wangari mathaai

ஏப்ரல் முதல் தேதியை ‘முட்டாள்கள் தினம்’ என்பர். வெள்ளைக்காரர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுபவருக்குமே அது முட்டாள் நாள். ஆனால், ஆப்பிரிக்கர்களுக்கும் இந்த உலகை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஏப்ரல் 1 என்பது புரட்சிக்காரர் வங்காரி மாத்தையின் பிறந்தநாள். இவர் 1940ஆம் ஆண்டு கென்யாவின் ‘இகிதி’ எனும் சிற்றூரில் பிறந்தார். மக்கள் நலம், மண்ணின் நலம் இரண்டையும் இரு கண்களாகக்கொண்டு வாழ்ந்து நிறைந்தார். சூழலியல்வாதியாக, ஆப்பிரிக்கப் பெண்கள் நலம் பேணுபவராக, மண்ணுயிர்களின் நேயராக வாழ்ந்து சிறப்புற்றதற்காக 2004ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற முதல் ஆப்பிரிக்கக் கருப்பினப் பெண் எனும் சிறப்பைப் பெற்றார்.

ஆரம்ப கால கட்டத்தில் இவர் படிப்பதற்கும் ஆய்வு செய்வதற்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் எதிர்த்தனர்; பலர் கிண்டல் செய்தனர். ஆயினும் 1971இல் கால்நடை மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவர்தாம் அன்றைய கிழக்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணியாவார். பின்னர் நைரோபி பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறைக்குத் தலைவரானார். அந்தப் பகுதியில் இப்படி ஒரு துறைக்குத் தலைவரான முதல் பெண்மணியும் இவரே.

“தலைப்பிரட்டைகளின் இல்லத்தைச் சரிசெய்து உலகின் அழகையும் விந்தைகளையும் குழந்தைகளுக்குத் திருப்பித் தருவதே நம்முன் உள்ள சவாலாகும்” என்று கூறிய அவர், 1977இல் பசுமைப்பட்டை இயக்கத்தைத் (Green Belt Movement) தொடங்கினார். இதற்காகத் தம் துறைத்தலைவர் பணியையும் துறந்தார். இந்த அமைப்பின் வழியாகத் தம்வாழ்நாளில் 12 நாடுகளில் 14 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு அடிப்படையாய் இருந்துள்ளார்.

உழவர்களை உணவுப்பயிர் பயிரிடுவதைக் கைவிட்டு பணப்பயிர்களான தேயிலை, காபி போன்றவற்றைப் பயிரிட அவர் நாட்டு அரசு தூண்டியதையும் அதன்விளைவாகப் பெரும் கானகப்பரப்பு அழிக்கப்பட்டதையும் எதிர்த்தார். காடு அழிப்புக்கு எதிராகப் போராடியமைக்காகப் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார். 1999இல் நைரோபியிலுள்ள கரூரா காட்டில் மரக்கன்று நடும் போராட்டத்தின்போது காவல்துறையினர் நடத்திய கடும் தாக்குதலால் அவர் நினைவிழக்கும் நிலைக்குச் சென்றார். 1978இல் இருந்து 2002ஆம் ஆண்டுவரை நைரோபியில் டேனியல் அரப் மோயின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றது. இதை எதிர்த்துப் போராடினார். 1980களில் கரூரா காட்டின் ஒரு பகுதியான ‘உகுரு’ (சுதந்திரம் என்பது பொருள்) பூங்காவை அழித்து டேனியல் அரசு 62 மாடிக் கட்டடத்தைக் கட்டமுயன்றது. பூங்காவைக் காப்பாற்ற, மாத்தை நூற்றுக்கணக்கானவரைத் திரட்டிப் போராட்டம் நடத்தினார். போராட்டக்காரர்கள் தடிகளாலும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளாலும் தாக்கப்பட்டனர். மாத்தையும் மற்றவர்களும் அரப் மோயின் கொலைக்களமாகக் கருதப்பட்ட பாதாளச் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் போராட்டத்தால் முதலீடு செய்யமுன்வந்த தனியார் நிறுவனங்கள் விலகின. பூங்காவும் காப்பாற்றப்பட்டது.

“சுற்றுச்சூழலை அழிக்கும் முக்கியக் கயவன் அரசாங்கமே என்பதைத் தெரிந்துகொண்டேன்” என்றார். இது நமக்கும் பொருந்துகிறது. நம் நாட்டு நீர் வளத்தை உறிஞ்சிக் குளிர்பானங்களாக விற்றுக் கொழிக்கப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதியளித்தது அரசாங்கம்தான். நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான கனஉந்துகளில் (லாரி) மணலை அள்ளிச்சென்று விற்பதற்கு இசைவளித்ததும் நம் அரசாங்கம்தான். “நமக்குத் தேவை இயற்கை வளத்தை, சுற்றுச்சூழலை அழிக்காத வளர்ச்சியே” என்றார் மாத்தை. நம் அரசாங்கமோ மீத்தேன் வளிமத்திற்காகத் தஞ்சை உட்பட பல பகுதிகளைப் பலியிடத் தயாராய் உள்ளது.

“உலக வர்த்தக அமைப்புகள் ஆப்பிரிக்காவின் தொண்டைக்குள் ஆப்பிரிக்க மக்கள் விரும்பாதவற்றைத் திணிக்கின்றன. அவை, ஆப்பிரிக்க மக்களின் நீண்ட பண்பாட்டுப் பின்னணியைச் சிதைத்துவிட்டன. ஆப்பிரிக்கா எழுச்சி பெற்று வரவேண்டுமெனில், தனது பண்டைப் பண்பாட்டின் அடியாழத்திலிருந்தே எழ முடியும்” என்று நம்பினார் மாத்தை. இங்கேயும் அப்படியே, பி.டி. கத்தரி, பி.டி. பருத்தி உட்பட பல பி.டி. விதைகளை விதைக்க நம்மைத் தயார்படுத்தவும் கட்டாயப்படுத்தலும் செய்கிறது நமதரசு. நாளை நமக்கு எருவட்டி வேண்டுமென்றாலும் கூட, பன்னாட்டு வணிக நிறுவனங்களின் வழியாகத்தான் கிடைக்கும். ஏனெனில், இங்கே உழவும் மாடுகளும் இருக்கப் போவதில்லை.

பசுமைப்பட்டை இயக்கத்தின் வழியாகச் ‘சத்துள்ள உணவுத் திட்டம்’ என்ற பெயரில் அவரவர் ஊரில் வளர்க்கப்பட்ட மரபான பயிர்களை வளர்க்கத் தூண்டினார். ஆனால், இங்கு அப்படித் தூண்டுவதற்கோ, ஊக்குவிப்பதற்கோ நல்லரசுதான் இல்லை. அப்படித் தூண்டும் சிலருள் ஒருவராயிருந்த ‘நம்’ஆழ்வாரும் (பன்னாட்டு, உள்நாட்டுக் கொள்ளையர்கள் வேண்டிக்கொண்டபடி) போய்ச் சேர்ந்துவிட்டார்.

மாத்தை, ‘மாற்றத்துக்கான பெண்கள்’ என்ற திட்டத்தின்வழி, ஆப்பிரிக்கப் பெண்களின் கல்வி, இனப்பெருக்கக் காலத்தில் உடல்நலம் பேணுவது, இளவயதுக் கர்ப்பத்தைத் தடுப்பது, ஆட்கொல்லி நோயிலிருந்து காப்பாற்றிக் கொள்ளச் செய்வது எனப் பலசெயல்களைச் செய்தார். அரப் மோயின் கொடுங்கோலாட்சி முடிவுக்கு வந்து, 2002இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட்டார். அதில், 98 விழுக்காடு வாக்கினைப் பெற்றுச் சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள் மற்றும் காட்டுயிர்களுக்கான துணை அமைச்சர் ஆனார். ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தை வழங்கினார். அதன்விளைவாக அடுத்த தேர்தலில் வாய்ப்பை இழந்தார். அதிகம் படித்த பெண் என்று காரணம் கூறி, இவருடைய கணவர் இவரை மணவிலக்குச் செய்தார். காலமெல்லாம் இயற்கையை, மக்களைக் காக்கப் போராடிய மாத்தை செப்டம்பர் 25, 2011ம் தேதி இயற்கை எய்தினார். இப்படி எத்தனையோ சோதனைகளுக்கு ஆளாகியும் சாதனைச் செல்வியான வங்காரி மாத்தையின் பிறந்தநாளை முட்டாள்களின் நாளென்று இனியும் கொண்டாடலாமா?

“தலை வணங்காதவர்” என்ற தலைப்பில் தம்முடைய தன்வரலாற்று நூலை வெளியிட்டு, உலக மக்களுக்கு உரமூட்டினார். அவர் பிறந்த இந்த மாதத்தில் ஒளிவுமறைவற்ற நிர்வாகத்தையும், மண்ணையும், மக்களையும் அடிமைப்படுத்தாத அரசாங்கத்தை உருவாக்குவோமெனச் சூளுரைப்போமாக! பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைக்காடாக இந்த நாட்டை மாற்றிய கைக்கூலிகளை வேரருப்போமாக! நமது நாட்டில் பசுமைவளம் மிகுந்து, “பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப”க் கடமை ஆற்றுவோமாக!

- கி.சிவா, முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் 624 302, திண்டுக்கல் மாவட்டம், பேச : 9751779791

Pin It