புலிகள் பாதுகாப்பு பற்றி எப்போது எங்கே பேசினாலும் பொதுவாக வருகிற கேள்விகள் இரண்டு.

முதலாவது: புலிகளை எதற்காக பாதுகாக்க வேண்டும்? (நேரடி பயன்பாட்டிற்கு உதவாத எதையும் அக்கறை கொள்வதில்லை என்ற முடிவில் ஒரு கூட்டம் அலைகிறது)

இரண்டாவது: புலிகள் பாதுகாப்பிற்கு தனி மனிதனின் பங்கு என்ன? (இந்த கேள்வியை யாரெல்லாம் கேட்கிறார்களோ, அவர்கள் அதனை பெறும் இயற்கையின் குழந்தைகளே)

முதலாவது கேள்விக்கான விடை: புலிகளை தவிர்த்து காடுகளை பாதுகாக்க இயலாது. புலிகள் இல்லாத காடுகள், அதன் பரிசுத்த தன்மையை இழந்துவிட்டது, அல்லது இயற்கை சுழற்சியில் இருந்து விடுபட்ட காடுகளில் புலிகள் வாழாது. புலிகள் இன்றி காடுகளும், காடுகள் இன்றி மழையும், மழை இன்றி வேளாண்மையும், வேளாண்மையின்றி உணவும், உணவின்றி நாமும் வாழ்தல் இயலாது. நம் உணவுக்கும் காட்டில் வாழும் புலிகளுக்கும் தொடர்பு உண்டு. எனவே நம் சுயனலத்திற்காவது புலிகளை காப்பாற்ற வேண்டும். புலிகளை காப்பாற்றிவிட்டால், காடுகளையும் காட்டில் வாழும் மற்ற விலங்குகளையும், உணவு சங்கிலியையும் காப்பாற்றியதாகிவிடும். இயற்கையை நேசிப்பவர்களுக்கு முதலாவுது கேள்வியே எழாது.

இரண்டாவது கேள்விக்கான விடை:

புலிகளை பாதுகாக்க பத்து வழிகள்:

வழிமுறை ஒன்று: பாராட்டுதல்

குறைகளை மட்டுமே பேசிப்பழகிய நாம் நிறைகளை விட்டுவிடுகிறோம். இந்த தேசத்தில் சுற்றுச்சூழல் தொடர்பாக எந்த நல்ல விஷயங்கள் நடந்தாலும், அவற்றிற்கு காரணமானவர்களை பாராட்டி கடிதம் எழுதுங்கள். உதாரணத்திற்கு, ஒரு சிறுத்தை புலி வழிதவறி கிணற்றில் விழுந்து, அதை வன பாதுகாவலர்கள் காப்பாற்றி மீண்டும் வனப்பகுதியில் விட்டால், அந்த வன அதிகாரிகளுக்கு கடிதம் மூலம் பாராட்டுதல்களைத் தெரிவிக்கலாம், 50 பைசாவில். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனியாக வனத்துறைக்கான வலைத்தளம் உள்ளது. அதிலிருந்து தேவையான முகவரிகளைப் பெற முடியும்.

வழிமுறை இரண்டு: தகவல் பெறும் உரிமை

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலமாக வனம் சார்ந்த தேவையான தகவல்களைப் பெற முடியும். உதாரணத்திற்கு, ஒரு குறிப்பிட்ட வனவிலங்கு சரணாலயத்தில், இருக்கும் புலிகளின் எண்ணிக்கையைக் கேட்கலாம், எண்ணிக்கை கூடியிருக்கிறது, அல்லது குறைந்திருக்கிறதா, குறைந்திருந்தால் எப்படி குறைந்தது, வேட்டையாடப்பட்டதாக இருந்தால், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? இப்படி தொடர்ந்து கேள்விகள் கேட்பதன் மூலமாக, வனப்பகுதியில் நடைபெறும் தவறுகளைக் குறைக்க முடியும்.

வழிமுறை மூன்று: விழிப்புணர்வு

மலை கிராமங்களுக்கு நேரடியாக சென்று, காடுகளின் அவசியம் குறித்து பேசுதல். வேட்டையாடுவது தவறு என்று பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல்.

வழிமுறை நான்கு: திரையிடுதல்

"புலிகளின் ரகசியங்கள்" என்ற திரைப்படத்தை பள்ளிகளில், கல்லூரிகளில் நேரடியாக சென்று திரையிடுதல். அதன் மூலமாக மாணவர்களிடம் நேரடியாக கலந்துரையாடுதல். என்ற வலைத்தளத்தில் இருந்து இந்த திரைபடத்தை பெற முடியும்.

வழிமுறை ஐந்து: அறிவுரைகள்

புலிகள் பாதுகாப்பு தொடர்பான எண்ணங்களை, அதன் பணி தொடர்பான அலுவலர்களிடம் தெரியப்படுத்துதல். மத்திய மற்றும் மாநில அரசுகளின் வனத்துறை அமைச்சர்களுக்கு பரிந்துரை செய்தல்.
tigers_600

வழிமுறை ஆறு: கணக்கெடுப்பு

புலிகள் கணக்கெடுப்பிற்கு நவீன முறைகளைப் பயன்படுத்தி துல்லியமாக கணக்கெடுத்தல். சரியான இடைவேளையில் தொடர்ந்து கணக்கெடுத்து எண்ணிக்கையை உறுதி செய்ய வேண்டும். இதற்காக அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு உதவியாக இருத்தல்.

வழிமுறை ஏழு: சுற்றுலா

வனப்பகுதியில் சுற்றுலா செல்பவர்கள், நெகிழிக்கழிவுளைp போடதிருத்தல் வேண்டும். வாகனங்களில் செல்லும் போது பாடல்களை ஒலிபரப்பி அமைதியைக் கெடுக்காதிருத்தல் வேண்டும்.

வழிமுறை எட்டு: கல்வி

வனப்பாதுகாப்பு குறித்த அவசியத்தை ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களுக்கு கற்பித்தல். அல்லது கற்பிக்க சொல்லி வலியுறுத்துதல்.

வழிமுறை ஒன்பது: தகவல்

புலிகளையோ அல்லது காட்டில் வாழும் மற்ற விலங்குகளையோ வேட்டையாடுபவர்கள் பற்றிய தகவல்களை உரிய அலுவலர்களிடம் தெரிவித்தல்.

வழிமுறை பத்து: காதல்

இயற்கையை காதல் செய்யுங்கள். இயற்கையிடம் அத்தனை பேரும் காதல் செய்ய தொடங்கிவிட்டால் இந்த ஒன்பது வழிமுறைக்கும் வேலை இருக்காது.

இந்த பத்து வழிமுறைகளில், குறைந்தது மூன்று வழிமுறைகளை மட்டுமாவது ஒவ்வாருவரும் பின்பற்ற தொடங்கினால், இங்கே எந்த உயிரினத்திற்கும் அழிவென்பதே இல்லை, மனிதர்களையும் சேர்த்து.

Pin It