Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

கீற்று படைப்புகளை மின்னஞ்சலில் பெற...

Enter your email address:

Keetru RSS Feed

கடைசி பதிவேற்றம்:

  • வெள்ளிக்கிழமை, 23 ஜூன் 2017, 14:58:16.

சாதித் தீண்டாமைக்கு எதிராகவும், தேச விடுதலைக்காகவும், பொதுவுடைமையின் போர்வாளாய் காவிரி வளநாட்டை காத்திட்ட ஒரு மாபெரும் களப் போராளி குறித்த கதை இது. அவருக்கு பெற்றோர் இட்ட பெயரென்னவோ வாளம்மாள்தான். மணி போன்ற அன்னையின் திருவடிவால் அவர் மணியம்மையானார்.

பார்ப்பனக் குடும்பத்திலே பிறந்த மணியம்மாள் எல்லா பார்ப்பனப் பெண்களைப் போல்தான் கடவுளை பூஜித்துக் கொண்டிருந்தார். அதுவும் 27 வயது இளம் விதவையென்றால் கேட்கவா வேண்டும்? மணியம்மை இளம் வயதிலேயே தந்தையை இழந்தவர். குடும்ப நெருக்கடி காரணமாக தன்னை விடவும் 20 வயது மூத்த, ஒரு நாகப்பட்டிணம் வக்கீலுக்கு வாக்கப்பட்ட மணியம்மாள் 10 ஆண்டுகளிலேயே விதவை எனும் கானகத்தில் வீழ்ந்து பட்டாள். கணவன் இறப்புக்குப் பின்னால் , பேராசை கொண்டவர்களான கணவனின் உறவினர்கள் முன்னால், சீமானான கணவனின் சொத்தில் சல்லிக்காசும் வேண்டாமென தூக்கி எறிந்துவிட்டு தாய்வீடு வந்து சேர்ந்தாள்.

தனக்கே உரித்தான ஈர மனமும், சீர்தூக்கி ஆயும் கூர் குணமும் மெல்ல மெல்ல விதவை எனும் கொடுங்காட்டிலிருந்து அவரை வெளியே கூட்டிவந்தன. தேசிய விடுதலைப் போராட்ட இயக்கத்தின்பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை காந்தி தஞ்சை வந்த போது அவரைச் சந்தித்து காங்கிரசில் இணைந்தார். மாகாணக் கமிட்டி உறுப்பினர் பதவிவரை உயர்ந்த அவர், இதர காங்கிரஸ் காரர்களைப் போலல்லாமல் பண்ணை அடிமை முறையை எதிர்த்து தனது சொந்தப் பகுதியில் உறுதி வாய்ந்த போராட்டம் நடத்தினார். தனது சொந்தப் பண்ணையிலேயே சாதி அடிமைத் தனத்தை எதிர்த்து பெரும் போரட்டம் நடத்தினார். அதன் காரணமாகவே அவர் பண்ணையில் இருந்து சொந்தக் குடும்பத்தினரால் தள்ளி வைக்கப் பட்டார்.

ஜஸ்டீஸ் கட்சிக்காரர்களைப் போலவே காங்கிரஸ்காரர்களும் பதவி மோகம் கொண்டவர்கள் என்றும், பண்ணையார்களுக்கே காங்கிரசில் பெரு மதிப்பு என்றும் அவர் தனது சொந்த அனுபவத்திலிருந்து உணர்ந்து கொண்டார். மெல்ல மெல்ல ஜனசக்தி இதழ் மூலம் பொதுவுடைமை கொள்கைகளின் பால் ஈடுபாடு கொண்ட மணியம்மை, ஒரு முழுநேர கம்யூனிஸ்ட் ஆனார். சீனிவாசராவ், மணலி கந்தசாமி போன்ற முன்னோடி போராளிகளின் தொடர்பின் மூலம் தனது அரசியல் அறிவை வளர்த்துக் கொண்ட அவர், பெரும் அமைப்பாளராகவும், செல்வாக்கு மிகுந்த தலைவராகவும் உயர்ந்தார். அவரின் பண்ணை அடிமைக்கு எதிரான போராட்டத்தாலும், வர்க்க அணிதிரட்டலாலும் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கம் அவரைக் கொல்ல முயன்று, கொடும் தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பினார்.

பெண்மையின் உடை உள்ளிட்ட பல்வேறு குறியீட்டு அம்சங்களை அடிமைத்தனத்தின் அடையாளம் எனக் கருதிய அவர், அவற்றைத் துறந்து தனது கூந்தலை வெட்டிக் கொண்டார். கிருதா வைத்துக்கொண்டு ஆண்களைப் போலே வேட்டி சட்டை அணிந்து கொண்டார். மேலும் தற்பாதுகாப்புக்கென சிலம்பமும் கற்றுத் தேர்ந்தார். கையில் சிலம்பத்தோடும், வேட்டி சட்டையோடும் தனி ஒருவராகவே தஞ்சைப் பகுதியெங்கும் சென்று விவசாய இயக்கங்களைக் கட்டி வளர்த்தார். போகும் இடமெல்லாம் மணியம்மையை தங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்க வந்த தாயாகவே மக்கள் கருதி வரவேற்றனர். நிலப் பிரபுக்களும், காவல் அதிகாரிகளும் மணியம்மையைக் கண்டு நடு நடுங்கினர்.

எண்ணிலடங்கா விவசாயப் போராட்டங்களில் பங்கெடுத்த அந்த இரும்புப் பெண்மணி, தொழிலாளர் மத்தியில் வேலை செய்யவும் தயங்கவில்லை. நாகப்பட்டிணம் பகுதியில் மணியம்மையின் தொழிற் சங்கப் போராட்டம் இன்று வரை மக்களால் பேசப்பட்டு வருகின்றது. அவர் கொடும் சிறை வாசத்துக்கும் அஞ்சவில்லை. அதேபோல திராவிட மற்றும் நீதிக்கட்சிகளின் ஒருசார்புத் தன்மையையும் கபட வேடங்களையும், நிலப்பிரபுத்துவ ஆதரவுப் போக்கையும் தோலுரிக்கவும் தயங்கவில்லை.

தன் வாழ்நாள் பூராவும் மக்களுக்காகவே வாழ்ந்த அந்த மாபெரும் பெண்மணி, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த பயன்பாட்டு வாதத்தாலும், ஆணாதிக்க சிந்தையாலும் , அதிகார போதையாலும், யந்திர கதியாகிப்போன அமைப்பு முறைகளாலும் கடைசிக் காலத்தில் கட்சியால் சரிவர நடத்தப்படவில்லை என எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணண் தனது மணியம்மையின் வரலாறு தொடர்பான நாவலான "பாதையில் பதிந்த அடிகளில்" குறிப்பிடும் அம்சம் நிச்சயம் ஆராயத்தக்கது.

வழக்கமான சுதந்திரப் போராட்ட வீராங்கனை போலல்லாமல் சாதித் தீண்டாமை, பெண்ணடிமை, தேச விடுதலை, வர்க்கப் போராட்டமென ஒரு தலைமைக்கான சகல அம்சங்களோடு போராடியதால் தான், மணியம்மை முக்கியத்துவமானவராகிறார். 1953 ஆம் ஆண்டு மான் முட்டி அவர் சாகும்வரை உறுதி மிகுந்த கம்யூனிஸ்ட்டாவே இருந்தார்.

"அம்மா" எனும் அற்புத வார்த்தை அசிங்கப்பட்டு நிற்கும் இந்தச் சூழலில் இத்தகு உண்மையான அம்மாக்கள் எங்கோ ஓர் மூலையில் மறைத்து வைக்கப் பட்டு விட்டார்கள்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 நவஜீவன் 2016-06-03 10:49
நல்ல பதிவு.
Report to administrator

Add comment


Security code
Refresh