இளம் வயதில் ஊர் சுற்றித் திரிந்தான். ஒரு முறை இவனை காவல் துறையினர் கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தினர். 'பிச்சை எடுத்து வாழ்ந்தான். பொது மக்களின் அமைதியான வாழ்வைக் குலைத்தான்' என குற்றம் சாற்றப்பட்டு ஒரு மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டான். சிறையில் கடுமையான கல்லுடைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டான்.

jack londonஆறு ஆண்டுகள் கழித்து உலகம் அவனைப் போற்றிப் புகழ்ந்தது. அவனிடம் கையெழுத்துப் பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்துக் கிடந்தனர். இலக்கிய வானிலே தோன்றிய புதிய தாரகை, சுடர் விளக்கு என்றெல்லாம் அவனை அறிஞர்களும், நாவலாசிரியர்களும், இதழாளர்களும் போற்றிப் புகழ்ந்தனர். அவன் தான் அமெரிக்க நாட்டு நாவலாசிரியர் ஜாக் லண்டன்!

அமெரிக்க நாட்டில் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில் ஜாக் லண்டன் ஃபுளோரா வெல்மேன் தம்பதியினருக்கு மகனாக 1876 ஆம் ஆண்டு சனவரி மாதம் 12 ஆம் நாள் பிறந்தான்.

பத்தொன்பது வயதுவரை பள்ளிக் கூடத்தையே எட்டிப் பார்க்கவில்லை. அவன் இளம் வயதில் ஏழ்மையிலும், வறுமையிலும் வாழ்ந்தான். சிறு வயதில் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதை வெறுத்து ஓடியவன் அவன். ஒரு நாள் அவன் எதேச்சையாக ஒரு நூல் நிலையத்திற்குள் நுழைந்தான். நூல்களைப் படிக்க அல்ல, நூல்களைப் படித்துக் கொண்டிருப்பவர்களைத் தொல்லை செய்வதற்கு. ஆனால், அவன் கண்ணில் 'ராபின்சன்' குறித்த நூல் தென்பட்டது. அதை எடுத்து ஒரே மூச்சில் படித்து முடித்தான். நூல்கள் மீது காதல் கொண்டான். நூல் நிலையத்தில் உள்ள அனைத்து நூல்களையும் ஆர்வத்துடன் படித்தான். அவன் மனதில் புதிய உற்சாகம் ஏற்பட்டது. ஓரு நாளைக்கு பதினைந்து மணிநேரம் நூலகத்தில் படித்தான்.

“இனி அறிவினால் உழைத்து உணவைத் தேடிக் கொள்ள வேண்டும்” என முடிவு செய்தான். தமது பத்தொன்பதாவது வயதில் உயர் நிலை வகுப்பில் சேர்ந்து கல்வி கற்றான். கல்வி மீது மிகுந்த ஆர்வம் கொண்டு படித்து தேர்வுகளில் முதன்மையான மாணவனாகத் தேர்ச்சி பெற்றான். மதிப்பெண்களைப் பார்த்து பல்கலைக்கழகம் அவனை உயர்கல்வி பயிலச் சேர்த்துக் கொண்டது.

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வெளியே விரட்டப்பட்டான். எந்த வேலையையும் செய்யத் தயாரானான். உணவு விடுதியில் எச்சில் தட்டுகளைக் கழுவினான். தொழிற்சாலைகளிலும், துறைமுகத்திலும் கூலி வேலை செய்து வாழ்ந்தான்.

ஆனாலும், மிகப்பெரிய எழுத்தாளனாக வர வேண்டுமென்ற கனவு கண்டான். புகழ் பெற்ற எழுத்தாளர்களின் நூல்களைத் தேடித்தேடி படித்தான். தமது கனவை நனவாக்கிட எழுத ஆரம்பித்தான். தினமும் ஐந்தாயிரம் வார்த்தைகள் வரை எழுதினான். தமது கதைகளையும், நாவல்களையும் பல இதழ்களுக்கு அனுப்பினான். அவை வெளியிடப்படாமல் அப்படியே திரும்பி வந்தன. அதனால் மனம் தளர்ந்து விடவில்லை ஜாக் லண்டன்! ஒரு நாள் திடீரென்று அவனது கதையை ஒரு இதழ் வெளியிட்டது. அவனது கதைக்கு முதல் பரிசு கிடைத்தது. அதாவது நான்கு பவுன்!

ஓரு நாள் உறுதியான முடிவுக்கு வந்தான். அதாவது "இனி கூலி செய்வது இல்லை, வாழ்க்கை முழுவதும் இலக்கியத்திற்காகவே" - இந்த முடிவை 1898 ஆம் ஆண்டு எடுத்தான். ஐந்தாண்டுகள் கழித்து 1903 ஆம் ஆண்டு ஆறு நாவல்கள், நூற்று இருபது சிறுகதைகள் எழுதினான். அவை பல இதழ்களில் வெளியாயின. பல பதிப்பகங்கள் நூல்களாக வெளியிட்டன. அதன்பின் அமெரிக்க இலக்கிய உலகில், மதிக்கப்படுபவராக, பாராட்டப்படுபவராக உயர்ந்தார் ஜாக் லண்டன்!

'கால் ஆப் தி ஒயில்ட்' (The call of the wild) என்ற புகழ் பெற்ற நாவலை எழுதினார். அந்நாவல் மூலம் நானூறு பவுன்கள் அவருக்குக் கிடைத்தது. ஆனால், பதிப்பாளர்களும், அந்நாவலை சினிமாவாக எடுத்தவர்களும் இரண்டு லட்சம் பவுன் லாபம் ஈட்டினார்கள்.

ஜாக் லண்டன் 1896 ஆம் ஆண்டு அமெரிக்க சோசலிச தொழிலாளர்கள் கட்சியில் சேர்ந்தார். சோசலிசக் கொள்கைகளை தமது உரையில் நாடெங்கும் பரப்புரை செய்தார். அவரது சோசலிசக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘வர்க்கங்களின் போர்’ (The war of the Classes), ‘புரட்சி’ (Revolution) முதலிய தொகுதிகளாக வெளியிடப்பட்டன. ‘White Fang ‘, ‘The sea wolf‘, ‘The Iron Heel‘ முதலிய புகழ் பெற்ற நாவல்களையும் படைத்தளித்தார்.

தமது நாற்பதாவது வயதில் 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22 ஆம் நாள் கலிபோர்னியாவில் மறைந்தார். ஐம்பதுக்கும் மேலான நாவல்களும், ஏராளமான சிறுகதைகளும் எழுதி உள்ளார். இளமையில் வறுமையில் வாடிய இவருக்கு இறக்கும் போது வருமானம், அமெரிக்கக் குடியரசுத் தலைவரின் ஊதியத்தைப் போல இரண்டு மடங்கு ஆகும்!

Pin It