‘பூமிப் பந்து, முழுவதிலும் அமைதி ஏற்பட வேண்டும்! போரற்ற புது உலகம் பூக்க வேண்டும்! ஆயுதங்களுக்குத் தடை போட வேண்டும்! ஆயுதங்கள் உற்பத்தி செய்வதை அடியோடு நிறுத்த வேண்டும்! ஆயுதமற்ற சமுதாயம் அவணியில் மலர வேண்டும்! - என்றெல்லாம் எண்ணித் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் அருமைப் பெண்மணி ‘ஆல்வா மைர்டல்!!

               alv myrdal ‘ஆல்வா, பெண்விடுதலைக்காகவும், பெண்களின் உரிமைக்காகவும், பெண்களின் சமுத்துவத்திற்காகவும் மிகத் தீவிரமாகப் பாடுபட்டார்.

                ‘ஆல்வா மைர்டல் - ஸ்வீடன் நாட்டிலுள்ள உப்சலா என்னுமிடத்தில் 1902 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் தேதி பிறந்தார். இவர் தமது பட்டப்படிப்பைப் பல்கலைக் கழகத்தில் 1924 ஆம் ஆண்டு முடித்தார். இவர் கன்னர் மைர்டல் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார்.

                இவரும், இவரது கணவரும் இணைந்து ஸ்வீடன் நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் கடுமையாக உழைத்தனர்.

                இவர் தமது கணவருடன் இணைந்து ‘மக்கள் தொகைப் பெருக்கத்தால் ஏற்படும் நெருக்கடிக்கள் (The population problem in crisis) என்ற நூலை எழுதி இருவரும் வெளியிட்டனர். குடியிருப்புகள் மற்றும் பள்ளிகளின் பிரச்சனைகள் குறித்து ஆராய்ந்து, அவற்றில் உள்ள குறைபாடுகளை எப்படிக் களைவது என்பதை அறிக்கையாகவும் வெளியிட்டனர்.

                சுவீடன் நாட்டின், ‘சமத்துவ ஜனநாயகக் கட்சியின் (Social Democratic party) மிக முக்கிய அங்கத்தினராக இணைந்து செயல்பட்டார். போர்முடிந்த, 1943 ஆம் ஆண்டுக்குப் பிறகு, கட்சியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்த முக்கியமான பணியை இவரிடம் கட்சி அளித்தது. யுத்தத்திற்குப் பின்னர் சர்வதேச சீரமைப்புப் பணிகள் மற்றும் உதவிகள் செய்வதற்கான குழுவின் தலைவராக அரசு இவரை நியமித்தது. 

                இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு தமது நேரத்தையும், உழைப்பையும் சர்வதேசப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக ஒதுக்கினார். ‘ஐக்கிய நாடுகள் அமைப்பின் – (UNO) சமூக நலக்கொள்கை வகுப்பதற்கான பிரிவில் இரண்டாண்டுகள் தலைமைப் பதவி வகித்து சிறப்பாகப் பணியாற்றனார். பின்னர் யூனஸ்கோவில் சமூக அறிவியல் பிரிவின் தலைவராக 1950 முதல் 1955 வரை அய்ந்தாண்டுகள் பணியாற்றினார்.

                ஸ்வீடன் நாட்டின் தூதராக இந்தியாவில் 1955-ல் நியமனம் செய்யப்பட்டார். மேலும் ஸ்வீடன் நாட்டின் பிரதிநிதியாக ஜெனிவாவில் 1962ஆம் ஆண்டு நடைபெற்ற ஆயுத ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டார். ஸ்வீடன் நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினராக ஆல்வா 1962 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                ஸ்வீடன் நாட்டின் அமைச்சரவையில் 1966 ஆம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சராகப் பணிபுரிந்தார். ஆயுத ஒழிப்பைத் தமது முக்கியக் கடைமையாகக் கருதினார். ஜெனிவாவின் ஆயுத ஒழிப்புக் கமிட்டியில் 1973 ஆம் ஆண்டு வரை அங்கம் வகித்தார். மேலும் ஐக்கிய குடியரசு நாடுகளின் அரசியல் கமிட்டியில் உறுப்பினராக இடம் பெற்றார். ஆயுதப் பரவலைத் தடுப்பதற்கும், ஆயுத ஒழிப்பிற்கும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

                ஜெனிவாவில் நடைபெற்ற ஆயுதக் குறைப்புக் குறித்து பேச்சு வார்த்தை விபரங்களைத் தொகுத்து ‘ஆயுதக் குறைப்பு விளையாட்டு (The game of disarmament) என்ற நூலை வெளியிட்டார். அந்நூலில் ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்ட பிறகும் அமெரிக்காவும் சோவியத் இரஷ்யாவும் ஆயுதங்கள் உற்பத்தி செய்வதைக் கண்டித்து எழுதினார். ஆயுதத் குறைப்பு சம்பந்தமாக வெளிவந்த நூல்களில் இதுவே சிறந்த நூலாகக் கருதப்படுகிறது.

                அணிசேரா நாடுகளின் தலைவராக இருந்து, வல்லரசு நாடுகளாக விளங்கிய அமெரிக்கா மற்றும் சோவியத் இரஷ்யா ஆகிய நாடுகள் தங்களின் ஆயுத உற்பத்தியை நிறுத்த வேண்டும் என குரல் கொடுத்தார். ஆயுதக் குறைப்புப் பேச்சுவார்த்தைக்கப் பிறகு பல அறிஞர்களைச் சந்தித்துப் பேசினார், அதன் அடிப்படையில் அறிவியல் நீதியாகவும், தொழில் நுட்பம் மூலமாகவும் ஆயுதப் பரவல் மற்றும் உற்பத்தியை எப்படித்தடுப்பது என்பதை அறிந்து உலகிற்கு அறிவித்தார். ஆயுதக் குறைப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக அறிஞர்களையும் அணிதிரட்டினார். மேலும் ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International peace Research Institute) என்ற அமைப்பு உருவாக முக்கியமான பங்காற்றினார். இந்த நிறுவனத்தின் மூலம் ஆயுத உற்பத்தியால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஆயுதக் குறைப்பின் அவசியம் குறித்தும் முக்கிய விவாதத்தைப் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அறிஞர்கள் மத்தியில் ஏற்படுத்தினார். ஆயுதக் குறைப்புக் குறித்து நூல்களும், இதழ்களில் கட்டுரைகளும் எழுதி வெளியிட்டார்.

                ஆல்வா, ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலகத்தில் பணியாற்றிய முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 1962 முதல் 1973 வரை ஆயுதக் குறைப்புக் கமிட்டியில் அங்கம் வகித்தார்.

                அமைதிக்கானப் இவரது பணியைப் பாராட்டி பல பட்டங்களும், விருதுகளும் அளிக்கப்பட்டன. அமைதிக்கான மேற்கு ஜெர்மனியின் பரிசு 1970 ஆம் ஆண்டு இவருக்கும், இவரது கணவர் கன்னர் மைர்டலருக்கும் வழங்கப்பட்டது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அமைதிப் பரிசை 1980 ஆம் ஆண்டிலும், ஜவஹர்லால் நேரு விருதை 1981 ஆம் ஆண்டிலும் இவர் பெற்றார்.! நார்வே மக்களின் அமைதிப்பரிசும் இவருக்கே வழங்கப்பட்டது.!

                உலகில் அமைதி வேண்டி இவர் ஆற்றிய தொண்டிற்காக உலகின் மிக உயர்ந்த பரிசான ‘நோபல் பரிசு – 1982 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. நோபல் பரிசை மெக்சிகோவைச் சேர்ந்த அல்போன்சா கார்சியா ரோபலஸ் என்பவருடன் சேர்ந்து பகிர்ந்து கொண்டார்.

                “நான் பெறும் பரிசுகளைவிட, நான் மனித சமூகத்திற்குச் செய்யும் தொண்டுதான் பெரியதுஎன உலகிற்கு அறிவித்த உன்னதமான பெண்மணி ‘ஆல்வா!

‘உலக அமைதிக்காகப் போராடியஉன்னதப் பெண்மணி ஆல்வா மைர்டல்!

- பி.தயாளன்