திண்டுக்கல்லில் சிக்கந்தர் சாகிப் மகனாக 15.09.1896-ஆம் நாள் பிறந்தார் அப்துல் சத்தார். மகனை இங்கிலாந்து நாட்டிற்கு அனுப்பி பாரிஸ்டர் பட்டம் படிக்க வைக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். ஆனால், அப்துல்சத்தாரின் உள்ளம் மெட்ரிக்குலேசன் வகுப்பில் பயிலும்போதே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துடித்தது. மதுரைக் கல்லூரியில் இண்டர்மீடியட் படித்தார். அப்போது பாலகங்காதர திலகரின் சுயாட்சி இயக்கத்தில் ஈடுபட்டார். சுயாட்சி வேண்டுமென்று மதுரை மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி 1915-ஆம் ஆண்டு மாண்டேகு பிரபுவுக்கு அனுப்பி வைத்தார் அப்துல் சத்தார் சாகிப்.

மதுரை விக்டோரியா எட்வர்ட் ஹாலில் 1916-ஆம் ஆண்டு நடைபெற்ற திலகரின் மாகாண அரசியல் மாநாட்டை முன்னின்று நடத்தினார்.

பெற்றோர்கள் வற்புறுத்தியும், கல்லூரிக் கல்வியைத் தொடர மறுத்துவிட்டார், அதனால் கோபம் கொண்ட பெற்றோர் சொத்தில் பங்கு கிடையாது என்று கூறிவிட்டனர். ஆனால், குடும்பத்தினரின் சொத்து மீது நாட்டம் கொள்ளாமல், தாய்நாட்டு விடுதலையில் ஆர்வம் கொண்டார்.

அப்துல்சத்தார் சாகிப் ஆங்கிலம், தமிழ், உருது முதலிய மும்மொழிகளிலும் சரளமாகப் பேசும் திறமை படைத்தவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களான மட்டப்பாறை பி.எஸ்.வெங்கட்ராமய்யர், சோழவந்தான், முனகால பட்டாபிராமய்யர், திண்டுக்கல் தங்கமீரான், பாஜிபாய, அமிர்தலிங்கம் அய்யர், குப்புசாமி அய்யர் முதலியவர்களுடன் இணைந்து பாடுபட்டார்.

திண்டுக்கல் நகர காங்கிரஸ் கட்சியின் செயலாளராகவும், மாவட்டச் செயலாளராகவும் தொண்டாற்றினார். சென்னைக்கு வருகைபுரிந்த மகாத்மாவை திண்டுக்கல்லுக்கு வருகைபுரியுமாறு அழைத்தார். 1921 செப்டம்பர் மாதம் 20-ஆம் நாள் திண்டுக்கல்லுக்கு மகாத்மா வந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அக்கூட்டத்திற்கு மக்களைத் திரட்டும் பணியில் மிகத்தீவிரமாக ஈடுபட்டுச் செயல்பட்டார் அப்துல் சத்தார் சாகிப். அக்கூட்டத்தில் மௌலானா சவுக்கத் அலி உருது மொழியில் பேசியதை தமிழில் மொழி பெயர்த்து மக்களின் பாராட்டைப் பெற்றார்.

மதுரையில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட தேசபக்த சமாஜத்தினரை திண்டுக்கல் நகரத்தில் வரவேற்று, அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தார்.
வத்தலகுண்டில் 1936-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் அரசியல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக்காட்டினார். 1937-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு அரும்பாடுபட்டார்.

மகாத்மா காந்தியடிகள் அறிவித்த தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டுச் சிறைத்தண்டனையும், அய்நூறு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுத் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையானவுடன், 1942-ஆம் ஆண்டு இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ஜவகர்லால் நேரு, ஆர்.வெங்கட்ராமன் முதலிய பல தலைவர்கள் இருந்தனர். பின்னர் தஞ்சை, வேலூர் சிறைக்கும் மாற்றப்பட்டார். சிறையில் பலவிதக் கொடுமைகளுக்கு ஆளானார்.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் 1944ஆம் ஆண்டு விலகிக்கொண்டார். இருப்பினும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்காகப் பாடுபட்டார். குறிப்பாக, 1952-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் போட்டியிட்ட காமராசரின் வெற்றிக்குத் தீவிரமாக உழைத்தார்.

சென்னை ஆவடியில் 1954-ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துகொண்டார். அம்மாநாட்டில், நாட்டு விடுதலைப் போராட்டத்திற்கு பாடுபட்டுச் சிறையில் வாடிய தமக்குத் தாமிரப்பட்டயமோ, நிலமோ, ஓய்வூதியமோ வேண்டாமென மறுத்துவிட்ட தன்னலமற்ற தியாகி சத்தார் சாகிப். அப்துல் சத்தார் சிறந்த தேசியத் தொண்டர், திறமைமிக்க பேச்சாளர், அனைவருடனும் இனிமையாகப் பழகும் தன்மையுடையவர். விடுதலைப் போராட்டத்தில் அதிகமான அளவில் இளைஞர்களை ஈடுபடச் செய்தவர்.

நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்டு உழைத்த உத்தமர் திண்டுக்கல் அப்துல் சத்தார் 17.06.1967-ஆம் நாள் தமது எழுபத்தொன்றாவது வயதில் இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், அவர் தேச விடுதலைக்காக செய்த தியாகம் வரலாற்றில் என்றும் நிலைத்து நிற்கும்.

- பி.தயாளன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It