இலக்கிய ஆளுமை, படைப்புலகுக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆளுமை உடைய எழுத்தாளர்களால் தான் இலக்கியம் வளர்ச்சி பெறும். கண்ணதாசனின் தனித்தன்மை அவர் படைத்த இலக்கியங்களில் நன்கு பளிச்சிடுகிறது. தான் வாழ்ந்த வாழ்வினையும், தன்னைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களையும், சமூகத்தின் நிலைமைகளையும் மிகவும் தெளிவுடனும், அழுத்தத்துடனும் பாடியுள்ளார். மனித நேயம், பொது நலம், உயர்வு-தாழ்வு, இன்பம்-துன்பம் இவற்றிற்காகத் தனது எழுதுகோலை ஏந்தியவர்!

 சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகருக்கு அருகில் உள்ள சிறுகூடல்பட்டி சொந்த ஊர்! சாத்தப்பன்-விசாலாட்சி தம்பதியினருக்கு 24.06.1927 ஆம் நாள் எட்டாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் முத்தையா! புகழ்ப்பெயர் கண்ணதாசன்!

 சிறுகூடல்பட்டியில் ஆரம்பக் கல்வி கற்றார். பின்னர் அமராவதி புதூர் குருகுலத்தில் எட்டாம் வகுப்பு வரை படித்தார்.

 தனது பத்து வயதிலேயே கிராமத்திலுள்ள வாசக சாலையில் நூல்களையும், இதழ்களையும், நாவல்களையும் படிக்கும் பழக்கம் கொண்டார். வானொலியில் ஒலிபரப்பாகும் பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டுப் பாடவும் கற்றுக் கொண்டார்.

 படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்ட முத்தையா, கையில் ஒரு சிறு பெட்டி- சாதாரணமான இரண்டு வேட்டி-சட்டைகள் - சில பழைய புத்தகங்கள் - கதை எழுதி வைத்திருந்த தனது நோட்டுகள் - உடைந்த ஒரு ஊற்றுப் பேனா - இந்தச் சொத்துக்களுடன் வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் இரயிலேறி விட்டார். திருச்சி வந்து இறங்கினார். அங்கு பத்திரிக்கை நிறுவனங்களையும், வானொலி நிலையத்தையும் நாடிப்போனார். நாளும் அலைந்தார். வேலை கிடைக்கவில்லை. சில நாட்களில் சென்னைக்கு இரயிலேறி விட்டார்.

 சென்னை நகருக்கு சென்றவர், கனவுகளுடன் சுற்றித் திரிந்தார். கையில் காசு இல்லை; சாப்பிடுவதற்கு வழியில்லை; தங்குவதற்கு ஓர் இடம் இல்லை; மெரினா கடற்கரை மணலில் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துவிட்டார்.

 எழுத்தாளன் ஆக வேண்டும் என்ற ஆர்வம்! நடிகனாகிப் புகழ் பெற வேண்டும் என்ற ஆசை! அதற்காகத் தன் பெயரையும் சந்திரமோகன் என்று மாற்றி வைத்துக் கொண்டார். படப்பிடிப்பு நிலையங்கள் பலவற்றில் ஏறி இறங்கினார். ஆனால் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. முடிவில், சொந்தக் கிராமத்திற்கே திரும்பி விட்டார்.

 கிராமத்தில் தங்கிட மனமில்லாமல், மீண்டும் சென்னைக்கே புறப்பட்டார். திருவொற்றியூரில் அஜாக்ஸ் கம்பெனியில் எழுத்தராகச் சேர்ந்தார். அங்கு தான் அவர் எழுத்தாளராவதற்கான சூழல் அமைந்தது. பல எழுத்தாளர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

 ‘திருமகள் ’ பத்திரிக்கையில் 1944 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து ஆசிரியராக உயர்ந்தார். கண்ணதாசனின் முதல் கவிதை திருமகள் பத்திரிக்கையில் வெளி வந்தது. ‘திரை ஒலி’ ‘மேதாவி’ ஆகிய இதழ்களின் ஆசிரியராகவும், 1945-46 ஆம் ஆண்டுகளில் பணியாற்றினார்.

 அறிஞர் அண்ணாவின் மேடைப்பேச்சு கண்ணதாசனை சுயமரியாதை இயக்கத்தின்பால் ஈர்த்தது. சென்னை ராபின்சன் பூங்காவில் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் நாள் கொட்டும் மழையில் திராவிட முன்னேற்றக் கழகம் உதயமானது. அப்போது, கவிஞர் கழகத்தில் அங்கத்தினரானார். அன்று முதல் அவருடைய அரசியல் வாழ்வு ஆரம்பமானது.

 அதே ஆண்டில் சென்ட்ரல் ஸ்டியோவில் திரைப்படங்களுக்கு பாட்டெழுதும் வாய்ப்புக் கிடைத்தது. சேலம் மார்டன் தியேட்டர்ஸ் நிறுவனம் திரைப்படப் பாடல்கள் எழுத அவருக்கு வாய்ப்பளித்தது. வருமானமும் கிடைத்தது.

‘கன்னியின் காதலி’ என்ற திரைப்படத்திற்கு 1949 ஆம் ஆண்டு ‘கலங்காதிரு மனமே’ என்ற பாடலை முதன்முதலில் எழுதினார்.

பொன்னழகி, பார்வதி ஆகியோரை 1950 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

‘டால்மியா’ என்னும் வடவரின் பெயரால் அமைந்த இரயில் நிலையத்திற்கு ‘கல்லக்குடி’ என பெயர் மாற்றம் செய்திடக் கோரிக்கை எழுந்தது. அது தொடர்பாக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய இரயில் மறியல் போராட்டத்தில் கவிஞர் கலந்து கொண்டார். கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்த பொழுது, ‘மாங்கனி’ என்ற முதல் குறுங்காவியத்தை எழுதினார்.

இலக்கியத்தின் மீது கொண்ட தணியாத தாகத்தால் ‘தென்றல்’ என்ற இலக்கிய வார இதழை 1954 ஆம் ஆண்டு தொடங்கி, சிறப்பாக நடத்தினார். அதில் கவிதைகள், இலக்கிய விமர்சனம், அரசியல் கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்தன. அந்நாளில், ‘தென்றல்’ வார ஏடு நடத்திய வெண்பாப் போட்டியில், பின்னாளில் பிரபலமான கவிஞர்கள் பலர் கலந்து கொண்டனர். மரபுப் பாக்களுக்கு உரமூட்டினர்.

திரை உலகத் தொடர்பினால் ‘தென்றல் திரை’, ‘சண்ட மாருதம்’ ஆகிய மாதம் இருமுறை இதழ்களை நடத்தி வந்தார்.

இலங்கைக்கு 1954 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டார். இலங்கை வாழ் தமிழர்கள், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் உரிமைகளுக்காக, இலங்கை தூதரகம் முன்பு நடந்த கண்டன ஊர்வலத்தில் கலந்து கொண்டார். ஆவேசமாகப் பேசி, எழுச்சி உரை நிகழ்த்தினார். ஆத்திரமடைந்த இலங்கைச் சிங்கள அரசாங்கம் கண்ணதாசனின் திரை இசைப்பாடல்களை இலங்கை வானொலியில் ஒலிபரப்புவதற்குத் தடை விதித்தது. பிறகு, தடையை நீக்க முடிவெடுத்தது. ஆனாலும், அவர் பெயரைக் கூறக் கூடாது என்றிருந்த தன் முடிவையும் தளர்த்தியது. இந்நிகழ்வு பற்றி கண்ணதாசன் கூறும்போது, “தன் பாடல்களை விட்டால் அவர்களுக்கு ஒலிபரப்ப பாடல்கள் ஏது?” என்றாராம்.

தமிழகத்தில் 1957 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அப்போதைய திருக்கோட்டியூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராகப் போட்டியிட்டார். நகரத்தார், தங்கள் காலில் விழுந்து வாக்குக் கேட்க வேண்டுமென்றனர். தன்மானமிக்க கண்ணதாசன் அதற்கு உடன்படவில்லை. அத்தேர்தலில் அவர் வெற்றி பெறவும் இல்லை!

திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டார். அவர் எடுத்த, ‘மாலையிட்ட மங்கை’ பாடல்களால் பிரபலமானது! படம் ஓடாததால் கைநட்டமானது! இலாபம் ஏதும் கிடைக்கவில்லை. அடுத்து மருது பாண்டியர்களின் சுதந்திரப் போராட்ட வீர வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு “சிவகங்கைச் சீமை” என்ற படத்தை தயாரித்தார். அதில் இடம் பெற்ற பாடல்கள் புகழ் பெற்றன் ஆனால், படம் தோல்வியைத் தழுவியது! இலட்ச ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது.

அரசியலில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கழகத்தை விட்டு வெளியேறினார். பின்னர், ஈ.வெ.கி.சம்பத் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழ் தேசியக் கட்சியில் இணைந்து, அக்கட்சியை வளர்த்தார். அங்கும் மனம் சலித்தார். பின்னர், காமராஜரின் வேண்டுகோளை ஏற்றதால், அக்கட்சியை முடிவாய் காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.

‘கருப்புப் பணம்‘ என்ற திரைப்படத்தில் எந்த நடிகரும் நடிக்க முன்வராததால், அவரே நடித்தார்.

கவிஞர், சோவியத் இரஷ்யாவிற்கு 1970 ஆம் ஆண்டு பயணம் செய்தார். அந்த நாட்டின் சோசலிச ஆட்சி குறித்தும், மக்களின் மேம்பட்ட வாழ்க்கையைப் பற்றியும் பாடல்கள் எழுதினார். அப்பாடல்களை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்து மேடையில் பாடினார். அப்பாடல்களின் இரஷ்ய மொழிப்பெயர்ப்பைக் கேட்ட மக்களின் கரவொலி மண்டபத்தையே அதிர வைத்துவிட்டது.

பத்திரிக்கையின் மீது கொண்டிருந்த தீவிர ஈடுபாட்டினால், 1968 ஆம் ஆண்டு ‘கண்ணதாசன்’ என்ற தனது பெயரிலேயே மாத இதழைத் தொடங்கினார். அந்த இதழில் தமிழகத்தின் கவிஞர்கள் பலரை எழுத வைத்து, இலக்கிய உலகிற்கு அறிமுகம் செய்தார். அதில் தரமான இலக்கியக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புப் படைப்புகள், விமர்சனங்கள், கவிதைகள் - என வெளியிட்டு தமிழுக்கு அழகு சேர்த்தார்.

‘செப்புமொழி பதினெட்டு’- என்ற தலைப்பில் எழுதி வெளியிட்ட அவரின் இலக்கியத் தெறிப்புகள், உரை வீச்சாகவும், பொன்மொழிகளாகவும், கவிதைகளாகவும் மலர்ந்தன் ‘கண்ணதாச’னுக்கு இதழியல் உலகில் ஓர் உச்சத்தைப் பெற்றுத் தந்தன!

இந்திய அரசு, ஆண்டுதோறும் வழங்கும் சிறந்த பாடலாசியருக்கான விருதை 1969 ஆம் ஆண்டு கவிஞர் கண்ணதாசனுக்கு அளித்து சிறப்பித்தது.

சென்னையிலும், மதுரையிலும் கவிஞருக்குப் பொன்விழா நடத்தப்பட்டது. அவ்விழாவையொட்டி கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் சிறப்பாக பல நடைபெற்றன.

எம்.ஜி.இராமச்சந்திரனின் தலைமையிலான தமிழக அரசு 1978 ஆம் ஆண்டு அவரை அரசவைக் கவிஞராக நியமித்துக் கௌரவப்படுத்தியது.

கல்கி இதழில் வெளிவந்த கவிஞரின் வரலாற்றுப் புதினம் ‘சேரமான் காதலி‘ சாகித்ய அகாதமி பரிசு பெற்றது.

சிறந்த கவிஞருக்கான அண்ணாமலை அரசர் நினைவுப் பரிசு 1979 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட் நகர் தமிழ்ச் சங்க விழாவில் கலந்து கொள்ள 1981 ஆம் ஆண்டு ஜுலை மாதம் பயணம் மேற்கொண்டார். கவிஞரின் உடல்நிலை திடீரென்று பாதிக்கப்பட்டு, சிகாகோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி 17.10.1981 ஆம் நாள் அங்கேயே இயற்கை எய்தினார்.

அமெரிக்காவிலிருந்து அவரது பொன்னுடல் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டது. இலட்சக்கணக்கான மக்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு, அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.

கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடல்கள் காலத்தால் அழியாமல் என்றும் நிலைத்திருப்பவை! தத்துவங்களையும், வாழ்க்கை அனுபவங்களையும் எடுத்துரைப்பவை!

நம் சமுதாயத்தின் மிகப்பெரிய கொடுமை, சாதீய அமைப்பே! ‘சாதி, சாதியென்று சண்டையிட்டு நாதியற்று போய் மடிகிறோமே!' என்று கவிஞர் வேதனைப்பட்டார். சாதியமைப்புக்குச் சாவு மணியடிக்கத் துணிவுடன் நின்றார். சாதி, பேதமற்ற சமுதாயத்தைக் காண வேண்டும் என்று மனம் விழைந்தார்.

தமிழ் மொழியின் மீதும், தமிழக மக்களின் மீதும் அளவு கடந்த பற்றும், அன்பும் கொண்டிருந்தார் கவிஞர்! கட்டாய இந்தித் திணிப்புக்கு எதிராக, கவிதை வாளைக் காட்டமுடன் சுழற்றினார்! ‘கைகளில், கால்களில், கண்களில், கருத்தினில் எங்கும் இந்தியின் பெயரால் பூட்டப்பட்டிருக்கும் அடிமை விலங்கொடிக்க புறப்படுவீர் தமிழர்களே!' என்று அறைகூவல் விடுத்தார்.

முரண்பாடான தனிவாழ்க்கைக்கு மத்தியிலும், மதுவின் தீமைகளை பின்வருமாறு எடுத்துரைக்கிறார் இப்படி :- “மதுவைத் தொடாவிட்டால் சபையில் மதிப்பு உயரும்; அந்த மதிப்பினால் பல நன்மைகள் உண்டாகும். நீண்ட நாட்கள் உழைத்திட உடலில் வலுவிருக்கும். மது சுயமரியாதையை இழக்கச் செய்யும். நம் பெருமையை சீர்குலைக்கும். உடலையும் உருக்குலைக்கும். குடும்ப கௌரவத்தைப் பாதிக்கும். மது அருந்தாதவனை அனைவரும் வணங்கி, மதித்துப் போற்றும் நிலை ஏற்படும்”.

“ஒழுக்கமற்ற ஆண்கள் தங்கள் தேவைக்காக உருவாக்கியதே விலை மகளிர் கூட்டம்; ஆடவர் தம் பலவீனத்தின் அடையாளமே, விலை மகளிர் பிரிவு; ஏற்றத் தாழ்வான பொருளாதார நிலைமையினால் உருவாக்கப்பட்டவர்களே பொது மகளிர்! உணவு, உடைக்காக ஒரு பெண் தன் உடலை விற்பது சமுதாயத்திற்கு அவமானமல்லவா? அவர்கள், விரும்பி இத்தொழிலுக்கு வந்தவர்களல்லர்; தள்ளப்பட்டவர்கள்"- என்று சாடுகிறார் கவிஞர்.

ஆத்திகர்களால் பெரிதும் விரும்பப்படும் “அர்த்தமுள்ள இந்துமதம்” – என்ற தொடர் கட்டுரைகள், அவரின் ஆன்மீக ஈடுபாட்டினால் அந்திம காலத்தில் விளைந்தவையாகும்.

கவிஞர் கண்ணதாசன் 5000-க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை இயற்றியுள்ளார். மேலும் கவிதைகள், காவியங்கள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள், வாழ்வியல் நூல்கள், நாவல்கள், சுயசரிதம் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழுலகுக்கு அளித்துள்ளார்.

கவிஞரின் எழுத்துக்கள் மனித மேம்பாடு, சமுதாயத்தின் உயர்வு, இலக்கிய இரசனைகளைக் கொண்டவை. கவிஞர் கண்ணதாசனின் நாடும், மக்களும் நலம் பெறவும், சமுதாயம் உண்மையான விடுதலை பெறவும், மாற்றம் காணவும் விரும்பித் தனது எழுதுகோலை இயக்கியவர்.

அதனாலேயே, 'கவியரசு கண்ணதாசன்' என்று ஆனவர்! அவர் புகழ் தமிழ் உலகம் உள்ளவரை நிலைக்குமாக!

- பி.தயாளன்

Pin It