கடலூர் தொழிற்பேட்டைசுற்றுச்சூழலால் மிகவும் சீர்கேடடைந்த இந்திய நாட்டின் 43 தொழிற்பகுதிகளில், தமிழகத்திலுள்ள வேலூர், கடலூர், சென்னை மணலி, கோயமுத்தூர் ஆகியனவும் உட்படும். நிலம், நீர், காற்று ஆகிய அனைத்திலும் மாசுபட்ட நகரங்களாக நடுவண் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்தாண்டு இவைகளை வரையறை செய்துள்ளது. குறிப்பாக கடலூர் தொழிற்பேட்டைப் பகுதியில் இயங்கும் தொழிற்கூடங்களால் ஏற்படும் சூழல்கேடு பன்மடங்கு அதிகரித்து வருகிறது என சுற்றுச்சூழல் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. கடலூர் சிப்காட் தொழிற்சாலையின் அருகில் வசிக்கின்ற மக்களுக்கு புற்றுநோய் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நிஜாமுதீன் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்ற கூட்டமொன்றில் கடந்த சூன் மாதம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கடலூர் தொழிற்பேட்டை பகுதியைச் சுற்றிலும் வாழ்கின்ற முதியோர் மற்றும் குழந்தைகளுக்கு புற்றுநோய் பரவும் வாய்ப்பு இரண்டாயிரம் மடங்கு அதிகமுள்ளது என தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளதை அடிப்படையாகக் கொண்டு அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பொதுவாக கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் ஆபத்தான வேதிப்பொருட்களை காற்றிலும், குடிநீரிலும், நிலத்தடியிலும் கலந்து விடுகின்ற முப்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இத் தொழிற்கூடங்களில் மழைநீர் வடிகாலாக அமைக்கப்பட்டுள்ள வாய்க்கால்களின் வழியே ஆபத்தான வேதிக் கழிவுகள் கலந்து வருவதாக, பல்வேறு தரப்பிலும் குற்றம் சாட்டப்பட்டு, தொடர்ந்து போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் மாவட்ட நிர்வாகமோ, தமிழக அரசோ இதற்கொரு நிலையான தீர்வினை வழங்குவதில் போதுமான அக்கறை காட்டவில்லை.

சாஷன் கெமிக்கல்ஸ என்ற நிறுவனத்தின் நச்சு வாயுவால் பாதிக்கப்பட்டோர்இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக கடலூர் சிப்காட் தொழிற்சாலையில் முறையான ஒப்புதலின்றி இயங்கி வரும் வேதிக் கழிவு நீரகற்று நிலையமான கியூசெக்ஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளும், அந்நிலையத்திற்கு எதிரான போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியைப் பெறாமலேயே பத்தாண்டுகளுக்கும் மேலாக வேதிக் கழிவு நீரகற்று நிலையம் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தொழிற்பேட்டைக்குள் பென்சிலின் உள்ளிட்ட உயிர் காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வண்ணச் சாயத்திற்கான மூலப்பொருட்கள், பி.வி.சி.க்கான மூலப்பொருட்கள், சாயங்கள் போன்ற வேதி தொடர்பான தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இங்கிருக்கும் ஆலைகள் அனைத்தும் நாளொன்றுக்கு இரண்டு கோடி லிட்டர் தண்ணீரை உறிஞ்சி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. இதனால் தொழிற்பேட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர், காற்று, மண் ஆகியவை பெருமளவு சீர்கேடடைந்துள்ளன. இச்சூழல் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களோடு, மக்கள் நல அமைப்புகளும் தொடர்ந்து மக்களுக்கு எச்சரிக்கை செய்து வருவதுடன், போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.

ஆலைகளிலிருந்து பெறப்படும் கழிவு நீர் அனைத்தையும் சுத்திகரிப்புச் செய்து கியூசெக்ஸ் நிலையம் முறைப்படி கடலுக்குள் கொட்டுகின்ற பணியைச் செய்து வருகிறது. கடந்த 2000ஆம் ஆண்டு இங்குள்ள ஆலைகளின் முயற்சியால் ரூ.5 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இக்கழிவு நீரகற்று நிலையம், நடுவண் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் இசைவினைப் பெற்றுள்ளது. ஆனால் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையம் நாள்தோறும் 1.20 கோடி லிட்டர் வேதிக் கழிவுகளைச் சுத்திகரிப்புச் செய்து கடலில் சேர்க்கும் திறன் கொண்டதாக உருவாக்கப்பட்டாலும், பல வேளைகளில் முறையாய் சுத்திகரிப்புப் பணியை மேற்கொள்ளாது அப்படியே கொண்டு போய் கடலில் கழிவுகளைக் கலப்பதாகவும், இதனால் வங்கக்கடலிலும், உப்பனாற்றிலும் உள்ள நீர் வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவதுடன், மீன்வளம் குறைந்து மீனவர்களின் வாழ்வதாரம் பெரும் பாதிப்பிற்குள்ளாவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

கியூசெக்ஸ நிறுவனத்தின் வேதிக்கழிவு சுத்திகரிப்புக் கிணறுகியூசெக்ஸ் நிறுவனத்தின் அத்துமீறலைக் கணக்கிற் கொண்டே மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத கழிவுகளை கடலில் கலந்து விடுவதை கடலூர் சிப்காட் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்பகம் கடந்த 2004ஆம் ஆண்டு சான்றுகளோடு மாசுக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கு புகார் அளித்திருந்தது. நாளேடுகளில் வந்த செய்திகளின் அடிப்படையில் உயர்நீதிமன்றமும் தானே முன்வந்து இவ்வழக்கினை எடுத்துக்கொண்டதுடன், பல தரப்பிலும் விசாரணைகளையும் மேற்கொண்டது. பின்னர் கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கியூசெக்ஸ் நிலையத்தை மூடுவதற்கு ஆணையிட்டது. கியூசெக்ஸ் நிறுவனம் மேற்கொண்ட மேல் முறையீட்டு நடவடிக்கையால் ஒரு மாத மூடலுக்குப் பின்னர், அதே நீதிமன்றத்தின் உத்தரவோடு மறுபடியும் இயங்கத் தொடங்கியது. இறுதி ஆணையை உயர்நீதிமன்றம் விரைவில் பிறப்பிக்க உள்ள நிலையில், மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அனுமதி அளிக்கப்படாத இந் நிலையத்தினை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது சட்டவிரோதமான செயலென்றும், தொழிற்பேட்டைக்குள் இயங்கும் பல்வேறு ஆலைகளின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல், மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியமே மௌனச் சாமியாராக இருப்பது பெரும் குற்றமென்றும் முணுமுணுப்புகள் எழத் தொடங்கியுள்ளன. அது மட்டுமன்றி, திருப்பூர் சாயப்பட்டறைகளின் கழிவுகளையும் கியூசெக்ஸ் நிறுவனம் மூலமாக சுத்திகரிப்புச் செய்து கடலில் கலக்கும் அரசின் முடிவினையும் கடலூர் சுற்றுச்சூழல் அமைப்புகள் கடுமையாக எதிர்த்துள்ளன.

கடந்த மார்ச் மாதம் கடலூர் தொழிற்பேட்டையில் இயங்கும் சாஷன் கெமிக்கல்ஸ் என்ற நிறுவனத்திலிருந்து நள்ளிரவில், ஹைட்ரோ புரோமின் வாயு வெளியேறி காற்றில் வேகமாகப் பரவியதால், அதன் சுற்றுப்புறத்தில் வசிப்பவர்களுக்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாந்தி, தலைசுற்றல், மயக்கம் போன்ற உபாதைகளுக்கு ஆளாயினர். இதற்குப் பிறகு நடைபெற்ற போராட்டங்களால் மாவட்ட நிர்வாக ஆணையின் பேரில், சாஷன் கெமிக்கல்ஸ் நிறுவனம் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய வேதிப்பொருட்களைப் பயன்படுத்தியதால், மறு உத்தரவு வரும்வரை நிறுவனம் மூடப்படுகிறது என அறிவித்து, சீல் வைக்கப்பட்டது. சாஷன் கெமிக்கல்ஸ் நிறுவனம் வெளியேற்றிய விச வாயுவால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரணத்தொகையோ, இழப்பீடோ வழங்கப்படவில்லை. சிலருக்கு இன்னமும் நுரையீரல் கோளாறு இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

குப்பை கூளங்களால் நிறைந்து கிடக்கும் கெடிலம் ஆற்றின் தற்போதைய நிலைகடலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 23 இலட்சம். வேளாண்மை மற்றும் ஆலைத் தொழில்களைச் சார்ந்தே இம்மக்களில் பெரும்பாலானோர் வாழ்கின்றனர். இம்மாவட்டத்தில் படித்த மற்றும் பாமர மக்களுக்கு கடலூர் தொழிற்பேட்டை குறிப்பிடத்தகுந்த வேலை வாய்ப்பினை வழங்குகிறதெனினும், ஆபத்தான வேதி ஆலைக்கூடங்கள் சுற்றுப்புற மக்களுக்கும், வேளாண்மைக்கும், நிலத்தடிநீருக்கும் பெரும் ஆபத்தினை விளைவித்து வருகிறது. கடலூர் தொழிற்பேட்டையிலுள்ள ஆலைகளை ஆய்வு செய்த நடுவண் நீரி அமைப்பு, தொழிற்பேட்டையிலிருந்து வெளியாகும் கழிவுகள் கடுமையான நச்சுப் பொருட்களைக் கொண்டவை என்றும், சுற்றுப்புறத்திலுள்ள 22 கிராம மக்களின் உடல் நலம் குறித்து பொதுவான ஆய்வு ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அறிக்கை அளித்திருந்தது. அதன் தொடர்ச்சியாக புற்றுநோய் கண்டறியும் முகாம் நடத்தப்பட்டுள்ளது. இருந்தபோதும், இன்னும் விரிவான மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலித்து வருகிறது.

'கடலூர் பெரும் ஆபத்து மையமாக மாறி வருகிறது. சிப்காட் தொழிற்பேட்டையில் வேதிக் கழிவுகளை வெளியேற்றும் 31 ஆலைகள் உள்ளன. தொழிற்பேட்டையைச் சுற்றி எட்டு கிலோ மீட்டர் வரை நிலம், நீர் முழுவதும் மாசடைந்துள்ளது. இந்த ஆலைகளின் கழிவுகளால் சுற்றுப்புற மக்களுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது என நீரி நிறுவனம் அறிக்கை அளித்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக நாங்கள் எடுத்த 12 ஆய்வு மாதிரிகளில், வெளியேறுகின்ற 25 வேதிக்கழிவுகளில் 12 கழிவுகள் புற்று நோய் ஆபத்தினை ஏற்படுத்தக் கூடியவை என்ற விடையே கிடைத்துள்ளது. அதிலும் குறிப்பாக பென்சீன் மற்ற எல்லாவற்றையும் விட 26 மடங்கு அதிகமாகப் புற்றுநோயை உண்டாக்கும். அதே போன்று டால்மியாபுரம் சிமெண்ட் ஆலை வெளியிடும் காற்றுக் கழிவுகளில், மூளையைப் பாதிக்கும் காரீயம், பாதரசம் ஆகியவற்றோடு புற்றுநோயை உருவாக்கக்கூடிய காட்மியம், பெரிலியம், பேரியம் ஆகியவை உட்பட 11 அடர்த்தி அதிகமான உலோகங்கள் உள்ளன. கடந்த பிப்ரவரி மாதம் வரை கடலூர் தொழிற்பேட்டையில் இயங்கக்கூடிய ஆலைகளில் 20 ஆலைகள் உரிமம் இன்றி இயங்கி வருகின்றன' என்கிறார் சமூக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுவேதா நாராயணன்.

மனிதர் வாழத் தகுதியற்ற நகரங்களின் பட்டியலில் கடலூர் 16ஆவது இடத்தில் இருப்பதாக இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அறிவித்துள்ள நிலையில், கடலின் சீற்றத்திற்கு அரணாகவும், பல்வேறு உயிரினங்களின் வாழிடமாகவும் திகழ்கின்ற பிச்சாவரம் அலையாத்திக் காடுகளுக்கு அருகே அனல் மின் நிலையம் அமைய நடுவண் அரசு ஒப்புதலளித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும். கடலூர் மாவட்டத்தின் ஒரே சொர்க்கபுரி பிச்சாவரத்திலுள்ள அலையாத்திக் காடுகளே. இதற்கும் உலை வைக்க அரசு துடிப்பது, கடலூரில் இனிமேல் மனிதர்கள் வாழவே கூடாது என்று நினைப்பில்தானா? பல்வேறு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்ற பிச்சாவரம், கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இரண்டரை கோடி ரூபாயை வருமானமாக ஈட்டித் தந்துள்ளது. 1358 ஹெக்டேர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து அமைந்துள்ள பிச்சாவரம் அலையாத்திக் காடு, அழகானதொரு சோலை. 18க்கும் மேற்பட்ட அரிய மூலிகைகளைக் கொண்ட காடு. ஒவ்வொரு ஆண்டும் பிச்சாவரத்திற்கு வரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இங்கு அனல் மின் நிலையம் அமைக்க அரசு எடுத்து வரும் முயற்சிகளை உடனடியாகக் கைவிட வேண்டும்.

பெண்ணை மற்றும் கெடிலம் போன்ற மிகப் பழமையான ஆறுகள் கடலூர் மாநகரின் வளமைக்குச் சான்று. தமிழிலக்கியங்களும், அப்பர், சுந்தரர் போன்ற சமயக் குரவர்களின் இறைப்பாடல்களிலும் இடம் பெறுகின்ற இவ்வாறுகள் தற்போது வளம் குன்றி வருகின்றன. கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் மாசுபாடுகள் பெண்ணை, கெடிலம் ஆறுகளையும் விட்டுவைக்கவில்லை. மேற்காணும் இரு ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்னமும் அரசின் காதுகளில் விழவில்லை. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பாக கடலூரின் குடிநீர்த் தேவைக்காக பெண்ணையாற்றில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது உவர்நீராக மாறிவிட்டது. காரணம், அதிகபட்ச நிலத்தடி நீர் உறிஞ்சுதலின் காரணமாக பெண்ணையாற்றிலிருந்து தேவையான நீரைப் பெற முடியவில்லை. அதே போன்று கெடிலம் ஆற்றின் குறுக்கே, தமிழக முதல்வராயிருந்த காமராசர் காலத்தில் கட்டப்பட்ட திருவந்திபுரம், திருவதிகை அணைகள் தற்போது பெருமளவு தூர்ந்துவிட்டன. ஆற்றின் இரு மருங்கிலும் போடப்பட்டுள்ள ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாக வேளாண்மைக்கும், குடிநீருக்கும் தேவையான தண்ணீர் கிடைக்கின்ற காரணத்தால், மேற்காணும் அணைகள் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டுவிட்டன.

லாரிகள் மூலம் உப்பனாற்றில் கொட்டப்படும் கழிவுகள்தற்போது கடலூரில் தண்ணீர்ச் சிக்கல் அதிகரித்துள்ள நிலையில், முன்னரே கட்டப்பட்டுள்ள மேற்காணும் அணைகள் மூலமாகத் தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதுமட்டுமன்றி கெடிலம் மற்றும் பெண்ணை ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கு தடுப்பணைகள் கட்டினால், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கு வாய்ப்பு ஏற்படும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தூர்ந்து போயிருக்கும் அணைகளில் உள்ள மணலை கடலூர் மக்களின் பயன்பாட்டிற்கு எடுப்பதுடன், அணைகளை ஆழப்படுத்தி தொடர்ந்து தண்ணீரைத் தேக்க முயற்சி செய்வது மிகவும் அவசியம். கெடிலம் ஆறு, கல்வராயன் மலைப்பகுதியில் ஊற்றெடுத்து விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக ஓடி உப்பனாற்றில் கலந்து இறுதியாக வங்கக்கடலைச் சென்று சேர்கிறது. நல்ல மழைக்காலங்களில் கெடிலமாற்றில் ஓடும் அதிகபட்ச நீர் பயன்பாடின்றி கடலில் போய் கலக்கிறது. இதற்கொரு தீர்வினைக் கண்டால், கடலூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர், குடிநீர்ப் பற்றாக்குறைக்கும் முடிவு காண இயலும். 

பழமையான மனித நாகரிகத்தைத் தன்னுள்ளே கொண்டு, அவ்வப்போது அதற்குரிய சான்றுகளையும் வெளிக் கொணரும் கடலூர் மாவட்டம், நினைத்துப் பார்க்க முடியாத சூழல் சீரழிவிற்கு தள்ளப்பட்டுள்ளது. அனைத்து வகையான சூழல் கேட்டிற்கு ஆட்பட்டுள்ள கடலூர் மாநகரை, காப்பதென்பது தற்போது புதிதாய் அமைந்துள்ள தமிழக அரசின் தலையாய கடமைகளுள் ஒன்றாகும். மக்கள் வாழவே தகுதியற்ற நகராக நடுவணரசால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையை மாற்றி, கடலூர் வளம் கொழிக்கும் நகராக மாற்றப்பட வேண்டும் என்பதே சூழல் ஆர்வலர்களின் விருப்பம். கடலூரின் பண்டைய வரலாற்றுப் பெருமையை மீட்டெடுத்து, சூழலுக்குப் புறம்பான ஆலைகளை உடனடியாக அப்புறப்படுத்தி, அங்கு வாழ்கின்ற மக்களின் சுகாதாரமான வாழ்க்கைக்கு வழிகோல முயற்சி செய்வது நடுவண், மாநில அரசுகளின் பொறுப்பாகும். செய்ய முன் வருவார்களா..?

உழவர்கள் வழங்கிய நிலம்

கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை கடந்த 1985ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டு கட்டமாக 1018 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இந்நிலத்தில் மணிலா, முந்திரி, சவுக்கு என நல்ல வருமானம் தருகின்ற பயிர்களே நிறைய விளைந்தன. இதனால் உழவர்கள் பெரும் பயனடைந்தனர். ஆனாலும் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இப்பகுதி உழவர்கள் தங்கள் நிலங்களை தொழிற்பேட்டைக்காக வழங்கினர். இங்கு தொழிற் அமைக்க விரும்பும் நிறுவனங்களுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு நிலங்கள் அரசால் வழங்கப்பட்டது. கடலூரின் தொழில் விரிவாக்கத்திற்காக ஏழை உழவர்களால் வழங்கப்பட்ட முந்நூறுக்கும் மேற்பட்ட நிலங்கள் பயன்படுத்தப்படாமல் கிடப்பது ஒருபுறமென்றால், வேதித் தொழிற்கூடங்களால் நிகழும் மாசுபாடுகள் மற்றொருபுறம்.

வேதிக்கழிவுகளால் மீன்கள் இறப்பு

உப்பனாற்றங்கரையின் கழிமுகத்தில் இறந்து ஒதுங்கிக் கிடக்கும் மீன்கள்கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கடலூர் உப்பனாற்றங்கரையில் மீன்கள் செத்து கரை ஒதுங்கின. அதேபோன்று நொச்சிக்காடு, சித்திரைப்பேட்டை, இராசாப்பேட்டை, தம்பனாம்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டோயை, அய்யம்பேட்டை மற்றும் ரெட்டியார்பேட்டை ஆகிய கிராமங்களில் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை கொத்துக் கொத்தாய் செத்து கரை ஒதுங்கின. இதற்கு முழு முதற்காரணம் உப்பனாற்றின் கரையில் அமைந்துள்ள சில தொழிற்கூடங்களின் நச்சுக் கழிவுகளே. வேதிக்கழிவுகளால் தாக்குப் பிடிக்கும் மீன்களே கூட தற்போது இறக்கத் தொடங்கியிருப்பது கடலூர் மீனவர்களை பெரும் அச்சம் கொள்ளச் செய்துள்ளது.

வலிமை பெறும் கெடிலம், பெண்ணையாற்றின் இருபுறக் கரைகள்

கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறு கரைகள் 23.45 கோடி ரூபாய் மதிப்பில் 43 கி.மீ., தூரத்திற்கு பலப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்ற. ஆண்டு தோறும் மழைக் காலங்களில் கெடிலம், பெண்ணையாறு, உப்பனாறுகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு காரணமாக கரையோரப் பகுதிகள் உடைப்பு எற்பட்டு விவசாய பயிர்கள் பாதிக்கப்படுவதுடன் பொதுமக்களும் பாதிப்படைகின்றனர். வெள்ளத் தடுப்பு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் 13.72 கோடி ரூபாய் மதிப்பில் திருவந்திபுரம் பாலத்தில் இருந்து தேவனாம்பட்டினம் வரை கெடிலம் ஆற்றின் இரு கரையோர பகுதிகளையும் 20 கி.மீ., தூரத்திற்கு பலம்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 4 மீ., உயரத்திற்கும், மேல் தளம் 5 மீ., அகலத்திற்கும் கரைகள் பலப்படுத்தப்டுகிறது. இப்பணிக்காக கடலூர் அடுத்த விலங்கல்பட்டு, ராமாபுரம், தோட்டப்பட்டு பகுதிகளில் இருந்து செம்மண் லாரிகள் மூலம் கெடிலம் ஆற்று கரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டு பொக்லைன் மூலம் சீரமைக்கப்படுகிறது. இப்பணிகள் 2012 ஜனவரி மாதம் முடிகிறது. அதே போன்று 9.73 கோடி ரூபாய் மதிப்பில் மேல்கங்கணாங்குப்பத்தில் இருந்து தாழங்குடா வரை பெண்ணையாற்றில் வலது பக்கத்தில் 2.6 கி.மீ., தூரத்திற்கும், சோனங்குப்பத்தில் இருந்து திருச்சோபுரம் வரை உப்பனாற்றின் இடது பக்கத்தில் 20.5 கி.மீ., தூரத்திற்கும் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

- இரா.சிவக்குமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It