1. பாஸ்வேர்டுகள் பத்திரம்

ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் பலரும் செய்யும் தவறு இது!  ஸ்மார்ட்போன் மூலமாகவே மின்னஞ்சல் பார்ப்பது, வங்கிச் சேவைகள் பயன்படுத்துவது போன்ற வேலைகளைச் செய்யும் போது கடவுச்சொல்லை 'ரிமெம்பர்' (நினைவில் கொள்) எனக் கொடுத்து வைத்து விடுவார்கள்.  கூடிய வரை, பாஸ்வேர்டு, அக்கவுண்ட் எண்கள் போன்ற முக்கியமான தகவல்களை இப்படிச் சேமிப்பதைத் தவிர்ப்பது நல்லது.  

2. செயலிகளுக்குப் பூட்டு

ஆண்டிராய்டு செயலிகளை மட்டும் பூட்டிப் பாதுகாக்கும் 'ஆப் லாக்' செயலிகள் நிறைய கிடைக்கின்றன. பேங்கிங் செயலிகள் போன்ற முக்கியமான செயலிகளை இந்த 'ஆப் லாக்' செயலிகள் கொண்டு பாதுகாக்கலாம். உங்கள் ஸ்மார்ட் போன், தவறான ஆட்களிடம் சிக்கினால் கூட, முக்கியமான தகவல்களைக் கசிய விடாமல் பார்த்துக் கொள்ள முடியும்.  

3. ஒன்றுக்கு மேற்பட்ட பயனர்

smart phone 1

உங்கள் 'டேப்'ஐப் பலர் பயன்படுத்தும் போது - ஒவ்வொருவருக்கும் ஒரு அக்கவுண்ட் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். ஆண்டிராய்டு ஜெல்லி பீன் வெளியீட்டில் இருந்து ஒரே ஆண்டிராய்டு போன், டேப் போன்றவற்றிற்குப் பல பயனரை உருவாக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்தி, ஒவ்வொரு பயனரும் தனக்குத் தேவையான செட்டிங், வால்பேப்பர், செயலிகள் என அனைத்தையும் தனித்தனியே நிர்வகித்துக் கொள்ள முடியும்.  இப்படிச் செய்வதன் மூலம், ஒவ்வொருவருடைய தனிப்பட்ட முக்கியமான தகவல்களையும் பாதுகாப்பாக வைக்க முடியும்.  

4. பேக் அப் முக்கியம்

என்ன தான் உங்கள் ஸ்மார்ட் போன் உயர்ந்த கான்பிகிரேஷனில் இருந்தாலும் ஒரே ஒரு தடவை அதைக் கீழே போட்டால் கூட, உங்களுடைய மொத்தத் தகவல்களும், போட்டோ, வீடியோ போன்ற முக்கியமான ஆவணங்களும் மிஸ் ஆக வாய்ப்புள்ளது.  எனவே, அவ்வப்போது டேட்டா பேக் அப் எடுத்து வைப்பது முக்கியம்.  

5. கார்டில் முக்கிய தகவல்கள் வேண்டாம்

சிலர் ஸ்மார்ட் போனில் இருக்கும் எஸ்டி கார்டு போன்ற எக்ஸ்டெர்னல் நினைவகங்களில் முக்கியமான தகவல்களைச் சேமித்து வைப்பார்கள்.  போட்டோக்கள், வீடியோக்கள் போன்ற தகவல்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ள எக்ஸ்டெர்னல் நினைவகங்களில் முக்கியமான ஆவணங்கள் போன்றவற்றைச் சேமித்து வைப்பது நல்லதல்ல.  ஏனென்றால், உள் நினைவகங்களை ஹேக் செய்வதைக் காட்டிலும் கார்டு போன்ற நினைவகங்களில் தகவல்களைத் திருடுவது மிக எளிதானது.  எனவே, வெளி நினைவகங்களில் முக்கிய தகவல்களைச் சேமிக்காதீர்கள்.  

6. பொது இடங்களில் வை-பையா?

இப்போது ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகள் போன்ற பொது இடங்களில் வை-பை வசதி வந்து விட்டது.  இந்த வை-பை வசதிகளைப் பயன்படுத்தி ஹேக்கர்கள் எனப்படும் தகவல் திருடர்கள், நீங்கள் இணையத்தில் என்னென்ன செய்கிறீர்கள் என்று அத்தனை விவரங்களையும் திருடி விட முடியும்.  எனவே, பொது இடங்களில் உள்ள வை-பை வசதியைப் பயன்படுத்தும் போது httpக்குப் பதிலாக https மூலம் இணையத்தளங்களைப் பார்ப்பது கட்டாயத் தேவை. பேங்கிங் செயலிகள் போன்ற முக்கியமான செயலிகளுக்குப் பொது இடங்களில் உள்ள வை-பையைப் பயன்படுத்தும் சூழல் வந்தால், விபிஎன் எனப்படும் தனிநிலை நெட்வொர்க் மூலம் இணையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள்.  இந்த விபிஎன் அமைப்புகள், வயர்லெஸ் & நெட்வொர்க்குகளின் கீழ் உங்கள் ஆண்டிராய்டு செட்டிங்ஸ் பக்கத்தில் இருக்கும்.  

7. வாட்சப் பயன்படுத்தும்போது..

smart phone 2

வாட்சப் போன்ற மெசேஜ் செயலிகளைப் பயன்படுத்தும் போது, நீங்கள் வாட்சப்பில் வைத்திருக்கும் ப்ரொபைல் படத்தை எல்லோரும் பார்க்கும்படி இருக்கும். வாட்சப் செட்டிங்கிற்குப் போய் உங்கள் தொடர்புகள் மட்டுமே உங்கள் படத்தை, ஸ்டேட்டசைப் பார்க்கும் படி மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.  

8. ஒவ்வொரு செயலியை நிறுவும் போதும் கவனம்

கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலிகளை நிறுவும் போது அவை என்னென்ன தகவல்களைக் கேட்கின்றன என்று காட்டப்படும்.  கணினியில் சாப்ட்வேரை நிறுவும்போது எதையும் படிக்காமல் ‘நெக்ஸ்ட்’ பொத்தானை அழுத்துவதைப் போல, ஸ்மார்ட் போனிலும் அந்தத் தகவல்களைப் படிக்காமல் விட்டு விடாதீர்கள். எந்தெந்தச் செயலிகள் எந்தெந்தத் தகவல்களைப் படிக்கின்றன என்று பார்த்து அவற்றை நிறுவுங்கள்.  

(புதிய வாழ்வியல் மலர் 2016 ஜூலை 16-31 இதழில் வெளியானது)