ஓவ்வொரு நாட்டின் குடிமகனும் தன்நாட்டின் அரசாங்கத்திற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு குறிப்பிட்ட தொகையைக் கட்டாயம் செலுத்த வேண்டியுள்ளது. குடிமக்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும்கூட ஒரு குறிப்பிட்ட தொகையை தம் நாட்டின் அரசுக்குச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளன. இவ்வாறு செலுத்தப்படுவது ‘வரி’ என்று பெயர் பெற் றுள்ளது. ஓர் அரசின் வருவாயின் தவிர்க்க இயலாத பகுதியாக வரி அமைந்துள்ளது.

       ஒரு சமுகத்தில் நிகழும் பொருள் உற்பத்தி முறையின் அளவுகோலாகவும்கூட வரியைக் கணிப்பதுண்டு. ஏனெனில் தனிச் சொத்துரிமை வேர்விடாத ஒரு சமுகத்தில் வரி என்பது அறிமுகமாகாது. தனிச்சொத்துரிமையும் அரசு என்ற அமைப்பும் உருவான பின்னரே ஒரு சமுகத்தில் வரி அறிமுகமாகிறது.

       நிலம் என்ற உற்பத்திச் சாதனத்தை அடிப்படையாகக் கொண்ட நிலவுடைமைச் சமுகத்தில் நிலத்தின் உரிமை யாளர்கள் தம்மை ஆளுவோருக்கு விளைச்சலில் ஒரு பகுதியைக் கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு ஆளாக்கப்பட்ட போதே வரி என்பது முதல் முறையாக நடைமுறைக்கு வருகிறது. வேறு வகையில் சொன்னால் நிலவுடைமைச் சமுகத்தின் வளர்ச்சிக் கேற்ப, வரி என்பது பயிரிடும் நிலத்திற்கு விதிக்கப்படுவது என்ற நிலையிலிருந்து, வளர்ச்சியடைந்து வணிகர்கள் கைவினை ஞர்கள் ஆகியோரிடமும் வாங்கப்பட்டது. சமுகத்தின் பொருள் உற்பத்தி முறையின் வளர்ச்சியையொட்டி வரி இனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

       தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் சங்ககாலம் என்று குறிப்பிடும் காலம் தமிழக நிலவுடைமைச் சமுகத்தின் தோற்ற காலம் ஆகும். கிறித்துவிற்கு முந்தைய காலத்திய பிராமிக் கல்வெட்டுகள் வணிகர் களின் இருப்பைச் சுட்டுகின்றன. சங்க இலக்கியங்கள், உள்நாட்டு வாணிபத்தை யும், ஏற்றுமதி இறக்குமதி வாணிபத்தையும், பதிவு செய்துள்ளன. ஆயினும் சங்ககாலச் சமுதாயத்தின் பொருள் உற்பத்தி முறையில் வேளாண்மையே முக்கிய பங்காற்றி யுள்ளது. இதன் அடிப்படையில் சங்ககால ஆட்சியாளர்களின் வருவாய் இனத்தில் நிலவரி முதலிடம் பெற்றிருந்தது. விளைச்ச லில் ஆறில் ஒரு பங்கு வரியாக வாங்கப் பட்டது என்ற கருத்து பரவலாகக் கூறப்படு கிறது. ஆனால் சங்க இலக்கியங்களில் இதற்குச் சான்று எதுவுமில்லை.

       சங்க காலத்தில் நாணயப்புழக்கம் இருந்துள்ளமையை சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகிறது. நிலவரியானது தானியவடிவில் வாங்கப்பட்டதா, நாணய வடிவில் வாங்கப்பட்டதா என்பதில் தெளி வில்லை.

       கழுதைகளின் மீது வாணிபப் பொருட்களைக் கொண்டுவருவோர் உல்கு என்ற பெயரில் செலுத்தியதை பெரும் பாணாற்றுப்படை குறிப்பிடுகிறது.

       மற்றொரு பக்கம் ஏற்றுமதி, இறக்கு மதி வரிகள் துறைமுகங்களில் வாங்கப் பட்டன. வரி செலுத்தியதன் அடையாள மாக சோழர்களின் புலிச்சின்னம் துறை முகத்தில் இருந்த பொருட்களின் மீது பொறிக்கப்பட்டதாகப் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.

       மேலும், ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களின் பட்டியல் ஒன்றையும் பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. இதன் அடிப்படையில் நோக்கும் போது துறை முகத்தில் வாங்கப்படும் ‘உல்கு’ (சுங்கம்) என்ற வரி குறிப்பிடத்தக்க வருவாய் இன மாக இருந்துள்ளது எனக் கருத இட முள்ளது. கைவினைஞர்கள் பற்றிய குறிப்பு கள் சங்க இலக்கியங்களில் காணப்பட்டா லும் அவர்கள் வரி செலுத்தியது பற்றிய செய்திகள் இல்லை. மொத்தத்தில் நிலவரி யும் சுங்க வரியும் சங்ககாலச் சமுதாயத்தில் நிலவிய முக்கிய வரிகள் என்று உறுதிபடக் கூறமுடியும்.

       சங்க காலத்தையடுத்த பல்லவர் ஆட்சிக்காலம் தமிழக நிலவுடைமைச் சமுகத்தின் வளர்ச்சிக் காலமாக அமை கிறது. புதிதாக விளைநிலங்கள் சாகு படிக்குக் கொண்டுவரப்பட்டமையும் வாணிபம் கைத்தொழில் வளர்ச்சியும், வலு வான மைய அரசும் பல்லவர் ஆட்சியின் சாதனைகளாகும். இதன் அடிப்படையில் நிலவரி, சுங்க வரி, என்ற இரு வரி இனங்களுடன் பல் வேறு புதிய வரிகள் அறிமுகமாயின. மிக நுட்பமான முறையில் திட்ட மிடப்பட்டு பல புதிய வரிகள் உருவாக்கப் பட்டன. சான்றாக, சிலவற்றைக் குறிப் பிடலாம்.

       சித்திரமூலம் என்ற மூலிகைச் செடி கொடியாகப் படருவது. இதைப் பயிரிட்டவர்களிடம் “செங்கொடிக் காணம்” என்ற வரி வாங்கப்பட்டது.

       விளைந்த தானியங்கள் விற்பனை செய்யப்பட்டபோது நாற்பத்தெட்டு படிக்கு ஒரு படி என்ற அளவில் வரிவாங்கப் பட்டது. இது ‘வட்டி நாழி’ எனப்பட்டது.

       வழிப்போக்கர்கள் ஓர் இடத்தைக் கடந்து செல்ல வரி வாங்கப்பட்டது. இது “ஊடு போக்கு” எனப்பட்டது.

       கள் இறக்குவோர் “ஈழப்பூட்சி” என்ற வரியையும் மீன்பிடிப்போர் “பட்டினச் சேரி” என்ற வரியையும் கால்நடை வளர்ப்போர், “இடைப்பூட்சி” என்ற வரியையும் குயவர்கள் “குசக்காணம்” என்ற வரியையும் தட்டார்கள் “தட்டுக்காயம்” என்ற வரியையும், வண்ணார்கள் “பாறைக் காணம்” என்ற வரியையும் ஆற்றில் ஓடம் செலுத்துபவர்கள் “பட்டிகைக் காணம்” என்ற வரியையும் செலுத்தி வந்தனர். இவ்வரிகள் நாணய வடிவில் செலுத்தப்பட்டன.

       நெசவாளர்களும் எண்ணெய் எடுப்போரும் தம் உற் பத்திப் பொருளில் ஒரு பகுதியை வரி யாகச் செலுத்தினர். இவ்வரிகள் முறையே “தறிக்கூறை செக்கு” எனப்பட்டன.

       பறையடிப்போரிடமிருந்து “நெடும் பறை” என்ற வரியும், ஏற்றம் இறைப் போரிடம் “ஏற்றக்காணம்” என்ற வரியும் வாங்கப்பட்டன. திருமணம் செய்வோர் “கண்ணாலக்காணம்” என்ற வரியைச் செலுத்த வேண்டியிருந்தது.

- தொடரும்.

(செம்மலர் ஆகஸ்ட் 2011 இதழில் வெளியானது)

Pin It