சுற்றுச்சூழல்
 
இந்த உலகம் இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிந்து உள்ளது

ஒன்று:

தாவரம், விலங்குகள், மண், காற்று, நீர், மலைகள், கடல், ஆறுகள், குளங்கள், ஏரிகள், காடுகள், பள்ளத்தாக்குகள், சமவெளிகள்,

இரண்டு: மனிதர்களால் உருவாக்கபட்ட அறிவியல் சமுதாய, நவீன உலகம்.

மேற்சொன்ன இரண்டுமே நம் சுற்றுச்சூழலினுள் வருபவை தான். அதாவது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் சுற்றுச்சூழல் இவை.

உலகத்தில் மனிதன் ஒரு அங்கம் என்ற நிலை மாறி, மனிதனுக்காக இந்த உலகம் என்ற எண்ணம் மனிதனுக்கு தோன்றிய கணம் முதல் ஒரு பெரும் அழிவுக்கான முதல் படி எடுத்துவைக்கபட்டது. மனிதனுக்குத் தேவையானதை இயற்கையிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்ற விதி தகர்த்தெறியப்பட்டு தனக்குத் தேவையானதைத்தான் இயற்கை தயாரிக்க வேண்டும் என்ற எண்ணத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிய அடுத்த நொடி அழிவின் பாதையை மனிதன் தேர்ந்தெடுத்துக் கொண்டதாக இயற்கை புன்முறுவல் புரிந்தது. மனிதன் இயற்கையை முற்றிலும் புரிந்து கொண்டதாகவும் அதை மாற்றி தனக்கு சாதகமாகப் பயன்படுத்தப் போவதாக கர்ஜித்தான். தனக்குப் பின்னால் ஒரு சவக்குழி தோண்டப்படுவதை மறந்து போனான் (அ) பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதே உன்மை. இயற்கையே பெரும் சக்தி. அதை மாற்றவும், வெல்லவும் முடியாது என்று நம்ப மறுக்கிறான். விளைவு, நமக்கு மட்டும் இல்லை, நம்மைச் சுற்றி உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இயற்கையாக பூமி எப்படி இயங்கும்?

இதற்கு இயற்கையின் அடிப்படையை புரிந்து கொள்வது மிக முக்கியம். நாம் வாழும் பூமி, நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு இவைகளால் ஆனது. இதில் நீரும், காற்றும் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாதது. நீரும் காற்றும் அமைந்ததால்தான் இங்கு உயிரினங்கள் தோன்றி, வாழ்கின்றன, பரிணமிக்கின்றன. உயிரினங்கள் வாழ்வதற்கு சூரிய சக்தி மிக முக்கியம். இந்த சூரிய சக்தி அனைத்து கிரகங்களுக்கும் கிடைத்தாலும் பூமிக்கு வடிகட்டி பூமியின் சூழலுக்கு தகுந்தாற்போல் தான் கிடைக்கும். பசுமைகுடில் வாயுக்களான ஓசோன், மீத்தேன், கரிமிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு, நீராவி போன்றவை நம் பூமிக்கு மேற்பர‌ப்பில் சுற்றிப் படர்ந்துள்ளன. அதில் ஓசோன் 90% உள்ளது, பிற வாயுக்கள் 10% உள்ளது. இவையாவும் ஒன்று சேர்ந்து சூரிய சக்தியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை வடிகட்டி பூமிக்கு அனுப்பும். இதுவே பசுமைக்குடில் வாயுக்களின் செயல்பாடு. ஆனால் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் ஒரு செயல்பாடு வருந்தத்தக்கது. ஏனென்றால் இந்த பசுமைக் குடில் வாயுக்களை மனித இனமே உற்பத்தி செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக குளிர் சாதனப் பெட்டியிலிருந்து வெளிப்படும் க்ளோரோ ஃபளோரோ கார்பன் போன்றவை ஓசோன் படல‌த்தின் மீது படர்ந்து வேதிவினை புரிந்து அதை சிறிது சிறிதாக அழிக்கத் தொடங்கி சுருக்கி விட்டன. ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி அண்டார்டிக் பகுதிக்கு நேர் மேலே இருக்கும் ஓசோன் அருகில் விழுந்த துளை, விரிந்து விரிந்து அமெரிக்க கண்டம் அளவுக்குப் பெரிதாகி விட்டது.

புவி வெப்பமயமாதல்

பூமிக்கு என்று ஒரு தன்மையுண்டு. சூரியனில் இருந்து பெறப்படும் புற ஊதாக் கதிர்களோடு சேர்ந்த சூரிய ஒளியை பசுமைக்குடில் வாயுக்கள் வடிகட்டி பூமியின் சூழலுக்குத் தகுந்தாற் போல் சூரிய ஒளியை மட்டும் கொடுக்கும். அப்படி பூமிக்கு வரும் சூரிய ஒளி இங்கு செயல்பட்டு, நம் பூமியை சூடாக்கும். பின் நம் பூமியானது அகச்சிவப்பு கதிர்களை வெளியே அனுப்பும். இந்த சூழற்சி மீண்டும் மீண்டும் நடக்கும். இந்த செயல் ஒரு குறிப்பிட்ட உஷ்ணநிலையில் நம் பூமி இருப்பதற்கு இயற்கை ஏற்படுத்திக் கொண்ட விதி. மேல் சொன்ன சுழற்சிக்கு துணை புரிகின்ற நோக்கில் பூமியில் உள்ள பனிமலையானது முற்றிலும் வெண்மைத் தன்மை காரணமாக சூரிய ஒளியை முற்றிலுமாகத் திருப்பி அனுப்பிவிடும்; உள்ளே வாங்கிக் கொள்ள அனுமதிக்காது. இது போன்ற செயல்பாடுகளால் ஒரு குறிப்பிட்ட உஷ்ணநிலையில், பூமி தன்னை தக்கவைத்துக் கொள்ளும். இப்போது என்ன நடக்கிறது?

தொழிற்புரட்சி என்ற சொல் நம் வாழ்க்கையில் ஒரு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவே செய்திருக்கிறது. தொழிற்புரட்சியின் காரணமாக ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் மனிதர்களின் வாழ்வுக்காக, வசதிக்காக என்று அனைவரும் கருதினாலும் ஒட்டுமொத்த இனத்தையே அழிக்கும் நோக்கில் இவை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்ற கூற்றை மறுக்கமுடியாது. தொழிற்சாலையிலிருந்து வரும் புகை, கழிவுநீர், வாகன‌ங்களில் இருந்து வெளிவரும் புகை, புதைபடிவப் பொருட்களை எரிப்பதால் ஏற்படும் புகை போன்றவை வெளிவிடும் மீத்தேன், கரிய‌மிலவாயு, நைட்ரஸ் ஆக்சைடு, க்ளோரோ ஃபளோரோ கார்பன் போன்றவை நம் பூமிக்கு மேற்பரப்பில் தங்கிவிட்டன. அதன்காரணமாக பூமி சூடானால் வெளிவிடும் அகச்சிவப்புக் கதிரை வெளியே விடாமல் தடுத்து, மேல் தங்கி உள்ள இந்த வாயுக்கள் மீண்டும் பூமிக்கே அனுப்பி விடுகின்றன. விளைவு பூமி மீண்டும் சூடாகும். இந்த சுழற்சி மீண்டும் மீண்டும் நடப்பதால் பூமி சூடாகிக் கொண்டே வருகிறது.

இது ஒருபுறம் நடக்க, மற்றொருபுறம் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி ஆகும் கரும் புகை அனைத்தும், பனிப்பாறையில் படிந்து அதன் வெண்மைத் தன்மையை நீர்த்துப்போகச் செய்துவிடுகின்றன. அதனால் பூமிக்கு வரும் சூரிய ஒளியை தடுத்து வெளியே அனுப்ப முடியாமல் பனிப்பாறைகள் தன்னகத்தே உள்வாங்கிக் கொள்ள, ஏற்கனவே புவிவெப்பமயமாதலால் உருகும் பனிமலைகள் இதனால் மேலும் அதிகமாக உருகுகின்றன. இதன் விளைவால் ஏற்படப்போகும் அபாயம் என்ன தெரியுமா? கடல் நீர் மட்டம் அதிகரித்து ஒட்டுமொத்த உலகமும் நீரால் சூழப் போகிறது என்று எச்சரிக்கிறது அறிவியல்.

முதலாளித்துவ அரசியல் அறிவியல் என்ன சொல்கிறது?

"நாங்கள் உண்மையில் இந்த உலகத்தை செழித்து வளரச் செய்து கொண்டிருக்கிறோம்.  உலகைக் காப்பாற்ற வந்த தேவதைகள் நாங்கள். எங்களால் தான் பொருளாதாரம் இவ்வளவு செழித்து வளர்ந்து கொண்டிருக்கிறது. சுற்றுச்சூழலியாளர்கள் எங்கள் மேல் கொண்ட பொறாமையினால் ஏதோ பிதற்றுகின்றனர். உண்மையில் புவிவெப்பமயமாவதற்கும் மனிதனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. மனிதன் தான் காரணம் என்பதை நிருபிக்கவும் இல்லை. இந்த உலகம் பல லட்சம் வருடங்களாக சூடாகிக் கொண்டுதான் வருகிறது. அதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. 15000 வருடங்களுக்கு முன்னால் எந்த தொழிற்புரட்சியும் ஏற்படவில்லை. ஆனால் அப்போது ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்க கண்டங்களின்மேல் பெரும் பனிப்பாளங்கள் மூடியிருந்தன. அந்த காலகட்டம் பனிப்பாறை காலம் என்று அழைக்கபட்டது. பிறகு மெதுவாக அந்த பனிப்பாறை உருகி நிலப்பரப்பாக மாறியது. அங்கே இருந்த ஜீவராசிகள் அழிந்து போயின. பின் அதிலிருந்து தப்பித்த ஜீவராசிகள் தங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டன.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்குப் பின் இந்த கண்டங்களில் உயிர்கள் பெருகின. பின் 14ஆம் நூற்றாண்டில் ஒரு குட்டி பனிப்பாறை காலம் தொடங்கியது. பின் மறுபடியும் வெப்பநிலை அதிகரித்து நிலப்பரப்பாக மாறியது. எனவே வெப்பம் அதிகரிப்பதும் வீழ்வதும் நம் கையில் இல்லை. அது இயற்கையின் கையில்தான் உள்ளது. மேலும் மீத்தேன் போன்ற வாயுக்களை மாடுகள் ஏப்பம் விடுவதன் மூலம் வெளிவிடுகிறது. ஒரு மாடு ஒரு நாளைக்கு 280 லிட்டர் மீத்தேனை வெளிவிடுகிறது. நெல் வயல் நம் இந்தியாவில் அதிகம். அதன் மூலமாகவும் டன்கணக்கில் மீத்தேன் வெளிவருகிற‌து. மேலும் காடுகள் எரிவதால் வெளியாகும் கார்பன்டைஆக்ஸைடு என அனைத்துக்கும் காரணம் இயற்கை தான்; மனிதனில்லை. எனவே மனிதன் தான் காரணம் என்று சொல்லுவது அபத்தம்" என்று முதலளித்துவ அரசியல் அறிவியல் சொல்கிறது.

இந்த உலகம் எதை நோக்கிச் செல்கிறது?

நாம் வாழும் பூமிக்கு பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது. அது, சூரியனால் அழிவு, புவிசுற்றுப்பாதையிலிருந்து வட்ட விலகல், மனிதனால் ஏற்படும் புவிவெப்பமயமாதலின் விளைவு, விண் கல் பூமியைத் தாக்குவது என காரணங்கள் அடுக்கினாலும் மனிதனால் அழிவு ஏற்படக்கூடாது என்பதுதான் நம் அனைவரது கவலையுமே.

அதைத்தான் நாம் செயல்படுத்த ஆரம்பித்துவிட்டோமே! இப்போதே நம்முடைய கடலோரங்கள் மாறிவருவதாக செயற்கைக்கோள்கள் காட்டுகின்றன. சென்னையில் ஆலங்கட்டி மழை பெய்கிறது. இயற்கையில் வழக்கத்துக்கு மாறாக நடக்கும் ஒன்று, மழை பெய்ய வேண்டிய இடத்தில் பொய்த்து விடுகிறது, வறண்ட இடத்தில் சக்கைப்போடு போடுகிறது. நம் சொந்த நாட்டிலேயே வண்ணத்துப் பூச்சிகளையும், குருவிகளையும், தேனீக்களையும் காணமுடிவதில்லை. மேலும், கடந்த ஒரு நூற்றாண்டில் வெப்பம் ஒரு டிகிரி வரை அதிகரித்துள்ளது. இவை மட்டுமல்ல இன்னும் எத்தனையோ விஷயங்கள் இயற்கை நமக்கு எதிராக திரும்பிக் கொண்டு இருக்கிறது என்பதற்கு சாட்சி.

சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்க என்ன செய்யலாம்?

தொழிற்சாலைகளை சீர்படுத்துவது, அதன் கழிவுநீர்களை சரியான முறையில் வெளியேற்றுவது, வாகன‌ங்களுக்கு இயற்கையான மாற்று எரிபொருளை உருவாக்குவது, புதைபடிவ எரிபொருட்களை எரித்து அதன் மூலம் இயங்கும் தொழிற்சாலைகளை கட்டுபடுத்துவது, அணுமின் நிலையம், அணுஆயுதம் போன்றவற்றை குறைத்தல் அல்லது தடுத்தல், இவையாவையும் வெகுவிரைவில் செயல்படுத்த வேண்டும் என்றாலும் பொதுமக்களாகிய நாம் இதைச் செய்ய முடியாது. மேல் சொன்ன யாவும் அரசாங்கம் செய்ய வேண்டியவை. ஆனால் பொது மக்களாகிய நாம் அதை விட அதிகமாக செய்ய வேண்டிய கடமை உள்ளது. ப்ளாஸ்டிக் பொருட்களை கண்டிப்பாக உபயோகிப்பதை கைவிட வேண்டும். இந்த ப்ளாஸ்டிக் மக்க, 10000 வருடத்திற்கு மேலாக ஆகும். தலைமுறை தலைமுறையாக கேடு விளைவிக்கும் பொருட்களில் ஒன்று ப்ளாஸ்டிக். வீடுதோறும் செடிகள் வளர்ப்போம். தொட்டிகளில் சின்ன சின்ன செடிகள் இயற்கை முறையில் வளர்ப்பதன் மூலம் நமக்கு அன்றாடத் தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும். எல்லாவற்றிலும் தன்னிறைவு பெரும் தேசம் தான் வையத் தலைமை கொள்ளும்.

இயற்கையை முழுமையாக பயன்படுத்தவேண்டும். இயற்கையிலிருந்து பெறப்படும் பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். உதாரணம். பெட்ரோல், டீசல் போன்றவை. தேவையான வரை சுற்றுச்சூழலை பாதிக்காத பொருட்களை வாங்குவதும், அதை வாங்கி அதன் வளர்ச்சியை ஊக்குவிப்பதும் நம் கையில் தான் உள்ளது. சமீபத்தில் தைவானைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கோதுமையினால் ஆன சாப்பிடும் தட்டை கண்டுபிடித்தது. அதில் உணவு உட்கொண்ட பின் அந்தத் தட்டையும் சேர்த்தே சாப்பிட்டு விடலாம். இது கேடு விளைவிக்கும் ப்ளாஸ்டிக் தட்டிற்க்கு சிறந்த மாற்று. சிறு வயது முதல் சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஊட்ட வேண்டியது கட்டாயம். அவர்கள்தான் நாளைய உலகை வழிநடத்தப் போகிறவர்கள். நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்திருப்பது போலவே நம் தெருக்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் சேற்றில் உள்ள கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் கூட மீத்தேனை உற்பத்தி செய்யும். இயற்கையின் சிறுசிறு மாற்றங்கள் தான் பெரும் அழிவுக்கோ அல்லது பெரும் துவக்கத்திற்கோ வழிவகுக்கும். அதுபோல நாம் நம்மிடையே செய்யும் சிறு சிறு மாற்றம் கூட நம் தலைமுறையை செழித்து வளரச் செய்யும்.

Pin It