“மாற்றம் ஒன்று தான் மாறாதது” என்பது எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ, அறிவியலுக்கு நன்றாகப் பொருந்துகிறது. முன்னர், நெதர்லாந்து நாட்டில் அமைக்கப்பெற்ற சோலார் மிதிவண்டிச் சாலையை குறித்துப் பார்த்தோம். இந்தச் சாலையின் மூலம், ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்தில் தேவைப்படும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். தற்போது, பிரான்ஸ் நாட்டில், இன்னும் ஒரு படி மேலே சென்று சோலார் தகடுகளைப் பயன்படுத்தி சாலையை அமைத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளின் கோடை காலங்களில் சராசரியாக அதிகபட்ச வெட்பநிலையே 20 டிகிரி செண்டிகிரேட் என்பது தான்.

solar road

(சமீபத்தில் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்ட சாலை)

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் பிரெச்சே என்ற சிற்றூருக்கு 1 கிலோமீட்டர் அளவுக்கு சோலார் தகடுகளைப் பயன்படுத்தி 2800 சதுர மீட்டரில் சாலையை அமைத்துள்ளனர். இதில் செல்லும் மகிழுந்து (கார்) பயணத்தின் மூலம், 5,000 பேர் வசிக்கும் சிற்றூரின் தெருவிளக்குகளுக்கு தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். சிறிய அளவு அடத்தியுள்ள போட்டோவோல்டிக் (photovoltaic cells) செல்களை சாலையில் பதித்து இந்தச் சாலையை உருவாக்கியுள்ளனர். இந்தச் செல்கள் பாலிமர் மற்றும் ரெசின்களால் (Polymer and resins) பாதுகாக்கப்பட்டிருக்கும். இதன் மேற்புறம் சாதாரண சாலைகளில் செல்வதைப் போல இருப்பதற்கு ஏதுவாக வழவழப்புத் தன்மையை நீக்கி வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

solar road demo

(சாலையின் சிறப்புகளை விளக்கும் படம்)

சிறிய அளவில் இப்போது துவங்கப்பட்டிருக்கும் சோலர் சாலையை, சுமார் 1,000 கிலோ மீட்டருக்கு விரிவுபடுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. ஆம், நீங்கள் கேட்பது புரிகிறது, அணு உலை எல்லாம் நமக்குதான்.

காற்றாலை மரம் (Wind Tree) – பாரிஸ், பிரான்ஸ்

மறுபடியும், பிரான்ஸ். ஆம், பாரிஸ் நகரில் “காற்றாலை மரத்தை” (Wind Tree) அமைத்துள்ளார், வின்ட் டிரீ (Wind Tree) என்ற நிறுவனத்தைச் சேந்த ஜெரோம் லாரிவிர். சுமார், 26 அடி உயரம் உள்ள இந்த காற்றாலை மரத்தில், இலைகளுக்கு இடையே சிறிய அளவிலான காற்றாலைத் தகடுகள் இருக்கும். காற்று அடிக்கும் போது இந்தச் சிறிய தகடுகள் சுழன்று மின்சாரத்தை உற்பத்தி செய்யும். காற்றின் வேகம் மணிக்கு 4.5 கி.மீ இருந்தால் கூட இதனால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

wind tree

(காற்றாலை மரத்துடன் அதன் நிறுவனர் ஜேரோம்)

பெரிய பெரிய காற்றாலைகளின் செலவுகளைப் பார்க்கும் போது, இதற்கு ஆகும் செலவு குறைவுதான். இந்தக் காற்றாலை மரத்தின் மூலம், 15 தெருவிளக்குகளுக்கு ஒரு வருடத்திற்கு தேவையான மின்சாரத்தையோ அல்லது ஒரு பேட்டரி கார் 1360 கி.மீ செல்லத் தேவையான மின்சாரத்தையோ கொடுக்க முடியும்.

இறுதியாக, சுற்றுச்சூழலைப் பெரிதும் பாதிக்கும் நிலக்கரி, பொது மக்களுக்கு எப்போதும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும் நாசகார அணு உலைகளுக்கு முடிவு கட்டிவிட்டு, ஆரம்பச் செலவுகள் அதிகம் இருந்தாலும் யாருக்கும் பாதிப்பில்லாத நீர், காற்று மற்றும் சோலார் போன்ற இயற்க்கை சார்ந்த மின்சாரத்தை (Alternative Green Energy) நோக்கி பயணிப்போம். அதுவே, நம் வருங்கால தலைமுறைக்கு நாம் விட்டுச் செல்லும் சிறந்த பரிசாக இருக்கும்.

- வெற்றிச் செல்வன்.மா.செ.