toilet

அரபு நாடுகளில் அபுதாபி, மஸ்கட் போன்ற இடங்களில் இருக்கும் வானூர்தி நிலையங்களில் (ஏர்போர்ட்) கழிவறைக்கு அருகிலேயே, அதை சுத்தம் செய்யும் தொழிலாளிகள் இருப்பார்கள். அவர்களின் தலையாய பணி, குறிப்பிட்ட இடைவெளியில் கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டே இருக்க வேண்டும். பன்னாட்டு விமான நிலையம் என்பதாலும், தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வருவார்கள் என்பதாலும், எவ்வளவு வேலை பளு மற்றும் அழுத்தம் இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இந்தப் பணிச்சுமையை கூட தாங்கிவிடலாம், கழிவறைகளின் துர்நாற்றத்தில் நாள் முழுக்க இருக்க வேண்டும், என்ற உளவியல் ரீதியான தாக்குதலையும், ஏளனப் பார்வைகளையும் சமாளிக்க வேண்டும்.

ஆனால், ஆண்கள் சிறுநீர் கழிக்கும் தொட்டிகளை (urinals) இனிமேல் இப்படி மணிக்கு ஒரு முறையோ அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் துர்நாற்றத்தை தாங்கிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டியதில்லை. இனி அந்த வேலையை ஒரு “பாக்டீரியா” செய்து விடும். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், தோழர்களே. மும்பை சத்ரபதி விமான நிலையத்தின் சிறுநீர் தொட்டிகளை கடந்த மே-2017லிருந்து பாக்டீரியா தான் சுத்தம் செய்கிறது. தினமும் லெட்சம் பேர் வந்து செல்லும் பன்னாட்டு விமான நிலையமும் துர்நாற்றம் இல்லாமல் இருக்கிறது.

பசுமை ரசாயனங்கள் எனப்படும் என்சைம்கள் மற்றும் பாக்டீரிய கலவை (mix of enzymes and bacteria) , யுரினல் எனப்படும் சிறுநீர் தொட்டியில் போடப்படும். ஒவ்வொரு முறை சிறுநீர் கழிக்கும்போதும், சிறுநீரில் இருக்கும் அம்மோனியாவை, நைட்ரஜனாக இந்த பாக்டீரியக் கலவை மாற்றிவிடும். எனவே, துர்நாற்றம் எனபது அறவே இருக்காது. மேலும், சுத்தம் செய்ய தேவைப்படும் தண்ணீரையும் சேமிக்க முடியும். தரைத்தளங்களை சுத்தம் செய்யவும், இதே பாக்டீரியாக கலவையை மும்மை விமான நிலைய நிர்வாகம் பயன்படுத்துகிறது. இதன் மூலம், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட ஒர் லெட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும், அதாவது 30,000 பேர் தண்ணீர் தாகத்தைத் தீர்க்க முடியும்.

இந்த முறையை நாடு முழுவதும் உள்ள பொது இடங்களில் நடைமுறைப்படுத்தும் போது, இந்தத் தொழிலை செய்யத் தேவைப்படும் தொழிலாளர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறையும். இதையே  ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி, இந்தத் தொழிலாளர்களுக்கு மாற்று வேலையையும் வழங்க வேண்டியது, அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கடமை. இன்னும் எத்தனை தலைமுறைகள், கழிவறைகளில் காலத்தைத் தொலைக்க வேண்டும்?

-    வெற்றிச் செல்வன்.மா.செ.

Pin It