சப்பானியர் போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் கல்வி என்பதையே மூன்றை ஆண்டுகளாக மறந்திருந்த நிலையில் தமிழர்களுக்காக ஒரு தமிழ்ப்பள்ளியை தொடங்க அ.ந.மொய்தீன் அவர்கள் தான் எடுத்துக் கொண்ட முயற்சியை நெஞ்சில் பதிந்த நினைவுச் சுவடுகள் என்ற நூலில், 1946 ஜனவரி மாதம் முதல் தேதியன்று தஞ்சம்பகார் ரோட்டில் ஏ.மீ.உதுமான் பிடித்திருந்த 72 வது எண் கடை வீட்டில் இருந்த ஒரு அறையில் கடையநல்லூர் முஸ்லீம் லீக் முறையாக இயங்க ஆரம்பித்தது (நூல் பக்கம் 47) என்று கடையநல்லூர்முஸ்லீம் லீக் தொடங்கப்பட்ட வரலாற்றைக் கூறத் தொடங்கியவர் அச் சங்கத்தில் தமிழ்ப் பள்ளி தொடங்கு வதற்கான முயற்சி எடுக்கப்பட்டதைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார் ,

சிறிய அளவில் தமிழ்ப் பள்ளிக் கூடம் ஆரம்பிக்கலாம் என்ற யோசனையைச் சங்கக் கூட்டத்தில் வெளியிட்டோம். எல்லோரும் அந்த யோசனையை ஆதரித்தார்கள். அப்போது இருந்த ஆர்வத்தில் எதைப் பற்றியும் யோசிக்காது தமிழ்ப் பள்ளிக்கூடம் ஒன்றை எப்படியும் ஆரம்பித்து நடத்துவதென்று முடிவெடுத்து விட்டோம். 1946 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சின்னஞ்சிறு சங்க அறையில் தமிழ்ப் பள்ளிக்கூடம் கோ. அப்துல் ரஹ்மான் முன்னிலையில் , ஹாபிஸ் செ.ஆ. அஹ்மது சாஹிப் துவா ஓத எளிமையான முறையில் துவங்கப்பட்டது. பள்ளிக் கூடக் காரியங்களைக் கவனிப்பதற்காகப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்த க. அப்துல் ஹமீது, ந.சி.அப்துல் காதர், ம.நா. சுலைமான் ஆகியோர் நியமிக்கப்பட்டார்கள். (இங்கு அ.ந.மொய்தீன் அவர்கள் மேற்குறிப்பிட்ட மூவரையும் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் என்று குறிப்பிட்டிருப் பதைக் கவனிக்க வேண்டும் - கவி). எடுத்த எடுப்பிலேயே 54 பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்து விட்டார்கள் .

பின்பு திரு. அ.ந.மொய்தீன் அவர்களின் உடல் நிலை பாதிக்கப்பட்டு தமிழகம் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்து அது குறித்து அவர்,

‘கப்பல் பயணம்ஆரம்பித்த சல நாட்களிலேயே என்உடல் நிலையைப் பற்றிய நினைப்பு என்னை விட்டு அகன்றது. சங்கத்தையும் பள்ளிக் கூடத்தையும் பற்றி கவலையே மனத்தை வாட்டிக் கொண்டிருந்தது. ஊரில் இருந்தபடியே சங்கத்தையும் பள்ளிக் கூடத்தையும் பலப்படுத்தவதற்கு ஏதேனும் செய்ய முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தேன்’ என்று கூறுகின்ற அவர் வீட்டில் 3 நாட்கள் தங்கி ஓய்வு பெற்ற பிறகு அங்கிருந்து பிரைமரி முஸ்லிம் அலுவலகத்திற்குச் சென்றதையும் அதன் செயலாளர் எஸ்.கே.ஹாஜா அவர்கள் தனக்கு பிரைமரி முஸ்லிம் லீக் சார்பில் வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் செய்தியை தெரிவித்து அந்நிகழ்ச்சியில் தான் ஆற்றிய உரையை பின்வருமாறு அ.நா.மொய்தீன் அவர்கள் கூறுகிறார்,

வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பேசிய நான், கடல்கடந்து சிங்கப்பூர் சீமையில் கடையநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட மக்கள் கடினமாக உழைத்துதான ஜீவனம் நடத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். படிப்பறிவு குறைந்தவர்களாக இருக்கிறார்கள். சரியான கல்வி அறிவு பெற்று ஏனையவர்களைப் போல நம் மக்களும் முன்னேறாவிட்டால் எதிர்காலத்தில் நம் சமூகம் சிங்கப்பூரில் பெயர்போட முடியாது என்று கூறினேன்.

சிங்கப்பூரில் கடையநல்லூர் முஸ்லீம்களின் நிலையை எடுத்துக் கூறிய திரு.அ.நா.மொய்தீன் அவர்கள் மேலும்,

எனது பேச்சு வரவேற்பு நிகழ்ச்க்கு வந்திருந்தவர்களின் மனத்தைக் கவர்ந்து விட்டது. இச்சமூக மக்களால் சிங்கப்பூரில் மேற்கொள்ளப் பட்டிருக்கும் பணிகளுக்கு உதவுவதாய் என்னிடம் உறுதிக் கூறினார்கள். வாய் மூலமாக எடுத்துச் சொல்வதைக் காட்டிலும் எழுத்து மூலமாக வேண்டுகோள் விடுப்பது நல்ல பலன் அளிக்கும் என்று சிலர் யோசனை கூறினார்கள். அதனையடுத்து, சிங்கப்பூரில் உள்ள கடையநல்லூர் வாசிகளின் வேண்டுகோள் என்ற தலைப்பில் அறிக்கை ஒ ன்று 1946 ஆம் ஆண்டு செப்படம்பர் 15 ஆம் தேதியில் தயாரிக்கப்பட்டு அவ்வூரில் உள்ள சங்கங்களிலும் பள்ளி வாசல்களிலும் விநியோகிக்கப்பட்டது. சிங்கப்பூரி லிருந்து கடையநல்லூர் முஸ்லீம் லீக் சார்பில் வேண்டுகோள் அறிக்கையை அச்சிட்டு அதை அஞ்சலில் அனுப்பி வைப்பதற்கான செலவு மட்டும் 400 வெள்ளி வரை ஆகியது. கடையநல்லூர்க்காரர்கள் வசூலிக்கும் பணம் கைக்கு இப்போது வரும் அப்போது வரும் என பல மாதங்கள் வரை காத்திருந்து விட்டு வெறுங்கையுடனும் - ஏமாற்றத்துடனும் கப்பலேறி சிங்கப்பூருக்குப் புறப்பட்டேன்

என்று நூலின் பக்கம் 53,54 களில் பள்ளிக் கூடமும் ஊரில் குடித்த மனப் பாலும் என்ற தலைப்பில் மனம் வருந்தி கூறியுள்ளார்.

தமிழ்ப் பள்ளிக்கூடத்திற்கு உமறுபுலவர் என்ற பெயர் எப்படி வந்தது என்பதையும் திரு.அ.நா. மொய்தீன் அவர்கள் ,

நாங்கள் ஆரம்பித்த தமிழ்ப்பள்ளிக் கூடத்துக்கு ஆரம்பத்தில் எந்தப் பெயரையும் நாங்கள் சூட்டவில்லை. சாதாரணமாக சிறுவர் தமிழ்ப் பாடசாலை என்றே அழைத்து வந்தோம். பள்ளிக் கூடம் ஆரம்பித்து பல மாதங்களுக்குப் பிறகே அதற்கு உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளிக்கூடம் என்ற நாமம் சூட்டப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் ச.சா. சின்னப்பனார் அவர்கள்தாம். இன்று சிங்கை தமிழர்கள் ச.சா.சின்னப்பனார் என்ற பெயரை மறந்திருக்கக் கூடும். ஆனால் சிங்கப்பூர் தமிழர்களின் முன்னேற்றத்துக்காக அப்போது தன்னலம் பாராது உழைத்த பெரிய மனிதர் அவர். ஒரு நாள் அவர் நாங்கள் நடத்திக் கொண்டிருந்த பள்ளிக் கூடத்துக்கு வருகையளித்து எங்களுக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றன என்று பரிவோடு வினவினார். நாங்கள் நடத்தும் பள்ளிக் கூடத்துக்கு என்ன பெயர் வைக்கப்பட்டிருக்கிறது என்றும் கேட்டார். பள்ளிக்குப் பெயர் எதுவும் சூட்டப்பட வில்லை என்று நாங்கள் கூறியதும் உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளிக் கூடம் என்று பெயரிடுமாறு எங்களைக் கேட்டுக் கொண்டார். சின்னப்பனாரின் யோசனையின் பேரில்தான் நாங்கள் உமறுப்புலவர் தமிழ்ப்பள்ளிக் கூடம் என்று பெயரிட்டோம்

என்று எழுதியுள்ளார்.

பள்ளிக் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது, அதை அரபி மதரஸா நடத்தினால் பிள்ளைகள் மார்க்கக் கல்வி பெறுவார்கள் என்ற எண்ணமும் குழப்பமும் ஏற்பட்டு தத்தளித்துக்கொண்டிருந்தது. செயலாளராக இருந்த வி.மு.செய்து மசூது அவர்கள் இரண்டு ஆசிரியர்களை ஒரு மாத முன் பணத்துடன் நீக்க முடிவு செய்துவிட்டார்.

இது குறித்து அ.நா. மொய்தீனுக்கும் மசூது அவர்களுக்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு அவ்விரண்டு ஆசிரியர்களுக்கு பதிலாக ஹஜரத் மார்களை வைத்து மத்ரஸா நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை மசூது அவர்கள் கூறியதும் தமிழ்ப் பள்ளிக் கூடத்தை மூடுவதும் மத்ரஸா நடத்துவதும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அ.நா. மொய்தீன் அவர்கள் கடுமையாக கூறிவிட்டார். அதன் பிறகு க.அ.உதுமான் கனி அவர்கள் மூலம் திருமதி சரோஜினி தேவி லாஸரஸ் என்ற அம்மையார் ஆசிரியராக நியமிக்கப்பட்டு உமறுப்புலவர் தமிழ்ப்ப்பள்ளி தொடர்ந்து நடத்தப்பட்டது. மேலும் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் நேரடியான நிர்வாகத்தில் பள்ளிக் கூடம் நடக்குமானால் குழப்பம் வரும் என்பதை உணர்ந்த அ.நா.மொய்தீன் அவர்கள் சங்கச் சார்பில் தனிக்குழு அமைக்க ஆலோசனைக் கூறினார். அதன்படியே தனிக்குழு அமைக்கப்பட்டது.

பின்பு பள்ளிக் கூடத்தை பார்வையிட வந்த கல்வி இலாக்கா இயக்குநர் ஒருமாதம் கழித்து, பள்ளிக் கூடம் நடத்துவதற்கு முழுதும் தகுதியற்ற இடம் கடையநல்லூர் முஸ்லீம் லீக் இல்லம் என்று குறிப்பிட்டு வேறு இடமாகப் பார்த்து பள்ளி நடத்துமாறு அறிக்கை அனுப்பினார்.

1946 இல் மேக்ஸ்வெல்ரோட்டில் பள்ளிக் கூடம் கட்டுவதற்கு ஒரு இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல சிக்கல்களுக்கு பிறகு லேண்ட் ஆபிஸ் 5600 சதுர அடி கொண்ட அந்த இடத்தில் 80 பிள்ளைகள் படிக்கக் கூடிய இரண்டு வகுப்பறைகள் கூடிய பள்ளிக் கூடம் கட்ட அனுமதி வழங்கியது. 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் நாள் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு நிதி கேட்டு திரு. அ.நா.மொய்தீன் அவர்கள் முயற்சியை மேற்கொண்டார்கள்.

நிதி கேட்கும் அறிக்கையை மலாயா நண்பன் ஆசிரியர் கரீம்கனி அவர்களிடம் அளித்து பத்திரிக்கையில் வெளியிடுமாறு அ.நா.மொய்தீன் கூறினார்கள். அது குறித்து நிகழ்ந்தவற்றை திரு.அ.நா.மொய்தீன் அவர்களே தனது நூலில்,

எங்கள் அறிக்கையைக் கரீம்கனி அவர்கள் மேலோட்டமாகப் பார்த்துவிட்டு தமிழ்ச் சிறுவர் பாடசாலையைப் பற்றி மட்டுமே வானளாவ நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். இடையிடையே எங்களுக்கு பேசக்கூடிய வாய்ப்பையும் அவர் அளிக்க வில்லை. தமிழச் சிறுவர் பாடசாலையின் மேம்பாட்டுக்காக என்னென்ன செய்யப்படும் என்பதை விவரித்துக் கொண்டிருந்த அவர் இறுதியாக எங்களின் அறிக்கையைப் பத்திரிக்கை யில் பிரசுரிக்கப் போவதில்லை என்று கண்டிப்பாகக் கூறியும் விட்டார்

என்று எழுதியுள்ளார். மேலும் திரு.அ.நா. மொய்தீன் அவர்கள்,

உமறுப்புலவர் தமிழ்ப் பள்ளிக்கூடம் சம்பந்தமான அறிக்கையை கரீம்கனி பிரசுரிக்க மறுத்தது எங்களுக்குப் பலத்தை ஏமாற்றத்தை அளித்தது. ஏழு மொழிகளை அறிந்த அறிஞர் எனப் போற்றபட்ட அவரின் இந்தப் போக்கிற்குக் காரணம் என்னவென்றும் தெரியவில்லை. ஒரு சமயம் ஆரம்பத்திலிருந்து தன்னைக் கலந்து கொள்ளாமல் பள்ளிக்கூடம் நடத்தவும் பள்ளிக் கூடத்திற்கான புதிய கட்டிடம் கட்டவும் நாங்கள் முயற்சி மேற்கொண்டிருந்தது அவருக்குப் பிடிக்காமல் இருந்திருக்கலாம்.

கரீம் கனி அவர்கள் என்னைக்காட்டிலும் மிக அதிகமாக சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர். அடிக்கடி தேநீர் அருந்தும் சுபாவம் உடையவர். எளிதில் முன்கோபமடையக் கூடியவர். எங்களின் அறிக்கையை அவர் பிரசுரிக்க மறுத்ததும் அதே அறிக்கையை நாங்கள் தமிழ் முரசு பத்திரிக்கை ஆசிரியர் கோ.சாரங்கபாணியிடம் கொடுத்தோம். எதனையும் கூட்டாமல் குறைக்காமல் அதனை, அவர் அப்படியே பிரசுரித்திருந்தார். 1949 பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி தமிழ் முரசில் அறிக்கை பிரசுரமான பிறகு அதே மாதம் 22 ஆம் தேதி மேக்ஸ்வெல் ரோட்டில் பள்ளிக் கூடம் கட்டுவதற்குரிய இடம் ஒதுக்குவதற்கு அரசாங்கம் முன் வந்திருப்பது பற்றிய கடிதம் கிடைத்தது

என்று மலாயா நண்பனையும் தமிழ்முரசையும் ஒப்பிட்டு எழுதியுள்ளார்.

Pin It