பரிணாம வளர்ச்சியில் நீரில் வாழ்ந்த மீன் எவ்வாறு நிலத்தில் வாழ்வதற்கேற்ற உடலமைப்பிற்கு மாறியது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 375 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு மீனின் கற்படிமம் (fossil) 2004 ஆம் ஆண்டு கனடாவின் எல்லஸ்மரே தீவில் கண்டிபிடிக்கப்பட்டது. இந்த கற்படிமத்தின் பெயர் Tiktaalik roseae . இந்த மீன் படிமத்தின் தலை எலும்பை ஆராய்ச்சி செய்ததில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன. மீன்களின் முன்னிரு துடுப்புகளும் கால்களாக மாறி, பின்னர் நான்கு கால் உயிரினம் எப்படி தோன்றியிருக்கும் என்பதை Tiktaalik roseae ன் கற்படிமங்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

Tiktaalik roseae ஒரு நீர்வாழ் உயிரினம். தட்டையான தலையையும் உடலையும் கொண்டது. கற்படிமத்தில் இருந்த இந்த உயிரினத்தின் உடலமைப்பை ஆராய்ந்தபோது ஆழமற்ற நீர்நிலைகளின் அடிப்பரப்பில் இவை வாழ்ந்திருக்க வேண்டும் என்றும் அடிக்கடி நீர்ப்பரப்பிற்கு வந்து போயிருக்கவேண்டும் என்றும் கருதப்படுகிறது.

Tiktaalik roseae ன் உடலமைப்பில் மண்டையோடு, கழுத்து, விலா எலும்புகள் ஆகியவை காணப்படுகின்றன. ஆரம்பகால நகரும் உறுப்புகளும் இவைகளின் எலும்புக்கூட்டில் இருந்தன. மீனுக்குரிய செதில்களும் துடுப்புகளும் காணப்பட்டன. நீந்தும், நடக்கும் பண்புகள் ஒருமித்துக் காணப்பட்ட இந்த Tiktaalik roseae ன் படிமம் ஆய்வாளர்களுக்கு உயிரிகளின் பரிணாமத்தை விளக்கும் ஒரு பாடப்புத்தகமாக இருக்கிறது.

Tiktaalik roseae ன் கபாலம், மேலண்ணம், செவுள்கள் இவற்றையெல்லாம் ஆராயும்போது நிலத்தில் வாழும் உயிரியின் கூறுகளும், ஆழமற்ற நீர்நிலைகளில் வாழும் உயிரியின் கூறுகளும் ஒரு சேர காணப்பட்டன.

கால்கள் தோன்றுவதற்கு முன்பாகவே Tiktaalik roseae மீன் ஒரு நான்குகால் உயிரினமாக பரிணமித்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் Tiktaalik roseae ன் தலைப்பகுதி உடலை சாராமல் திருப்பக் கூடியதாக மாறியுள்ளது. இதே காலகட்டத்தில் மண்டையோடு தட்டையாக மாறி, மூக்குப்பகுதி நீண்டு போயுள்ளது. தலையை மட்டும் வேண்டும் திசையில் திருப்பி இரையைப் பிடிக்க உதவியாக இந்த உயிரியின் உடல் அமைப்பு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

வேறு எந்த இடைப்பட்ட உயிரினமும் இதுவரை அறியப்படாததால், இந்த உருமாற்றம் மிகக் குறைந்த கால இடைவெளியில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.

தகவல்: மு.குருமூர்த்தி

Pin It