கு கால தாமதமாகிறது என்றோ தடுக்கப்படுகிறது என்றோ புலம்புவதில் என்ன பயன் இருக்கிறது? பொது புத்தியைத் தாண்டி, பா.ஜ.க அரசாங்கம் செய்ய எத்தனிக்கும் முயற்சிகளை கீழ்கண்டவாறு பட்டியலிடலாம்.

முன்மொழியப்படும் மாற்றங்கள் தற்போதைய நிலை சட்டத்திற்கு உட்பட்டதா, இல்லையா? யாருக்கு இலாபம்?

நவம்பர் 2012இல் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் துணைச் செயலாளராக இருந்த புலோக் சாட்டர்ஜி சமர்பித்த அறிக்கை மறுசுற்றுக்கு விடப்பட்டுள்ளது. இவ்வறிக்கை வன நிலங்களை பிற தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வதற்கு கிராம சபைகளுக்கு உள்ள உரிமையைக் கடந்து செல்ல பரிந்துரைத்துள்ளது. சட்ட அமைச்சகத்திடமிருந்து இதற்கான இசைவைப் பெற காத்திருக்கிறார்கள். இச்செயல் வேதாந்தா வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு எதிரானது. வன உரிமைச் சட்டம் பகுதி 5 மற்றும் 6(1) க்கு எதிரானது. மத்திய வன அதிகாரிகள் தங்களுக்குள்ள வானளாவிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவர். சம்மந்தப்பட்ட மக்களின் கருத்து கேட்காமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வன நிலம் தாரைவார்க்கப்படும்.

கனிம வளங்களைக் கண்டறியும் நடவடிக்கைக்கு வன உரிமைச் சட்டத்திலிருந்து விலக்கு ஜூலை 4ம் தேதி அறிவிக்கப்பட்டது. பழங்குடிகள் நலவாழ்வு அமைச்சரகம் மார்ச் 7ம் தேதியிட்டு விடுத்துள்ள கடிதம், இந்நடவடிக்கைக்கு சட்டத்திலிருந்து விலக்கு அளிக்க முடியாது என்று கூறிய பிறகும் மேற்கொள்ளப்படும் இம்முயற்சி சட்டத்திற்குப் புறம்பானது.

வன அதிகாரிகளை மட்டுமே கொண்ட, மத்திய அதிகாரக் குழுவின் பரிந்துரைப்படி, வன உரிமைச் சட்டத்தின் கீழ் ஒப்புதல் பெறாமலே முதற்கட்டத்திலேயே “கோட்பாட்டளவில் வனத்தை மாற்றி பயன்படுத்துவதற்கான அனுமதியை வழங்கலாம் என்று கூறியிருப்பதை மத்திய அரசாங்கம் ஏற்றுள்ளது. நீதிமன்றத்தில் சட்டம் தமக்கு ஏற்புடையது இல்லை என்ற காரணத்தால் அதிலிருந்து விலக்கு கோருவது சட்டத்திற்கு விரோதமானது.

மகாராட்டிர அரசாங்கமும் மத்திய அரசும் பழங்குடி மக்களின் “நல்வாழ்வை” அண்மைக்காலமாக அழித்து வருவதற்கான சான்று: பழங்குடி கிராமங்கள் அவர்களுக்குச் சொந்தமான மூங்கில்களை கூட்டாக அறுவடை செய்து பணத்தை ஈட்டுகின்றன. மாநில அரசு வனத்துறை வன மரங்கள் அல்லாத வன உற்பத்திப் பொருட்களை வன அதிகாரிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென விதிமுறைகளை இடுகின்றனர். இது சட்ட விரோதமானது என்று பழங்குடிகள்துறை அமைச்சகம் கூறிய பிறகும், பழங்குடி மக்களுக்கு எதிராக நிதின் கட்கரியும் பிரகாஷ் ஜாவ்டேகரும் களத்தில் இறங்கியுள்ளனர். இந்த விதிமுறைகளை நிறுவ ஏராளமான நிர்பந்தங்களை எற்படுத்தி வருகின்றனர். இது வன உரிமைச் சட்டம் பகுதி 3(1)(C) மற்றும் பகுதி 5க்கு எதிரானது.

பஞ்சாயத்து ராஜ் சட்ட அமைச்சரவை மாநில அரசுகள் வன சிறு மகசூல் உற்பத்திக்கான அதிகாரத்தை வன அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள JFM கமிட்டிகளுக்கு ஒப்படைக்க வேண்டுமென சுற்றறிக்கை விடுத்துள்ளது. அறிக்கை விடப்பட்ட நாள் ஜூலை 31. JFM கமிட்டிகள் வனத் துறையின் அங்கம். வன உரிமை அவர்களுக்கு சொந்தமானது அல்ல;

வன உரிமைச் சட்டம் என்பது என்ன?

பிரிட்டிஷ் அரசாங்கத்தால் நூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்ட வனச் சட்டம்தான் இன்றும் அமலில் உள்ளது.

• வனச் சட்டங்களின் நோக்கம்: பிரிட்டிஷாருக்கும் அவர்தம் அடிவருடிகளுக்கும் வனத்தில் விளையும் மரங்கள் மற்றும் பிற ஆதாரங்களைத் திரட்டுவதற்கு எளிதாக வழிவகுப்பது.

• மேற்கொண்ட முறை: பரந்த வனப் பகுதியை அரசு நிலம் என்று அறிவிப்பது. அப்பகுதியை அலுவலர்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வருவது; வனத்தின் பிற பயன்பாடுகளை தடைசெய்வது; அப்பகுதியில் உள்ள எல்லோரையும் வெளியேற்றுவது;

• தற்போதுள்ள முழு நில பரப்பில் 23% வனம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நில பரப்பை பயன்படுத்தி, வாழ்ந்த பல கோடி மக்களின் கதி என்ன? இத்தகையவர்களை வெளியேற்றுவதுதான் வன சட்டங்களின் நோக்கமே. ”செட்டில்மண்ட் (Settlement) அதிகாரி” என்பதன் தலையாய பணியே வனம் சார்ந்த மக்களின் நிலத்தை கையகப்படுத்தி அவர்களை அந்நிலத்தைவிட்டு வெளியேற்றுவதே. வனம் பிற வகையில் பயன்படுத்தப்படுகிறது என்றால் அது அதிகாரிகள் காட்டும் ”சலுகை”. அச்சலுகை எப்பொழுது வேண்டுமானாலும் திரும்பப் பெறப்படலாம்.

• நடந்தது என்ன? இத்தகைய “செட்டில்மண்ட்” கூட நிறைவேற்றப்பட வில்லை. 2003 இல் மத்திய பிரதேச அரசாங்கம் தம் மாநிலத்தை சேர்ந்த 82.9% வனப்பகுதியில் இந்த “செட்டில்மண்ட்” நிறைவேற்றப்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளது. 2005 வரை ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த 40% வனப்பகுதியின் நிலையும் இதுவே. தேசிய பூங்காக்களில் 60%, சரணாலயங்களில் 62% இதே நிலைதான். ஏறக்குறைய 15 கோடி முதல் 25 கோடி மக்கள் தம் வாழ்வாதாரத்திற்காக, பயிர் விளைவிப்பதற்கும், வனம் சார்ந்த பிற உற்பத்திப் பொருட்களை திரட்டவும், நீர் நிலைகளைப் பயன்படுத்தவும், இன்ன பிற வகையிலும் வனத்தைச் சார்ந்திருக்கிறார்கள். இவையாவும் மாபெரும் குற்றமாகப் பார்க்கப்பட்டு, வன அதிகாரிகளுக்கு கையூட்டு கொடுத்து வாழ வேண்டிய அவல நிலையில் வனவாசிகள் உள்ளனர்.

இதன் காரணத்தால்தான் பழங்குடியினரும் இன்னும் பிற வனவாசிகளும் மிகவும் வறியவர்களாக உழல்கின்றனர்.

இது போக, குடிமக்கள் வனம் மீதான தங்கள் மேலாண்மையை இழந்து நிற்கின்றனர். இன்று, அறிவிக்கப்பட்ட வனப்பகுதியில் நாம் ஒரு மரத்தை நடுவுமேயானால் நாம் குற்றம் இழைத்தவர்களாவோம். இந்திய நிலப் பரப்பில் நான்கில் ஒரு பகுதி ஊழல் மலிந்த, வெளிப்படைத் தன்மையற்ற அதிகார வகுப்பின் வசம் உள்ளது. ஒரிசாவைச் சேர்ந்த 10000 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், அதேபோல் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக் கணக்கான கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வனத்தை பாதுகாத்து வருகின்றனர். ஆனால், சட்டத்தின் முன், இவர்கள் அனைவரும் குற்றவாளிகள்!

வன உரிமைச் சட்டம் சொல்வது என்ன?

பழங்குடிகள் மற்றும் பழங்குடிகள் அல்லாத, வனம் சார்ந்த சமூகங்களின் உரிமைகளை அரசாங்கம் பதிவு செய்ய வேண்டுமென வன உரிமைச் சட்டம் கூறுகிறது. உரிமை என்பதில் வனம் சார்ந்த நிலத்தில் மேற்கொள்ளப்படும் உழவு, மரங்கள் நீங்கலாக பிற வன உற்பத்திப் பொருட்களை திரட்டுவது, மற்றும் நீர் நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வது போன்றவை அடங்கும். கடந்த 150 ஆண்டுகளாக வனப் பகுதிகளில் எவ்வித ஜனநாயகமும் இல்லை. வன அதிகாரிகளின் ராஜ்ஜியம்தான் கோலோச்சுகிறது. அதனால்தான் வன உரிமைச் சட்டம் கூறுகிறது:

• வனம் மீதான உரிமை வனத்தில் குடியிருக்கும் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் கிராம சபைகளின் பார்வைக்கு வைக்கப்பட‌ வேண்டும். கிராம சபைகளில் கோரப்பட்ட உரிமை மற்றும் அதிகாரம் பற்றிய பட்டியல் இரண்டு உயர் கமிட்டியின் பார்வைக்கு அனுப்பப்படும். அந்த கமிட்டி உறுப்பினர்களில் பாதி பேர் பஞ்சாயத்துப் பிரதிநிதிகளாகவும், பாதி பேர் அதிகாரிகளைக் கொண்டதாகவும் அமையும்.

• வனத்தை பாதுகாப்பதற்கும், மேலாண்மைச் செய்வதற்குமான அதிகாரம் அலுவலகத்திற்கு மாத்திரமல்ல; அனைத்து மக்களுக்கும் உண்டு.

சமூகங்களின் உரிமைகள் என்பவை என்ன?

சிலருக்கு சமூகங்களின் உரிமைகள் என்பது பற்றி குழப்பங்கள் உண்டு. சாதிய சமூகங்களுக்கும் இதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வனத்தில் வாழும் சமூகங்கள் தம் வாழ்வாதாரங்களுக்காக வனப்பகுதியை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. இச்சமூகங்கள் மரங்கள் நீங்கலாக வன உற்பத்திப் பொருட்கள், மேய்ச்சல் நிலங்கள், நீர் நிலைகள், மிக முக்கியமாக, வனப்பகுதிகளை காப்பதிலும் பேணுவதிலும் கூட்டாக ஈடுபடுகின்றன. ஆகவே, இச் செயற்பாடுகள் உரிமைகளாக அச்சமூகத்திற்கே/ கிராமத்திற்கே வழங்கப்படுகின்றன; தனி நபர்களுக்கு அல்ல.

கிராம சபையின் ஒப்புதல்: செயல்பாட்டில் பொறுப்பும் வெளிப்படைத் தன்மையும்

வனங்களை அதிகார வர்க்கத்தின் முழு கட்டுப்பாட்டில் கொடுத்துவிட்டு, வனத்தை அழிக்க வழிவகுத்துவிட்டு, வன உரிமையை அங்கீகரிக்கிறோம் என்ற கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. கும்பனிகளாலும் அதிகாரிகளாலும் பாதிக்கப்படும் மக்களுக்கு அப்பாதிப்புகளை வெளிப்படுத்துவது என்பதே வெளிப்படைத் தன்மை கொண்ட செயலாகும். இதன் மூலம் இயற்கை வளங்களை கையாள்வதில் தற்போது தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் அதிகார-கார்ப்பரேட்-அரசியல்வாதிகளின் கூட்டிற்கு வரலாற்றில் முதன் முறையாக சவால் விடுக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

இக்காரணத்தால்தான், கிராம சபைகளின் முன்பு எல்லா கேள்விகளையும் அவர்களுடைய முனைப்பான ஒப்புதலுக்கு வைக்காவிட்டால் வேதாந்தா கேட்கும் கனிமவளச் சுரங்கம் கிடைக்காது என்று உச்ச நீதிமன்றம் உரைத்தது.

ஆனால், கிராம சபைகளுக்கு அனைத்து அதிகாரத்தையும் வழங்கிவிட்டால் “வளர்ச்சிக்கு” இது தடையாகாதா?

மக்களின் ஒப்புதலைப் பெறுவது என்கின்ற பெயரில் நடப்பதெல்லாம் இவ்வளவுதான்: வளர்ச்சித் திட்டங்களை முன் வைக்கும் கும்பனிகளும், அரசு நிர்வாகங்களும், அதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்குவோம் என்று பொது அரங்கில் கூறுவதோடு சரி. வனத்தில் வாழுவோர் மிகவும் விளிம்பு நிலையில் இருக்கும் ஏழை எளிய மக்கள். வளர்ச்சித் திட்டங்கள் அவர்களுடைய வாழ்வில் உண்மையில் முன்னேற்றத்தைத் தருமென்றால் அத்திட்டங்களை அவர்கள் ஏன் எதிர்க்கப் போகிறார்கள்?

தன்னார்வக் குழுக்களும் பிறரும் மக்களை ”தவறாக வழி நடத்திவிடுவார்கள்” என்ற அச்சத்தை அரசு தெரிவிக்கிறது. ஆனால், கார்ப்பரேட் கும்பனிகளுக்கும், அரசு நிர்வாகத்திற்கும் இருக்கும் ஏராளமான வசதி வாய்ப்புகளைக் கொண்டு அவர்களுடைய திட்டங்களை அவர்களுடைய பார்வையில் மக்களிடம் விளக்கிச் சொல்ல முடியும். பழங்குடிகளின் அமைச்சர் ஒருவர் கூறியது போல “மக்கள் நல்வாழ்விற்காக நடைமுறைப் படுத்தப்படும் வளத் திட்டங்களை வனத்தில் வாழுவோர் எதிர்ப்பார்கள் என்று கூற காரணமில்லை” மாறாக, அவை மக்கள் நலனிற்கான திட்டங்கள் அல்ல என்பது அரசுக்குத் தெரிந்திருந்தும் அத்திட்டங்கள் மக்கள் மீது முரட்டுத்தனமாக திணிக்கப்பட்டால் மட்டுமே வனத்தில் வாழுவோர் அத்திட்டங்களை எதிர்ப்பார்கள்.

நன்றி: Campaign for Survival and Democracy

தமிழில்: பொன்.சந்திரன்