மாறிவரும் விஞ்ஞான யுகத்தில் பழமையை நாளுக்கு நாள் மறந்து வருகிறோம். அவ்வகையில் மறந்த மரங்களுள் பனைமரமும் ஒன்று. மனிதன் ஒருவருக்கு ஒருவர் கருத்துக்களை பறிமாறுதவற்கும், நிலம், வீடு, மனை போன்றவைகளை அடையாளப்படுத்திக் கொள்ளுவதற்கும் மிக முக்கியமான காரணி எழுத்தாணி என்று அழைக்கப்படும் பேனா. அதன் பின்னர் பால்பாயிண்ட் எனப்படும் பந்து முனைப் பேனாக்கள் ஜெல் என்னும் திரவத்தை தாங்கி வருகிறது. இத்தகைய அறிவியல் முன்னேற்றத்திற்கு முன்னர் ஆணி கொண்டு பனை ஓலையில் எழுதினார்கள். இப்பொழுதுள்ள நவீன யுகத்தில் பனை ஓலையில் எழுதினார்கள் என்று கூறினால் நம்மை வியப்புடன் தான் பார்ப்பார்கள்.

panaiபனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. பனை ஓலையை எழுதுவதற்கேற்றவாறு பதப்படுத்தவேண்டும். பதப்படுத்துதல் என்ற‌ அறிவியல் தொழில் நுட்பத்தை சரியாக தெரிந்து வைத்திருந்தார்கள் நம் பண்டைய தமிழர்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கூட ஓலைச்சுவடிகள் அப்படியே இன்னும் அருங்காட்சியகத்தில் உள்ளதற்கு பதப்படுத்துதலே காரணம். நமது முன்னோர்கள் எழுதுவதற்காக நல்ல அகலமான ஓலைகளை எடுத்து சீராக நறுக்கி அதனை தண்ணீரில் நன்கு வேகவைத்து பிறகு உலர்த்தி அதன் பின்னர் இந்த ஓலைகளின் பாதுகாப்பிற்காக இரண்டு மரச்சட்டங்களை சுவடிகளின் மேலும் கீழும், வைத்து கட்டி ஆவணப்படுத்துவார்கள்.

                இந்தப் பனை ஓலையில் கூர்மையான ஆணி கொண்டு எழுதுவார்கள். ஆணிகள் இரும்பால் இருக்கும். சில வேளைகளில் வேறு உலோகங்களில் கூட செய்யப்பட்டிருக்கும். பண வசதி படைத்தவர்கள் தங்கத்தால் ஆன எழுத்தாணி கொண்டு எழுதியுள்ளார்கள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.

                நம்முடைய பாரம்பரிய இலக்கியம், மருத்துவம், சிற்ப சாஸ்திரங்கள் எல்லாம் பனை ஓலையில் எழுதப்பட்டவைதான். முதலில் எழுதுபவர்கள் ஒரு பிரதியை எப்படியும் எழுதி முடித்து, அதன் பின்னர் பல பிரதிகள் வேண்டும் என்றாலோ அல்லது வணிக ரீதியாக எழுதவேண்டும் என்றால் எழுதுவதற்கு தனியாக ஒரு தெருவை அமைத்து எழுத்தாணிகாரத்தெரு என்ற தெருவில் வைத்து எழுதிக் கொடுத்துள்ளார்கள். அவர்கள் நினைவாக இன்றும் பல ஊர்களில் எழுத்தாணிக்காரத்தெரு என்ற தெரு உள்ளது. பனை மரங்களை நினைவுபடுத்தும் விதமாக பனப்பாக்கம், கட்டப்பணை, பனங்குடி, பனை மரத்துப்பட்டி, பனஞ்சாடி, பனைவடலி, திருப்பனந்தாள் போன்ற ஊர்கள் உள்ளன‌. எழுத்து என்ற வரலாற்றின் முன்னோடியாகத் திகழ்ந்த பனை மரங்கள் இன்று காலச்சூழ்நிலையில் நாளுக்கு நாள் அழிக்கப்பட்டு வருகிறது.

                பூக்கும் பருவத்தை அடையாத பனை மரத்தை வடலி எனவும், குறும்பனை எனவும் பனை மர ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடல்கொண்ட குறும்பனை பெயர் இப்போதும் குமரி மாவட்டத்திலும், கேரளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

                பண்டைய காலத்தில் சேர மன்னர்களுக்கு அடையாள மாலை 'போந்தை' அணிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடல் அரிப்பு முதலிய இயற்கைச் சீற்றத்திலிருந்து நாட்டை காப்பதற்குக் கடற்கரையில் வளர்ந்த பனைமரக் கூட்டம் பெரிதும் உதவியாக இருந்தது.

                அழிந்த பனை மரங்களை விடுத்து அழிய‌விருக்கின்ற பனை மரங்களைக் காப்பது நமது கடமையாகும்.

- வைகை அனிஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It