Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

மதிவாணனின் குறிப்பு:

அன்பானவர்களே!

சில நாட்களுக்கு முன்பு கூட்டமொன்றில் அமர்ந்திருந்தபோது, ‘…’ இனம் வந்ததுதான் நமக்குப் பிரச்சனை என்று நண்பர் ஒருவர் சொன்னார். அவர் நன்கு படிப்பவர்தான். எந்தவித குறுகிய பார்வையையும் வைத்துக்கொள்ளக் கூடியவர் அல்ல.

அப்போதுதான் யோசித்தேன். மனித குலம் தோற்றம், பரவல் பற்றிய சமீபத்திய அறிவியல் செய்திகள் தமிழில் பரவலாகச் சென்று சேரவில்லை. இன்னும் வழக்கொழிந்த கருத்தாக்கங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன என்பது புரிந்தது.

எனவே, மனித குலத் தோற்றம் மற்றும் வளர்ச்சி பரவல் பற்றிய செய்திகளை மீண்டும் ஒரு முறை படிக்க ஆரம்பித்தேன்.

அவற்றில் சற்று வாசிக்க எளிமையான ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன். இந்தக் கட்டுரையில் உள்ள விவரங்களில் மாறுபடும் வேறுபல கட்டுரைகளும் உள்ளன. ஆனாலும், இக்கட்டுரையின் அடிப்படையை மறுப்பதற்கில்லை.

இந்தியாவிலும் மரபணு தேடல் நிகழ்ந்தது. உசிலம்பட்டியில் வாழும் மனிதர்களிடம் அந்த மரபணு கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி இந்தியாவில் நடைபெற்ற மரபணு தேடல் பற்றிய செய்திகளையும் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும். நேரம், வாய்ப்பு கிடைத்தால் அதுபற்றியும் பின்னர் எழுதுவேன்.

100 ஆண்டுகளுக்கு முந்தைய ‘வந்தேறிகள்’ போன்ற கருத்துக்களை விட்டு விலகிப் பயணித்து சமீபத்து அறிவியலின் கண்டுபிடிப்புகளை தமிழகத்தில் பரப்ப இந்தக் கட்டுரை உதவும் என்று நினைக்கிறேன்.

இந்தக் கட்டுரையை மொழிபெயர்ப்பு என்று சொல்ல முடியாது. தழுவல் என்றும் சொல்ல முடியாது. ஆசிரியர் சொல்ல நினைத்ததைத் தமிழில் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறு இருந்தால் மன்னியுங்கள்.

ஆசிரியரின் ஆங்கிலக் கட்டுரையைப் பார்க்க: http://www.raceandhistory.com/cgi-bin/forum/webbbs_config.pl/noframes/read/662

 ***

மனித இனம் அன்று துவங்கிய மாபெரும் பயணம் பல பதிலில்லாத கேள்விகளை விட்டுச் சென்றது: நமது இனம் எவ்வாறு தோன்றியது? உலகம் முழுவதும் எவ்வாறு பரவியது? இந்த கிரகத்தினைத் தன் செல்வாக்குக்குள் வைத்திருக்கும் உயிரினமாக மாறியது எவ்வாறு?

இதற்கான சில பதில்கள் இருபதாண்டுகளுக்கு முன்பு கிடைத்தன. அறிவியலாளர்கள் அளித்த பதில்கள் அனைவரையும் அதிர வைத்தன. மரபணு ஆய்வின்படி, ‘150,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பெண்ணொருத்தியின் வாரிசுகள்தான் நாங்கள்’, என்று இன்று பிழைத்திருக்கும் அனைத்து மனிதர்களும் சொல்லிக்கொள்ள முடியும். அந்தப் பெண்ணுக்கு ஏவாள் (Eve) என்று பெயரிட்டார்கள். அதைவிடப் பொருத்தமான பெயர் வேறு என்ன இருக்க முடியும்? 

மனித குலம் ஆப்பிரிக்காவில் தோன்றியது என்ற கருத்தாக்கம் அறிவியலாளர் சமூகம் ஒப்புக்கொள்ளும் அளவுக்கு வளர்ச்சி கண்டது. ஆனபோதும் ஏவாளின் வழித் தோன்றல்கள் உலகம் முழுவதும் எப்படிப் பரவினார்கள் என்ற கேள்விக்கு தெளிவான பதில் இல்லாதிருந்தது. 

migration_of_modern_humans_640

தற்போது அறிவியலாளர்கள் இந்தக் கேள்விக்குப் பதில் கண்டுபிடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள். பண்டைய பருவநிலை மாற்றங்கள் பற்றிய ஆய்வு, தொல்லியல் ஆய்வு, பற்பல ஆயிரம் ஆண்டுகளில் மனித இனம் எவ்வாறு கிளைவிட்டு பரந்து விரிந்தது என்பது பற்றிய புதிய, மேலும் தெளிவான மரபணு ஆய்வு ஆகியவற்றைக் கொண்டு மனித குலம் எவ்வாறு உலகம் முழுவதும் எந்த வழித்தடங்களில் பரவியது என்பது பற்றிய விவரங்களை துண்டு துண்டாக சேகரித்து ஒன்று சேர்க்க முடிந்திருக்கிறது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்கள். 

பட்டினியிலிருந்தும், பனியுகத்திலிருந்தும், எரிமலை வெடிப்புகளிலிருந்தும் தப்பித்து, சுறாக்கள் நிறைந்த கடலில், அற்பமான படகுளைக்கொண்டு பயணம் செய்து தப்பித்துப் பிழைத்த வீர காவியமது. எல்லா நல்ல கதைகளையும் போல எதிர்பாராத முடிவும் அந்தக் கதையில் உண்டு: நாம் நிறுவப்பட்ட கருத்தாக்கம் என்று நினைத்தது தவறு என்று வீர காவியத்தின் இறுதி காட்டுகிறது. எல்லோரும் கருதியது போல அல்லாமல், ஆப்பிரிக்காவில் இருந்து சற்றே தெற்கு நோக்கிய பாதையில் பயணப்பட்டு, செங்கடலின் குறுக்கே கிழக்கு நோக்கிச் சென்று, இப்போது ஏமன் என்று அறியப்படுகிற பகுதியை அடைந்து, பின்னர் இந்தியாவின் வழியே ஆஸ்திரேலியாவையும் அதற்கு முன்னதாக ஐரோப்பாவையும் மனித குலம் சென்றடைந்திருக்கிறது. 

“ஆப்பிரிக்காவில் இருந்து ஒரே ஒரு புலப்பெயர்வுதான் நடந்திருக்கிறது”, என்கிறார் ஸ்டீபன் ஆப்பன்ஹைமேர் (Stephen Oppenheimer) . இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர். நமது இனத்தின் ஒப்பிட முடியாத பெரும் பயணம் பற்றிய புதிய கருத்தாக்கத்தை மிகவும் வலுவாக பிரச்சாரம் செய்யும் அறிவியலாளர். "அவர்கள் வடக்கே போக முடியவில்லையா? அந்தப் பாதை பாலைவனத்தால் தடுக்கப்பட்டிருந்ததா? எனவே, அவர்கள் சற்றே தெற்கே விலகி நகரும்படியானது" என்கிறார் அவர்.

மனித குலத்தின் மாபெரும் பயணத்தை கட்டம் கட்டமாக கண்டறிந்து ஒன்று சேர்த்து முன்வைக்கும் ஸ்டீபன் ஆப்பன்ஹைமேரின் பணியில் முக்கியமான அம்சமாக மார்ட்டின் ரிச்சர்ட்டின் (Martin Richards) பங்களிப்பு அமைந்திருக்கிறது. ரிச்சர்ட் ஹட்டர்பீல்டு பல்கலைக்கழகத்தின் (Huddersfield University) மரபணுவியலாளர் ஆவார். அவரும் அவருடைய சகாக்களும் செய்த ஆய்வு ஓர் உண்மையை நிறுவியது. இன்றைய உலகத்தின் முழு மக்கள் தொகையும் ஆப்பிரிக்காவில் வேர் கொண்டு உலகம் முழுவதும் கிளைத்துப் பரவிய ஓர் குடும்பத்தினரே என்பதுதான் அவர்களின் கண்டுபிடிப்பு.

அவர்கள், உலகம் முழுவதிலுமிருந்து சேகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மரபணு மாதிரிகளை ஆய்வு செய்தார்கள். அதன் அடிப்படையில் ரிச்சர்ட் உருவாக்கிய வரைபடம் மனித குலத்தையும் அதன் பல்வேறு கிளைகளையும் காட்டுவதாக அமைந்துள்ளது. 

மரபணுக்கள் வழியே தேடிச்சென்று…

அறிவியலாளர்கள், மரபணுக்களை ஆய்வு செய்வதன் மூலம் மனிதர்களின் தோற்றத்தைக் கண்டுபிடிக்க கடந்த இருபதாண்டுகளாக ஆராய்ச்சி செய்து வந்தார்கள். மரபணுவில் உள்ள மைட்கான்டரியா (mitochondria) என்ற DNA கட்டமைப்பில்தான் இத்தகவல்கள் உள்ளன என்று நடத்தப்பட்ட ஆய்வை ரிச்சர்ட் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். மற்ற மனித செல்களில் நடப்பது போலவே மைட்கான்டரியா உயிருக்குத் தேவையான சக்தியை உற்பத்தி செய்கிறது. அது பிரதான செல்லின் கருவில் உள்ள DNA விலிருந்து சுதந்திரமாக இருக்கும் தனக்கான DNAவைக் கொண்டுள்ளது. மைட்கான்டரியா ஒரு விசேஷமான குணாம்சம் கொண்டுள்ளது. அதன் காரணமாகத்தான் மனித குல வரலாற்றைப் படிக்க இதனைப் பயன்படுத்த முடிகிறது.

கருவுருவாகும்போது தாயின் DNA க்களில் பாதியும் ஆணின் DNA க்களில் பாதியும் இணைந்து புதிய உயிரின் DNA வடிவெடுக்கிறது. ஆனால், ஆணின் விந்துவில் உள்ள மைட்கான்டரியா, விந்திலேயே இறந்து போகிறது, அல்லது உதிர்ந்துபோகிறது. அதனால், தாயின் முட்டையில் உள்ள மைட்கான்டரியா அப்படியே புதிய உயிரில் பதியப்படுகிறது. இப்படியாக, மைட்கான்டரியா தாயிடமிருந்து தாயிக்கு, அதற்கு முன்பு தாயிடமிருந்து தாயிக்கு, அதற்கும் முன்பு தாயிடமிருந்து தாயுக்கு என்று எண்ணிக்கையற்ற தலைமுறைகளாக மாறாதிருக்கிறது.

மரபணு ஆய்வில் ‘ஏறக்குறைய அதே போல’ என்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். அதுதான் மனித குலத் தோற்றம் பற்றிய புதிரை விடுவிக்கப் பயனாயிற்று. மற்ற DNAக்கள் போல மைட்கான்டரியாவுக்கும், வெகு நீண்ட காலப்போக்கில், தன்போக்கிலான திரிபு (Random Mutations) அடைவது நடக்கும். அவ்வாறான திரிபு அப்படியே அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படும் என்பதால், மனித குடும்பத்தின் கிளை எங்கே பிரிந்தது என்பதை கண்டுபிடிப்பது சுலபம்.

இரண்டு மரபணு மாதிரிகளில் மைட்கான்டரியா ஒரே மாதிரியான திரிபைக் காட்டுகிறது என்றால், அந்த மாதிரிகளின் சொந்தக்காரர்கள் தங்களுக்குப் பொதுவான எள்ளுப் பாட்டியின் எள்ளுப் பாட்டிக்கு எள்ளுப் பாட்டியை… அல்லது இன்னும் கொஞ்சம் அதிகமான எள்ளுப் பாட்டிகள் தாண்டி… எள்ளுப் பாட்டியைப் பொதுவாகக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். மரபணு திரிபு ஏறக்குறைய ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தோன்றுகிறது என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில், இரண்டு மரபணு மாதிரிகள் எந்த இடத்தில் திரிபில் ஒத்துப்போகின்றன அல்லது போகவில்லை என்பதைக் கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் வரலாற்றுக்கு முந்தைய காலத்து முன்னோர்கள் எங்கே வெவ்வேறு கிளைகளாகப் பிரிந்தார்கள் என்று கண்டுணர முடியும்.

இந்த நுட்பத்தைப் பயன்படுத்தி, அனைத்து மனிதர்களும் தங்களுக்குப் பொதுவான மைட்கான்டரியாவைக் கொண்ட, 150,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஏவாளைத் தங்களின் பொது மூதாதையாகக் கொண்டிருக்கிறார்கள் என்று நிரூபிக்க முடியும் என்று ஆராய்சியாளர் ரிபாக்கா கேண் (Rebecca Cann) உறுதிப்படுத்தினார்.

ஆனால், ஏவாள்தான் இன்று உலகில் இருக்கும் மனிதர்களின் அனைத்து மரபணுக்களின் தோற்றுவாய் என்பதில்லை. ஒவ்வொருவரும், பற்பலத் தலைமுறைகளாக தங்களின் வெவ்வேறு மூதாதையரிடமிருந்து பெற்ற பற்பலமுறை மாற்றம் செய்யப்பட்ட 30,000 மரபணுக்களின் சேர்க்கையையும் கொண்டுள்ளார். ஆனால், ஒவ்வொருவரின் மைட்கான்டரியா DNA வும் ஒரே ஒரு மூதாதையிடம் நேரடி தொடர்பு கொண்டுள்ளது. அதாவது, தாயிடமிருந்து தாயிக்கு என்று ஓர் நேரடி நேர்கோடு முந்தைய ஒரு தாயை இணைப்பதாக உள்ளது. அது போல, நூறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் ஏறக்குறைய பத்தாயிரம் பேர் என்ற அளவுக்கு மக்கள் தொகையுள்ள ஒரு குழுவுடன் மைட்கான்டரியா நம் அனைவரையும் இணைக்கிறது. நம்மையும் அந்த ஆதி காலத்து ஆப்பிரிக்க மக்களை இணைக்கும் கோட்டைக் காட்டும் தடயமாக மைட்கான்டரியா DNA இருக்கிறது.

migration_of_modern_humans_641

பருவநிலையின் பாத்திரம்

பண்டைய மனித குலத்தின் ஒரு பிரிவினர்தான் ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்து உலகம் முழுவதும் உள்ள தற்போதைய மக்களினங்களுக்கு பாதை சமைத்தார்கள் என்று ரிச்சர்டின் ஆராய்ச்சி காட்டும்போது, அந்த இடப்பெயர்ச்சி எப்போது நடந்திருக்கும் என்பதை பண்டைய பருவநிலை பற்றி ஆராய்ச்சி துல்லியமாகக் காட்டுகிறது என்று வாதிடுகிறார் ஆப்பன்ஹைமேர். ஏறக்குறைய 80,000 ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் வெப்பநிலை குறைய ஆரம்பித்து பனியுகம் ஒன்று நிகழ்ந்தது. துருவத்தில் உள்ள பனிப்பரப்பு விரிவடைந்து ஐரோப்பா வரை வந்தது. நீரெல்லாம் பனியானதால் கடல் நீர் குறைந்து கடல் மட்டம் மிகவும் தாழ்ந்து போனது. ஆப்பிரிக்கா பாலைவனமானது. இந்த பருவநிலை மாறுதல் ஏற்பட்ட, ஏறக்குறைய, அதேகாலத்தில்தான் மனித இனத்தின் கிளையொன்று அரேபியாவைக் கடந்து பின்னர் இந்தியாவுக்கும், பின்னர் கிழக்காசியாவுக்கும் சென்றதை மரபணுத் தடயங்கள் காட்டுகின்றன. மனிதர்களால் செய்யப்பட்ட 75 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கருவிகள் மலேசியா வரை காணக்கிடைக்கின்றன என்று ஆப்பன்ஹைமர் குறிப்பிடுகிறார். அதன் பின், மனித இனம் அங்கிருந்து சுறாக்கள் நிறைந்த கடல்களைத் தாண்டி ஆஸ்த்திரேலியாவுக்குப் பயணப்பட்டிருக்கிறது. அங்கே அவர்கள் 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு படைத்த கலைப்படைப்புகள் காணக்கிடைக்கின்றன.

ஆப்பிரிக்காவில் இருந்து மனித இனமொன்று இடம்பெயர்ந்தது இதற்கு முன்பும் நடந்திருக்கின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. 100,000 முதல் 120,000 ஆண்டுகளுக்கு முந்தைய மனித உடலின் மிச்சங்கள் இப்போது இஸ்ரேல் என்றழைக்கப்படும் பகுதியில் கிடைத்துள்ளன. இருந்த போதும் அந்த மனித இனத்தின் மரபணுக் கூறுகள் ஏதும் தற்போதைய மனித இனத்தில் காணப்படவில்லை. 80,000 வருங்களுக்கு முன்பு பனியுகம் துவங்கியபோது ஆப்பிரிக்காவில் இருந்து கிழக்கே போவதற்கான பாதை சகாரா பாலைவனத்தினால் மறிக்கப்பட்டதால், அவர்கள் தெற்கே தள்ளியுள்ள பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது என்கிறார் ஆப்பன்ஹைமர்.

50,000 ஆண்டுகளுக்கு முன்பு பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வலுவான பருவமழை துவங்கிய பின்னர், பாலைவனமாக இருந்தது வளமிக்க பூமியாக, ‘வளமான வளர்பிறை’(Fertile Crescent) யாக மாற்றம் கண்டது. அது அரேபிய வளைகுடா துவங்கி துருக்கி வரை நீண்டது. அப்போதுதான், மனிதர்கள் தற்போது ஐரோப்பா என்றறியப்படும் பகுதிக்குள் நுழைந்தார்கள். அப்போது, அப்பகுதியில் நியாண்டாதால் மனிதர்கள் (Neanderthals) வசித்து வந்தார்கள். அவர்கள் (நியாண்டாதால் மனிதர்கள் ) அப்பகுதிக்கு பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்து தங்கியிருந்தனர்.

இந்த இரண்டு மனித இனப் பிரிவுகளும் அந்தப் பகுதியில் 10,000 ஆண்டுகாலம் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மத்தியில் இனக்கலப்பு ஏற்படவில்லை என்பதை நியாண்டர்தால் மனிதர்களின் மிச்சங்களிலிருந்து கிடைத்த DNAக்கள் காட்டுகின்றன. அவர்களின் உடலில் தற்போதைய மனித உடலில் காணப்படும் மைட்கான்டரியா என்ற தடயம் இல்லை. அனைத்து ஐரோப்பியர்களும், அதன் நீட்சியாக அமெரிக்கர்களும் நான்கு வழிபட்ட / வகைப்பட்ட மைட்கான்டரியா DNA தடயங்களைத்தான் கொண்டுள்ளார்கள். இந்த தடயங்கள் 10,000 முதல் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்காசியாவிலிருந்து துவங்குகின்றன.

ஈடுஇணையில்லாத பயணம்

மனிதப் பெரும் பயணத்தின் இறுதிக் கட்டமும் கூட பருவநிலை மாற்றத்தால்தான் நிகழ்ந்தது. 20,000 முதல் 25,000 வருடங்களுக்கு முன்பு துருவப் பகுதிகளில் பனி அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் காரணமாக கடல் பின்வாங்க ஆரம்பித்தது. இப்போது சைபீரியா என்றும் அலாஸ்கா என்றும் இருக்கின்ற நிலப் பரப்புகளுக்கு இடையிலான கடல் வற்றிப் போனது. இப்போது கடலின் கீழே இருக்கும் அந்த நிலப்பரப்பின் வழியே சைபீரியாவிலிருந்து அலாஸ்காவிற்கு மனிதர்கள் இடம் பெயர்ந்தார்கள் என்று சொல்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பீட்டர் போர்ஸ்ட்டர். அவர்கள் கொண்டுவந்த மைட்கான்டரியா DNA தடயம் சைபீரியாவிலும் ஆசியாவிலும் காணக் கிடைக்கிறது. இந்த தொன்மை மனிதர்கள், பின்னர் துவங்கிய பனியுகத்தின் காரணமாக அமெரிக்கா முழுமைக்கும் பரவினார்கள். 16,000 வருடங்களில் அவர்கள் விட்டுச்சென்ற கற்கால ஆயுதங்கள் இன்றைய பெனில்சில்வேனியாவில் கிடைக்கின்றன. இத்துடன் பூமியை மனித குலம் நிரப்பியது நிறைவு பெற்றது.

‘ஏவாளு’க்குப் பின்னர் 7 ஆயிரம் தலைமுறைகள் கடந்துவிட்டன. மிகப் பிரம்மாண்டமான புலப்பெயர்ச்சி மற்றும் கிளை விடுதலின் விளைவாக, மனித இனம் இன்று உலகம் முழுவதும் பரவிநிற்கிறது. இந்த வரலாறு அனைத்து மனிதர்களுக்கும் மிக நெருக்கமான ஒன்று. உலகத்தில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் இடையில் மிகக்குறைவான மரபணு வேறுபாடுதான் இருக்கிறது என்ற இந்த ஆய்வு காட்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நமக்கு நெருக்கமான ஓர் உறவினரும் இருக்கிறார். அவரின் பெயர் சிம்பன்சி.

தனது முன்னோரின் குடும்ப உறவுகளைத் தேடும் ஒருவர், தனக்கு அருகாமையில் மட்டுமல்ல உலகம் முழுவதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. "எங்கிருந்து வந்தோம்? நமது பந்தங்கள் யார்? என்ற கேள்வி நமக்கெல்லாம் இருக்கிறது.." என்று சொல்லும் ஆப்னிமெர், "இந்தக் கேள்வி நமக்குத் தரும் பதில்… நாம் உண்மையிலேயே மிகப் பெரும் ஒரே குடும்பம்.. மிக நெருக்கமான குடும்பம்" என்று முடிக்கிறார்.

உண்மைதான். மனிதம் மாபெரும் குடும்பம்.

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 francis 2012-09-20 01:16
இதுதானா சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறது?
Report to administrator
0 #2 khrisna RajMohan 2012-09-20 17:41
மனித குலத்தின் மாபெரும் பயணத்தைப் பற்றிய புதிய விஷயங்களை இக்கட்டுரை மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. வியப்பூட்டும் தகவல்கள். தமிழாக்கம் செய்து கீற்று நண்பர்களுடன் இதனை பகிர்ந்து கொண்ட கட்டுரையாளருக்க ு நன்றி, பாராட்டுகள்.
கிருஷ்ணா' ராஜ்மோகன், மலேசியா
Report to administrator
0 #3 சி.மதிவாணன் 2012-09-21 20:28
சிதம்பர சக்கரத்தை பேய் பாக்கிறது என்றால் என்ன? விளக்க முடியுமா?
Report to administrator
+1 #4 jayachandran 2012-10-02 12:46
ஆப்பிரிக்காவில் தோன்றிய மனித இனம் எப்படி இந்த பூமி முழுவதும் பரவினார்கள் , என்பதை நண்பர் மதிவாணன் மிக அழகாக விளக்கியிருக்கி ன்றார். உலகில் பரவியுள்ள , வெவ்வேறு இனங்களுக்குள், மரபு ரீதியாக மிகக்குறைந்த அளவே வித்தியாசம் உள்ளது , ஒற்றுமைகளே அதிகம் உள்ளன என்பது நாம் அறிந்துகொள்ளவேண ்டிய உண்மை.
ஆசிரியரின் முயற்சி மிகுந்த பாராட்டுதலுக்கு ரியது.
இனங்களை வைத்து மனிதனை பிரித்து பார்த்து வெறுப்பும் , பகைமையும் கொண்டு ' இன அழிப்பு '
போர்களை நடத்துவது என்பது அறிவீனம் என்றும், மனிதம் ஒரு மாபெரும் குடும்பம்தான் , இந்த குடும்பத்திற்கு ள் வேற்றுமைகளை தவிர்த்து வாழ்வது தேவை என்பது நாம் இன்னும் அறியாமல் வாழ்ந்தால் அது மனித இனத்தின் மேல் ஏற்ப்படும் மாறா கறையாகும்.
Report to administrator
0 #5 sweeta guru 2012-11-15 21:15
தலை சுற்றுகிறது .அப்படியானால் இந்தியாவில் வசிக்கும் அனைத்து மக்களும் எங்களுடைய உறவினர்களா?
Report to administrator
+1 #6 mathi vanan 2012-11-21 16:24
உண்மைதான் குரு. இந்தியர்கள் மட்டுமல்ல, அனைத்து உலக மக்களும் நமது உறவினர்கள்தான். சாதி, நிறம், இனம் என்பதெல்லாம் நமது அறிவுப் பற்றாக்குறையால் நாம் ‘நம்மியவை’தான். மனிதம் மாபெரும் குடும்பம். ஆனால், முதலாளிய, அதாவது கருப்பு முதலாளி துவங்கி வெள்ளை முதலாளி வரை ஒழித்தால் மட்டுமே மனிதம் மாபெரும் ‘குடும்பம்’ ஆகும். உங்கள் சாதி, நான் பிறந்த சாதி, எல்லாம் கற்பிதம்தான். அந்த கற்பிதம் அன்று தேவைப்பட்டது. இன்று இல்லை. இன்று நாம் உணர வேண்டிய உண்மை மனிதம் மாபெரும் குடும்பம் என்பதும், அதனை மறுப்பவர்கள் மனித குல விரோதிகள் என்பதும் மட்டுமே.
Report to administrator

Add comment


Security code
Refresh