ஆங்கிலேயர் ஆட்சி இந்திய மக்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் உப்பையும் விட்டு வைக்கவில்லை. உப்புக்கும் வரி விதித்தது. அதனால் உப்பு விலை ஏறியது. இங்கிலாந்து நாட்டிலிருந்து வணிகக் கப்பல்கள் மூலம் உப்பு மூட்டை ஏற்றி வந்து இந்தியாவில் இறக்கியது. மலிவு விலையில் உப்பு விற்கப்படும் என அறிவித்தது.

ஏழை எளிய மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் உப்பிலேயே கைவைத்தனர் வெள்ளையர். இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும் எனப் பொங்கி எழுந்து, போர்க்கொடி தூக்கினார் மகாத்மா காந்தியடிகள். வரி கொடுக்காமல் உப்பினை அள்ளும் போராட்டத்தை அறிவித்து, 1930 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12-ஆம் நாள் சபர்மதி ஆசிரமத்திலிருந்து தொண்டர்களுடன் தண்டி யாத்திரை தொடங்கினார்; இருபத்து ஏழு நாட்கள் நடந்து தண்டியில் சட்டத்தை மீறி உப்பு எடுத்து மாபெரும் எழுச்சியை உருவாக்கினார்.

தமிழ் நாடு காங்கிரஸ் தலைவராக விளங்கிய மூதறிஞர் இராஜாஜி, தமிழகத்தில் உப்பு எடுக்கும் போராட்டத்தை அறிவித்தார். அப்போராட்டத்திற்கு தளபதியாக அ.வேதரத்தினத்தை நியமித்தார்.

உப்பு எடுக்கும் யாத்திரை திருச்சியிலிருந்து 13.04.1930 ஆம் நாள் புறப்பட்டது. `வந்தே மாதரம்’ முழக்கத்துடன், தேசியக்கவி பாரதியின் பாடல்களுடன் வீறுநடை போட்டது தொண்டர்படை.

உப்பு யாத்திரையை தடுத்து நிறுத்திட வெள்ளையர் ஆட்சி கடுமையான ஒடுக்குமுறைகளை மேற்கொண்டது. காவல்துறை மூலம் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. `இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்’ என்ற கொடுமை கோலோச்சியது. யாத்திரையில் கலந்து கொண்டுள்ள தொண்டர்களுக்கு சாப்பிட உணவு வழங்கக் கூடாது; குடிக்கத் தண்ணீர் கொடுக்கக் கூடாது; மீறினால் கடும் தண்டனை அளிக்கப்படும் என மிரட்டல் விடுக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தின் அப்போதைய வெள்ளைக்கார ஆட்சித் தலைவர் ஜே. ஏ தாரன் என்பவர், சத்தியாகிரகிகளைக் குண்டாந்தடி கொண்டு தாக்கிட உத்தரவிட்டார். உப்புப் போராட்டத் தொண்டர்களை வரவேற்று உணவளித்து, உபசரித்து தங்க வைத்ததற்காக தென்பாதி நாயுடு கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டார்.

ஆனால், வெள்ளையர்களின் அடக்குமுறைகளையும், மிரட்டல்களையும் மீறி, மக்கள் மறைமுகமாக சத்தியாகிரகிகளுக்கு உணவு அளித்தனர். இதற்கெல்லாம் ஊர் ஊராகச் சென்று ஏற்பாடு செய்தவர் வேதரத்தினம்!

நூற்றைம்பது மைல் நடந்து 28.04.1930 ஆம் நாள் திருமறைக்காட்டினைச் (வேதாரண்யம்) சென்றடைந்தனர் சத்தியாகிரகிகள். அங்கு போராட்டத் தளபதியாக விளங்கிய வேதரத்தினம் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்பொதுக் கூட்டத்தில் இராஜாஜி உப்பு எடுக்கும் போராட்டம் குறித்து உரையாற்றினார்.

வெள்ளைக்காரக் காவல்துறையினரின் அடக்குமுறைகளைப் புறந்தள்ளிவிட்டு முதல் சத்தியாகிரகியாக இராஜாஜி 30.04.1930 அன்று விடியற்காலை மூன்று மணிக்கு வெள்ளை உப்பை வெள்ளையருக்கு எதிராக அள்ளினார். கைது செய்தது காவல்துறை. அடுத்து க.சந்தானம் தலைமையேற்று உப்பை அள்ளினார். அவரும் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டார். அடுத்த நாள் மட்டப்பாறை வெங்கட்ராம ஐயர் தலைமையேற்று உப்பை அள்ளினார். அவரும் கைது செய்யப்பட்டார்.

ஆத்திரம் கொண்ட வெள்ளையர்களின் காவல்படை சத்தியாகிரகிகள் தங்கியிருந்த முகாம் மீது தாக்குதல் தொடுத்து, தொண்டர்களை அடித்தது, மண்டையைப் பிளந்தது; முகாமை பிய்த்து எறிந்தது. மேலும், வேதரத்தினத்தின் உப்பளங்களைப் பறிமுதல் செய்தது. அதோடு அவரது உடைமைகளை ஏலம்விட்டது.

'மன்னிப்பு எழுதிக் கொடுத்தால் விடுவிப்பதாக’ காவல் துறை ஆசை காட்டியது. வேதரத்தினத்தின் தந்தை அப்பாகுட்டி பிள்ளையிடமும் காவல் துறை ஆசை வார்த்தை கூறியது. அதற்கு, "என் மகன் மன்னிப்புக் கேட்டு, அவமானப்பட்டு சிறையிலிருந்து வெளியே வருவதைவிடச் சிறையிலிருப்பதே மேல்" என்றார். ஆறு மாதம் சிறைத் தண்டனையை அனுபவித்து விடுதலையானார்.

திருநெல்வேலியில் 19.12.1931 ஆம் நாள் நடைபெற்ற முதலாவது விவசாயிகள் – தொழிலாளர்கள் மாநாட்டில், உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தை வழிநடத்தி வெற்றிகரமாக்கியதைப் பாராட்டி, தீரர் வேதரத்தினத்திற்கு, 'சர்தார்’ என்றும் பட்டம் அளித்துப் பெருமைபடுத்தினர்.

தமது இருபதாவது வயதில் காந்தியடிகளால் அரசியலில் ஈர்க்கப்பட்டு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் தீவிரமாகப் பாடுபட்டார் வேதரத்தினம்.

"சர்தார் ஓர் உண்மையான காந்தியவாதி. அதைத் தம் வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்தவர். தூய்மையான தேசபக்தராக விளங்கியவர்"-என பொள்ளாச்சி நா.மகாலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

தேசவிடுதலையே தமது இலட்சியமாகக் கொண்டு தொண்டாற்றிய சர்தார் வேதரத்தினத்தின் பெயர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்!