கடந்த நவம்பர் 24ம் தேதி, மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் கேரள மாநில காவல்துறையின் ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர் தியாகராஜன் என்பவர், முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, சிறையில் இருக்கும் பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலத்தை வழக்கு விசாரணையின் போது, உள்ளது உள்ளபடியே, தன்னால் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்று ஊடகங்களின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில், பேரறிவாளன் மரண தண்டனை தீர்ப்பிடப்பட்டு தற்போது சிறையில் இருக்கும் கைதி என்பதாலும், முன்னாள் பிரதமர் கொலை வழக்கு தொடர்புடைய செய்தி என்பதாலும் தியாகராஜனின் இந்த பேட்டியானது, நீதித்துறையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இப்படியாக காலம் கடந்து வெளிவரும் செய்திகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் ஏற்கனவே முடிந்து போன அல்லது அமலிலுள்ள வழக்கின் நிலை என்ன என்று பார்த்தோமானால், நமது நாட்டில் குற்றவியல் வழக்கினைப் பொருத்த வரையிலும் வழக்கு தொடர காலக்கெடு எதுவும் இல்லை. எத்தனை ஆண்டுகள் கழித்து கிடைத்தாலும், கிடைக்கும் ஆவணத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்படும். அப்படி பல ஆண்டுகள் கழித்து மீண்டும் உயிர் கொடுக்கப்பட்ட வழக்குகளில் சிலவற்றைக் காண்போம்.

கடந்த 18.02.1970 அன்று கேரளாவில் பொதுவுடைமை கட்சியைச் (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) சேர்ந்த தோழர். வர்கீஸ் என்பவர் காவல்துறையுடனான மோதலின் போது இறந்து போனார் என்று அறிவிக்கப்பட்டு அந்த குற்றவழக்கு அப்படியே முடிக்கப்பட்டது. அவர் இறந்துபோன சுமார் 28 ஆண்டுகாலம் கழித்து, கடந்த 1998ம் ஆண்டு இராமச்சந்திரன் நாயர் எனும் காவலர், தோழர். வர்கீஸ் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்; நான்தான் அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றேன்; அப்படிச் சுடவில்லை என்றால் என்னை சுட்டுக் கொன்று விடுவோம் என்று அப்போதைய காவல்துறை துணை கண்காணிப்பாளர் லக்ஷ்மணா மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் விஜயன் ஆகியோர் மிரட்டினார்கள்; அதற்குப் பயந்து நான் அவரை சுட்டுக் கொன்றேன் என்று ஊடகங்களுக்கு செய்தி கொடுத்தார். இந்தக் கொலை தொடர்பாக தனக்கு ஏற்பட்ட குற்ற உணர்வின் காரணமாகவே, தான் இந்தச் செய்தியை மறைக்க முடியாமல் தற்போது வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். பெரும் விவாதத்திற்குள்ளான இந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் மீண்டும் வழக்கு பதிவு செய்து குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பல்வேறு பொது நல வழக்குகள் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, அந்த நிகழ்வு தொடர்பாக, புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டு மீண்டும் விசாரணை செய்து, காவலர் இராமச்சந்திரன் நாயரின் ஒப்புதல் வாக்குமூலம் நிரூபிக்கப்பட்டு கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலத்தின் ஓய்வு பெற்ற காவல்துறை தலைவர் லக்ஷ்மணாவிற்கு “போலி” மோதல் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

அதே போல கேரள மாநிலத்தின், இந்திய பொதுவுடமைக் (மார்க்சிஸ்ட்) கட்சியின் இடுக்கி மாவட்டச் செயலாளர் எம்.எம். மணி என்பவர், கடந்த 2012ம் ஆண்டு மே மாதம், ஒரு பொதுகூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தங்களின் கட்சி வளர்ச்சிக்காக 1980களில் இடுக்கி மாவட்டத்தில் நான்குபேரை கொலை செய்தோம் என்று அவராகவே, பகிரங்கமாக அறிவிப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து, அவர் கூறிய அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர்மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன‌.

இந்த இரு வழக்குகளிலும் காலம் கடந்து உண்மை வெளிவந்து அதன் அடிப்படையில் அந்த வழக்குகள் புதிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், அந்த இரு வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் இறந்து விட்டார்கள். ஆனால், பேரறிவாளன் வழக்கினைப் பொருத்த வரையிலும், அவர் தற்போது உயிருடன் சிறைக் கொட்டகையில் இருக்கிறார் என்பது கவனிக்க வேண்டிய செய்தி.

இந்நிலையில் மேற்கண்டவாறு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி தியாகராஜன் அளித்துள்ள செய்தினை அடிப்படையாகக் கொண்டு, கடந்த இருபத்தி மூன்று ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு மிகப்பெரும் இழப்பீடு தொகை வழங்கப்பட்டு, விடுதலை செய்யப்பட வேண்டும். அதுவே, சட்டத்தின் ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டின் நியாயமான செயலாக இருக்கமுடியும்.

மேலும் ஒரு வழக்கில், எனது கட்சிக்காரர் செல்வராஜ் என்பவர், கடந்த 1988ம் ஆண்டு செல்வராஜ் என்ற பெயர் கொண்ட ஒருவர் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு குற்ற வழக்கிற்காக, இவரது பெயரும் தந்தை பெயரும் ஒன்றாக இருந்த ஒரே காரணத்திற்காக, 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். தனக்கும் அந்த வழக்கிற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று அவர் எவ்வளவோ மன்றாடிய போதும், அவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு பதினோரு நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் வெளிவந்தார். இதற்கிடையில் செல்வராஜ் சிறைக்குச் சென்றவர் என்பதால், அவர் நடத்தி வந்த வாடகைக் கடை அவரிடம் இருந்து கடை உரிமையாளரால் பறிக்கப்பட்டது. அவரது ஊரில் அவருக்கு வாடகைக்கு கடை கொடுக்க எந்த உரிமையாளரும் முன்வரவும் இல்லை. அதன் பிறகு தனக்கும் அந்த குறிப்பிட்ட வழக்கிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை என்பதை நிரூபித்து கடந்த 2007ம் ஆண்டு மதுரை உயர் நீதிமன்றத்தால் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிப்பு செய்யப்பட்டார். தவறுதலாக கைது செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் ரூ.10,000 அபராதம் விதித்து அவருக்கு இழப்பீடாக கொடுக்க உத்தரவிட்டது. அந்த அபராதப் பணம் இன்றளவும் அவருக்கு வழங்கப்படவில்லை என்பது வேறு கதை.

ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரிகள் இராமச்சந்திர நாயர் மற்றும் தியாகராஜன் ஆகியோர் தங்களுக்கு கிடைக்கப் போகும் சட்டப்படியான தண்டனைகளைக் குறித்து ஐயம் கொள்ளாமல், தங்களது மனசாட்சிக்குப் பயந்து காலம் கடந்தேனும் உண்மையைக் கூறியுள்ளார்கள். செல்வராஜ் மற்றும் பேரறிவாளன் வழக்குகளில் காலம் கடந்தேனும் தற்போது அவர்கள் உயிருடன் உள்ளபோதே அவர்கள் குற்றமற்றவர்கள் என தெளிவாகிவிட்டது. அது உறுதி செயப்படும் பட்சத்தில் அதன் பலனை அவர்களால் அனுபவிக்கவும் முடியும். இதேபோல இன்னமும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் வாடிவரும் எவரொருவரது உயிரும் சட்டப்படி பறிக்கப்பட்டு அதன்பிறகு அவர்கள் குறித்தும், இதுபோல ஆவணங்கள் வெளிவந்தால் அப்போது அதன் பலனை அனுபவிக்க அவர்கள் இருக்கப் போவதில்லை.

ஆகவே, இது போன்ற வழக்குகளை முன்மாதிரியாகக் கொண்டு, இனியேனும் மரண தண்டனையை சட்டப்படியாக ஒழித்த நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும்.

எவ்வளவு கடுமையான குற்றம் செய்திருந்தாலும், பார்ப்பனர்களுக்கு மட்டும் மரண தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட வேண்டும் என்று இந்திய தண்டனைச் சட்டம் அமலுக்கு வந்த பின்னரும்கூட, 19ம் நூற்றாண்டின் இறுதி வரையிலும், மனுதர்மத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளித்த நாடு இது. எவ்விதமான அடிப்படை முகாந்திரமுமில்லாமல் வழங்கப்பட்ட அந்த விதிவிலக்கானது, நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதே, உயிர்நேயம் கொண்ட அனைவரது நியாயமான எதிர்பார்ப்பாக இருக்கிறது. இயற்கை நீதியின்பாற்பட்ட அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)