அடர்ந்த  கருமையான சுருள் முடி. ஓங்கி அடித்தால் முறிந்து விடுமோ என்று அஞ்ச வேண்டிய ஒல்லியான உருவம். சற்று குட்டை. அடர்த்தியான நெஞ்சு வரைக்கும் இருக்கின்ற தாடி, அதில் ஓரிரு வெள்ளிக் கம்பிகள். கை – நெஞ்செல்லாம் தலையில் இருப்பதைப் போல அடர்தியான கருமையான முடி. ஆனால் அதற்குள்ளே இருப்பதோ எதற்கும் அஞ்சாத வைரம் பாய்ந்த இதயம். கண்ணாடி போடாமலே படிக்கக் கூடிய ஆற்றல். அப்போது அவருக்கு வயது 70. இவர் தான் திராவிடர் கழகத்தின் கடைசிக்கால திராவிடர் விவசாய சங்கச் செயலாளர்  குடந்தை ஏ.எம்.ஜோசப்.

துவக்கத்தில் சில காலம் தான் செல்லும் வெளியூர் கூட்டங்களுக்கெல்லாம் என்னையும் (செல்வேந்திரன்) பேச ஏற்பாடு செய்து அழைத்துப் போவார். இந்த வகையில் அவர் தான் என் துவக்க கால வழிகாட்டி. நான் முன்னால் அரை மணி நேரம் கூட்டங்களில் பேச குடந்தை ஜோசப் தான் சிறப்புப் பேச்சாளராக முழு நேரம் உரையாற்றுவார். தந்தை பெரியாரோடு தமிழ்நாடு பூராவும் இதுபோலவே பெரியாருக்கு முன்னால் பேசுகிற துணை பேச்சாளராக இருந்து பின்னர் முழு நேர பேச்சாளராக ஆனேன். பிற்காலத்தில் குடந்தை ஜோசப் எனக்கு முன்னாலேயே பேசி விட நான் முழு நேர பேச்சாளராக அவருக்குப் பின்னால் பேசிய காலங்கள் வந்தன. அவருடைய பாணி வேறு. என்னுடையது வேறு.

கள்ளக்குறிச்சி வாசுதேவன் - இவர் தான் தென்னாற்காடு மாவட்ட கள்ளக்குறிச்சியில் திராவிடர் கழகத்தை இயக்கிய பேராற்றலான கூட்டுறவு சங்கம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தார். சொந்த நில புலங்கள் உள்ள நடுத்தர விவசாயி. அவருடைய அரசியல் ஆசானும் – ஆஸ்தான பேச்சாளரும் குடந்தை ஜோசப் தான். வாசு மென்மையாகப் பேசுவார். குரல் மேலெழும்பாமல் மெதுவாக இருக்கும். ஆனால் அந்தப் பகுதி அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகளுக்கு வாசு என்றால் சிம்மசொப்பனம்தான். அப்போதெல்லாம் பேச்சாளர்கள் தங்கும் விடுதிகளில் தங்கும் பழக்கங்கள் கிடையாது.

வாசுவின் தோட்டத்தில் கூரையும் ஓட்டு வில்லையும் இணைந்த ஒரு சின்ன வீடு இருக்கும். அதை ஒட்டியே கிணறும் – பம்பு செட்டும். காலையில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு பம்பு செட்டு போட்டவுடன் எல்லோரும் அங்கே குளியல். காலைக் கடன்கள் எல்லாம் கிராமத்து பாணியில் தோட்டத்தை ஒட்டிய ஒரு காட்டாற்றின் கரையில் திறந்தவெளியில் தான்! சாப்பாடு – காலையில் – வாசுவின் கைத்தடியான கழகச் செயலாளர் நாராயணனின் டீக்கடையில். மதியம் வாசுவின் வீட்டில் இருந்து புளிக்குழம்பு – கருவாட்டுக் குழம்பு என காரசாரமான சாப்பாடு. இரவு கூட்டம் – நடக்கிற ஊரில் கழகத் தோழர்கள் வீட்டில் அல்லது தெருவோரக் கடைகளில்.......

ஜோசப் அந்த இடங்களில் தங்கி மனநிறைவோடு இருப்பார். சாப்பிடுவார். என்னையும் அப்படி பழக்குவார். எனக்கு இந்த அனுபவம் புதிது. ஏழ்மை – எளிமை ஆனால் வலிமை வாய்ந்த உறுதி நிறைந்த தொண்டர்கள்.

குடந்தை ஜோசப் திராவிடர் கழகக் கோட்டையான குடந்தையில் பிறந்தவர். ஆனால் சுயமரியாதை குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. கொடிக்கால் வெள்ளாள சாதியினராய் இருந்து – ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக மதம் மாறியவர்கள் இவருடைய முன்னோர்கள். இவருடைய தந்தையார் ஒரு சின்ன பங்கு சாமியார். மதப் பிரசங்கி. துவக்க காலத்தில் கையில் பைபிள் – கழுத்தில் சொரூபம் என்று அலைந்து கொண்டிருந்தவன் தான் நானும் என்று தன்னுடைய பேச்சின் இடையிலேயே குறிப்பிடுவாராம். மதப்பிரச்சனைகள் என்று வருகிறபோது கிறிஸ்தவ மதத்தையும் – பாதிரிகளையும் – பைபிளையும்  கண்டமேனிக்கு கடுமையாக விமர்சனம் செய்வார். இப்போதுள்ள சிலரைப் போல் மேலுக்கு நாத்தீகம் – உள்ளுக்குள்ளே மதப்பற்று என்று போலித்தனமாக நடக்க மாட்டார்.

திருச்சியில் ஒரு கிறிஸ்தவர்கள் கல்லறை இருக்கிறது. அங்கே மேல்சாதியினருக்கு என்று ஒரு பகுதியும் – தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு என்று ஒரு பகுதியும் இருக்கிறது. இடையிலே ஒரு தடுப்புச் சுவர். இதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்களால் ஒரு ஆதரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. குடந்தை ஜோசப் இந்தக் கூட்டத்தில் கிறிஸ்தவப் பாதிரியார்களையும் – கிறிஸ்தவ மதத்தைப் பற்றியும் மிகக் கடுமையாகப் பேசினார். மதத்தலைவர்கள் மூலம் ஜோசப்பை மத நீக்கம் செய்வோம் என்றும் அவர் இறந்தால் அவர் உடலை கிறிஸ்தவக் கல்லறையில் புதைக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் மிரட்டினர். காரணம், அப்போதெல்லாம் பொது இடுகாடுகளிலோ – சுடுகாடுகளிலோ – கிறிஸ்தவ – முஸ்லீம்கள் உடல்களைப் புதைக்க அனுமதிப்பதில்லை. இதற்கு அஞ்சியே பல கிறிஸ்தவர்கள் பாதிரியார்களுக்கு அடங்கிப் போய்விடுவார்கள்.

ஆனால் ஜோசப் இன்னும் வேகமானார். “என்னை கத்தோலிக்க மதத் தலைமை குருவான போப்பாண்டவர் நினைத்தாலும் நீக்க முடியாது. என்றைக்கு நான் கருப்புச் சட்டை போட்டு பெரியார் தொண்டன் ஆனேனோ அன்றைக்கே உங்கள் கட்டுப்பாட்டைத் தூக்கி எறிந்து விட்டு வெளியே வந்து விட்டேன். நான் இறந்து போனால் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்கு கொடுக்க எழுதி வைத்து விடுவேன். அந்த கவலையே இல்லையென்று” கர்ஜித்த மாவீரன் அவர்.

மிகக் காலதாமதமாக – நாற்பது வயதுக்கு மேல் திருமணம் செய்து கொண்டார். அவருடைய துணைவியார் அரசு மருத்துவமனையில் செவிலியராய் இருந்தார். திருமணமாவதற்கு முன்னால் பலநாட்கள் என்னுடைய (செல்வேந்திரன்) தோட்டத்துக் கொட்டகையில் வந்து தங்கி விடுவார். காலை சிற்றுண்டி -  பக்கத்தில் இருக்கின்ற ஒரு இட்லி வியாபாரம் செய்யும் அம்மாவிடம் இருந்து ஆப்பம் – புட்டு என்று ரகவாரியாகப் போய்விடும். அப்போதெல்லாம் இரவில் சிற்றுண்டி சாப்பிடுகின்ற பழக்கம் கிடையாது. மதியம் இரவு என் வீட்டில் இருந்து சாப்பாடு. நான் ஊரில் இல்லாவிட்டாலும் “தாடிக்காரர் வந்திருக்கிறார்” என்று சொன்னால் அவருக்கு எல்லா உபசாரமும் நடக்கும். இதுபோல ஜோசப்புக்கு தமிழ்நாடு பூராவும் காட்டுசாகை குப்புசாமி – வாசு போன்ற நிறைய கழக நண்பர்கள் இருந்தார்கள்.

ஜோசப்பினுடைய ஆவேசமான பேச்சுக்குப் பிறகு அப்போது நகர திராவிடர் கழகத் தலைவராய் இருந்த என்னுடைய தலைமையில் மேற்சொன்ன சுடுக்காட்டு சாதிச் சுவர் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. ஆனால் அது பொது இடம் அல்ல. தனியார் ஒருவரின் சொத்து. ஆகவே நான், ஜோசப் எல்லோரும் காவல்துறையால் தளைப்படுத்தப்பட்டோம். பெரியார் எங்களைக் கடுமையாக கடிந்து கொண்டார். அப்போதைய நகர் மன்றத் தலைவரான லூர்து சாமி பிள்ளையினுடைய தலையீட்டால் நாங்கள் வழக்கின்றி தப்பினோம்.

இப்படி ஜோசப்பின் வழிகாட்டுதலோடு ஒரு குடும்பமாய் நடந்த எங்களுக்குள் பெரியார் – மணியம்மை மறைவிற்குப் பிறகு சற்று இடைவேளை வந்துவிட்டது. ‘நல்ல வீட்டில் நச்சரவம்’ புகுந்ததை போல் நல்லதே செய்து பழக்கப்படாத சிலர் எங்களுக்குள் புகுந்து விளையாடினார்கள். வழக்கம்போல் வானூயர்ந்த வாக்குறுதிகள் அவருக்கு வழங்கப்பட்டன!

சில மாதங்களிலேயே ஜோசப் நோய்வாய்ப்பட்டார். அமெரிக்காவில் போய் அறுவை சிகிச்சை செய்து கொள்ளுகிற அளவிற்கு அவருக்கு வசதி இல்லை. உதவவும் யாரும் முன் வரவில்லை. அரசு மருத்துவமனையிலேயே அவருடைய வாழ்வு முடிந்து போனது.

கிராமப்புற விவசாயிகளினுடைய பிரச்சனைகளை – அவருடைய கம்யூனிஸ்டுகளின் அராஜக எதிர்ப்புப் பிரச்சாரத்தை இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். கொச்சையான தமிழில் தான் பேசுவார். சொல் அலங்காரம் இருக்காது. ஒலிபெருக்கி குழாய்களில் தன்னுடைய அழுத்தமான உச்சரிப்பையும் – கணீரென்ற குரலையும் கேட்டவர்கள் அவரை நேரில் பார்த்தால் அப்படி பேசியவர் இவரா என்று எல்லோரும் ஆச்சரியப்படுவார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரிக்கென்று “ரத-கஜ-துரக–பதாதிகள்” – “அண்டபிண்ட சராசரங்கள்” என்ற புராண கால சொல்லடுக்குகள் பேச்சிலே வந்து விழுவதை போல் ஜோசப்பின் பேச்சிலேயும் பலரை கவர்ந்த எளிய சொலவடைகள் உண்டு.

“உங்கள் தொப்புளை அறுத்த கத்தி எங்கள் மடியில் இருக்கிறது.”
“உங்கள் அங்கத்திற்கு தண்ணீர் விட்டு அலசி எடுப்போம்”
“உன் குலம் கோத்திரமெல்லாம் நாங்கள் ஆத்திரப்பட்டால் எரிந்து போகும்”

இவைகளெல்லாம் குடந்தை ஜோசப்பினுடைய பேச்சின் நெடுகிலேயும் வந்துவிழும் சொற்கள்.

ஐம்பதாண்டு காலத்திற்கு மேலாக ஜோசப் விவசாய போராட்டக் களங்களில்     நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். தஞ்சை மாவட்டத்தில் மணலி கந்தசாமி போன்ற ஆதிக்க சாதியைச் சேர்ந்த கம்யூனிஸ்டு தலைவர்களை ஜோசப் – கீவளுர் பாவா நவநீத கிருஷ்ணன் – நாகை அவுரி திடல் கணேசன் – அண்மையில் மறைந்து போன நாகை எஸ்..எஸ்.பாட்ஷா போன்றவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள் தமிழகத்தில ஒவ்வொருவரும் நுணுகி ஆராய வேண்டிய சம்பவங்களின் களஞ்சியமாகும்.

(‘மறக்கப்பட்ட மாவீரர்களின் மறக்க முடியாத வரலாறு’ நூலிலிருந்து)

சுயமரியாதை பதிப்பகம், உடுமலைப்பேட்டை 

Pin It