மதுரையில் சங்கப்பலகை இருந்தது.  பொற்றா மரைக் குளத்தில் மிதந்த அது புலவர்களின் நூல் களைத் தக்கதெனில் ஏற்றுக்கொள்ளுமென்றும் தவறான நூல்களைத் தண்ணீரில் தள்ளிவிடு மென்றும் பழஞ்சங்க காலத்திலிருந்தே கதை ஒன்று சரித்திரம் போலப் பேசப்பட்டு வருகின்றது.

மதுரையும் அப்படித்தான்.  வருகிறவர்களை யெல்லாம் அது வாழ வைக்கிறது.  ஏற்றுக்கொள் கிறது.  தவறான மனிதர்களைப் புறக்கணித்து விடு கிறது.  கூடல்மாநகரென்றும் மாடமலி தென் மதுரையென்றும் அழைக்கப்படுகிற மதுரையில் காலங்கள் தோறும் ஏதாவது ஒரு மதமோ, மார்க்கமோ செல்வாக்குப் பெற்றுக் கொண்டே இருக்கிறது, அவ்வளவுதான்: மதங்களுக்கும் உள்ளூர் அமைப்பு, நகர அமைப்பு, மாவட்ட அமைப்பு, தேச அமைப்பு, உலகத் தலைமைப்பீடம் என்று படி நிலைகள் உள்ளன.
 
முந்தைய பாண்டிய மன்னர்களின் ஆட்சிகளில் வைதீக மதமும் பின் வந்த காலங்களில் சமணமும் பௌத்தமும் கோலோச்சின.  பிறகு சில காலங்களில் ஆசீவகமும் இருந்தது.  ஒத்தக்கடை யானை மலை, அரிட்டர் என்ற பௌத்த பிட்சு பெயரிலமைந்த அரிட்டாபட்டி மலை, கீழக்குயில்குடி மலை, திருப்பரங்குன்றம் மலை, ஆவியூர் குரண்டிமலை, வளவுக்குன்றம் முதலான எண் பெருங்குன்றங்களில் தங்கிச் சமணர்கள் கற்படுகைகள் அமைத்தும், சிற்பங்கள் செதுக்கியும் நீதி நூல் உரைத்தும் சமணத் தமிழ் வளர்த்தனர்.  பௌத்த சமய அடையாளங்கள் சமண அடையாளங்களாக மாற்றப்பட்டன.
 
சமண வளர்ச்சி சைவர்களை உறுத்தவே சீர்காழியிலிருந்து ஞானசம்பந்தர் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் சைவம் நிலை நாட்ட மதுரைக்கு வந்தார்.
 
மொகலாயர் காலத்தில் இஸ்லாம் மதுரைக்குப் பரவியது.  கி.பி.1310 முதல் 1370 முடிய மதுரை சுல்தானியர் ஆட்சியின் கீழ் இருந்தது.  அலாவூதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் மதுரைக்குப் பல முறை படை எடுத்து வந்ததாக வரலாறு பேசுகிறது.
 
மன்னர் ஒளரங்கசீப், அலாவூதீன்கில்ஜி, தளபதி மாலிக் காபூர் ஆகியோர் மதுரை ஆதீனம், (சைவ சமய பீடம்) வந்து 237-ஆம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மித்தி யேஸ்வரர் 238-ஆம் ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ வேலாயுத ஞானசம்பந்த தேசிகபரமாச்சாரியார் முதலி யோரைச் சந்தித்துப் பேசியதாகவும், அச்சந்திப்பின் போது ஆதீனத்திற்குப் பல்வேறு தங்கம், வெள்ளிப் பொருட்களையும் ஆதீனப் பயன் பாட்டிற்காக இரண்டு உயர்ஜாதி ராஜஸ்தான் புரவிகளையும் வழங்கினர் என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தனது மதுரை ஆதீனம் 2007 என்ற நூலில் (பக்கம் 79) குறிப்பிடுகிறார்.
 
விஜய நகர மன்னர்கள் மதுரையின் மீது படை எடுத்தபோது தளபதியாக வந்தவர் கம்பன்ன உடையார், 1378இல் மதுரை சுல்தான் சிக்கந்தர் ஷாவை திருப்பரங்குன்றம் மலைப்போரில் வென்றார்.  மன்னரின் மெய்க்காப்பாளர் வாசிம் என்பவர் கொல்லப்பட்டார்.  சிக்கந்தர்ஷாவையும் வாசீமையும் திருப்பரங்குன்றம் மலையில் அடக்கம் செய்தனர்.  இதனால் மேற்படி மலைக்கு சிக்கந்தர் மலை என முஸ்லீம்கள் பெயர் சூட்டி அழைக்கின்றனர்.  மலையின் கீழ் முருகன் கோவில் இருப்பதால் இதனை இந்துக்கள் ஸ்கந்தர் மலை என்று அழைத்தனர்.
 
விஜய நகர மன்னர்கள் ஆட்சி முடிவில் மதுரையில் நாயக்கர் ஆட்சி பிறந்தது.  திருமலை நாயக்கர், இராணி மங்கம்மாள் ஆகியோர் ஆண்டனர்.  நாயக்கர் ஆட்சி முடிவில் 1801இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி பிறந்தது.
 
திருமலை நாயக்கர் காலத்தில் மதுரையில் சௌராஷ்டிரர்களும் நாயக்கர்களும் செல்வாக்காக இருந்தனர்.  இந்து, முஸ்லீம், கிறித்தவம் என்று சமய பீடங்கள் இருந்தன.  பிராமணர்கள் தலை மைக்கு மிகவும் நெருக்கமாகச் செல்வாக்குப் பெற்றிருந்தனர்.  மன்னருக்கு 200 மனைவியர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
 
குஜராத்தின் கூர்ஜரம் பகுதியில் இருந்து சௌராஷ்டிரர்கள் தமிழ்நாட்டில் மதுரை, கும்ப கோணம் பகுதியில் குடியமர்த்தப்பட்டிருந்தனர்.  திருமலை நாயக்கர் காலத்தில் அரண்மனையைச் சுற்றிலும் இவர்களே இருந்தனர்.  பட்டு நூல், நெசவு, ஆடைகள் நெய்வது இவர்களின் தொழிலாக இருந்தது.
 
17-ஆம் நூற்றாண்டில் நாயக்கர்கள் ஆட்சிக் காலத்தில் மதுரையின் ஜனத்தொகை 1,37,000 பேர்களாக இருந்தது.  இவர்களில் 18 ஆயிரம் பேர் கிறிஸ்தவர்கள்.கிறிஸ்தவர்களில் ரோமன் கத்தோலிக்கர்களும் சீர்திருத்தக் (பிராட்டஸ்டண்டு) கிறிஸ்தவர்களும் இருந்தனர்.  பின்னரே பெந்தகொஸ்தேக்கள் தோன்றினர்.
 
ரோமன் கத்தோலிக்கர்கள் கன்னிமரியாளுடன் இயேசுநாதருக்கு முக்கியத்துவம் அளித்து ஆரா தனைகள், உருவ வழிபாடுகள் செய்தனர்.  பாவ மன்னிப்புக்களை வழங்கினர்.
 
பிராட்டஸ்டண்டுகள் இயேசுவுக்கே முக்கியத் துவம் அளித்து, வழிபட்டனர்.  பின் பைபிள் வாசிப் பிற்கும் பைபிளைப் பரப்புவதிலும் முக்கியத்துவம் கொடுத்தனர்.
 
பெந்தகொஸ்தேக்கள் ஆவி வணக்கம் செய்தனர்.
 
17-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் ரோமன் கத்தோலிக்க சபைகளுக்கு எதிரான நிலை தோன்றியது.  கிறித்தவர்கள் இரண்டாகப் பிரிந்தனர்.  மார்டின் லூதர் கிங் போன்றவர்கள் இதில் தீவிரமாக இருந்தனர்.
 
மதத்தில் சீர்திருத்தம்ட்-ட்க்ம்8344 என்ற முழக்கத்தோடு இவர்கள் செயல்பட்டனர்.  திருவாளர் பிரௌன் தலைமையில் திரண்ட இவர்கள் தனிப்பட்டோர் என்றும் பிரௌனிஸ்டுகள் என்றும் அழைக்கப் பட்டனர்.
 
இவர்கள் புதிய இங்கிலாந்து சபைகளை நிறுவியபோது இங்கிலாந்தில் சமயப்புரட்சி வெடித்தது.  இதனால் இவர்கள் வெளியேறி அமெரிக்கா சென்றனர்.  1810-இல் இவர்கள் அமெரிக் காவில் எழுச்சியாக இருந்தனர்.  அமெரிக்கா சென்றதைப் புனிதப் பயணம் என்று கூறினர்.  ஜான்.டி.ராக்பெல்லர் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
 
கீழை நாடுகளிலும் பணி செய்யும் விருப்பத் தோடு இவர்கள் 1816-இல் இலங்கை சென்றனர்.  ஜாப்னா (யாழ்ப்பாணம்) என்ற இடத்தில் மிகப் பெரிய ஆதரவு கிடைத்தது.  அங்கே இருந்த தமிழர் களிடையே கிடைத்த செல்வாக்கைக் கண்டு இந்தியாவில் தமிழ்நாட்டிலும் மிஷினெரியை உருவாக்க நினைத்தனர்.  இலங்கையையும் தமிழகத் தையும் வங்கக் கடலின் பாக் ஜலசக்தி பிரித்தது.
 
இதனால் அங்கிருந்து ஒரு குழு புறப்பட்டு 10-01-1834இல் ராமநாதபுரம் மாவட்டம் தேவி பட்டினம் கடல் வழியாக வந்தனர்.  பின் மதுரைக்கு திரு.லெவிஸ்பால்டிங் மற்றும் ஹொய்சிஸ்டன் ஆகியோர் 8-2-1834 காலை 7-00 மணிக்கு வந்தனர்.
 
பல நாட்கள் மதுரையையும் சுற்று வட்டாரங் களையும் பார்த்து மறைந்தன.எல்லைகளை நிர்ணயிப்பதற்காகப் பயணம் செய்த திரு.லெவிஸ்பால்டிங் தனது தலைமையகத்திற்கு அனுப்பிய அறிக்கையில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
 
“தெருக்கள் ஒழுங்கற்றும் குறுகியதாகவும் காணப்படுகின்றன.  பெரும்பான்மையோர் பயிர்த் தொழில், கால்நடை வளர்ப்புத் தொழில் செய் கின்றனர்.  ஜாதிகளுக்கேற்றபடி தொழில் முறைகள் நிலவுகின்றன.  போக்குவரத்து வசதி மிகவும் குறைவு.  வசதியானவர்கள் மனிதர்கள் சுமக்கும் பல்லக்குகளில் பயணம் செய்கின்றனர்.
 
மக்களிடையே பேயாடுதல், கோடாங்கி என் பவர்களிடம் குறிகேட்டல், ஜாதிச்சண்டைகள், வீணாகப் பிறர்மீது வழக்குப் போடுதல், களவு, வழிப்பறி குடிவெறி, சூதாட்டம் போன்றவை உள்ளன.  கடுமையாக உழைக்கிறார்கள்.  இவர் களிடையே கல்வி அறிவு இல்லை.  கல்வி கேள்வி களில் பிராமணர்கள் எனப்படும் முதல் நிலைச் சாதியினரே முன்னணியில் இருக்கின்றனர்.  மக்கள் இடையே 80 வகையான ஜாதிப் பிரிவுகள் உள்ளன.
 
திரு.லெவி ஸ்பால்டிங் அறிக்கையைப் பரிசீலித்த அமெரிக்கன் மிஷனரி தமிழகத்தில் மிஷனரிகளைத் தொடங்க கவர்னர் ஜெனரலிடமும் சென்னை அரசிடமும் அனுமதி கேட்க 1835களின் இறுதியில் அனுமதி கிடைத்தது.
 
1836-இல் மதுரை பிராட்டஸ்டண்டு சபை தொடங்க முடிவெடுத்து மதுரைக்கு 3 மைல் தொலைவில் இருந்த பசுமலையில் புதிய இங்கிலாந்து சபை என்ற சபையை நிறுவினர்.  இவர்களுக்கான தேவாலயம் 1847-இல் கட்டப்பட்டது.  பின் இதில் இடமில்லாத நிலை எழவே பக்கத்திலேயே ஒரு சர்ச் கட்டி உவைற்றின் சர்ச் என்று பெயரிட்டனர்.
 
பிராட்டஸ்டண்டுகள் வரலாற்றில் பசுமலை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.  சிராமிய சூழ்நிலை நிலவும் பசுமலையில் பல ஜாதியினரும் இருந்தனர்.  எந்த அளவிற்கு வரவேற்பு இருந்ததோ அந்த அளவுக்கு முரண்பட்டவர்களும் இருந்தனர்.  வேளாளர் மற்றும் தேவர் சமூகத்தினர் அதிகமாக இருந்தனர் என்றும் கூறுகின்றனர்.  அடிக்கடி மிஷனரிக்கும் மக்களுக்கும் பூசல் விளைந்தது.
 
இதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றன.  பசுமலையில் இருந்த காளைமலை இந்துக்களின் புராணத்தில் குறிப்பிடப்படுகிறது.  மறைத்தளப் பணியாளர்களான ரெவரெண்ட் வாஷ்பர்ன்துரை, ரெவ எஸ்.மாசிலாமணி, அருள் திரு. ராயப்பர் ஆகியோர் மாலை நேரங்களில் மலை உச்சியில் அமர்ந்து ஜெபப்பாடல்கள் படிப்பது வழக்கமாக இருந்தது.  ஒரு நாள் இவர்கள் ஜெபிப்பதைப் பார்த்த பக்கத்துக் கிராம மக்கள் கம்புகளோடு வந்து இவர்கள் பில்லி, சூன்யம் வைப்பதாகக் கருதித் தாக்கினர்.  இதில் இராயப் பருக்கு வலது தோள் மூட்டுவிலகி மரணம் வரை யிலும் அவதிப்பட்டார் என்கின்றனர்.
 
1847 சனவரியில் பிராட்டஸ்டண்டுகள் சபை சார்பில் மறைத்திரு பர்ன்ஸ் ஐயர் என்ற பாதிரி யார் மாணவர்களிடையே ஒற்றுமை கருதிப் பசு மலைப் பள்ளியில் சமபந்தி போஜனம் நடத்த ஏற் பாடு செய்தார்.  ஆனால் இது சமத்துவத்திற்குப் பதிலாகப் பெரும் கலவரத்தைத் தூண்டியது.  உயர் ஜாதியினரும் வசதியானவர்களும் தங்கள் பிள்ளை களைக் கேவலப்படுத்துவதாக எண்ணிக் கலவரம் செய்தனர்.  இதையொட்டி வழக்குகளும் நீதிமன்றங் களில் பதிவு செய்யப்பட்டன.  இதனால் பசுமலைப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தது.
 
பின்னர் இங்கிலாந்து சென்ற பர்னஸ் ஐயர் படுகொலை செய்யப்பட்டு ரத்தசாட்சி என்றும் புனிதர் என்றும் போற்றப்பட்டார்.
 
பசுமலையில் வாழ்ந்த தமிழறிஞர் சி.வை. தாமோதரன் பிள்ளை இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்.  தனது சிறு வயதில் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து கல்வி கற்ற இவர் கல்வி கற்று முடிந்தபின் மீளவும் இந்து மதத்திற்கே வந்து விட்டார்.  சிறந்த சிவபக்தராகவும் இலங்கையில் பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்.  இவரது ஒரே மகன் திரு.அழகுசுந்தரம் என்பவர் கிறிஸ்து மதத்தைத் தழுவி பிரான்சிஸ் கிங்ஸ்பரி என்று பெயர் சூட்டப் பட்டார்.  இதனால் தமிழறிஞர் தாமோதரம் பிள்ளை “மதம் மாறிய மகனுக்குப் பரம்பரை குடும்பச் சொத்துக்களில் எவ்வளவு பங்கும் கிடையாது” என்றும் “வீட்டை விட்டு வெளியேற வேண்டும்” என்றும் கூறியதாக மக்கள் பரபரப் பாகப் பேசிக் கொண்டனர்.
 
மதுரையில் மிஷனரி சார்பில் பள்ளிகள் ஏற்பட டேனியல் பூர் என்பவரே காரணமாவார்.  மறைத்தளப் பணியாக மதுரை வந்த அவர் 18-10-1835-இல் தொடங்கி ஏறத்தாழ 100 பள்ளிகளைப் பார்வையிட்டார்.
 
இவருடைய அறிக்கையின்படி மதுரையில் 7 பள்ளிகள் தொடங்கப்பட்டன.  ஒரு பள்ளியில் தமிழும் தெலுங்கும் பிராமணர்களால் கற்றுத் தரப்பட்டன.  மீதமுள்ள 6 பள்ளிகளில் தமிழ், ஹிந்துஸ்தானி மொழிகள் இந்து, முகம்மதிய ஆசிரியர்களாலும் கற்றுத் தரப்பட்டன.  பசுமலைப் பள்ளி 4-9-1845இல் தொடங்கப்பட்டது.  கிறித்தவப் பள்ளிகள் என்றாலே தரமான கல்வி என்று பிரச் சாரம் செய்யப்பட்டது.
 
அத்தகு நிலையில் முன் னேற்றம் பெறுவதற்கு கிறித்தவப் பள்ளிகளைக் கடந்து வேறு பள்ளிகள் இல்லை.
 
1845-இல் மதுரையில் இருந்த பிராட்டஸ்டண்டு களிடையே பூசல்கள் நிலவி ஒற்றுமையற்ற நிலை இருந்தது.  இவர்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக ரூ. 14000/- செலவு செய்து இன்றைய மதுரை ரயில் நிலையம் அருகே யூனியன் கிறிஸ்டியன் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டது.  இதற்காக அமெரிக்கத் தொண்டர் இயக்கம் ரூ. 6,000/- அரசு மூலம் ரூ. 4,000/- நண்பர்கள் ரூ. 2,000/- பிறவழிகளில் வரவு ஆக ரூ. 2,000/- ஆக ரூ. 14,000/- திரட்டப்பட்டு 1888-இல் மதுரையில் ஐக்கிய கிறித்தவப் பள்ளி தொடங்கியது.  இதன் விளையாட்டு மைதானம் மதுரை இறையியல் கல்லூரி வளாகத்தில் உள்ளது.
 
1890களில் திருமங்கலத்தில் மதுரை சுதேசிக் கல்லூரி  அங்குள்ள பையன்கள் உறைவிடப் பள்ளியில் செயல்பட்டு வந்தது.  தொடக்கத்தில் 17 மாணவர்கள் இருந்தனர்.  பின் இடப்பற்றாக்குறை காரணமாகப் பசுமலை ஒயிற்றின் தேவாலயத்தில் செயல்பட்டது.  37 மாணவர்கள் சேர்ந்தனர்.  பின் இங்கும் இட நெருக்கடி வரவே மதுரையில் உள்ள ஐக்கிய கிறித்தவப் பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.  இங்குச் செயல்பட்டு வரும் போதே நிரந்தரமாகத் தனிக் கட்டடம் கட்ட இக்கல்லூரியின் முதல்வராக இருந்த திரு. வாஷ்ப்ர்ன் துரை பல இடங்களிலும் இடம் தேடினார்.
 
இறுதியாக மதுரை வைகை ஆற்றின் வட கரையில் நீண்ட, குறுகியதான குளமும் அதன் இருபுறமும் பனை மரக்காடுகளும் வயலும் இடத்தைப் பிரித்தன.  மேற்கே அழகர்கோயில் வண்டிப்பாதை இருந்தது.  பனை மரக்காடான பகுதியில் மதுரை சுதேசிக் கல்லூரிக் கட்டடம் எழுப்ப வாஷ்பர்ன் முடிவு செய்தார்.  இதனை தலைமையிடத்திற்குத் தெரிவித்த போது ஏற்கனவே முன்பொரு தடவை அமெரிக்காவிலிருந்து நன் கொடையாக வந்திருந்த நிதி ரூ.32,000ஐ பயன் படுத்த அனுமதி கிடைத்தது.
 
இதுவே மதுரை அமெரிக்கன் கல்லூரியின் வரலாற்றுத் தொடக்கமாகும்.  அரசுத் தரப்பி லிருந்து 15 ஏக்கரும் ஐரோப்பிய விதவைப் பெண்கள் சங்க நிதியின் மூலம் 10 ஏக்கரும் வாங்கப்பட்டன.  இந்த 25 ஏக்கருக்கான வரவு செலவு திரு. வாஷ்பர்ன் வெளியிட்டார்.
 
அரசு மூலம் வாங்கிய 15 ஏ. விலை                                            : ரூ. 6327-00
2 அடுக்கு ஹால்                                                                                 : ரூ. 16150-00
தட்டுமுட்டுச் சாமான் விற்றது                                                    : ரூ.  2998-00
குறைந்த கல்விக்கான கட்டடம்                                                 : ரூ.  1500-00
விடுதிக் கட்டடம்                                                                               : ரூ.  5025-00
மொத்தம்                                                                                               : ரூ. 32000-00
 
இக்கட்டடம் கட்ட ஒப்பந்தக்காரருக்கு ரூ.43500/-க்கு காண்ட்ராக்ட் விடப்பட்டது.  1909-இல் பணி முடிந்து கல்லூரி இங்கே.  இடமாற்றம் செய்யப்பட்டது.
 
இந்தத் தொகையை நன்கொடையாக வழங் கியவர் ஜான் டி. ராக்பெல்லர் என்றும் வழங்கியவர் பெயர் குறிப்பிடாததால் அவர் தான் வழங்கி யிருக்க வேண்டும் என்றும் அப்போதே பேச்சு வந்தது.
 
1907-1908களில் இக்கல்லூரிக் கட்டடம் அமெரிக்க கல்வி நிலையக் கட்டடங்களை முன் மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்டது.  சென்னை உயர்நீதி மன்றம் கட்டிய கட்டடப் பொறியாளர் ஹென்றி இர்வின், னு.னு. லியோனார்ட் ஆகியோர் இதையும் கட்டினர்.
 
இக்கல்லூரி உருவாகக் காரணமான திரு. வாஷ்பர்ன் துரையுடன் இணைந்து பாடுபட்ட இரண்டாவது முதல்வர் திரு. வில்லியம் மைக்கேல் ஜம்புரோ என்பவர் நிலமற்ற கிறித்தவர் குடும்பங்கள் குடியிருப்பதற்காகக் கோரிப்பாளையம் பகுதியில் பல ஏக்கர் நிலங்களைத் தனது சொந்தப் பொறுப்பில் தானமாக வழங்கினார்.  இன்று இப்பகுதி “ஜம்புரோ புரம்” என்று அழைக்கப்படுகிறது.  மதுரையில் மிகப்பெரிய காய்கறி மார்க்கெட்டுகளில் ஐம்பு ரோபுரம் மார்க்கெட்டும் ஒன்று.
 
பிராட்டஸ்டண்டுகளின் மற்றொரு சாதனை பசுமலையில் தொடங்கிய தொழிற்பயிற்சிப் பள்ளி (ஐ.டி.ஐ.) ஆகும்.  இதற்குப் பசுமலை டிரேடு ஸ்கூல் என்றும் பசுமலை இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் என்றும் பெயரிட்டனர்.  சுற்றிலும் இருந்த கிராம மக்களும் பிள்ளைகளும் முன்னேற வேண்டுமானால் வாழ்வு சார்ந்த தொழிற்கல்வியே அடிப்படையானது என்று 1906இல் தொழிற்பயிற்சிப் பள்ளியைத் தொடங்கினர்.  இன்று பல நூறு மாணவர் வரை இங்கே தொழிற்கல்வி பயில்கின்றனர்.  வளாக வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்துள்ளனர்.
 
இங்கே தொடங்கப்பட்ட லெனாக்ஸ் அச்சகம் ஐ.டி.ஐ.க்கான பாடங்களை அச்சடித்து வழங்குகிறது.
 
மதுரை நகரின் மேற்கில் ஹார்வி மில் எதிரில் உள்ள புட்டுத்தோப்பு அருகே அமைந்துள்ள கேப்ரன்ஹால் பெண்கள் கலாசாலை மிகவும் புகழ்பெற்றது.  மறைத்தளப் பணியாக மதுரைக்கு வந்த கேப்ரன் அம்மையார் இங்கிருந்த பெண்கள் போர்டிங் பள்ளியைக் கட்டினார்.
 
இப்பள்ளிக்கு மறைப்பணி செய்ய வந்த பெண் பணியாளர்களான செல்வி பெஸ்ஸி பிரௌனிங், செல்வி மேரிடக்கர் இருவரும் நாய்ஸ் சபையைச் சார்ந்தவர்கள்.  இவர்கள் கேப்ரன் அம்மையார் நினைவாக மதுரை புட்டுத்தோப்பு பகுதியில் 22.10.01897இல் 10 ஏக்கர் 30 செண்ட் நிலத்தை ரூ.7,000-00க்கு கிரயம் செய்து நன்கொடையாக வழங்கினர்.
 
பிராட்டஸ்டண்டு சபையின் இன்ஜினியரிங் பிரிவு கேப்ரன்ஹால் பள்ளிக் கட்டடம் கட்டுவதற்கு எஸ்டிமேட் தயாரித்து 1902இல் அரசு ஒப்பந்தக் காரருக்கு காண்ட்ராக்ட் விடப்பட்டது.  15. 12. 1903இல் இதன் மதிப்பு ரூ. 1,18,000/- ஆகும்.
 
கல்வித்துறை மானியம்      : ரூ. 59000-00
பெண்கள் வாரியம்                 : ரூ.  19667-00
நன்கொடை பெற்றது           : ரூ. 37333-00
மற்றும் வரவு                            : ரூ. 2000-00
                                                        : ரூ. 118000-00
 
இக்கட்டடம் 1904இல் திறக்கப்பட்டது.
 
மிஸஸ் எலிசபெத் நாய்ஸ் என்பவர் நரிமேடு ஓ.சி.பி.எம். பள்ளி வளாகத்தில் கலையரங்கம் கட்டிக் கொடுக்க இன்று அங்கே நோயஸ் மெட்ரி குலேஷன் பள்ளியும் கலையரங்கமும் செயல் படுகிறது.  ரெவ. ஜான்சாண்ட்லர் என்ற பாதிரி யார் கேப்ரன்ஹால் பள்ளி அருகே தனது பெயரில் பள்ளி ஏற்படுத்தினார்.  இன்று இப்பள்ளியில் தரமான கல்விக்கு சான்றிதழாகிவிட்டது.  1892இல் டாக்டர் டிருட். சாண்ட்லரால் தோற்றுவிக்கப் பட்ட கிண்டர்கார்டன் ஸ்கூலில் அப்போதே 19 ஆசிரியர்களும் 300 மாணவர்களும் இருந்தனர்.
 
பிராட்டஸ்டண்டு பள்ளிகள் பெரும்பாலும் கோவில் பிரகாரங்களிலும் பங்களாக்களிலுமே இயங்கின.  மதுரை மேலவாசல், காக்காதோப்பு, அரண்மனை, பத்துத்தூண், சந்தைப்பேட்டை, கோரிப்பாளையம் பகுதிகளில் இயங்கி வந்தன.
 
கிறித்தவப் பாதிரியார்களும் போதகர்களும் மதப்புலமை பெற்றுத் திகழ உருவாக்கிய மதுரை இறையியல் கல்லூரி அனைத்து மதச்சாரங்களையும், மதச்சாதனைகளையும் கற்றுத் தருகின்றது.
 
பதினேழாம் நூற்றாண்டில் நாகை மாவட்டம் தரங்கம்பாடியில் உபதேசியார் படிப்புப் பள்ளி செயல்பட்டு வந்தது.  இது மிகுந்த தொலைவாகவும், வசதியில்லாமலும் இருந்ததால் இது திருநெல் வேலி மாவட்டம் நாசரேத்துக்கு மாற்றப்பட்டது.  இங்கே இப்பள்ளி இருந்த பகுதி திருமறையூர் என்று அழைக்கப்பட்டது.
 
ஆனால் இம்மாதிரியான கல்வி நிலையங்கள் மையமான இடத்தில் இருக்க வேண்டும் என்று மறைத்தள மக்கள் விரும்பினர்.  எனவே இது மதுரை திருமங்கலம் பையன்கள் உறைவிடப் பள்ளிக்கு மாற்றப்பட்டது.
 
ரெவரென்ட் வில்லியம் டிரேசி என்பவர் முதல் பிரின்சிபால் ஆக இருந்தார்.  பின் பசுமலை சர்ச் வளாகத்துக்கு மாற்றினர்.
 
பின் மதுரைக்கு மாற்ற வேண்டும் என்ற சிந்தனை வலுப்படவே மதுரை தமுக்கம் பகுதியில் இடம் கேட்டு விண்ணப்பித்தனர்.  ஆனால் வைகை ஆற்றின் வடகரையில் இதனை ஏற்படுத்துவதில் எவருக்கும் விருப்பமில்லை.  காரணம் ஆற்றில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கும், ஆற்றில் விழுந்து 27 வயது குருமார் படிப்பு மாணவர் இறந்ததும் ஒரு காரணமாக இருந்தது.  (பின்னர் தான் ஆல்பர்ட் விக்டர் முயற்சியால், 1889இல் இன்றைய வைகை மேம்பாலம் கட்டப்பட்டது).
 
இதனால் தரங்கம்பாடியிலிருந்து நாசரேத்துக்கு போய் அங்குத் திருமறையூரிலிருந்து திருமங்கலம் மாறிப் பின் பசுமலை வந்த குருமார் படிப்புப் பள்ளி இப்போதைய மதுரை அரசரடி வந்து மிகப்பெரிய நிறுவனமாக நிலை பெற்றுள்ளது.
 
1884-86களில் மதுரை தியாலஜிகல் செமினார் என்ற பெயர் மாற்றப்பட்டு இறையியல் கல்லூரி என்ற பெயர் பொறிக்கப்பட்டது.  1886-இல் ரூ. 9000- செலவில் நூலகமும் 1870இல் வாஷ்பர்ன் ஹால் கிரானைட் தளத்துடனும் கட்டப்பட்டுள்ளது.  இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒன்றாக விளங்கும் இறையியல் கல்லூரி, மரங்களும் சோலை களும் சூழ்ந்த தனது அரங்கக் கட்டடங்களில் மார்க்சீய, அம்பேத்கர் சிந்தனை, போர் எதிர்ப்புக் கருத்தரங்குகளைப் பன்னாட்டளவில் நடத்தி வருகிறது.
 
“அலைபேசியும் வாகன ஒலிகளும் தவிர்க்கவும்” என்று எல்லா இடங்களிலும் விளம்பரம் சொல்லும் இறையியல் கல்லூரி குளங்களுடன் பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது.
 
1837இல் மதுரை ஜனத்தொகை 35400 ஆக இருந்தது.  நான்கு வெளி வீதிகளையும் கோட்டைகள் சூழ்ந் திருந்தன.  இக்கோட்டையை இடித்து மதுரையை விசாலமாகக் கலெக்டராக இருந்த பிளாக்பர்ன் விரும்பினர்.  மாரட் என்பவர் சர்வேயராகவும் பெருமாள் என்பவர் மேஸ்திரியாகவும் இருந்தனர்.  கோட்டை இடிப்புப் பணிகளில் மக்களையும் ஈடுபடுத்தினர்
.
கோட்டைக்கு உட்பட்ட பகுதி 5 தெருக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன.  நடுவே மீனாட்சியம்மன் கோவில் பிரகாரங்கள் ஆடி வீதிகளுடன் இருந்தது.  ஆலயத்தை நெடிய மதில்கள் காத்தன.
 
மதிலுக்கு வெளியே சித்திரை வீதிகள் நான்கு பக்கங்களும் சேர்த்து 1248 யார்ட்ஸ் அளவுகளாகவும்
 
ஆவணி வீதிகள் 1879 யார்ட்ஸ் நீளமாகவும்
மாசி வீதிகள் 3727 யார்ட்ஸ் நீளமாகவும்
மாரட் வீதிகள் 5636 யார்ட்ஸ் நீளமாகவும்
மேஸ்திரி வீதிகள் 5670 யார்ட்ஸ் நீளமாகவும்
வெளி வீதிகள் 6000 யார்ட்ஸ் நீளமாகவும்
 
அளந்து நகரம் விரிவாக்கப்பட்டது.  திருமலை நாயக்கர் மதுரை அரண்மனை முன்புறம் விடப் பட்ட இடங்கள் போக மிகுதியாயிருந்த இடங்கள் அமெரிக்கன் மிஷினரிக்கு ஒதுக்கப்பட்டன.  இந்த இடத்தில் இன்று மதுரை, ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. திருமண்டல அலுவலகம் செயல்படுகறது.  அலுவலக முன்புறம் உள்ள அஞ்சல் நிலையம் கட்டட முகப்பு எழில் மிகுந்த ஒன்றாகும்.  ஆல்பர்ட் விக்டர் மருத்துவமனைக் கட்டடத்தில் திருமண்டலம் செயல்படுகிறது.
 
கோட்டைச் சுவர்கள் அகற்றப்பட்ட பின் மக்களின் தொகை 43,000 ஆக உயர்ந்தது.
 
மக்கள் தொகைப் பெருக்கத்தைப் போல நோய்களும் பெருகின.  மக்கள் நோய்களுக்கு மருந்து சாப்பிடாமல் தெய்வக்குற்றம் என்று நம்பி நலிந்து மடிந்தனர்.  குறிப்பாக காலரா, வயிற்றுப்போக்கு, மஞ்சள்காமாலை, காய்ச்சல்கள் மக்களை வருத்தின.  மக்கள் கிராமக் கோவில் பூசாரிகளிடம் வேப்பிலை யால் மந்திரிப்பதன் மூலமும் தீர்த்தம் என்று அவர்கள் முகத்தில் தெளிக்கும் தண்ணீரின் மூலமும், நோய்கள் தீரும் என்று பலமாக நம்பினர்.  பள்ளி வாசல்களுக்கும் சென்று மந்திரித்தனர்.
 
மறைத்தளப் பணியாக மதுரை வந்த வெளி நாட்டு மறைப்பணியாளர்கள் பெரும்பாலும் மருத்துவர்களாகவே இருந்ததால் மக்களின் அவல நிலை கண்டு வருந்தினர்.  இவர்கள் மருத்துவ மனைகள் ஏற்படுத்த ஆர்வமாக இருந்தனர்.
 
டாக்டர் ஸ்டீல், டாக்டர் ஸ்கூடர் ஆகியோர் தனிப்பட்ட முறையில் அக்கறை எடுத்தனர்.  இந் நிலையில் டாக்டர் ஷெல்டன் என்பவர் உடனடி யாக மருந்தகம் (டிஸ்பென்சரி) ஒன்றைத் திறந்து சேவை செய்தார்.  இம்மருந்தகத்திற்கு வரும் கூட்டத்தைப் பார்த்துப் பெரிய மருத்துவமனை ஏற்படுத்தும் பணிகளை விரைவுபடுத்தினர்.
 
1848இல் மதுரை கீழவெளி வீதியில் மிஷன் சார்பாக மருத்துவமனை தொடக்கப்பட்டது.
 
1800 நோயாளிகள் எட்டு மாதங்களில் வந்து சிகிச்சை பெற்றதாக டாக்டர் ஷெல்டன் அறிக்கை வெளியிட்டார்.  மேலும் அவர் தனது அறிக்கையில்,“மருத்துவமனையைச் சுற்றிலும் கூலி வேலை செய்பவர்களும் பட்டுநூல் (SILK WEAVERS) நெசவாளர்கள் அதிகமாக இருப்பதாகவும், இவர்களில் பட்டு நூல் நெசவாளர்கள் காலி இடங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விலைக்கு வாங்குகிறார்கள் என்றும் குறிப்பிட்டு மேலிடத்திற்கு எழுதினார்.
 
இதனால் மிஷனரி இம்மருத்துவமனைக்கு அதிக அளவில் நிலங்களை வாங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
 
இரண்டாவது ஆண்டில் 1850 நோயாளிகள் வந்தனர் என்றும் இது அதிகமாகி 2400 பேராக உயர்ந்தது.  பெரும்பாலும் பட்டுநூல் தயாரிப்பவர் களே இதில் அதிகம் என்றும் கூறியுள்ள டாக்டர் ஷெல்டன், இம்மருத்துவமனையில் சம்பளம் மற்றும் டிரஸிங், மருந்துச் செலவாக ரூ.100/- மட்டுமே செலவாகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
இம்மருத்துவமனைக்குச் சில முக்கியமானவர்கள் ரூ.300/- நன்கொடை வழங்கினர்.  1851-இல் இம் மருத்துவமனைக்கு மூன்று பெரிய அறைகளும் ஆண்களுக்கு ஒரு வார்டும் பெண்களுக்கு ஒரு வார்டும் மருந்துகள் வழங்கவும், மருத்துவர் அமரவும் ஒரு அறையும் கட்டப்பட்டது.
 
“வில்லிஸ்ஃஎப் பியர்ஷ் மெமோரியல் மருத்துவமனை  “WILLIS FPIERCE MEMORIAL HOSPITAL” என்ற பெயரைத்தாங்கி உள்ள மதுரை கிறித்தவ மிஷன் மருத்துவமனையில் இன்று பல்லாயிரம் பேர் சிகிச்சை பெற வருகின்றனர்.  இம்மருத்துவ மனை தொடங்கப்பட்ட நேரத்தில் சிகிச்சை பெற வருபவர்களும் உடன் வருபவர்களும் தங்கிச் செல்லுவதற்காகக் கட்டப்பட்ட இடங்களில் இன்று வணிக வளாகங்கள் உள்ளன.  1876-1878களில் தாது வருடப் பஞ்சம் ஏற்பட்ட போது மிஷனரியின் பணிகள் மிகவும் தீவிரமாக இருந்தன.  பெண்கள், சிறுவர்கட்குத் தனி மருத்துவப் பிரிவுகள் தோற்று விக்கப்பட்டன.
 
மிஷன் மருத்துவமனை எதிரில் ஆல்பர்ட் விக்டர் மருத்துவமனை இருந்த பிரம்மாண்டமான கட்டடத்தில் இன்று மதுரை இராமநாதபுரம் திருமண்டல அலுவலகம் இயங்கி வருகிறது.  மிஷன் மருத்துவமனையின் பின்புறமும் பக்கவாட்டிலும் சி.எஸ்.ஐ. பல் மருத்துவக்கல்லூரி, நர்சிங் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
 
மதுரை அரசு மருத்துவமனை 1842ல் தொடங் கியது.
 
மதுரை நகரின் மையத்தில் மேங்காட்டுப் பொட்டல் அருகே இயங்கி வரும் ஒய்.எம்.சி.ஏ.சி. கிறித்தவ இளைஞர் சங்கம் பசுமலை இளைஞர்கள் சிலர் கூடி எடுத்த முடிவாகும்.  1875இல் இதற்கான பணிகளைத் தொடங்கினாலும் 1866இல் தான் அதிகார பூர்வமாகத் தொடங்கப்பட்டது.  இன்று திருமண்டலத்தின் பல பகுதிகளில் இந்த அமைப்பு காது கேளாதோர் பள்ளி, வாய் பேச முடியா தோருக்குப் பயிற்சிப்பள்ளி என்று மிகப்பெரிய அளவில் செயல்படுகிறது.  சென்னை Y.M.C.A திடலும் கல்லூரியும் பெயர் பெற்றவைகள்.
 
மதுரை Y.M.C.A. அருகே இன்றைய மேங் காட்டுப் பொட்டல் 1800களில் ராணுவ வீரர்களின் முகாம்களும் குடியிருப்புகளும் மிகுந்து மெயின் கார்டு ஸ்கொயர் ((MAIN GUARD SQUIRE) என்று அழைக்கப்பட்டது.
 
இப்பகுதியில் ஆங்கில மிஷினெரி செயல் பட்டு வந்தது.  இங்கிருந்த கிறிஸ்தவக் குடும்பங் களுக்கு ஜெபம் செய்யவும் ஆராதனை செய்யவும் திரு. கிறிஸ்டியன் பிரடெரிக் ஸ்குவார்ட்ஸ் அய்யர் என்ற போதகர் நியமிக்கப்பட்டிருந்தார்.  அன்றைய பாதிரியாளர்கள் சாஸ்திரிகள், அய்யர் என்று பெயருக்குப் பின் போட்டுக் கொள்வது வழக்க மாக இருந்தது.
 
1800 இல் இப்பகுதியில் W.C.L..  டட்லி சிற்றாலயம் என்று சிறிய அளவில் சர்ச் இருந்தது.  Society For the Propagation of Christians Missionக்கு இந்தச் சிற்றாலயத்தைப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
 
இதற்காக நிதி சேர்க்க முனைந்தபோது மதுரையின் கலெக்டராக இருந்த திரு.ரோஸ் பீட்டர் என்ற பீட்டர் பாண்டியன் நன்கொடை யாக ரூ.1,100/-S.P.C.K. சபை ரூ.153/-ம் வழங்க வேறு சிலரும் நன்கொடை வழங்கினர்.  சர்ச் கட்டு வதற்கான இடத்தை திரு.டேனியல் பர்பி என்பவர் இலவசமாக வழங்கினார்.  இந்த இடத்தை பர்பி அங்கு வாழ்ந்த திருமதி.கோபியா எலிசபெத்ராஷ் என்பவரிடமிருந்து ரூ.164/-க்கு வாங்கினார்.  இந்த இடத்தில் பரி.ஜியார்ஜ் ஆலயம் என்ற பெயரில் முழுவதும் கற்களாலேயே கட்டப்பட்ட சர்ச் உள்ளது.  எதிரே நகைக்கடை பஜார் உள்ளது.
 
மதுரையின் பிராட்டஸ்டண்டு கிராமிய சர்ச் மாங்குளம் சர்ச் ஆகும்.  மதுரை மேலூர் சர்ச் பாரம்பரியமானதாகும்.  மதுரை போர்ட் என்னும் மேலூர் மதுரைக்கு வடக்கே 20 மைல் தொலைவில் உள்ளது.  திரு & திருமதி பூர் மற்றும் திரு & திருமதி டிலைட் அண்ட் டாட் ஆகியோர் பள்ளிகள் திறக்க ஆய்வு செய்தனர்.
 
1843-இல் ஆங்கிலப்பள்ளி இயங்கி வந்தது.  இது மதுரை கிழக்குப் பகுதியிலிருந்து பிரிக்கப் பட்டது.  1848-இல் மதுரை போர்ட் சர்ச் எல்லைகள் பிரிக்கப்பட்டன.  மதுரையின் வடகரையில் இருந்த மதுரை கோட்டை பெயர் மாற்றப்பட்டு மேலூர் என்ற பெயர் பெற்றது.  மேலூர் சர்ச் ஏற்படுத்து வதற்கான செலவுகள் பற்றி எழுபத்தைந்தாண்டு கால மதுரை மிஷின் நூல் குறிப்பிடுகிறது.
 
இம்மாதிரியான செலவுகள் மூலம் அன்றைய நிலம், கட்டடம் குறித்த விவரங்களை அறிய முடிகிறது.  நிலங்கள் இப்போது போலவே கிரவுண்டு, கணக்கில் அளக்கப்பட்டன.
 
சுற்றுச்சுவர் ஆங்கிலப்பள்ளி 8 கிரவுண்டு @ ரூ. 100                                    1400-00
பள்ளி உபயோகத்திலுள்ள  வீடுகள் கடைகள் கட்டடங்கள்                   1800-00
சாப்பல்கள்                                                                                                                    1000-00
மொத்தத்தில் தள்ளுபடி                                                                                          4200-00  
                                                                                                                                            720-00
                                                                                                                                       =  3480-00
 
கூடுதல் காம்பவுண்டு சுவர் 20 கிரவுண்ட் @ ரூ. 160/-                                   200-00
வீடுகள் மற்றும் அவுட் ஹவுல்கள்                                                                  2900-00
                                                                                                                                          6100-00
மொத்தத்தில் தள்ளுபடி திரைச்சீலைகள், பங்காக்கள்                             1150-00
                                                                                                                                       =  4950-00
 
(இழுவை விசிறி) இதில் சேராது                                                                          8430-00
 
மதுரை கீழவாசல் சர்ச் 1862-இல் மதுரை கோட்டை வளாகத்தில் கட்டப்பட்டது.  99 வருட குத்தகைக்கு அரசிடமிருந்து பெறப்பட்ட நிலத்தில் 63 கிரவுண்ட் 340ச.அடி பரப்பளவுள்ள இந்த இடத்திற்கு ஆண்டுக்கு ரூ. 23-10-10 செலுத்த வேண்டும்.  இதன் மொத்த மதிப்பீடு ரூ. 6944 - 1-3 பைசா ஆகும்.  தெற்குவாசல் சர்ச் 1885இல் திருமதி. கேப்ரன் அவர்களால் கட்டப்பட்டது.  எல்லா சர்ச் வாசல்களிலும் குதிரை லாயங்கள் இருந்தன.  வாகன வசதியற்ற காலத்தில் சர்ச்சுக்கு வர ஜட்கா வண்டி களே பயன்பட்டன.  மதுரை மிஷினெரியின் முதல் மதமாற்றம் 1837 சூலையில் நிகழ்ந்தது.  மாங்குளத்தில் திரு.காமாட்சி என்பவர் மதம் மாறி ஆசிர்வாதம் எனப் பெயர் பெற்றார்.  மக்களிடையே இயேசுவின் மகிமை குறித்தும் பைபிள் வெளியீடுகள் கொடுத்தும் பிராட்டஸ்டண்டுகள் மதப்பிரச்சாரம் செய்தனர்.
 
மதுரைக்கு மறைத்தளப் பணியாக வந்த பணி யாளர்கள் மதுரை மக்களின் நடை, உடை பாவனை களுக்கேற்ப தங்கள் பாணியை மாற்றிக் கொண்டனர்.  சீசன் பால்கு அய்யர், டாக்டர் ஜி.யூ.போப் ஆகி யோர் இந்துக்கள் போலவே மஞ்சள், காவி அங்கி களை அணிந்தனர்.  மதுரைக்கு வந்த பிராட்ட ஸ்டண்டுகள் மதுரையின் சைவ மடாதிபதியான மதுரை ஆதினகர்த்தர்களைச் சந்தித்துப் பேசினர்.  அன்று மதுரையில் சைவர்களுக்கு மதுரை ஆதீனமே தலைமையகமாக இருந்தது.
 
சீர்திருத்தக் கிறித்தவர்களான பிராட்ட ஸ்டண்டுகள் மதப்பரப்புரை மட்டுமல்லாது தமது மறைத்தளப் பரப்பில் ஒட்டுமொத்த பிற மத மக்களுக்கும் சேர்ந்தே தொண்டு செய்தனர்.  இத்தொண்டுகள் மக்களின் மனங்களைத்தொட்டு வந்தனர்.
 
1874-இல் பசுமலையில் புதிய இங்கிலாந்து சபை கட்டி முடிக்கப்பட்ட போது பாஸ்டன் நகரிலிருந்து 336 ராத்தல் எடையுள்ள கோவில் மணி தருவிக்கப் பட்டது.  ஆனால் இந்த மணியைப் பசுமலை ஆலயத்தில் வைக்க இடமில்லாததால் அருகில் இருந்த திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வழங்கினர்.  பின்னர் இது திரும்பப் பெறப்பட்டு பதிலாக இதே அளவிலும் எடையிலும் புதிய மணி தருவிக்கப்பட்டு மறுபடியும் வழங்கப்பட்டதாக பசுமலை திரு. னு. தேவராஜ் கூறுகிறார்.
 
மின்சாரம் இல்லாத நிலையில் பசுமலை கஷ்டப்பட்டது.  மெழுகுவர்த்திகளும், சிமினி, அரிக்கேன் தீப்பந்தங்களே பயன்பாட்டில் இருந்தது.  இதனை மாற்ற விரும்பிய பிராட்டஸ்டண்டு சபை அமெரிக்காவிலிருந்து சக்தி மிக்க ஜெனரேட்டரை வரவழைத்து மின்சாரம் தயாரித்தது.  இது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
 
பசுமலையில் கரண்ட் வந்த செய்தியைக் கேட்டு மக்கள் பார்ப்பதற்காகக் கால்நடையாகவும் மாட்டு வண்டிகளிலும் வந்தனர்.  “கம்பி வழியாக சீமெண்ணை ஊற்றி விடுகிறார்கள்” என்று மக்கள் பேசினர்.  சீமையிலிருந்து மண்ணெண்ணெய் வந்ததால் சீமெண்ணை என்று கூறப்பட்டது.
இதே போன்ற வசதியை மதுரை மீனாட்சி யம்மன் கோவிலுக்கும் செய்து கொடுத்தனர்.
 
மதுரை தெற்கு மாசி வீதியும் கீழமாசி வீதியும் சந்திக்கும் இடத்தில் கொத்தவால் சாவடி இருந்தது.  இதன் தென்புறம் பாரம்பரியமான முறையில் அமைந்த விளக்குத்தூண் ஒன்று 1840-இல் உருவாக்கப் பட்டது.  இதனை அக்கால மக்கள் தினமும் சென்று கண்டனர்.  இன்று சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக உள்ளது.  வெள்ளைக்காரர்களோடு சேர்ந்து உள்ளூர்க்காரர்களும் மொபைல் போனில் போட்டோ எடுக்கின்றனர்.
தேவதாசி முறை, உடன்கட்டை ஏறுதல் ஆகிய பழக்க வழக்கங்களை எதிர்த்தும் மறைத்தளப் பணியாளர்கள் போராடினர்.  இவர்களில் பெண் பணியாளர்களே அதிகமாக இருந்தனர்.  ஆண் பணியாளர்களைவிட பெண் பணியாளர்களே சமூகப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினர்.
தேவதாசி முறை இந்துக் கோவில்களில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது.  கோவிலுக்கு நேர்ந்து விடப்படும் நேர்த்திக்கடன்களில் ஒன்றாகப் பெண் களும் இருந்தனர்.  சிறு வயது முதல் இம்மாதிரி சேர்த்து விடப்படும் பெண்களின் நிலை அவல மிக்கதாக இருந்தது.  இதனை இந்துக்களும் கூட எதிர்த்தனர்.
 
இது போன்ற ஒரு நிலையில் மதுரைக்கு வந்த மறைத்தளப் பணியாளர் திருமதி.  ஏமி கார்மைக் கேல் அம்மையார் இதனை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தார்.  தேவதாசி முறைக்கு அர்ப்பணிக்கப் படும் சிறுமியரை மீட்டுத் தத்தெடுத்து வளர்த்தார்.  இதனால் சனாதன வாதிகள் இவரைப் பிள்ளை பிடிப்பவர் என்று கூறி அடிக்கவும் பாய்ந்தனர்.  இவருக்கு எதிராக வழக்குகள் தொடுத்தனர்.
 
மதுரையில் ஈவா மேரி சுவிப்ட் என்ற மறைத் தளப் பணியாளரான பெண் பணியாளர் மதுரை புதூரில் உள்ள ரட்சண்ய புரத்தில் வசித்தபோது உடன்கட்டை ஏறுதலுக்கு எதிராகப் போராடினார்.  இதனால் இந்து மக்கள் இவருக்கு எதிராக ஆர்ப் பாட்டம் செய்தனர்.  இவரைத் திட்டியும் எதிரில் நின்று கோஷங்களும் எழுப்பினர்.  மிஷனரியே வெளியேறு, எங்கசாமி கோபப்படும் என்றும் போராடினர்.  இவர் நடந்து வரும் போது கேலி பேசினர்.
 
இதே போன்ற ஒரு நிலை நெல்லையிலும் ஏற்பட்டது.  கிளாரிந்தா என்ற பிராமணப் பெண் உடன்கட்டையேறும் போது மீட்கப்பட்டுப் பின்னர் அவர் கிறித்தவ மதத்தைத் தழுவினார் என்றும் திருநெல்வேலி கிறித்தவ நூல் ஒன்று கூறுகிறது.
 
பிரம்ம ஞானசபை என்ற இந்து அமைப்பு ஒன்று மேற்கு வங்கத்தில் ராஜாராம்மோகன்ராய் தலைமையில் உடன்கட்டை ஏறுதலுக்காகப் பெரும் இயக்கமே நடத்தி வந்தது குறிப்பிடத் தக்கது.
 
05. 02. 1869-இல் நெல்லை கடாட்சபுரம் என்னும் ரட்சண்யபுரத்தில் பிறந்தவர் திருமதி. கிரேஸ் அம்மையார்.  மறைத்தளப் பணியாக மதுரை வந்த இவர் கென்னட் சபையைச் சார்ந்தவர்.  அப்போதைய காலகட்டத்தில் சீர்திருத்தக் கிறித்தவத்தில் நாயஸ் சபை, கென்னட் சபை போன்ற தொண்டு நிறுவன சபைகளும் இருந்தன.  கென்னட் சபையைச் சேர்ந்த திருமதி. கிரேஸ் மக்களிடையே நோய்களும், பிணி களும் அதிகமாக இருப்பதையும் அவர்கள் கஷ்டப் படுவதையும் நேரில் கண்டு மனம் வருந்தினார்.  இதனால் பாதிக்கப்பட்டவர்களின் வசிப்பிடங் களின் அருகே மருத்துவமனை ஒன்றைத்திறக்க கென்னட் சபையிடம் முறையீடு செய்தார்.
 
இதன் பேரில் மதுரை ரயில்நிலையம் பின்புறம் தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமாக வாழும் மகபூப் பாளையம் பகுதியில் கிரேஸ் கென்னட் சபையால் மருத்துவமனை தொடங்கப்பட்டது.  இன்று பி.எஸ்.எஸ். சமுதாயக் கல்லூரி, குழந்தைகள் தத்தெடுப்பு மையம், மழலையர் இல்லம் என்று செயல்பட்டு வரும் இம்மருத்துவமனை தீக்காயத் தடுப்பு சிறப்பு சிகிச்சைப் பிரிவு குழந்தைகளின் நுரையீரல் நோய் சிகிச்சையிலும் பெயர் பெற்று விளங்குகிறது.
 
இசையால் இறைவனையே தன்னை நோக்கி இறங்கி வரச் செய்வதை இந்துக்களின் சாமவேதம் விளக்குகிறது.  கிறித்துவத்திலும் இம்முறையைப் பின்பற்றி கீர்த்தனைகளை இயற்றி வருகின்றனர்.  இந்தக் கிறித்தவ இசையை மறைத்தள மக்களிடம் முன்னெடுத்துச் சென்றவர்கள் அநேகம்.  இவர் களில் குறிப்பிடத்தக்க தென்னிந்திய திருச்சபை இசை முன்னோடிகள்.  தொடக்கத்தில் யூத வழி பாட்டு இசை கிரகோரியன் இசைமுறை கடைப் பிடிக்கப்பட்டது.
 
தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் (1776- 1864), கருணாமிர்த சாகரம் என்னும் அற்புத இசை நூலை ஆராய்ந்து வெளியிட்ட தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (1859-1914) பேராசிரியர் டி.ஏ. தன பாண்டியன் எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை, மொழி ஞாயிறு எனப் போற்றப்படும் ஞா. தேவநேயப் பாவாணர், பேரா.வீ.ப.கா.சுந்தரம், தியோபிலஸ் அப்பாவு ஆகியோர் கிறிஸ்தவப் பாடல்கள் இயற்றிய அறிஞர்களாவர்.
 
போரிலும் பிற வகைகளில் மரித்த ஐரோப்பியர் களின் கல்லறைகளை அமெரிக்க மிஷனரி மேற் பார்வையில் பராமரித்து வருகின்றனர்.  இது மதுரை ரயில்வே காலனி சர்ச் கட்டுப்பாட்டில் உள்ளது.
 
கட்டபொம்மனின் வரலாற்றுடன் சம்பந்தப் பட்ட ஆட்சியர் காலின் (காலன்துறை) கல்லறை, (இதனை பானர்மென் கல்லறை என்றும் கூறு கிறார்கள்.)  மதுரையின் நிர்வாக அமைச்சராக இருந்து தனது 32வது வயதில் (23. 04. 1872ல்) மரணமடைந்த அகஸ்டஸ் சாமுவேல் காட்ஃபிரே கல்லறையும், மதுரை ஆர்ப்பாளையத்தில் மதுரை ஏ.வி. மேம்பாலம் உருவாக்கிய ஆல்பர்ட் விக்டர் கல்லறையும் உள்ளது.
 
மதுரை தென்னிந்தியத் திருச்சபையின் மதுரை ராமநாதபுரம் திருமண்டலம் 27.09.1947ல் மதுரையில் தொடங்கப்பட்டது.  திருமண்டலம் கல்வி வளர்ச்சியில் குறிப்பாக மகளிர் கல்வி nம்பாட்டில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.
 
வறுமையும் அறியாமையும் மிகுந்த வாழ்வில் நல்ல வாழ்க்கையை எதிர்பார்க்கும் மக்கள் திரு மண்டலப் பணிகள் தம்மைக் கடைத்தேற்றும் என்று நம்புகின்றனர்.
 
நிலங்களும் அதிகாரங்களும் மேட்டுக்குடி களிடமே இருந்தன.  அரசுகளும் அதிகார வர்க்கமும் கடவுளை நம்பிய அளவிற்கு மக்களைக் கவனிக்க வில்லை.
 
இந்த நிலையில் சீர்திருத்தக் கிறித்தவம் கட வுளுடைய பெயரால் கல்வியையும் மருத்துவமனை களையும் எல்லோருக்கும் பொதுவாக ஜனநாயகப் படுத்தினர்.  இது மக்களின் மனதை ஈர்த்தன.
 
மதங்களெல்லாம் மக்களிடையே அன்பையும் பிறரை நேசிக்கவும், தொண்டு செய்வதையும் வற்புறுத்துகின்றன.
 
ஆனால் மனிதர்கள் மாத்திரம் தான் நெல்லாக விளைய மறுத்துப் பதராகிப் பாழாகிவருகிறார்கள்.
 
துணைபுரிந்த நூல்கள்:
 
75 years in the Madurai Mission .ஆங்கிலநூல்.
 
அமெரிக்கன் மிஷனரி கல்விப்பணி
 
பசுமலை வரலாற்றுக் கதைகள் - பசுமலை டி. தேவராஜ்
 
அமெரிக்கன் மிஷனரி திருத்தொண்டர்கள் நூல் சி.எஸ்.ஐ. திருமண்டலத் துறைத்தலைவர்
 
அருள்திரு.ஜி. முத்தையா தேவநேசன்
 
போதகர் ஞான ஆனந்தராஜ்.
 
இறையியல் கல்லூரி நூலகம்.
 
(உங்கள் நூலகம் - பிப்ரவரி 2014 இதழில் வெளியானது)
Pin It