கிறித்துவ சமயத் தொண்டாற்ற அயல்நாட்டிலிருந்து தமிழகத்திற்கு வந்து, தமிழ் மொழிக்கு தொண்டு புரிந்தவர் ‘சார்லசு தியாப்பலசு இவால்டு இரேனியசு’.

இவால்டு இரேனியசு ஜெர்மன் நாட்டில் 1789 ஆம் ஆண்டு பிறந்தார். அந்நாட்டில் சில ஆண்டுகள் அரசுப் பணி புரிந்தார். பின்னர், பெர்லின் லுத்துநன் இயக்கத்தில் சேர்ந்து பயின்று குரு பட்டம் பெற்றார். இங்கிலாந்து நாட்டிற்குச் சென்று ஒன்றரை ஆண்டுகள் கிறித்துவ சமயத் தொண்டாற்றினார்.

தமிழகத்தின் தலைநகரான சென்னை 1814 ஆம் ஆண்டு வந்தார். முகவை இராமானுச கவிராயரிடம் ஐந்து ஆண்டுகள் தமிழ் பயின்றார். பாளையங்கோட்டைக்கு 1820 ஆம் ஆண்டு சூலைத் திங்கள் சென்றார். அங்கு பதினெட்டு ஆண்டுகள் கிறித்துவ சமயப் பணியாற்றினார்.

அறியாமையில் மூழ்கிக் கிடந்த மக்களுக்கு அறிவு வெளிச்சம் கிடைத்திட பள்ளிகள் பலவற்றை ஏற்படுத்தினார் இவால்டு இரேனியசு! ஆண்களோடு பெண்களும் கல்வி கற்று சிறந்து விளங்கிட வேண்டுமெனும் உயர் எண்ணம் கொண்டு, பாளையங்கோட்டையில் முப்பத்தாறு மாணவியர்களைக் கொண்டு ஒரு பள்ளியைத் தொடங்கினார். அப்பள்ளி வளர்ச்சி பெற்று இன்று ‘சாராக்கர் கல்லூரியாக’ சிறந்து விளங்குகிறது.

‘தரும சங்கம்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தி, அதன் மூலம் கிராமப்புற குழந்தைகள் கல்வி பெற்றிட ஏழைகளுக்காக‌ பல பள்ளிகளை ஏற்படுத்தினார்.

‘எழுத்தாளர் சங்கம்’ என்னும் ஒரு அமைப்பை அக்காலத்திலேயே ஏற்படுத்தினார். அதன் வாயிலாக துண்டு வெளியீடுகளையும், நல்ல நூல்களையும் வெளியிடப் பெரிதும் பாடுபட்டார் இவால்டு இரேனியசு! கணவனை இழந்த பெண்கள் வாழ்க்கையில் முன்னேற பொருளுதவி அளித்தார்.

பாளையங்கோட்டையில் தங்கி கிறித்துவ சமயப் பணி ஆற்றியதுடன், தமிழ்ப் புலமைமிக்க திருப்பாற் கடல் நாதன் என்பவரிடம் பதினான்கு ஆண்டுகள் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களைத் தெளிவாகக் கற்றார். தமிழ் மொழியில் இனிமையாகச் பேசவும், நன்றாக எழுதவும் திறமைபெற்றார். தமிழில் புலமை பெற்று விளங்கினார்.

விவிலிய நூலான ‘புதிய ஏற்பாட்டைத்’ தமிழ் மொழியில் மொழி பெயர்த்தார். மேலும், தமிழ் இலக்கணத்தைக் கற்றுக் கொள்ளும் வகையல், ‘தமிழில் எழுத்தியல்’, ‘தமிழில் சொல்லியல்’, ‘தமிழில் தொடரியல்’, என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டு இலக்கண நூலை எழுதி வெளியிட்டார். இதனுடன் இனிய எளிய உரைநடையில் தமிழ் நூல்கள் பலவற்றையும் படைத்தளித்தார்.

ஜெர்மன் நாட்டில் பிறந்து இங்கிலாந்து நாட்டில் பயின்று, தமிழகம் வந்து, தமிழ்மொழி கற்று சமயத் தொண்டும், தமிழ்த் தொண்டும் ஆற்றிய ‘சார்லசு தியாப்பலசு இவால்டு இரேனியசு’ தமது நாற்பத்து எட்டாவது வயதில் 1838 ஆம் ஆண்டு சூன் திங்கள் 5 ஆம் நாள் இயற்கை எய்தினார். இவரது கல்லறை முருகன் குறிச்சி என்னும் ஊரில் அமைந்துள்ளது.

Pin It