எழுத்துகள், எண்ணங்களின் வெளிப்பாடுகளைப் பதிவு செய்யப் பயன்படுபவை. எழுத்துகள் எந்த ஒருவராலும் கண்டுபிடிக்கப்பட்டதன்று. இயற்கையாகவே தோன்றிய மாந்தனின் சிந்தனை, குறியீடுகளாக வெளிப்பட்டன. அவ்வப்போது அக்குறியீடுகள் மாற்றம் செய்யப்பட்டன அல்லது செப்பம் செய்யப்பட்டன. உலகில் முதலில் தோன்றிய மொழிக்கே முதன்முதலான குறியீடுகளும் எழுத்துகளும் இருந்திருக்க வேண்டும். மொழியை ஓரினம் பேசி, அம்மொழிக்கு வேறோர் இனம் எழுத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்திருக்க இயலாது. உலகில் முதலில், இயற்கையாகத் தோன்றிய மொழி தமிழே என்பதால், தமிழ்மொழியில்தான் முதல் எழுத்து வடிவங்கள் தோன்றின என்பது இயல்பாகச் சிந்திக்கக் கூடியதே.

சிந்துவெளி நாகரிகம் பற்றிப் பல்வேறு ஆய்வுகள், பல்வேறு காலங்களைக் குறிப்பிட்டாலும், அதன் காலம் புதுப்புது ஆய்வுகளால் மேலும் மேலும் நீண்டு கொண்டே சென்று கொண்டிருக்கிறது. அண்மையில் பாகித்தானிய ஆய்வுக்குழு (2009) சிந்துவெளியில் ஒரு புதிய நகரை அகழ்வாய்வு செய்தது. அக்குழு சிந்துவெளி நாகரிகம், கி.மு. 9500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று அறிவித்தது.1 இடைக்கால இத்தாலி நாட்டில் அறியப்பட்ட வழவழப் பான கண்ணாடி போன்றே, அந்நகரில் கண்ணாடித் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முறையான ஆய்வுகள், சிந்துவெளிக் காலத்தை, கி.மு.12000 ஆண்டுகள் என மெய்ப்பிக்கும். ஏனெனில் பனி உருகல் காலத்தின் இறுதிப்பகுதியே, சிந்துவெளி நாகரிகத்தின் தொடக்கம் எனக் கொள்வதில் தவறேதுமில்லை.

சிந்துவெளியில் காணப்பட்டவை, குறியீடுகளா அல்லது சொற்களா என்ற கருத்து மாறுபாடுகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. தமிழ் அறிஞர்களான ஐராவதமும், மதிவாணனும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். இருவரிடையே சில முரண்பாடுகள் உள்ளனவென்றாலும், மதிவாணனின் ஆய்வுகள், மற்றவர்களைக் காட்டிலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளன என்பது என்னுடைய கருத்து. ஐராவதம் கூறும் பல செய்திகள் சரியான, நிலையான முடிவுகளைத் தராமலேயே உள்ளன. எழுத்துகளைப் பற்றி ஐராவதம் கூறும் செய்திகள் மயக்கத்தைத் தோற்றுவிப்பன.

ஆரியம் வேறு சமற்கிருதம் வேறு

எகிப்திய, மெசபத்தோமிய, இத்திய, சுமேரிய எழுத்துகளைப் படித்துப் பொருள்கூறப் பலரும் முயன்றுள்ளனர். இவ்வாறான முயற்சிகளில் முழுவெற்றி கிடைக்கவில்லையாயினும், ஓரளவுக்கு அவ்வெழுத்துகள் தரும் சொற்களின் பொருளோடு ஆய்வாளர்கள் நெருங்கியிருக்கிறார்கள் என்று தான் கூறவேண்டும். மேற்கண்ட மொழிகளில் காணப்பட்ட குறியீடுகளில் ஒரு பொதுமைத் தன்மையிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேற்கே அறியப்பட்ட தொன்மைக் காலக் குறியீடுகள் தமிழோடு தொடர்புடையன என்பதை அண்மைக்கால ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன. குறிப்பாக, இத்திய (Hittite) மொழியின் பல நூறு சொற்கள், சமற்கிருதத்தில் காணப்படுவதாகவும், குறிப்பாக இரிக்கு வேதத்தில் உள்ளனவென்றும் எசு.ஆர். இராவ் என்ற ஆய்வாளர் கருத்துரைத்தார்.2 இத்தியம், சமற்கிருதம் ஆகிய மொழிச் சொற்கள், சிந்துவெளியிலும் காணப்படுவதால், சிந்துவெளி நாகரிக மக்கள் ஆரியரே என்று அவர் முடிவு செய்தார். இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியர் பேசிய மொழி எதுவென்பதில் குழப்பங்கள் இருந்தாலும், அனதோலிய இத்திய மொழியோடு, ஆரியம் தொடர்பு கொண்டுள்ளதைத் தற்போது கண்டுபிடித்துள்ளனர். பொதுவாக ஆரியம், சமற்கிருதம், வடமொழி என்பதெல்லாம் சமற்கிருதத்தையே குறிப்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில் அவை வெவ்வேறு மொழிகளைக் குறிக்கும் சொற்களாகும்.

இத்தியர்கள் பேசிய அனதோலியப் பகுதி மொழியிலேயே தமிழ்ச் சொற்கள் இருந்தன என்பதைத் தற்காலத்து ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன என்பதால், இந்தியாவுக்குள் நுழைந்த ஆரியரின் மொழியிலேயும் தமிழின் தாக்கங்கள் இருந்தன எனலாம். சமற்கிருதம் என்பது பிற்காலத்தில் அறிஞர்களால் உருவாக்கப்பட்ட செயற்கையான மொழி. கமுக்கமான அல்லது மறைபொருளான செய்திகளைப் பதிவு செய்வதற்கு அறிஞர்கள் உருவாக்கிய மொழியே சமற்கிருதமாகும் (Scribal Language).3 இவ்வாறான கமுக்க மொழி பாபிலோனிலும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்துக்கு வடக்கே பேசப்பட்ட தமிழின் கிளை மொழிகள், வட மொழிகள் எனப்பட்டன. ஆரியருக்கும் சமற்கிருதத்துக்கும் தொடக்கத்தில் எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை. அரப்பா நாகரிகம் முடிவுற்றபோது, அரசியலில் குழப்பமான சூழல்கள் நிலவி, நிலையான ஆட்சிகள் இல்லாமற் போயின.

உண்மைக்குப் புறம்பானது

அறிஞர்களின் மொழியான சமற்கிருதத்தை இந்திய மொழியியலாளரே உருவாக்கினர். சமணர்களும் அடுத்துப் புத்தச் சமயத்தினரும் பயன்படுத்திய சமற்கிருதம், பின்னர் இருவராலும் கைவிடப்பட்ட நிலையில் கி.மு. 500 ஆண்டுகளில்தான் ஆரியர்கள் அம்மொழியைக் கையிலெடுத்தனர். அடுத்து வருகை தந்த கிரேக்க மொழியின் பல சொற்களைச் சமற்கிருதத்தில் கலந்து அதனைப் புதுக்கினர்.4 இதனால் ஒரு சொல்லின் மூலம் கிரேக்கத்தில் உள்ளதா அல்லது சமற்கிருதத்தில் உள்ளதா என்ற குழப்பம் கூட அறிஞர்களுக்கு ஏற்பட்டது. குறி என்ற தமிழ்ச் சொல்லே, க்ரு (kru) அல்லது க்ரி (kri) எனத் திரிந்து கிரித் (krit) என்றானது. செம்மை என்ற தமிழ்ச்சொல், செம்-சம் எனத் திரிந்தது. குறியென்பது எழுத்தை மட்டுமல்லாது மொழியையும் குறிக்கும். எனவே, சமசுகிரித் (Samskrit) என்ற சொல், செம்மைப்படுத்தப்பட்ட மொழி என்றவாறு, தமிழ்த் திரிபுச் சொல்லாக அமைந்தது. அறிஞர்கள் சமற்கிருதச் சொற்களைத் தமிழ் எழுத்துகளாலேயே (பிராமி) பதிவு செய்திருந்தனர். சமற்கிருதத்துக்கெனத் தனி எழுத்து வடிவம் கி.பி.200 ஆண்டுகளுக்குப் பிறகே அறிமுகம் செய்யப்பட்டது. இந் நிலையில், சமற்கிருத எழுத்துகளிலிருந்தே தமிழ் எழுத்துகள் தோன்றின என்பது நகைப்பிற்கிடமானது. சமணர்களே அல்லது புத்தச் சமயத்தினரே தமிழ் எழுத்துகளை அறிமுகம் செய்தனர் என்றவாறு சொல்லப்படுவதும் உண்மைக்குப் புறம்பானது.

சமணமும் புத்தமும் தமிழரின் பகுத்தறிவுக் கொள்கை வழி எழுந்த சமயங்களாகும். தொடக்கத்தில் அவை சமயங்களாக அறியப்படாமல், நெறிகளாகவே கருதப்பட்டன. பாலி மொழியும் வடதமிழ் மொழியின் ஒரு கிளை மொழியே. சமணர்களும் புத்தர்களும், எந்தவொரு எழுத்து முறையையும் உருவாக்கியதாக அவர்களே கூறவில்லை. தமிழ் எழுத்துகளின் நடைமுறை, குமரிக் கண்டத்திலிருந்தே சிந்துப் பகுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிந்துப் பகுதி மக்கள், தங்கள் முன்னோர் பயன்படுத்திய எழுத்துமுறை யையே பின்பற்றினர் என்பதால், சிந்துவெளியின் ஒரு புதிய எழுத்துமுறையைக் கண்டுபிடித்தனர் எனக் கூற இயலாது.

சிந்துவெளி நாகரிகம் கி.மு. 1800 ஆண்டுகளில் நிறைவுற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.5 அக்கால அளவில் சிந்துவெளி எழுத்துமுறை பரவலாக அறியப்படா மலும், பொதுமக்களும் படித்து அறிந்துகொள்ளும் வகை யில் அமையாமலும் இருந்ததையுணர்ந்த தமிழ் அறிஞர்கள், பொது மக்களும் பயன்படுத்தக் கூடிய புதிய தோர் எழுத்து முறையை அறிமுகம் செய்தனர். ஆரியர்கள் புதிய எழுத்து முறையை அறிமுகம் செய்தனர் என்ற செய்தி எங்கும் காணப் படவில்லை. தமிழர்கள் அறிமுகம் செய்த புதிய எழுத்து முறையைத் தங்களுடையது போல் காட்டிக் கொள்ள, பிராமி என்ற பெயரைப் பிற்காலத்தில் ஆரியர்கள் சூட்டி, அம்முறையைப் பிரம்மாவே தங்களுக்குக் கற்றுத் தந்ததாகக் கூறிக்கொண்டனர். பழைய சிந்துவெளி எழுத்து முறையும், புதிய முறையும் சில நூற்றாண்டுகள் வரை இணைத்தே எழுதப் பட்டுப் பிற்காலத்தில் பழைய முறை கைவிடப்பட்டது.

பொணீசியர் - தமிழர்

மேற்கே பொணீசியர் என்ற மரபினர், இந்தியாவுடன் கி.மு.2000 ஆண்டுகளிலேயே வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பொணீசியர் என்ற சொல், கிரேக்கர்கள் சூட்டியதாகும். உண்மையில் அவர்கள் எபிரேய மொழி பேசிய (யூத) மக்களே. இம்மக்களின் முன்னோர் பற்றிய செய்திகள், அவர்களைச் சிந்துவெளி மக்களோடு தொடர்பு படுத்துகின்றன. பொணீசியர்கள் தமிழகத்தோடும் தொடர்பு கொண்டிருந்த செய்தி, எபிரேய வாய்மரபுச் செய்திகளாக அறியப்படுகின்றன. (பணி என்ற வணிகம் குறித்த தமிழ்ச் சொல்லே, பொணி, பொணீசியர் எனத் திரிந்தது என்க) மோசே என்ற எபிரேய இனத் தலைவன், புதிய சமயம் கண்ட போது, அதில் இணையாமல் தங்களது பழைய வழி பாட்டு முறைகளையே (தமிழர் வழிபாடுகள்) தொடர்ந்து, எபிரேய ரிடமிருந்து பிரிந்து நின்றவர்களே பொணீசியர்கள் என்க.

இனத்தின் அடிப்படையிலும், வணிகக் கரணியங்களாலும், இந்தியத் தமிழரோடு தொடர்பு கொண்டிருந்த பொணீசியர், இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எழுத்துமுறைகளை அறிந்திருந்தனர். தங்களது வணிகத்துக்கு இம்முறை பெரிதும் பயன்படும் என நம்பிய பொணீ சியர்கள், தங்களுடைய பகுதியிலும் இம்முறையை அறிமுகம் செய்ய எண்ணினர். புதிய முறையில் அறியப் பட்டிருந்த 30 எழுத்துகளையும் எடுத்துக் கொண்டு, அவற்றை 22 ஆகக் குறைத்தனர். விடுபட்ட எட்டு எழுத்துகளின் ஒலிகளை அந்த 22 எழுத்துகளில் சிலவற்றிற்குப் புள்ளி யிட்டுச் சரிசெய்து கொண்டனர். இதன்படி பொணீசியப் புதிய எழுத்துவடிவம் 22 எழுத்துகளையும், 30 ஒலிகளையும் கொண்டிருந்தது.6

இப்புதிய முறையைப் பொணீசியர்களே கண்டுபிடித்ததாகக் கிரேக்கர்கள் கருதி, அப்புதிய முறைக்குப் பொணீசிய கிரம்மாத்தா (Phoenicia grammata) என்ற பெயரையும் சூட்டினர். இப்புதிய முறை, பொணீசியர்களின் வணிக முறைக்கு எளிமையாகவும் ஏற்புடையதாகவும் இருந்தது. காட்மசு (Cadmus) என்ற பொணீசிய வணிகனே இப்புதிய முறையைக் கிரேக்கத்தில் அறிமுகம் செய்தான் என்று ஏரடோட்டசு (Heredotus) என்ற கிரேக்க வரலாற்றாய்வாளர் கூறுகிறார்.7 நடுத்தரைக் கடலைச் சுற்றியிருந்த நாடுகளில் எல்லாம் இம்முறை அறிமுகம் செய்யப்பட்டது.

எபிரேயரும் இப்புதிய முறையை ஏற்றுக் கொண்டு, எபிரேய இலக்கியங்களை இப்புதிய எழுத்துமுறையில் பதிவு செய்தனர்.8 தற்போதும் கிடைக்கப்பெறும் யூத சமய நூலான தோரா (Torah) இப்புதிய முறையில் எழுதப்பட்ட நூலே ஆகும். சுருக்கமாகக் கூறினால், நடுத்தரையையட்டிய எல்லா நாடுகளும், பொணீசியரின் புதிய எழுத்து முறையை ஏற்றுக் கொண்டன எனலாம் (கி.மு. 1500-1300).

தமிழ் எழுத்தே மூலம்

தற்கால மொழியியல் ஆய்வாளர்கள், பொணீசியர்கள் புதிய எழுத்துமுறையைக் கண்டு பிடிக்கவேயில்லை யென்றும், அது கிழக்கே அறியப்பட்ட எழுத்துமுறை யென்றும், அதனைப் பொணீசியர்கள் தங்கள் விருப்பப்படி மாற்றியமைத்துக் கொண்டனர் என்றும் கூறுகின்றனர். பொணீசியர்கள் வணிகர்களே என்பதும், மொழியையும் மொழிக்கான எழுத்து களையும் கண்டுபிடித்து அறிமுகம் செய்யும் அளவிற்கு அவர்கள் மொழியியலாளர்கள் இல்லை என்பதும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தமிழர்கள் அறிமுகம் செய்த புதிய எழுத்து முறை (தமிழி) பொணீசியர்களால் மேற்கே அறிமுகம் செய்யப்பட்டதால், பொணீசிய முறையைப் பின்பற்றியே கிரேக்கம், இலத்தீன் மொழிகளின் வழியே, இன்றைய ஐரோப்பிய மொழிகளும் தங்களுக்கான எழுத்து முறையை வகுத்துக் கொண்டன. தமிழ் வடிவமே இன்றைய மேலை நாடுகளின் எழுத்துகளின் மூலம் என்பதை இறுதியில் உள்ள வரைபடத்தின் வாயிலாக அறியவும்.

உண்மைகள் கடந்த காலங்களில் எவ்வாறு மறைக்கப் பட்டன என்பதைப் பொணீசியர்களின் வரலாறு தெளிவு படுத்துகின்றது. எழுத்து முறைகளின் வேர்கள் குமரிக் கண்டத்தையே தொட்டு நிற்கின்றன. இந்நிலையில், இந்திய ஆய்வாளர்கள், தங்கள் மனம் போன போக்கில் வரலாற்றைத் திசை திருப்பி விட்டனர். புதிய எழுத்து முறை கி.மு. 1500 ஆண்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டபோது, ஆரியர்கள் இந்தியாவில் இருந்தனரா என்பது கூட ஐயத்திற்கிடமானது.

அசோகன் கல்வெட்டு பற்றிப் பல்வேறு தவறான தகவல்களை, தமிழகத்தின் ஆய்வாளர்களே அளித்து வருகின்றனர். அசோகன் காலத்தில்தான் முதன்முதலாக எழுத்துகள் அறிமுகமாயின என்பதால், அவ்வெழுத்துகளைக் கண்டுபிடித்தவன் பெயர் தெரியாததால், அதனை அசோகன் பிராமி என்றனர். உண்மையில் அசோகனுக்குப் பலநூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அசோகனின் எழுத்து வடிவம் பயன்பாட்டிலிருந்தது. அக்காலத்தில் எவரும் பாறைகளிலும் தூண்களிலும் பொறித்து வைக்க வில்லை. அசோகன் காலத்தில்தான் அவை வெளிப்பட்டன எனலாம்.

தமிழ் எழுத்தின் நீட்சியே

கி.மு. 850ஆம் ஆண்டில், இசுராயெல் நாட்டின் மோவாப் (Moab) என்ற பகுதியை ஆண்டிருந்த மன்னன் மேச (Mesha - மேழம் என்ற தமிழ்ச் சொல்லே) என்பவன் வெளியிட்டிருந்த ஆணைகள், பாப்பிரசு தாள்களில் வெளி யிடப்பட்டன.9 அத்தாள்களில் காணப்படும் எழுத்துகள், அசோகனின் கல்வெட்டு எழுத்துகளைப் போன்றே காணப் படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அசோகனின் எழுத்துகள், அவன் காலத்துக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே இசுராயெல் நாட்டில் அறியப்பட்டிருந்தது எப்படி? இசுராயெல் நாட்டின் எழுத்துகளையே அசோகன் இந்தியாவில் பின்பற்றினானா?

இவற்றிற்கெல்லாம் விடை யாதெனில் கி.மு.1500 ஆண்டுகளில் வட இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட தமிழ்மொழிக்கான எழுத்து வடிவங்களை, பொணீசியர் மேலை நாடுகளில் அறிமுகம் செய்தபோது, எபிரேய மொழியும் அவ்வெழுத்து வடிவங்களை ஏற்றுக் கொண்டது என்பதே. உண்மையில் மேச மன்னனும், அசோகனும் பயன் படுத்தியது தமிழின் புதிய எழுத்துமுறைகளையே என்க. தமிழின் புதிய வடிவம், வட இந்தியாவிலிருந்த பல்வேறு மொழிகளிலும் சிற்சில மாற்றங்களுடன் பின்பற்றப்பட்டன. ஏறக்குறைய 18 மொழிகளில் சிற்சில மாற்றங்களுடன் தமிழின் எழுத்துவடிவம் பின்பற்றப்பட்டது. சமற்கிருதம் உள்ளிட்ட இன்றைய இந்திய மொழிகளின் எழுத்து வடிவங்கள் யாவும், தமிழ் முறையின் நீட்சிகளே எனலாம். அத்துடன் தமிழ் எழுத்துமுறையே இன்றைய ஐரோப்பிய மொழிகளிலும், பல்வேறு மாற்றங்களுக்குட்பட்டு வளர்ந்துள்ளன.

தமிழறிஞர்கள் உருவாக்கித் தந்த எழுத்துமுறை, சிந்துவெளித் தமிழ் எழுத்துகளின் அடுத்த கட்ட வளர்ச்சி யாகும். இதனைப் பிராமி என்று பிற்காலத்தில் ஆரியர்கள் பெயரிட்டுக் கொண்டனர். பிரம்மா என்ற சொல்லே, பெரும் ஆன் - பெருமான் - பெம்மான் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபாகும். பிரம்மா, பிரசாபதி, பிராமணாசுபதி, பிரகசுபதி, பிரமணா போன்ற சொற்கள் அனைத்தும் தமிழ் மூலத் திரிபுகளே. பிர எனத் தொடங்கும் சமற்கிருதச் சொற்களின் முன்னொட்டுச் சொல், பெரும் என்ற தமிழ்ச் சொல்லின் திரிபே. பெரும் அமணன் என்பது, பெரியவன் பெருந்துறவி என்ற பொருளைக் குறிக்கும் தமிழ்ச் சொல்லாகும் பெரும்அமணன், பிராமணன் ஆனான்.

உலக மொழிகளுக்கு மூலம்

தமிழ் மொழிக்கான எழுத்து வடிவங்களைச் சமணர்களே அளித்தார்கள் என்பதும், புத்தர்களே கொடுத்தார்கள் என்பதும், சமண புத்தர்களுக்கு அசோகனே அளித்தான் என்பதும், சமற்கிருத எழுத்து வடிவத்தினின்றே தமிழ் வடிவம் பிறந்தது என்பதும், கி.மு.300 ஆண்டுகளுக்கு முன்பு தமிழுக்கு எழுத்து வடிவம் இல்லையென்பதும், வரலாற்றைத் திசை திருப்பும் பொய்ச் செய்திகளாகும். கி.மு.300க்கு முன்னதாகத் தமிழுக்கு எழுத்து வடிவம் இருந்திருக்க வில்லை என்றால், தொல்காப்பியம் எந்த எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டது? தொல்காப்பியரின் காலம் கி.மு. 700 என ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், தமிழுக்கு எழுத்து வடிவம் சமற்கிருதத்துக்கு முன்பே இருந்தது என்ற உண்மையை மறைக்கத் தொல்காப்பியக் காலத்தைச் சிலர் கி.பி. 500 என்றும் கூறினர்.

கி.மு. 10000 ஆண்டுகளில், உலகில் எம்மொழியும் எழுத்துவடிவத்தைப் பெற்றிருக்காத நிலையில், தமிழ் மொழி அதனைப் பெற்றிருந்தது என்பதை, இன்றைய ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.10 இன்றைய நமது ஆய்வு இலக்கு, கி.மு.2000 ஆண்டுகளில், குமரிக் கண்டத்தில் அறியப்பட்டிருந்த எழுத்து வடிவத்தை நோக்கி மேற் கொள்ளப்பட்டு வரும் நிலையில், கி.மு. 300 ஆண்டுகளில் தான் தமிழுக்கு எழுத்துவடிவம் தோன்றியது எனக்கூற எவ்வாறு துணிச்சல் வந்தது? தமிழைப் பற்றிக் கடந்த காலங்களில் மறைக்கப்பட்ட உண்மைச் செய்திகள் ஒவ் வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆப்பிரிக்கப் பழங்குடி மக்கள் கி.மு. 6000 ஆண்டுகளில் பேசிய மொழி தமிழ் மொழியே என்பதை அண்மைக் காலத்து ஆய்வுகளும் மெய்ப்பித்துள்ளன.

உலக மொழிகளுக்கெல்லாம் சொல் வளங்களை வாரி வழங்கிய தமிழ்மொழி, எக்காலத்தும் எவரிடமிருந்தும் எவற்றையுமே கடனாகப் பெற்றதில்லை என்ற உண்மையை இங்குள்ள தமிழறிஞர்களில் சிலரும் புரிந்து கொள்வார் களாக. இன்றைய ஆய்வுகள், “தமிழ் இந்திய மொழிகளுக்குத் தாயாகவும், உலக மொழிகளுக்கு மூலமாகவும் உள்ளது’’ என்பதை உறுதி செய்கின்றன.

மேற்கோள்கள்:

1. சிந்துவெளியின் காலம்: An archacological site dating back(5500+3500) years believed to be older than Mohenjo-daro has been found in sindh province.  A team of 22 archacologists found semi-precious stones and precious tones and utensils made of clay, copper and other metals during an excavation in Laxhian Jo Daro in Sukkar District.  “At present we can say that it is older than Mohenjo-daro,” Ghulam Mustafa shar, the director of the Lakhian To Daro project said.  Shar said, the remains of a “faience” or tin glazed pottery factory had been found at the site. It is believed to be of the era of Italian mirror factories that date back to 9000 years. The discovery of more such items establish the site as 9000 years old, like remains found at Jericho in Palestine, Shar said. (PT1) - The Times of India, 18.1.2009, P.6.

2.  Hittite words in Rig-Veda and Indus Language: Lothal and Indus Civilization, S.R. Rao, P. 139, 1962.

3.  Scribal Language: The Scribal Language used by the professional scribe appears both Egypt and Mesopotamia in the earliest periods in whichwriting was used. - Dictionary of the Bible, P. 779.

4.  Sanskrit has developed more than Greek and German and anyother Aryan language - A Sanskrit - English Dictionary, P. XV.

5.  புதிய தமிழ் எழுத்துமுறை: பொணீசியர்களின் சான்றுகளைக் காட்டி ஆய்வாளர்கள் கூறும் செய்தி.

6.  Phoenician Script: There is some question as to whether the Phoenicians actually invented the alphabet themselves or adapted from an oriental source. In any case the idea was revolutionary - Facts about Lebanon, P. 13.

7.  Heredotus, the 5th century B.C. Greek historian and the father of history wrote that the alphabet was introduced into Greece by Cadmus and his followers. The Greeks did not, according to Hereclotus, Call the new letters alphabet but “Phoinikia grammata” - the phoenician letters. - Ibid, P. 14.

8.  The Hebrew alphabet as exhibited in Torah was identical with the Phoenician alphabet. - Dictionary of the Bible, P. 23.

9.  Mesha: Meesa (Hebrew), a king of Moab (II kings, 3:4 -Bible) If Indian Pandits will consult that most interesting standard work, they will there find a table exhibiting the most ancient of known phoenician letters side by side with the kuidred symbols used in the Moabite inscriptions of king Mesha - which, as before intimated, is known to be as old as about 850 B.C. - while in parallel columns, and in a series of other excellent tables, are given the corresponding phonographic symbols from the numerous inscription of king Asoka scaltened everywhere throughout central and Northern India - A sanskrit English Dictionary, P. XXV.

10. ம.சோ. விக்டர், சிந்துவெளி நாகரிகம், 2009.

(கட்டுரை: முதன்மொழி - ஏப்ரல் 2010 இதழில் வெளியானது)

Pin It