மௌரியப் பேரரசின் தமிழக எல்லை :

 “பண்டைக்கால இந்தியா” என்கிற நூலை எழுதிய ஆர்.எஸ்.சர்மா என்பவர் இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் முதல் தலைவராக இருந்தவர். இவரது இந்த நூலை மாஜினி என்பவர் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த நூலில் 1986ல் இந்திய அரசின் பதிப்புரிமை பெற்ற ‘அசோகப் பேரரசு’ வரைபடம் வெளியாகியுள்ளது(பக்:212). இதன்படி அசோகப் பேரரசின் தெற்கு எல்லையானது கிழக்கில் வடபெண்னை ஆற்றில் உள்ள நெல்லூரையும் மேற்கில் கார்வார் என்கிற ஊருக்கு சற்று கீழும் உள்ளதாகத் தெரிகிறது. வடபெண்ணை ஆறுதான் தெற்கு எல்லையாக இருந்துள்ளது. இதன்படி சித்ரதுர்க்காவுக்குக் கீழ் உள்ள கர்நாடகத்தின் பாதிப்பகுதியும், கிட்டத்தட்ட கர்நாடகாவின் மேற்குக் கடற்கரை முழுவதும் தமிழகப் பகுதியாகவே இருந்துள்ளது. குடகு, மைசூர், மங்களூர், கார்வார் வரையான பகுதிகள் தமிழக எல்லைக்குள் இருந்துள்ளன. கீழே வரைபடத்தைப் பார்க்கவும். வரைபடத்தில் அட்சரேகையில், 14.5-15 டிகிரி வரை தமிழர்கள் பகுதியாக இருந்துள்ளது. ஆனால் கல்யாண் நகர் என்பது மேற்கில் 19 டிகிரியில் இருக்கிறது.

 அசோகப் பேரரசு – வரைபடம்

ஆதாரம் : பண்டைக் கால இந்தியா

ஆசிரியர் : ஆர்.எஸ். சர்மா தமிழில் : மாஜினி

பதிப்பு : ஜுன், 2004 பக்கம் : 212

வரைபடம் 1- சர்மா அவர்களின் நூலிலிருந்து எடுக்கப்பட்டது

mourya rule 546

 வரைபடம்-2 (விக்கிபீடியா) 

mourya rule 772

 அசோகன் கல்வெட்டுப்படி அவரது தெற்கு எல்லையாக தமிழக அரசுகளே இருந்துள்ளன. வரைபடம்-1 இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அசோகப் பேரரசின் வரைபடம் ஆகும் (அதன் நகல் தான் விக்கிபீடியா வரைபடம்-2 ஆகும்) இதில் கிழக்குப்பகுதி எல்லை வின்சென்ட் சுமித் குறிப்பிடும் எல்லையோடு ஒத்துப்போகிறது. ஆனால் மேற்குப் பகுதி எல்லை வின்சென்ட் சுமித் அவர்கள் குறிப்பிடும் எல்லையோடு ஒத்துப் போக வில்லை. வின்கென்ட் சுமித் அவர்கள் மேற்கு எல்லையாகக் கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் இருந்துள்ளதாகத் தெரிவிக்கிறார் (பக்: 64). அங்கு கல்யாண் என்ற நகர் இருக்கிறது. இது இன்றைய மும்பை நகருக்கு மேல் அமைந்துள்ளது. எனவே மேற்குப் பகுதியில் மும்பை நகரம் வரை உள்ள பகுதிகள் மட்டுமே மௌரியப் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளன என்பது தான் வின்சென்ட் சுமித் அவர்களின் கருத்தாகும். ஆகவே மேற்குத் தொடர்ச்சி மலையும், மேற்குக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளும் இன்றைய மும்பை நகர் வரை, அதாவது கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரை, தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்துள்ளன. அதாவது சுமார் 19 டிகிரி அட்சரேகை வரை மேற்குக்கரையில் தமிழ் அரசுகளின் எல்லை இருந்துள்ளது

 புகழ்பெற்ற “தக்காணப்பாதை” இந்த மேற்குக் கடற்கரை வழியாகச் சென்று கல்யாணுக்கு அருகில் உள்ள அன்றைய ‘பைத்தான்’ நகரோடு இணைக்கப்பட்டிருந்தது. இந்த நகரம் இன்றைய ஔரங்காபாத் நகருக்கு அருகில் உள்ளது. அன்று இந்த பைத்தான் நகரில் இருந்து தான் இந்தியாவின் வடநாட்டு நகரங்களுக்குச் செல்லும் பாதைகள் இருந்தன. அதனால் இந்தப் பைத்தான் வரையில் உள்ள தக்காணப்பாதை எனப்படும் வணிகப்பாதையை தமிழரசுகள் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருந்தனர் எனலாம். செருப்பாழிப் போருக்குப் பிந்தைய ஒப்பந்தப்படி இந்தக் கல்யாண் நகரம் வரை உள்ள பகுதிகள் தமிழரசுகளின் கீழ் விடப்பட்டிருக்க வேண்டும் என்பதை, ‘கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் மௌரியப் பேரரசின் தென்மேற்கு எல்லையாக இருந்தது’ என்கிற வின்சென்ட் சுமித் அவர்களின் கூற்று(பக்:64) உறுதி செய்கிறது. மேற்கு மலைத் தொடரை ஒட்டிய உள்நாட்டுப் பகுதிகள் மௌரியப் பேரரசுக்கு தரப்பட்டிருக்கலாம். கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரை உள்ள கடற்கரைப் பகுதிகள் தமிழரசுகளின் கீழ் விடப்பட்டிருக்க வேண்டும். வின்சென்ட் சுமித் தனது அசோகர் பற்றிய நூலில்(பக்:79), தென்னிந்திய நாடுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைப் பல நூற்றாண்டுகளாகப் பராமரித்து வந்துள்ளன எனவும் அதனால் மௌரியர்களிடமும் கடற்படை இருந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். அன்று ‘தென்னிந்திய நாடுகள்’ தமிழரசுகளே ஒழிய வேறு நாடுகள் இல்லை.

 எனவே அன்று தமிழரசுகள் வலிமை வாய்ந்த கடற்படைகளைக் கொண்டிருந்தன என்பது உறுதி. ஆனால் மௌரியப் பேரரசிடம் அது போன்ற கடற்படை இருந்தது என்பதைச் சொல்ல முடியாது என்கிறார் அவர். அதனால் தான் அதே நூலில் அதே பக்கத்தில் “கடற்படை இராணுவத்தின் ஓர் அங்கமாக இருந்தது என்பது பற்றிய ஆதாரங்கள் எதுவும் இல்லை” எனவும் தெரிவித்துள்ளார். எனவே, பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்த தமிழரசுகள் கல்யாணபுரி ஆறு வரையான மெற்குக் கடற்கரைப் பகுதிகளை வணிகத்துக்காகத் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர். இத்தரவுகள் நமக்குச் செருப்பாழிப் போரையும் மௌரியப் பேரரசுக்கெதிரான தமிழரசுகளின் வெற்றியையும் உறுதி செய்கின்றன.

 கிழக்குக் கடற்கரைப்பகுதியில் கலிங்க மன்னன் காரவேலனின் கி.மு. 165ஆம் ஆண்டுக் கல்வெட்டுப்படி கலிங்கத்தின் தென்கிழக்குப் பகுதியில் இருந்த கலிங்க அரசின் முன்னோர்களால் உருவாக்கப்பட்ட ‘பித்துண்டா’ என்கிற துறைமுக நகரம் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியின் கீழ் இருந்துள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. காரவேலன் அதனை வெற்றி கொண்டு கழுதை கொண்டு உழுதுள்ளான். தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியை அவன் 1300 ஆண்டுகளாக இருந்தது என்கிறான். குறைந்த பட்சம் மௌரியப் பேரரசுடன் போர்புரிந்த காலம் முதல் இருந்தது என எடுத்துக் கொண்டாலும் மௌரியப் பேரரசின் காலம் முதல் கலிங்கத்தின் ‘பித்துண்டா’ நகரம் தமிழரசுகளின் கீழ்தான் இருந்து வந்துள்ளது என்பது உறுதியாகிறது. வின்சென்ட் சுமித் அவர்களின் கூற்றுப்படி பல நூற்றாண்டுகளாக மிகப் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்த தமிழரசுகள் கிழக்குப் பகுதியில் பித்துண்டா நகரத்தையும் மேற்குப் பகுதியில் கல்யாண் நகரத்தையும் தங்கள் கீழ் வைத்திருந்தனர் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவே உள்ளது. இதனைக் காரவேலன் கல்வெட்டும் உறுதி செய்கிறது எனலாம்.

 மைசூர்ப் பகுதிகளில் அசோகரின் தூபங்கள் இருப்பதால் அப்பகுதி அசோகப் பேரரசின் கீழ் இருந்துள்ளது என்பது ஒரு தவறான கருத்து என்பதை இந்திய அரசின் ‘அசோகப் பேரரசு’ குறித்த வரைபடம் உறுதி செய்கிறது. மைசூரில் மட்டுமல்ல, மதுரையிலும் அசோகரின் தூபங்கள் இருந்துள்ளன. ஆகவே அதனைக் கொண்டு அப்பகுதிகள் அசோகப் பேரரசின் கீழ் இருந்தன எனக்கருத முடியாது. தமிழரசுகளிடமிருந்த வலிமை வாய்ந்த கடற்படைகள், மௌரியப் பேரரசுக்கு எதிரான தமிழரசுகளின் வெற்றிக்கு ஒரு முக்கியக் காரணியாக இருந்துள்ளது. அப்போருக்குப்பின் இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரையின் பெரும்பகுதி தமிழரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தது.

 இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதியில் ‘நறவு’ எனப்படும் இன்றைய மங்களூர்த் துறைமுகம்வரை சேரர்கள் நேரடியாக ஆட்சி செய்தனர். பின் அன்றைய ஏழிற்குன்ற கொண்காணா நாட்டுப் பகுதியான இன்றையத் துளுநாட்டை நன்னர்கள் ஆண்டனர். இவர்கள் சேரர்களின் படைத்தலைவர்களாகவும் தமிழக வேளிர்களாகவும் இருந்தனர். சங்க காலத்தில் இவர்களின் ஆட்சிப்பகுதி கர்நாடகத்தின் மேற்குக்கடற்கரைப் பகுதி முழுமையயையும் கொண்டிருந்தது. அதன் வட எல்லை வானவாற்றின் (சிராவதி ஆறு) முகத்துவாரமாக இருந்தது.

 மேற்குலக வெளிநாட்டுப்பயணி தாலமி அவர்களின் கி.பி.2 ஆம் நூற்றாண்டுக் குறிப்புப்படி சேரர்களின் வடக்கு எல்லை என்பது வானவாறு (சிராவதி) என்பது தெளிவாக உள்ளது எனவும், வானவாற்றுக்கு அருகில் இருக்கும், பண்டையப் பாழி நகரான இன்றைய பாட்கல் (Bhatkal) என்கிற ஊரில் இருக்கும் கோயிலில் இரு தமிழ்கல்வெட்டுகள் இருப்பது இதனை உறுதி செய்கிறது எனவும், ஔவை துரைசாமி பிள்ளை அவர்கள் தனது சேரர் வரலாறு என்கிற நூலில் தெரிவித்துள்ளார்.(பக்:14,16,20). கனோவர் நகர் அமைந்துள்ள வானவாற்றின் வடபகுதி முதல், அதற்கு வடக்கே உள்ள கல்யாண் (Kalyan) நகர் வரை உள்ள இடைப் பகுதியில் கடம்பர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. சேரர்களின் முன்னோர்கள் கடம்பர்களை வானவாற்றுக்கு வடக்கே துரத்தியடித்து, வானவாற்றைத் தங்கள் வட எல்லையாகக் கொண்டனர். அதனால் தான் அவர்கள் வானவரம்பன் என்ற பெயர் பெற்றனர் என்கிறார் ஔவை துரைசாமி பிள்ளை அவர்கள் (பக்:43-46). அதாவது இன்றைய சிராவதி ஆறு(வானவாறு) முதல், மும்பை நகருக்கு மேல் பகுதியில் உள்ள கல்யாண் நகர் வரை உள்ள பகுதியைக் கடம்பர்கள் ஆண்டனர் எனலாம்.

 இந்தக் கடம்பர்களின் ஆட்சிக்கு வடக்கே இருந்த பகுதிகளே மௌரியப் பேரரசின் கீழ் இருந்தன. கடம்பர்கள் அவ்வப்போது தமிழ் அரசுகளின் வணிகத்தில் குறுக்கீடு செய்தாலும் தமிழரசுகளால் அடக்கி ஒடுக்கி வைக்கப் பட்டவர்களாகவும், சேர அரசுக்குத் திறை செலுத்தி வருபவர்களாகவும் இருந்தனர். இமய வரம்பன் நெடுஞ்சேரலாதனும் சரி, சேரன் செங்குட்டுவனும் சரி அவர்களை வென்று அடக்கித் தங்களது கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதைச் சங்க இலக்கியம் தெரிவிக்கிறது. இவர்களின் காலம் கி.மு. 4ஆம் 3ஆம் நூற்றாண்டுகள் ஆகும். அதாவது மௌரியப் பேரரசின் காலமாகும். ஆகவே மேற்கே கல்யாணி ஆற்றின் முகத்துவாரம் வரை மட்டுமே மௌரியப் பேரரசின் எல்லை இருந்தது என்கிற வின்சென்ட் சுமித் அவர்களின் கூற்று இத்தரவுகளால் மேலும் வலுப்படுகிறது.

 கிழக்குக் கடற்கரைப் பகுதியில் கலிங்கத்தின் பித்துண்டா நகர் தமிழரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது என்பதை கலிங்க மன்னன் காரவேலனின் கல்வெட்டு உறுதி செய்கிறது என்பதை முன்பே பார்த்தோம். ஆகவே, மௌரியப் பேரரசின் எல்லை என்பது மேற்குப் பகுதியில் கல்யாணி ஆற்றின் முகத்துவாரம் வரையும், கிழக்குப் பகுதியில் வடபெண்னையாற்றின் முகத்துவாரத்தில் இருந்த நெல்லூர் வரையும் இருந்துள்ளது என்ற வின்சென்ட் சுமித் அவர்களின் கூற்று(பக்:64), மேற்கண்ட தரவுகளால் உறுதி செய்யப்படுகிறது எனலாம். இவைகளைக் கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது மட்டுமே மாமூலனார் அவர்கள் தனது அகம் 31ம் பாடலில் கூறிய,

 “தமிழ்கெழு மூவர் காக்கும்

மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே” என்ற பாடல்வரிகள் எவ்வளவு உணமை என்பதை உணர முடியும். இவர் ஒரு வரலாற்றுப் பெரும்புலவர். இவரது அகப்பாடலில் வருகிற இக்கூற்றில் ஐயம்கொள்ள முடியாது. பொருள் தேடிச் சென்ற தலைவன் மொழிபெயர்தேயம் எனப்படும் தக்காணப் பகுதியில் உள்ள பல மலைகளைக் கடந்து சென்றான் எனவும், அத்தக்காணப் பகுதியும் அதன் மலைகளும் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்டு வந்தது எனவும் மாமூலனார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

 மொழி பெயர் தேயம் என்பது பிற மொழி பேசும் தேயங்கள் அல்ல. தமிழ் மொழி சிறிது சிறிதாகத் தேய்ந்து, மாற்றமடைந்து கொடுந்தமிழ் பேசும் பகுதிகளாக இருந்தவைகளே மொழி பெயர் தேயங்கள் ஆகும். தக்காணப் பகுதியில் கொடுந்தமிழ்தான் பேசப்பட்டது என்பதற்கு அப்பகுதியை ஆண்ட சாதவகன்னர்களின் இரு மொழி நாணயங்களில் உள்ள தமிழி எழுத்துக்களே சான்றாகும். இந்த நாணயங்களில் ஒரு பக்கம் பிராகிரதமும் இன்னொரு பக்கம் தமிழும் உள்ளன. அன்று தமிழ், பிராகிருதம் ஆகிய இரண்டும் சாதவகன்னர்களின் ஆட்சி மொழியாக இருந்தன என்பதை இந்நாணயங்கள் உறுதி செய்கின்றன. மேலும் ஆந்திரம், கர்நாடகம், மராட்டியத்தின் தென்பகுதி ஆகிய பகுதிகளில் சங்க காலத்தில் கொடுந் தமிழ்தான் பேசப்பட்டது என்பதையும் இந்நாணயங்கள் உறுதி செய்கின்றன.

 திராவிடம் என்கிற மொழி இருக்கவில்லை. தமிழ் தான் இருந்தது. தமிழில் இருந்து தான் கன்னடமும், தெலுங்கும், துளுவும் பின் மலையாளமும் பிரிந்து சென்றன. துளு நாட்டை நன்னன் என்கிற தமிழ் மன்னனே ஆண்டான். அங்கு அப்பொழுது தமிழ் தான் பேசப்பட்டது. மலையாளப்பகுதி சேரர்களின் நாடாக இருந்தது. அங்கும் தமிழ் தான் பேசப்பட்டது. எனவே சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் தென்னிந்தியா முழுவதும் தமிழே பேசப்பட்டது. முதலில் வடமொழி ஆகிய பிராகிரதத்தோடும், பின் சமற்கிருதத்தோடும் சேர்ந்து, தமிழ்மொழி கர்னாடகம், தென்மராட்டியம், ஆந்திரம் போன்ற பகுதிகளில் கொடுந்தமிழாக மாறியது. பின்னர் இக்கொடுந்தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம் முதலிய மொழிகள் உருவாகின. பின் துளுவும் மழையாளமும் தோன்றின.

 தக்காணம் என்கிற மொழிபெயர் தேயம், தமிழ் மூவேந்தர்களின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்தது என்கிற மாமூலனார் அவர்களின் கூற்று, “தமிழக அரசுகள் மௌரியப் பேரரசை வெற்றி கொண்டன” என்பதை உறுதிப் படுத்துகிறது. மேலும் மேற்கில் கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரம் வரையிலும், கிழக்கில் வடபெண்ணை ஆற்றின் கரையில் உள்ள நெல்லூர் வரையிலும் மௌரியப் பேரரசின் எல்லை இருந்தது என்கிற வின்சென்ட் சுமித் அவர்களின் கூற்றையும் அது உறுதி செய்கிறது. மேலும் மாமூலனார் கூறியதையும் காரவேலனின் கல்வெட்டில் உள்ளதையும் சேர்த்துப் பார்க்கும்பொழுது கிழக்கே பித்துண்டா நகரமும் மேற்கே கல்யாண் நகரமும் தமிழரசுகளின் பாதுகாப்பு அரண்களாக இருந்தன என்பதும் உறுதியாகிறது.

 ஆர். எஸ். சர்மா அவர்களின் பண்டைக்கால இந்தியா என்கிற அதே நூலில் பக்கம் 263ல் “சுமார் கி.பி.150ல் இந்தியா” என்கிற மற்றொரு வரைபடம் தரப்பட்டுள்ளது. இதுவும் 1986ல் இந்திய அரசின் பதிப்புரிமை பெற்ற, மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட வரைபடமாகும். இதன்படி சாதவகன்ன அரசின் தென் எல்லை, மராட்டியத்தில் உருவாகி ஆந்திராவில் வங்காள விரிகுடாவில் சேரும் கிருட்டிணா நதியின் ஆரம்பம் முதல் அதன் முகத்துவாரத்தில் உள்ள மசூலிப்பட்டினம் வரை மட்டுமே இருந்துள்ளது. அவ்வாற்றின் தென்பகுதியில் உள்ள மராட்டியத்தின் தென்பகுதியும், கர்நாடகம் முழுவதும், ஆந்திராவின் பெரும்பகுதியும் யார் கட்டுப்பாட்டில் இருந்தன என்பது வரைபடத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் கீழ்பகுதியில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் மட்டும் குறிப்பிடப் பட்டுள்ளன.

 சுமார் கி.பி.150ல் இந்தியா

ஆதார நூல் : பண்டைக் கால இந்தியா & விக்கிபீடியா

ஆசிரியர் : ஆர்.எஸ். சர்மா தமிழில் : மாஜினி

பதிப்பு : ஜுன், 2004 பக்கம் : 263

குறிப்பு : சர்மா நூலில் உள்ள வரைபடத்திற்குப் பதிலாக இவ்வரைபடம் விக்கிபீடியாவிலிருந்து எடுக்கப்பட்டது.

 பண்டைக் கால இந்தியா – கி.பி. 150 (விக்கிபீடியா)

india 150

   சாகர்களின் (Satrats) அரசு மும்பையின் கீழ் பகுதி வரை இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. இங்கும் கல்யாண் ஆறு வரை தமிழக அரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இப்பகுதிகள் இருந்திருக்க வேண்டும். மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின் சாதவாகன அரசு உருவான பொழுது கிருட்டிணா நதி வரையிலான தக்காணப் பகுதிகள் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியின் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரப்பட்டு, கிழக்கு எல்லையாகக் கிருட்டிணா நதியின் முகத்துவாரமும், மேற்கு எல்லையாகக் கல்யாணபுரி ஆற்றின் முகத்துவாரமும் இருந்திருக்க வேண்டும். அதைத்தான் இவ்வரைபடம் காட்டுகிறது எனலாம். அதாவது மராட்டியத்தின் தென்பகுதியும், கர்நாடகம் முழுவதும் ஆந்திராவின் பெரும்பகுதியும் தமிழரசுகளின் கட்டுப்பாட்டில்தான் இருந்துள்ளன என்பதை இவ்வரைபடம் மறைமுகமாகத்தெரிவிக்கிறது.

 முதல் படம், அசோகன் காலத்தில் தமிழரசுகளின் வட எல்லையாக வடபெண்ணை நதியைக் காட்டுகிறது எனில், இரண்டாவது வரைபடம் அசோகனுக்குப்பின் சாதவாகனர்கள் தனியரசாக ஆகிய பின், தமிழரசுகளின் வடஎல்லையாகக் கிருட்டிணாநதியைக் காட்டுகிறது. அதாவது தமிழக அரசின் எல்லை சாதவாகனர்கள் தனி அரசாக ஆகியபோது விரிவு படுத்தப்பட்டு விட்டது என்பதை இவ்விரு படங்களும் தெளிவாகக் காட்டுகின்றன. தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியின் ஆதரவோடுதான் சாதவாகனர்கள் தங்கள் தனி அரசை உருவாக்கிக் கொண்டனர் என்பதையும் சேரன் செங்குட்டுவனின் படையெடுப்பு தான் சாதவாகனர்கள் தங்கள் தனி அரசை உருவாக்கிக் கொள்ளக் காரணம் என்பதையும் இத்தரவுகள் உறுதி செய்கின்றன.

 இந்த மொழிபெயர் தேயப் பகுதிகளில், இருந்த சிற்றரசுகள் அனைத்தும் தமிழரசுகளின் ஐக்கிய கூட்டணியின் கட்டுப்பாட்டின் கீழ்தான் இருந்திருக்க வேண்டும். இவை தமிழக ஐக்கியக்கூட்டணி அரசுகளுக்குத் திறை செலுத்தி வந்திருக்க வேண்டும். அவை திரை செலுத்தாத போது தமிழக அரசுகள் படையெடுத்துச் சென்று திரைபெற்றன. தேவையானால் ஆட்சியாளரையும் மாற்றியமைத்தன. அதற்கான சான்றுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன. கி.பி.200 வரை இந்நிலை நீடித்தது. அதன்பின் தமிழக அரசுகள் அழிந்து போயின. சாதவாகன அரசும் அழிந்து போனது.

 சங்ககாலத்தில் தமிழரசுகள் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தன என்பதால்தான் இந்தியாவின் கிழக்கு மேற்கு கடற்கரை களையும் அதனை ஒட்டிய நிலப்பரப்புகளையும் தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருக்க முடிந்தது. மாறோக்கத்து நப்பசலையார் என்கிற பெண்பாற் புலவர், மலையமான் குறித்தத் தனது பாடலில்(பு-126)

“சினமிகு தானை வானவன் குடகடல், பொலந்தரு நாவாய் ஓட்டிய அவ்வழிப் பிறகலம் செல்கலாது அனையேம்” எனச் சேரர் குறித்துக் கூறியதும், வெண்ணிக் குயத்தியார் என்கிற பெண்பாற்புலவர் சோழன் கரிகாலன் குறித்தத் தனது புறம் 66ஆம் பாடலில்,

 “நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி, வளிதொழில் ஆண்ட உரவோன் மடுக”

 எனச் சோழர் குறித்துக் கூறியதும் தமிழர்கள் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தனர் என்பதை உறுதி செய்கின்றன. மேற்குக் கடற்கரையின் கடற்பகுதிகளில் சேரர்களின் பெருங்கப்பல்கள் போன பகுதிகளில் பிறருடைய கப்பல்கள் போகாது என்கிறார் மாறோக்கத்து நப்பசலையார். காற்றின் தொழில்நுட்பம் அறிந்து அதனைக் கட்டுப்படுத்தி பெருங்கப்பல்களை இயக்குகின்ற மரபில் வந்த சோழர்கள் கிழக்குக் கடற்கரையின் கடல் பகுதிகளில் காலம் காலமாக பெருங்கப்பல்களை ஓட்டி ஆதிக்கம் செலுத்தி வருபவர்கள் என்கிறார் வெண்ணிக் குயத்தியார். எனவே தமிழர்கள் பெரும் கடற்படைகளைக் கொண்டிருந்தனர் என்கிற வின்சென்ட் சுமித் அவர்களின் கூற்றை இச்சங்கப் பாடல்களும் எதிரொலிக்கின்றன.

(தொடரும்)

- கணியன் பாலன், ஈரோடு

Pin It