இசைக்கருவிகளை நம் தமிழ் முன்னோர், நரம்புக் கருவிகள் (யாழ், தம்புரா, வீணை போன்றவை), துளைக் கருவிகள் (புல்லாங்குழல், நாதஸ்வரம்), தோற்கருவிகள் (தவில், மிருதங்கம்), கன கருவிகள் (ஜால்ரா, ஜலதரங்கம்) என்று நான்கு வகையாகப் பிரித்திருந்தனர். ‘இனிது’ என்று வள்ளுவப் பெருமான் சொல்லும் இசையையுடைய யாழ் (குறள்: 66), தந்தி அல்லது தத வாதியங்கள் (CHORDOPHONES) என்று அழைக்கப்படும் நரம்புக் கருவிகளுள் ஒன்றாகும். தம்புரா, வீணை, வயலின், கோட்டு வாத்தியம், மாண்டலின் போன்றவை அனைத்தும் நரம்பு கருவிகளே. வீணை, அரங்கிசையில் மையமாக வைத்து வாசிக்கப்படும் கருவியாக இருப்பதால், வீணையின் முந்திய வடிவமான யாழும் அதே சிறப்பைப் பெற்றிருக்க வேண்டும். நரம்புகளால் யாக்கப்பட்டதால், அல்லது கட்டப்பட்டதால், யாழ் அப்பெயர் பெற்றது என்று அறிஞர் கூறுவர்.

யழ மடடம சறபமவேடன் விலங்குகளைக் கொல்ல, அம்பைச் செலுத்திய வேளையில் நாணிலிருந்து இனிய இசையொலி எழுவதைக் கேட்டு மகிழ்ந்தான். இதனைத் தொடர்ந்தே, வில் யாழ் உருவாயிற்று என்று கலைமாமணி முனைவர் செல்லத்துரை அடிகளார், தனது “தென்னக இசையியல்” ஆய்வேட்டில் குறிப்பிடுகின்றார்.

யாழின் இசையொலி பெருக்கி ‘தணக்கு’ என்ற மரத்தாற் செய்யப்பட்டது. படகு வடிவமான இது ஒரு போர்வைத் தோலால் மூடப்பட்டிருக்கும். போர்வைத் தோலின் நடுவிலுள்ள மெல்லிய குச்சியின் வழியாக நரம்புகள் கிளம்பி, கோடு என்று அழைக்கப்பட்ட தண்டியோடு பிணைக்கப்பட்டிருக்கும். யாழில் உள்ள முறுக்காணிகள் மாடகம் என்று அழைக்கப்பட்டன. நரம்புகள் முறுக்காணிகளில் சுற்றப்பட்டிருக்கும்.

“பத்தருங் கோடும் ஆணியு நரம்புமென்று

இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுது வாங்கி”

(சிலம்பு, கானல் வரி, 3-4)

என்று சிலம்பு பாடுகின்றது.

பண்டைத் தமிழர் யாழை 21 நரம்புகளுடைய பேரியாழ், பத்தொன்பது நரம்புகளையுடைய மகர யாழ், 16 நரம்புகளையுடைய சகோட யாழ், 7 நரம்புகளையுடைய செங்கோட்டு யாழ் என்று வகைப்படுத்தியிருந்தனர் என்ற செய்தியை,

“ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே

நின்ற பதினான்கும் பின்னேழும் - குன்றாத

நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொல்முறையே

மேல் வகை நூலோர் விதி”

என்ற பாடல் வரிகளிலிருந்து அறியலாம் என்று சிலப்பதிகாரத்தின் அண்மைக்கால உரையாசிரியரான ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் அறிவிக்கினறார். இக்காப்பியத்தின் அரங்கேற்று காதை,

“யாழுங் குழலுஞ் சீரும் மிடறும்” (26)

(சீர்: அகக் கூத்திற்கும் புறக் கூத்திற்குமுரிய இருவகை தாளக் கூறுபாடுகள்)

(மிடறு: சாரீர வீணை என்று அழைக்கப்படும் மிடற்றுப்பாடல்)

“வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்தாங்கு” (63)

(பட்டடை : நரம்புப் பட்டடை)

என்ற அடிகளில் யாழைக் குறிப்பிடுகின்றது.

மேலும், இளங்கோ அடிகள், மதுரைக் காண்டத்தின் புறஞ்சேரியிறுத்த காதையில், “செந்நிறம் புரிந்த செங்கோட் டியாழில்” (106) என்று குறிப்பிட்டு, தொடர்ந்து, செங்கோட்டி யாழில், மெட்டு என்ற சொல்லால் அறியப்படும் தந்தரிகரம் என்ற உறுப்பும், திவவு என்று வார்க்கட்டும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் என்று கூறுகின்றார். யாழின் பண்ணுக்குரிய, முதல் நான்கு தவிர்த்த பிற மூன்று நரம்புகளும், தாளமும் சுருதியும் கூட்டுவனவாகலின் இவை ஒற்றும் பற்றும் என்றும் அழைக்கப்பட்டன.

அடியார்க்கு நல்லார் அவர்களை மேற்கோள் காட்டி, வேங்கடசாமி நாட்டார் அவர்கள், செங்கோட்டி யாழின் ஏழிசையில் முதலிற் தோன்றியது தாரம் என்றும் தாரத்தில் உழையும், உழையிற் குரலும், குரலுள் இளியும், இளியுள் துத்தமும் துத்தத்துள் விளரியும், விளரியுட் கைக்கிளையும் என்ற பண்கள் பிறக்கும் என்ற கோட்பாட்டை,

“தாரத் துழைதோன்றப் பாலையாழ் தண்குரல்

ஒரு முழைத் தோன்றக் குறிஞ்சியாழ் - நேரே

இளி குரலிற் றோன்ற மருத யாழ் துத்தம்

இளியிற் பிறக்கநெய்த லியாழ்”

என்ற பா மூலம் அறியலாம் என்று சொல்லுவது, பண்டைத் தமிழரின் இசையறிவின் ஆழத்தையும், அகலத்தையும் படம்பிடித்துக் காட்டுகிறது. செங்கோட்டி யாழின் ஏழ்நரம்பும் ஒத்திசைப்பதற்கேற்ப, பாலையாழ், முல்லையாழ், குறிஞ்சியாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்ற பெயரமைந்த பண்கள் உருவாவதாக அவர் சுட்டும் செய்தியிலிருந்து, நிலத்தின் தன்மையோடு இணைந்த திணைப்பகுப்பு இருந்ததுபோல், பண்வழி பகுப்பும் இருந்திருக்க வேண்டும் என்று அறியமுடிகிறது.

நெய்தல் யாழுக்கு விளரி என்பதும் பெயர். ஏனைய நான்கும் பெரும்பண்கள் என்று அறியப்பட்டன. குறிஞ்சி யாழுக்கு யாம யாழ் என்ற பெயரும், முல்லை யாழுக்குச் செவ்வழி யாழ் என்ற பெயரும் உண்டு. எழும் இசைக்கேற்ப, நரம்புகளை, நட்பு நரம்பென்றும், பகை நரம்பென்றும், இணை நரம்பென்றும் யாழாசிரியர் வகைப்படுத்தியிருந்தனர். இஃதன்றி, ஏழிசையும், பன்னிரு கோள்களோடு பொருத்திப் பார்க்கப்பட்டது. இதனை, அடியார்க்கு நல்லார் உரையை மேற்கோள்காட்டி, வேங்கடசாமி நாட்டார் அவர்கள், “இடபம், கடகம், சிங்கம், துலாம், தனுசு, கும்பம், மீனம் என்னும் ஏழினும் ஏழிசை நிற்பது ஒரு முறை என்றும், துலாம், தனுசு, கும்பம், மீனம், இடபம், கடகம், சிங்கம் என்னும் ஏழினும் நிற்பது மற்றோர் முறை என்றும் விளக்குகிறார். இசையையும், வானவியலையும், பண்டைத் தமிழர் இணைத்துப் பார்த்திருப்பது கற்போருக்கு வியப்பளிக்கிறது.

வஞ்சி மூதூர்க்கண், மாலைக் காலத்தே, யாழ் மீட்டும் இள மகளிர் ஆடவருக்கு இசைவிருந்து படைத்த செய்தியை, இக்காண்டத்தின் நடுகற்காதை எவ்வளவு ஆழமாக இயம்புகின்றது! வளைந்த தண்டினையும், இசை பொருந்துதலையுடைய நரம்பினையும், பத்திரினையுமுடைய சீறியாழை மகளிர் அணைத்தெடுத்து, செம்பாலைப் பண்ணுடன், குறிஞ்சிப் பண்ணையும், தேனோடு பாலாய்க் கலந்து, இசைவிருந்து படைத்தனர் என்ற நிகழ்வை, இளங்கோ அடிகளார்,

“வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப்

புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க்

குரல்குர லாக வருமுறைப் பாலையில்

துத்தங் குரலாத் தொன்முறை இயற்கையின்

அந்தீங் குறிஞ்சி அகவன் மகளிரின்

மைந்தர்க் கோங்கிய வருவிருந் தயர்ந்து” (31-35)

என்ற சொற்கள்மூலம், எவ்வளவு அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றார்!

தமிழ் மண்ணின் ஐந்திணைப் பகுப்பை ஆய்ந்த பேரா. தனிநாயக அடிகளார் தனது “நில அமைப்பும், தமிழ்க் கவிதையும்” நூலில், “திணைக் கவிதைகளும், அவற்றின் உட்பிரிவுகளும், தொல்காப்பியர் தமது பொருளதிகாரத்தை இயற்றுவதற்கு முன்னரே, நீண்டகாலமாக இருந்து வந்தன” என்று கூறுகின்றார். இதனை அடியொற்றி, பாலையாழ், முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் என்ற பெயரைமைந்த பண்கள் வழி பகுப்பும், தமிழ் மண்ணில் இருந்திருக்க வேண்டும் என்ற முடிபும் நேரானதே@ சீரானதே. தமிழுக்கும் தமிழருக்கும் பெருங்கேடு வந்துற்றது, தமிழ் நிலத்தின் பெரும் பகுதியைக் கடல் கொண்டபோதுதான். இன்று நமக்குக் கிடைத்துள்ள சங்க இலக்கியங்களுக்கு முன்னரே, பல பேரிலக்கியங்கள் சமைக்கப்பட்டு அவை கடல் வெள்ளத்தில் அழிந்து பட்டன. இத்தகைய கடல் வெள்ளம் கி.மு. 2000 ஆண்டிற்கு முன்னரே ஏற்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர் கருதுகின்றனர். இசை குறித்த, மிக மிக நுணுக்கமான, ஆழமான செய்திகளை உள்ளடக்கிய சிலப்பதிகாரம் போன்ற வேறுபல பேரிலக்கியங்கள் சுமார் 4000 ஆண்டுகட்கு முன்னரே இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொள்ளும் நிலையில், இலக்கிய வடிவம் பெற்ற நமது பண்டைய இசை மரபுகள், அதற்கு ஓரிரு ஆயிரம் ஆண்டுகள் முன்னரே வழக்கில் இருந்திருக்க வேண்டும் என்பதும், கால ஓட்டத்தில் அவை கவிதைப் படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும், மிகைப்படுத்தப்படாத, ஏற்புடைக் கருத்தாய் உருவாகின்றது. அதாவது நமது இசை மரபுகள், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கில் இருந்திருக்க வேண்டும்.

சிலப்பதிகாரத்தில் மேற்கூறிய செய்திகள் இடம்பெற்றிருப்பது, பண்டைத் தமிழரின் மொழி, அக்காலத்தில் யாக்கப்பட்ட பேரிலக்கியங்களின் நுண்ணிய இலக்கணத் தன்மை உள்ளிட்ட பல சிறப்புகளினால், பொன் விளக்கென இலங்குதல் போல, அவர் தம் இசையறிவும் மிக உயர்ந்த நிலையில் இருந்துள்ளது என்பதற்குச் சான்றாகும். யாழென்ற இசைக்கருவியின் பல உறுப்புக்கள், அக்கருவி கட்டப்பட்டுள்ள முறை, ஏழிசையையும் எழுப்பவல்ல முறையில், நரம்புகள் பொருத்தப்பட்டுள்ள அமைதி, திணைகளைப் போன்றே பண்களையும் நிலத்தோடு பொருத்திப் பார்க்கும் மரபு, அதற்கும் மேலாக, வான்வெளிக் கோள்களுடன் ஏழிசையை இணைத்துப் பார்க்கும் அறிவு ஆகியவையெல்லாம், இந்த மேன்மை ஒரு சில ஆண்டுகளில் உருவாகியிருக்க முடியாது என்பதையும், இசை மரபுகள் இலக்கியங்களில் பதிவு செய்யப்படுவதற்கு பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே, இவையும், இலக்கிய மரபுகளையொத்து, தமிழர் வாழ்வில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதையும் ஊகிக்க முடிகிறது. சில ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரேயே நமது இசை மரபுகள் வேர் விட்டிருக்க வேண்டும் என்று சொல்வதும் மிகை சார்ந்த முடிபாக இராது.

அண்மைக் காலத்தில், தமிழ் இசையை ஆய்வு செய்து, பல நூல்கள் படைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று, திரு. ரங்க ராமானுஜ ஐயங்கார் அவர்கள் எழுதியுள்ள “தென்னிந்திய (கர்நாடக) இசை வரலாறு” (History of South Indian (Carnatic) Music) என்பதாகும். ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள இப்புத்தகம் 1972-ஆம் ஆண்டு, பம்பாயிலுள்ள “விபாஞ்சி கலை மையம்” என்ற அமைப்பினரால் பதிப்பிக்கப்பட்டது. இந்நூலின் கண், “யாழ்” என்ற தலைப்பில் (பக். 28), சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் பதிவு செய்துள்ள இசை குறித்த தகவல்களையெல்லாம் விளக்கிய ஆசிரியர், கீழ்க்கண்ட கருத்துக்களை முன் வைக்கிறார்.

 i.             யாழ் என்பது திராவிட நாகரிகத்தில் உருவான இசைக்கருவி.

ii.             இசையின் மொத்த வடிவத்தையும் தமிழ்ப்படுத்தும் செயல்பாடுகள் இளங்கோ அடிகளின் காலத்திற்கு முன்னரேயேத் துவங்கிவிட்டது.

திராவிட நாகரிகத்தின் தொன்மையை அண்மைக்கால ஆய்வுகள் உறுதி செய்கின்றன. திராவிட நாகரிகத்தின்போதே தமிழ் மண்ணில் மிகச் சிறந்த இலக்கியங்கள் இருந்ததை ஒத்து, மிகவுயர்ந்த இசையும் இருந்துள்ளது. இக்கட்டுரையின் முற்பகுதியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போல, இலக்கிய மரபுகளையொத்து, பண்டைத் தமிழரின் இசை மரபுகளும், இலக்கியங்கள்வழி ஆவணப்படுத்தப்படுவதற்கு ஓரிரு ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே, வழக்கில் இருந்து சிறிது சிறிதாக செழுமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் தெளியலாம்.

இசை வடிவத்தைத் தமிழ்ப்படுத்தும் மரபு அல்லது பணி இளங்கோ அடிகளுக்கு நெடுங்காலம் முன்னரே துவங்கிவிட்டது என்பதோடு தான் நாம் பிணக்குறுகிறோம். திரு. ரங்க ராமனுஜர் குறிப்பிடும் ‘தமிழ்ப்படுத்துல்’ (Tamilisation) என்ற சொல் ஆய்வுக்குரியது. இங்கு ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், திராவிட நாகரிகத்தில் உருவான இசை, துவக்கத்திலிருந்தே ஒரு முழுமைத் தன்மையுடன் இருக்கும்போது, அதைத் தமிழ்ப்படுத்தும் நிலை எப்படி எழுந்திருக்கக்கூடும்? திராவிடத் தமிழ் இசையின் கூறுகள், பிற நாகரிகங்களின் இசையில் ஊடுருவியிருக்கலாம். “தமிழ்ப் படுத்துதல்” என்ற கோட்பாட்டுச் சொல் மூலம், தமிழ் இசை பிற மரபுகளிடமிருந்து கடன் வாங்கியதைப் போன்ற தோற்றம் விதைக்கப்படுகிறது. இது தமிழ் இசையின் முழுமைத் தன்மைiயும், தொன்மைiயும் சிறுமைப்படுத்தும் முயற்சியாக நாம் இதனைப் பார்க்க வேண்டும். தனது அரிய நூலையே இளங்கோ அடிகளுக்கு அர்ப்பணித்திருக்கும் திரு. ராமானுஜரின் எண்ணக் களஞ்சியத்தில், இது போன்றதொரு கருத்து இருப்பது வியப்பை அளிக்கின்றது.

எனது வாதத்திற்கு, திரு. ராமானுஜர், யாழ் குறித்து வெளிப்படுத்தியுள்ள இன்னோர் தவறான கருத்து வலு சேர்க்கின்றது. பண்டு, தமிழ் நாடு கிரேக்கத்தோடு கடல் வழி வாணிகம் மேற்கொண்டிருந்த போது, கிரேக்க மது, அந்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டதைப் போல, மகர யாழும் அந்நாட்டிலிருந்து தருவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அவரது கூற்று நூலின் பக். 42-இல் காணப்படுகின்றது. மகர யாழுக்கு “வருணன் ஊர்தி” என்ற பெயரும் இருந்திருக்கவேண்டும் என்பதைக் குறிப்பிடும் ஆசிரியர், ஒரு சிங்கத்தின் அமைப்போடு படைக்கப்பட்ட இம்மகர யாழை, ஓரோவியம் மூலம் அறிமுகப்படுத்துகிறார். இவ்வோவியத்தில் நாம் காணும் நரம்புகளின் எண்ணிக்கை 15 ஆகும். ஆனால் உரையாசிரியர், வேங்கடசாமி நாட்டார், யாழ், நால்வகைப்படுத்தப்பட்டிருப்பதை விளக்கிக் கூறி, இக்கட்டுரையின் துவக்கத்தில் சொல்லப்பட்டுள்ள “ஒன்று மிருபது...” பாடலைச் சுட்டிக்காட்டி, பழந்தமிழ் நூலோர் மகர யாழுக்கு நரம்பு பத்தொன்பதாகும் என்று விதி செய்தியிருந்ததையும் தெளிவுபட உரைக்கின்றார். தமது பரந்து விரிந்த இசையறிவை, நூல் மூலம் தமிழருக்குப் படைத்த திரு. ராமானுஜர், இச்சிறிய முரண்பாட்டை எங்ஙனம் கவனியாது விட்டிருப்பார் என்பது புதிராக இருக்கின்றது.

“சொல்லியல்” (Etymology) அடிப்படையில், மகர யாழ் கிரேக்கத்திலிருந்து தமிழகம் வந்திருக்க வேண்டும் என்ற கருத்துக்கு வலு சேர்க்கும் ஆதாரச் செய்தி எதுவும் மேற்படி புத்தகத்தில் காணப்படவில்லை. பண்டைக் காலத்தில், கிரேக்கத்தில் குரங்குகள் கிடையா. அவை தமிழகத்திலிருந்து தான் தருவிக்கப்பட்டன. குரங்குகளே இல்லாத அற்றைநாள் கிரேக்க மொழியில், குரங்குகளைக் குறிக்கும் சொல் எதுவும் இல்லை. ஆகவே, கிரேக்கர்கள் தமிழ்ச் சொல்லாம் “கவி” என்பதனையே குரங்குகளைக் குறிக்கப் பயன்படுத்தினர் என்பது அறிஞர் முடிபு. “The Bible and Asia” – R.S.  சுகிர்த ராஜா, 2012, பக். 26). இதைப்போல, சொல்லியல் அடிப்படையில், எந்த ஆதாரமுமின்றி, மகர யாழ் கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்டிருக்கலாம் என்று இந்நூல் கூறுவது ஏற்புடையதாய் இல்லை.

“பிரீ பிரஸ் ஜர்னல்” (Free Press Journal), “தி இண்டியன் எக்ஸ்பிரஸ்” ஆகிய நாளேடுகளில் பணியாற்றி, இவ்வமயம் கேரளாவில் வசித்துவரும் திரு. டி.ஜே.எஸ். ஜார்ஜ் (T.J.S. George), இசைக்குயில் எம்.எஸ் சுப்புலட்சுமி குறித்து, “M.S. – A Life in Music” என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் ஓர் அருமையான நூலைச் செய்துள்ளார். இவர், திரு. ரங்கராமானுஜ ஐயங்கார் அவர்களது, “மகர யாழ், கிரேகத்திலிருந்து தருவிக்கப்பட்டிருக்கலாம்” என்ற தவறான கருத்தை அடியொற்றி எழுத முனைந்த வேளை, “யாழ் கிரேக்கத்திலிருந்து தருவிக்கப்பட்டிருக்கலாம் - ஆதாரம் திரு. ராமானுஜரது நூல்” என்று பக். 288-ல் பிழைபடப் பதிவு செய்துள்ளார். இவரது கருத்தின்படி, அனைத்து யாழ் வகைகளுமே கிரேக்கத்திலிருந்துதான் தருவிக்கப்பட்டிருக்க வேண்டுமென்ற பொருள் தோன்றுகிறது. எவ்வளவு எளிதாக தமிழரின் ஓர் அடையாளம் உரிமை இழக்கிறது.

சொல்லியல் பற்றி நாம் சிந்திக்கும்போது, “யாழ்” என்ற தமிழ்ச் சொல்லுக்கு, ஒலி அமைதியின் வழி, அண்மையில் இருக்கக் கூடியதாக “லையர்” (Lyre) என்ற லத்தீன் சொல் இருப்பது தெரிய வருகின்றது. ய, ல ஆகிய ஒலிகள் இவ்விரு சொற்களிலும் ஒருமை இருப்பதைக் காட்டுகின்றன. பண்டு, மெசபடோமியா என்று அழைக்கப்பட்ட இன்றைய ஈசாக் நாட்டின் உர் என்ற இடத்தில் அகழ்வாராய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட லையர் என்ற இசைக்கருவி சுமார் கி.மு. 2300 ஆண்டுகட்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கலாமென்று தொல்லியல் அறிஞர் கருதுகின்றனர். கிரேக்க மொழியில் உருவான் இச்சொல், லத்தீன் மொழியிலும் அவ்வாறே பயன்படுத்தப்பட்டிருக்கலாம். கிரீட் என்ற நாட்டில், மினோவா இன மக்களின் புராதன குடியிருப்புப் பகுதியில் காணப்படும் சில ஓவியங்களில் லையர் காணப்படுகின்றது. இன்று ஆங்கில மொழியில் நாம் பயன்படுத்தும் “லிரிக்கல்” (Lyrical) “லிரிசிஸ்ட்” (Lyricist) போன்ற சொற்களெல்லாம் லையர் என்ற சொல்லிலிருந்தே கிளை விட்டிருக்க வேண்டும் என்பதும் புலனாகிறது. பண்டைய கிரேக்கர்களின் பாடல் நிகழ்வுகள், லையர் இசையின் துணையோடு அமைக்கப்பட்டன.

பண்டைய கிரேக்கர்கள், ஆமை ஓட்டை வைத்துத்தான் லையர் என்ற இசைக்கருவியை உருவாக்கினர்.

கிரேக்கப் புராணங்கள், லையர் குறித்து ஒரு கதை சொல்லுகின்றன. ஹெர்மஸ் என்பவன், அப்பல்லோ என்ற கடவுளின் பசுக்களைத் திருடிவிட்டான் என்றும், ஆதனால் பெருங்சினமுற்ற அப்பல்லோவை, ஹெர்மஸ், ஆமை ஓட்டினால் வடிவமைக்கப்பட்ட லையர் மூலம் இசையெழுப்பி அமைதிப்படுத்தினான் என்றும் இக்கதை செப்புகின்றது.

கிரேக்கர்களின் இந்த “லையர்” இசைக்கருவியில், 3,4,7,8,10 ஆகிய எண்ணிக்கையில் நரம்புகள் பலவாறாகக் கட்டப்பட்டன. இந்த எண்ணிக்கை வேறுபாட்டிற்கேற்ப, லையரைக் குறிக்க, வேறு வேறு சொற்கள் பயன்பாட்டில் இல்லை. விவிலிய நூல், கி.மு. 1010லிருந்து, 970 வரை இஸ்ரேல் நாட்டின் மன்னன் தாவீது என்பானைப் பற்றிச் சொல்லும் பகுதியில் (1 SAM. 16:23), லையர் என்ற இசைக் கருவியைப் பற்றிக் குறிப்பிடுகின்றது. விவிலிய நிகழ்வுகள் சிலவற்றின் வரலாற்றுத் தன்மையை ஆய்ந்த தொல்லியல் அறிஞர், இவற்றின் உண்மைத் தன்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர். தாவீது, துயரத்தில் உழன்று கொண்டிருந்த தன் நண்பன் சால் என்பானுக்கு, அமைதியையும் மகிழச்சியையும் தரும் பொருட்டு, லையர் என்ற இசைக்கருவியை மீட்டினான் என்று இப்பகுதி பகலுகிறது.

இன்றைய ஈராக் நாட்டின் உர் பகுதியில் அகழாராய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இசைக்கருவி, சுமார் 2300-ஆம் ஆண்டு காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற தொல்லிய அறிஞரின் கூற்றுக்கொப்ப, தமிழ் மண்ணில் உருவான யாழும், நெடிய இசை மரபுகளின் அடிப்படையில், சிலப்பதிகாரக் காலத்திற்கு இரண்டு அல்லது மூனக்று ஆயிரம் ஆண்டுகள் முன்னரே தமிழரின் பயன்பாட்டில் இருந்து வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்வதிலும், ஆகவே இது (யாழ்), திரு. ராமானுஜர் கூறியிருப்பதுபோல கிரேக்கத்திலிருந்து கடல் வாணிகம் அல்லது பரிமாற்றம் மூலம் தருவிக்கப்பட்ட இசைக்கருவியாய் இருந்திக்க முடியாது என்று முடிவு செய்வதிலும் என்ன தவறு இருக்கமுடியும்? கிரேக்கத்தில் லையர் என்ற இசைக்கருவி இல்லாதிருந்த சூழ்நிலையில், தமிழகத்திலிருந்து தருவிக்கப்பட்ட யாழ் என்றும் இசைக்கருவியையே, அதே பெயரில் கிரேக்கரும் பயன்படுத்தத் துவங்கியிருக்கக்கூடும் என்றும், இந்த ‘யாழ்;’ என்னும் சொல்லே, கால ஓட்டத்தில் அவர் மொழியில் திரிந்து லையர் என்று பயன்பாட்டுக்கு மாறியிருக்கக்கூடும் என்று முடிவு செய்வதிலும் என்ன தவறு இருக்க முடியும்?

மாறாக, ‘யாழ்’, ‘லையர்’ என்ற இரு கருவிகளுமே, உலகின் இரு பழம் நாகரிகங்களில், ஒன்றுக்கொன்று தொடர்பின்றி, சார்பு நிலை எதுவுமின்றி தனித்தனியே உருவாகியருக்கலாம் என்ற கருத்தும் ஏற்புடையதாகவே இருக்கும்.

(கட்டுரையாளர் இசைத்துறையைச் சார்ந்தவர் அல்லர். ஒரு சிந்தனையாளர் என்ற முறையிலும், சிலப்பதிகாரத் தகவுகளின் அடிப்படையிலும் இக்கட்டுரையைச் செய்துள்ளார்.)

துணை நூற் பட்டியல்

1.            சிலப்பதிகாரம், இளங்கோ அடிகள், ந.மூ. வேங்கடசாமி நாட்டார் அவர்களது உரையுடன், ராமையா பதிப்பகம், சென்னை. 2015.

2.            History of South Indian (Carnatic) Music, R. Rangaramanuja Ayyangar, Vipanchi Cultural Trust, Bombay – 20, 1972.

3.            “தென்னக இசையியல்”, கலைமாமணி முனைவர் செல்லத்துறை அடிகளார், வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல், 1984.

4.            “M.S. – A Life in Music”, T.J.S. Geroge, Harper & Collins, New Delhi, 2004.

5. http:/ en.m. Wikipedia, org.

6. “The Bible and Asia”, - R.S. Sugirtharaja, Harvard University Press, 2013.

7. The Old Testament.

- எம்.எப்.ஐ.ஜோசப் குமார்

Pin It