Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

தொடர்புடைய படைப்புகள்

இந்தியாவின் குப்பைத் தொட்டி எங்கு உள்ளது என்ற கேள்விக்கு டெல்லிக்காரர்களின் ஆட்சி கை காட்டும் மாநிலம் தமிழ்நாடு என்பதுதான். ஏற்கனவே தமிழகம் முழுக்க பிரச்சனைகளின் உச்சத்தில் இருக்க கூடங்குளம், கெயில், மீத்தேன், ஆற்று மணல் கொள்ளை, தேரிக்காடு கடற்மண் கொள்ளை என இந்த வரிசையில் சமீபத்தில் வர இருப்பதுதான் தேவாரம் நியூட்ரினோ ஆய்வுக்கூடம். இது தமிழ்நாடு குப்பைத் தொட்டியாக ஆக்கப்படுவது மட்டுமல்ல தமிழ்நாட்டு மக்கள் பரிசோதனை எலிகளாகவும் மாற்றப்படவிருக்கிறார்கள் என்பதையே உறுதி செய்கிறது.

pottipuram 600

உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் சுரண்டல்களால் எல்லா இயற்கை வளங்களையும் பறிகொடுத்து நிற்கும் தமிழ்நாடு, இனிமேல் கூடங்குளம் அணு உலை போன்று தேவாரம் நியூட்ரினோ ஆய்வுக்கூட ஆபத்துக்களையும் தாங்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

ஒருபுறம் அறிவாளிகள் இந்த ஆய்வகத்தால் எந்த துன்பமும் ஏற்படாது என்று வீதிவீதியாக, கல்லூரிகள் தோறும் கூவிக்கொண்டிருக்க மறுபுறம் அப்பாவிகளான ஏழை விவசாயிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த ஆய்வகத்தை வரவிடமாட்டோம் என்று கொடி உயர்த்த பிரச்சனை உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இவ்வளவுக்கும் அரசின் தரப்பிலிருந்து ஒரு சிறிய அசைவுகூட இல்லை. ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ள சிபிஎம்மின் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நியூட்ரினோ ஆய்வகத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்துள்ளது. ஆய்வக கட்டுமானப் பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கின்றன. எதிர்ப்புப் போராட்டம் நடத்திய 12 பேர் மீது அரசை எதிர்த்து பொய் பிரச்சாரம் செய்ததாக வழக்குப் போட்டிருக்கிறது காவல் துறை.

என்ன நடக்கிறது தேவாரம் பொட்டிபுரத்தில்? நியூட்ரினோ ஆய்வகம் அமைவதில் என்ன பிரச்சனை?

தேவாரம்… பொட்டிபுரம்.. மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சிறிய ஊர். வனப்பகுதிகள், சுருளியாறு மற்றும் சுருளி அருவி ஆகியவை இவ்வூரைச் சுற்றி உள்ளன. போடி நாயக்கனூர், கம்பம் அருகில் முற்றிலும் விவசாயத்தை சார்ந்து வாழும் மலைப்பாங்கான, ஏலம், கிராம்பு, தேயிலை, காப்பி முதலான பயிர்களின் உற்பத்தியில் முக்கிய பங்கை வகிக்கக் கூடிய பகுதி.

இந்தப் பகுதியில் ஒரு மலையின் அடிவாரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கலாம் என்று 2010ல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அறிவுறுத்தலின் பேரில் அறிவியயல் ஆராய்ச்சியாளர்களும் அரசும் முடிவு செய்ததிலிருந்து இந்தப் பிரச்சனை தொடங்குகிறது. இந்த ஆய்வகம் தேவாரம் பகுதியின் சுற்றுச்சூழலை தலை கீழாகப் புரட்டிப் போட்டுவிடும் என அப்பகுதிவாழ் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குற்றம் சாட்ட, இல்லவே இல்லை. அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று ஆராய்ச்சியாளர்களும், அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகளும் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்யாத குறையாக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அறிவியல்

உண்மையில் நியூட்ரினோ என்றால் என்ன?

இதற்கு விளக்கம் சொல்ல அடிப்படையிலிருந்தே வருவோம்.

இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் அணுக்கள் எனப்படும் மிகச் சிறிய துகள்களால் ஆனவை. ஒரு பொருளை சிறியதாக பகுத்துக் கொண்டே போனால் அதற்கு மேல் (உடைத்து) பகுக்க முடியாததே அணுவாகும். இது 19ம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் அணுக்கொள்கை. ஆனால் அதற்குப் பின் ரூதர்போர்டு போன்ற அறிவியலாளர்கள் அணுவையும் பகுக்க முடியும் என்றும், அந்த அணு வெளிப்புறம் எலக்ட்ரான்(-) என்ற துகள்களாலும் உட்கருவில் புரோட்டான் (+) மற்றும் நியூட்ரான் என்ற துகளாலும் ஆனது எனக் கண்டறிந்தனர்.

பின்னர் வந்த அறிவியலாளர்கள் அணுக்களைப் பிளப்பதன் மூலமோ அல்லது இணைப்பதின் மூலமோ மாபெரும் சக்தி உண்டாகிறது எனக் கண்டறிந்தனர். அந்த சக்தி எக்ஸ்ரே, புற்றுநோயை குணப்படுத்த உதவும் கதிர்கள். மின் தயாரிப்பு முதலிய ஆக்க வேலைகளுக்கும், அணு குண்டு, நியூட்ரான் குண்டு தயாரிப்பு முதலிய அழிவு வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன.

1930ஆம் ஆண்டு உல்ப் கேங் என்ற அறிவியலாளர், அணுவில் புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற துகள்கள் மட்டுமல்லாது வேறு சில துகள்களும் இருக்கலாம் என ஊகித்தறிந்தார். இத்தகைய துகள்களுக்கு நியூட்ரினோ எனப் பெயரிடப்பட்டது. பெயரிடப்பட்ட 26 ஆண்டுகள் கழித்து 1956ல் நியூட்ரினோ துகள் உண்மையில் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதன்பின் நியூட்ரினோ அறிவியல் குறித்தும் புதிய ஆராய்ச்சி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த நியூட்ரினோ துகளின் வேகம் ஒளியின் வேகத்தை ஒத்திருப்பதாலும் இதன் எடை மிகக் குறைவாகவும், இதன் வினையாற்றல் திறன் மிகவும் குறைவாக இருப்பதாலும், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மிக வேகமாக ஊடுருவிச் செல்லும் என்று கண்டறியப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் பூமியின் ஒருபுறம் ஊடுருவும் இந்த நியூட்ரினோ துகள் எந்தப் பாதிப்புமின்றி மறுபுறம் வெளிவரத்தக்கது என்பதுவும் கண்டறியப்பட்டது.

பூமிக்கடியில் குறைந்த பட்சம் 2 கிலோ மீட்டர் ஆழத்தில் ஆய்வுக்கூடம் அமைக்கப்பட்டால் மற்ற துகள்களை வடிகட்டி இந்த நியூட்ரினோவை மட்டும் கண்டறிய முடியும்.

இத்தகைய சிறப்புத் தன்மைகள் கொண்ட நியூட்ரினோ துகளை மனித சக்திக்குள் வசப்படுத்த முடியுமா? என்ற நோக்கத்தில் குறைந்தபட்சம் அவற்றைக் கண்டுணர்ந்து, அவற்றின் பண்புகளை ஆராய முடியுமா என்ற ஆய்வுகளே தற்போது உலகெங்கும் நடந்து வருகின்றன. இந்த முயற்சியில் குறிப்பிடத்தக்க வெற்றி இதுவரை மனித குலத்திற்கு கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய ஒரு ஆய்வுக்கூடம் தான் தேவாரம் பகுதியில் அமைப்பதற்கான ஏற்பாட்டில் இருக்கிறது அரசு. அங்கு சூரிய ஒளியிலிருந்து வரும் காஸ்மிக் கதிர்களின் அணுக்களை பிளந்து அவற்றிலிருந்து வரக்கூடிய நியூட்ரினோ துகள்களை பூமிக்கடியில் உள்ள மின்காந்த ஏற்பிகள் மூலம் கண்டறிவதே இந்த ஆய்வகத்தின் செயல்பாடு.

சரி அதிலென்ன பிரச்சினை? அறிவியல் வளர்வதிலோ, ஆய்வகம் அமைப்பதிலோ, ஆராய்ச்சிகள் நடப்பதிலோ நமக்கு எதிர்க்கருத்து இல்லை. ஆனால் அந்த ஆராய்ச்சிக் கூடம் பூமியின் மேற்பகுதியிலிருந்து 2 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட வேண்டும் என்பதில் தான் பிரச்சினை உருவாகிறது. இந்த நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்க தேவாரம் பகுதியில் உள்ள மலையைப் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 2 கிலோ மீட்டர் தொலைவிற்குக் குடைந்து ஒரு சுரங்கம் ஏற்படுத்தி அதற்குள் இதற்கான கருவிகளை அமைக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதற்காக அமைக்கப்பட்ட ஒரு குழு INO (India based neutrino observatory) (ஆதாரம் : Indian based neutrino observatory, FAQ MINO, www. imsc.ves.in/ino/faq/ino.info.pdf)

இவ்வாறு மலையைக் குடைந்து சுரங்கம் உருவாக்கி அதில் ஆய்வுக்கூடம் அமைக்க வடக்கே இமயமலையில் டார்ஜிலிங், மணாலி, ரோத்தால் ஆகிய இடங்களில் திட்டமிடப்பட்டு பின் நீலகிரிக்கு தள்ளப்பட்டு அங்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடுமையான எதிர்ப்புக்குப் பின் சுருளிக்கு விரட்டப்பட்டு அங்கும் வனத்துறை எதிர்ப்புக்குப் பின் தேவாரம் பகுதிக்கு தள்ளப்பட்டுள்ளது.

1965ல் இம்மாதிரியான ஆய்வுகள் கோலார் தங்கவயலில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கத்தில் வைத்து நடத்தப்பட்டன. பின் சுரங்கம் மூடப்பட்ட பின் அப்படியே நின்று போய்விட்டன (project report – www.imsc.ves.in/ino Open report - interim report pdf)

உலகில் இது போன்ற ஆய்வுக்கூடங்கள் இந்தியா தவிர கனடா, அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி முதலிய இடங்களில் அமைந்துள்ளன. இவற்றில் கனடா, அமெரிக்காவில் ஏற்கனவே தோண்டப்பட்ட சுரங்கங்களைப் பயன்படுத்தினர். ஜப்பான், இத்தாலியில் பாலை மற்றும் மனித நடமாட்டமற்ற வனப்பகுதிகளைப் பயன்படுத்தினர்.

இந்த ஆய்வரங்கம் அமைவதில் மக்களுக்கு என்ன இடர்ப்பாடு ஏற்படும் என்பதை அறிய, அதன் கட்டுமானத்திட்டத்தை ஒருமுறை நாம் உற்று நோக்கினால் போதுமானது.

ஆய்வுக்கூட கட்டுமானத்திட்டம்

neutrino 370சுரங்கத்தின் விட்டம் - 20 அடி முதல் 100 அடி வரை

சுரங்கத்தின் நீளம் - 2 கிலோ மீட்டர்.

அறிவியல் கருவிகள் எடை - 50,000 டன் இரும்பு, மின் காந்தம். (உலகில் உள்ள மின்காந்த ஏற்பிகளில் இதுவே மிகப் பெரியதும் எடை அதிகமானதும் ஆகும்.)

வெட்டி எடுக்கப்படும் பாறைகளின் அளவு – 2,25,000 கன மீட்டர் அதாவது 7,50,000 கன அடி

தேவைப்படும் நீர் - ஒரு நாளைக்கு 3,50,000 காலன்கள்

மின்சாரத் தேவை – அறிவிக்கப்படவில்லை.

இக்கட்டுமானத்திற்குத் தேவையான சிமிண்ட், மணல் சுமார் - 37,000 டன்.

இந்த ஆய்வகத்திற்கான நீர்த்தேவை 30 கி.மீ. தள்ளியள்ள சுருளி ஆற்றிலிருந்து (முல்லைப் பெரியாறு) எடுத்து நிறைவு செய்யப்படும்.

இவை போக இந்தக் கட்டுமானப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக சுமார் 160 கனரக வாகனங்கள் அருகில் உள்ள ரயில் நிலையத்திலிருந்து தேவாரம் நகருக்குள் வந்து போக வேண்டும். வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் நீண்ட நாள் அடிப்படையில் இந்தப் பகுதியை விட்டு வெளியேற்றப்படும். அதுவரை இப்பகுதியிலேயே அவை இருக்கும்.

ஆய்வுக் கூடத்தின் உள்ளே கதிரியக்கம் உருவாக்கக்கூடிய கனிமங்கள் ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டாலும் ஹீலியம், ஆர்கான் போன்ற எளிதில் தீப்பற்றக் கூடிய அபாயமான வளிகள் பயன்படுத்தப்படும்.

பக்கத்துவீட்டில் 6 அங்குல (அரை அடி) விட்ட போர் போடப்படும் போது ஏற்படும் அதிர்வால் நம்மால் தூங்க முடிவதில்லை என்பது நடைமுறை. ஆனால் இத்தகைய பெரிய கட்டுமானத்தால் எந்தவித சுற்றுச்சூழல் மாசுபடுதலோ, இடர்ப்பாடுகளோ அப்பகுதி மக்களுக்கு ஏற்படாது என்று அடித்துச் சொல்கிறார்கள் அறிவியலாளர்கள்.

நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தை நாம் ஏன் எதிர்க்கிறோம்.

கட்டுமானப் பணிகளின் போது:

காரணி 1 : சுற்றுச் சூழல் சீர்கேடு

இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுரங்கத்திற்காக பாறைகள் வெட்டி எடுக்கப்படும் போது ஏற்படும் தூசு, சுற்றுச் சூழல் மாசு. அதனால் ஏற்படும் அதிர்வுகள். இச்சுரங்கம் தோண்டுவதற்கு 1000 டன் ஜெலட்டின் வெடிபொருள் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஏற்படும் விளைவுகள்.

வெடி வைக்கப்படும் போது மிக அருகில் உள்ள இடுக்கி அணை மற்றும் பெரியாறு அணையில் ஏற்படும் விளைவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

இந்த ஆய்வகத்தை நிறுவ 37000 டன் சிமெண்ட் பயன்படுத்தப்பட இருக்கிறது. இதனால் ஏற்படும் சூழல் சீர்கேடு இந்த கட்டுமானப் பொருள்களை ஏற்றி இறக்கச் செல்லும் சுமார் 160 கனரக வாகனங்கள் ஏற்படுத்தும் ஒலி மாசு மற்றும் தூசு.

ஏற்கனவே நீலகிரிப் பகுதியில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆய்வுக்கூடம் அமைப்பதை எதிர்த்ததின் காரணங்கள் அப்படியே தேவாரம் பகுதிக்கும் பொருந்தும்.

நீலகிரியைப் போலவே தேவாரம் பகுதியும் வனச்செறிவான பகுதியாகும். வன விலங்குகளான யானை, சிறுத்தை, மான், வரையாடு, காட்டுப் பன்றிகள் ஆகியவற்றின் உயிர்ச்சுழற்சி இதனால் பாதிக்கப்படும்.

காட்டு வளங்கள், மூலிகை வளங்கள், ஏல விவசாயம், அவற்றிற்கான நீராதாரங்கள் ஆகியவை பாதிப்பிற்குள்ளாகும்.

காரணி-2: நிலநடுக்கப்பகுதி

தேனி மாவட்டம் நிலநடுக்க வட்டத்திற்குள் இருக்கும் பகுதி. பொட்டிபுரம் மலை மேற்குத் தொடர்ச்சிமலையின் பிரிவு. ஏற்கனவே நூற்றுபத்து ஆண்டு பழமையான முல்லைப்பெரியாறு அணை நிலநடுக்கம் வந்து இடியும் என்று கேரளம் வாதாடிக் கொண்டிருக்க இச்சுரங்கம் அமையும் பகுதியில் நிலநடுக்கம் ஏற்படாது என்று ஐ.என்.ஒ. குழு அடித்துச் சொல்கிறது.

30 கிலோ மீட்டர் தொலைவில் இடுக்கி அணையும், முல்லைப் பெரியாறு அணையும் இருக்க இவ்வளவு பெரிய சுரங்கத் துளை அமைப்பதால் என்னென்ன இடர்கள் ஏற்படும் என்ற கேள்வி நமக்கும் எழுகிறது.

காரணி-3: நீரியல் பூகம்பம்

பெரிய பரப்பில் 7,50,000 கன அடி பாறைகள் பெயர்த்தெடுக்கப்படும்போது இப்பகுதியில் உள்ள நீர் அடுக்குப் பகுதிகள் நிலைகுலைந்து நீரியல் பூகம்பம் ஏற்படும் ஆபத்து உள்ளது என பல அறிவியலாளர்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

இதற்கு முன் உதாரணமாக இத்தாலியின் இரன்காசோ ஆய்வகம், அப்பகுதியிலுள்ள நீரடுக்குகளை நிலைகுலையச் செய்து அப்பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும், நீர் மாசுபடும் நிலையையும் ஏற்படுத்தியது.

கட்டுமானம் முடிவடைந்தபின்

காரணி-4: நீர்ப்பயன்பாடு

இந்த ஆய்வுக்கூடத்திற்கு தினமும் 16 லட்சம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்பட இருக்கிறது. சுருளி மற்றும் முல்லைப் பெரியாற்றிலிருந்து வரும் சொற்ப தண்ணீரையும் இவர்கள் உறிஞ்சிக் கொண்டால் மக்களுக்கு குடிதண்ணீருக்கும், விவசாயத்திற்கும் எங்கு போக?

காரணி-5: கதிரியக்கம்

எதிர்காலத்தில் அமெரிக்காவிலிருந்தும், சப்பானிலிருந்தும் செயற்கை நியூட்ரினோ கற்றைகள் இந்த ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதிக்கப்படும்.

இயற்கையான நியூட்ரினோக்களைவிட பன்மடங்கு அதிகமான ஆற்றலைக் கொண்ட இந்த செயற்கை நியூட்ரினோக்கள் மாபெரும் கதிர்வீச்சு அபாயமுடையவை. இவற்றை தேவாரத்திற்கு அனுப்பி வைக்கும்போது நிகழும் பாதிப்புகளுக்கு தேவாரம் மக்கள்தான் பலிகடாவா?

காரணி-6: அணுக்கழிவு புதைப்பு

இவையெல்லாம் போக இந்திய அணு உலைகளின் அணுக்கழிவுகளை இங்க பெற்று சேகரப்படுத்தும் வாய்ப்பும் இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. ஏற்கனவே இந்த ஆய்வகத்திற்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரிய போது அணுக்கழிவு மேலாண்மை என்றுதான் அனுமதி கேட்டுள்ளனர் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது.

காரணி-7: மக்கள் வாழ்க்கை முடக்கம்

ஆய்வுக்கூடம் அணு ஆய்வகமாக இருப்பதால் பாதுகாப்பிற்காக என்ற பெயரில், மக்களின் சுதந்திர நடமாட்டம் முடக்கப்பட்டு அவர்கள் வாழ்க்கை முறை முடமாக்கப்படும். இந்த ஆய்வுப்பணி வெற்றிபெற்றால் எதிர்காலத்தில் மேலும் 4 முதல் 5 கி.மீ. இந்தச் சுரங்கம் ஆழப்படுத்தப்படலாம். அதனால் ஏற்படும் இடர்ப்பாடுகளை மறுபடியும் மக்கள் எதிர்நோக்க வேண்டி வரும்.

இப்படி இவ்வளவு இடர்ப்பாடுகளை தேவாரம் பொட்டிபுரத்து மக்கள் ஏன் எதிர்கொள்ள வேண்டுமென்றால் அதற்கும் பதில் வைத்திருக்கிறார்கள் அறிவாளிகள். இந்தியாவின் விஞ்ஞான வளர்ச்சிக்கு சில தியாகங்களை மக்கள் செய்யத்தான் வேண்டுமாம். ஆனால் அதுவும் உண்மையில்லை என்று அறிய வரும் போதுதான் வேதனை பலமடங்கு அதிகரிக்கிறது.

உண்மையில் இது இந்தியாவின் சுதேசித்திட்டம் அல்ல. Indian Neutrino Observatory அல்ல. India based Neutrino observatory. அதாவது அமெரிக்காவின் நியூட்ரினோ ஆய்வகமான பெர்மி லேப் (Fermi lab) நிறுவனத்தின் சோதனைகளுக்கு உதவி செய்யும் ஓர் உணர் ஆய்வகம். இங்கு அமெரிக்கா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி போன்ற நாடுகளின் ஆய்வுக் கூடங்களிலிருந்து நியூட்ரினோ கற்றைகள் தேவாரத்திற்கு அனுப்பப்படும் இந்த உண்மைகளை மறைக்கும் அறிவாளிகள் தம் சொந்த மக்களை பன்னாட்டு பரிசோதனைகளுக்கு பலி கொடுக்கத் துடிக்கிறார்கள்.

அறிவியல் எல்லாரும் வரவேற்கும் ஒரு துறைதான். யாரும் அறிவியலுக்கு எதிரிகள் அல்ல. ஆனால் அந்த அறிவியலின் பெயரால் நாட்டை அன்னியருக்கு விற்கும், மக்களை பரிசோதனை எலிகளாக மாற்றும் ஒரு திட்டத்தை ஒரு போதும் நாம் ஒப்புக்கொள்ள முடியாது.

சரி, இந்த ஆய்வகம் அந்தப் பகுதியில் அமைவதால் மக்களுக்கு ஏதேனும் பயன் கிடைக்குமா என்ற கேள்விக்கும் அவர்களே பதில் தருகிறார்கள்.

இதனால் மொத்தமே 20 முதல் 200 வரையிலான பேர்கள் அங்கு வேலை செய்வார்கள். அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்காது, வேண்டுமானால் கட்டுமானப் பணிக்கான கூலிகளாக முதல் நான்கு ஆண்டுகளுக்கு சிலருக்கு வேலை கிடைக்கலாம்.

மனித குலத்திற்கு இதுவரை எந்தப் பயனும் தராத, இந்த ஆய்வுப்பணி, தற்போது இந்தியா எதிர் நோக்கியுள்ள பொருளாதாரப் பின்னடைவுகளின் மத்தியில் சுமார் ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெறுவதாக அறிகிறோம். 65 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு வேளை உணவுடன் வறுமைக்கோட்டிற்குக் கீழே துன்புறும் ஒரு நாட்டில் இத்தகைய தெரியாத ஊருக்குப் போகாத பாதை அவசியமா என்பது சிந்திக்கத்தக்கது.

மேலும் உள்@ர்வாசிகளுக்கு எந்தப்பயனும் அளிக்காத ஒரு திட்டத்திற்காக இவ்வளவு இடர்ப்பாடுகளை மக்கள் ஏன் தாங்க வேண்டும் என்ற கேள்வியும் நம் முன் எழுகிறது.

இந்த ஆராய்ச்சியை டாட்டா அடிப்படை ஆய்வகம் (TATA Institue of Fundamental research (TIFR), பாபா அணு ஆராய்ச்சி நிலையம், ஐஐடி சென்னை, ஐ.ஐ.டி. மும்பை, இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையம் கல்பாக்கம் உட்பட 7 முதல்நிலை நிறுவனங்கள் மற்றும் 13 பங்கு நிறுவனங்கள் நடத்த உள்ளன. குளிரூட்டப்பட்ட அறையில் கணிணி முன் அமர்ந்து நுனி நாக்கு ஆங்கிலத்தில் விவாதம் செய்யும் அந்த அறிவாளிகளுக்கு தேவாரம் மலையில் ஆடு, மாடு மேய்த்து வயிற்றைக் கழுவிக்கொண்டிருக்கும் வறிய படிக்காத அப்பாவிகளின் வாழ்க்கையின் வலி எப்படிப் புரியும்?

அறிவியலின் எதிர் வினைகளை ஏற்கெனவே இரஷ்யாவின் செர்னோபில் அணு உலையிலும், போபாலில் விஷவாயு விபத்திலும் ஜப்பான் இரோசிமா, நாகசாகியிலும், புகுசிமா அணு உலை விபத்திலும் நாம் போதுமான அளவு பார்த்தாகிவிட்டது.

காவிரிப் பிரச்சனையைக் கண்டு கொள்ளாத, சேதுசமுத்திரத்திட்டத்தை கிடப்பில் போட்ட, ஈழத்தமிழரை எதிரியாய் நடத்திய, மலட்டுக் கத்தரிக்காயை விவாசாயிகள் தலையில் கட்ட துடிக்கிற, விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்கத் துணியாத, முல்லைபெரியாற்றில் துரோகத்திற்கு துணை போகிற, மீன் வளத்தை முதலாளிகளுக்கு விற்கத் துடிக்கின்ற, நாட்டையே சுரண்டல் முதலாளகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பங்கு போடத் துடிக்கின்ற, ஓர் அரசு, இந்த நியூட்ரினோ ஆய்வகத்திட்டத்தில் காட்டும் ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மக்களுக்கு துன்பங்களை மட்டுமே திட்டமிடும் ஓர் அரசு எப்படி அல்லது இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மக்களின் அரசாக இருக்க முடியும்?

அறிவாளிகள் ஆயிரம் சமாதானம் சொன்னாலும் துயர்களை வாழ்வில் எதிர் கொள்ளப் போவது அப்பாவிகள் தான்.

நம் கடமை அந்த அறிவாளிகளின் பிடியிலிருந்து அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது மட்டுமே.

ஏனெனில் அறிவாளிகளுக்கோ இது இன்னுமொரு ஆராய்ச்சி. ஆனால் அப்பாவி மக்களுக்கோ இது தான் வாழ்க்கை. இங்கு தான் வாழ்க்கை.

- மதுரை சு.தளபதி

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 tamil dasan 2015-04-21 01:26
Nethi adi indha thoguppuku nandri.munnella m adhigara vargam vanpunarvu kondathu udal reethiyaga ethanaiyo saatchigal irupiniyum avargal sattathai valathu ottaigalil veliyey vanthu viduvargal.indr u adhey aatchi adhigara vargam karpalipathu kolai seivathu vivasaya nilathayum malai mugadugalayum kadarkarai nilangalayum aanal indha vanpunarvu iyarkaiku ethiranathu idharku thandanai yaga iyarkai namakku kodukka pogum thandanai para patcham indri anaivaryum thandikkum ethanaiyo sunamigalyum boogambathayum thatpa veppa maatrathayum maatri uyirgalai parikkum purinthu kondal nam yellorukkume nandru enna dhan sevvaiku poga vinkalam vittalum yellarume pasivanthal nellum kodhukaiyum karumbum dham pasi aatrum idhai unarnthu indha indha visayathai kaivittal thappipom iyarkaiyin kobathilirunthu kadal mel vivasayam seiyum japan kuda vivasayam valara muyarchigal edukkum podhu iyarkai namaku valangiya nilangalayum malai valangalayum padhukapathu nam kadamai idharku ediraga edukkum ella muyarchigalyum thadupathu nam kadamai nam urimai.......
Report to administrator
0 #2 Siva.M 2015-04-27 17:06
padikatha tharkuriyum.... padicha muttalum aatchiyil.... Thamilan ippadithan..... ..
Report to administrator
0 #3 ஆல்வின் சகாய ராஜ் 2015-04-30 13:25
தமிழக மக்களுக்கு போதுமான விழிப்புனர்வு இல்லை. இருந்தால் இது போன்ற பல திட்டங்களை வர விடுவார்களா? படித்தவர்களில் பலர் கூட மூளை சலவை செய்யப்பட்டு, இத் திட்டங்களுக்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். ஆனால், பின்னால் அனுபவித்து வருத்தப்படப் போவது அவர்களும் சேர்ந்துதான். வரு முன் காப்பதே சிறந்தது.
Report to administrator

Add comment


Security code
Refresh