உலக மக்களில் பெரும்பான்மையினர், அணு உலைத் தொழில் நுட்பம் உள்ளார்ந்த வகையில் பாதுகாப்பற்றது என அதை நிராகரித்து வருகின்றனர். மேலை நாடுகளில் உள்ள அணு உலைகள் முடங்கியும், மூடப்பட்டும் இறங்கு முகத்தில் இருக்கின்றன. நம் விஞ்ஞானிகளோ அறிவியலைத் துறந்து, தர்க்க உதவி நாடி அமெரிக்கா, பிரான்சில் அணு உலைகள் தற்போது அணு உலைகள் உற்பத்தி செய்யும் சதவீதங்களைச் கூறிவருகின்றனர். இது தேய்பிறைக்கு வந்துவிட்ட நிலவைப் பார்த்து அதோ பார்… முழு நிலவு தான்… அங்கு இருக்கிறது என்று ஏதுமறியாக் குழந்தைக்குச் சொல்வதற்கு ஒப்பானது.

அத்தொழில் நுட்பத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாகக் கழிக்க வழிமுறைகள் இல்லை என்பது உலக அளவில் கண்ட உண்மை நிலை. ஆனால் நம் அணு விஞ்ஞானிகளோ தங்களுக்கு அணு உலைக் கழிவுகளைப் பாதுகாப்பாகக் கழிக்கத் தெரியும் என்று வாய்வார்த்தையாகக் கூறிவருகின்றனர். அப்படி இருந்தால் காப்புரிமை போட்டு அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனிக்குச் சொல்லித் தருவதாக ஏன் நம் அணு விஞ்ஞானிகள் அவர்கள் நாட்டில் அறைகூவல் விடவில்லை…?

மூடி மறைக்கப்பட்ட உண்மைகள்: இந்தியாவில் ஆற்றல்துறையின் கீழ் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு (Bureau of Energy Efficiency) இருக்கிறது. அதன் வலைதளத்தில், இந்தியாவில் குறைந்தது 25,000 மெகாவாட் மின்சக்தியைச் சேமிக்க முடியும்; நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலில் 23% சேமிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மின்சேமிப்பிற்கான இந்தக் கணக்கீடு மிகமிகக் குறைந்த அளவாக இருந்தாலும் இது மிகக் கணிசமான தொகை. ஆனால், இதுவே இந்தியாவின் தற்போதைய மின் தேவைகளை நிறைவு செய்யப் போதுமானது; தற்போதைய தட்டுப்பாடுகளை நீக்குவதோடு, கூடுதலான மின்சாரத்தை உபரியாக்கவும் முடியும்.

       முதன்மையான ஆற்றல் மூலம் என்று அமெரிக்கா, ஜப்பான், பிரான்சு, ஜெர்மனி, சீனா போன்ற பல அரசுகள் கருதுகிற, பரைசாற்றுகின்ற ஒன்றில், 1994லிருந்து 2010 வரை 16 வருடங்களாக விஷயம் தெரிந்திருந்தும் இந்தியாவில் எந்த திறம்பட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. வெறுமனே திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றி 2001ல் சட்டம் போட்டோம், திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் மூலம் தன்னார்வமாகச் சேமித்தோருக்கு போட்டி நடத்தினோம், கட்டுரைப் போட்டி நடத்தினோம் என இருந்தது இந்திய ஆற்றல் துறை!

இந்தியாவில் நாட்டில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு பற்றிய அறிவைப் பயன்படுத்திக் கொண்ட சில தொழில் நிறுவனங்கள், 1999 முதல் 2010 வரையில் தன்னார்வமாக 2461 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்திருக்கின்றன. இதைச் சொல்வது இந்திய அரசின் ஆற்றல் துறைதான்! அதாவது மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 2461 மெகாவாட் மின் சக்தி உபரியாக்கப்பட்டிருக்கிறது. அதாவது கூடங்குள அணு உலைகளின் மின்திறனைக் காட்டிலும் கூடுதலான மின்திறனை அவர்கள் உபரியாக்கி இருக்கின்றனர். அந்த மிகச்சில தொழிற்சாலைகள் மட்டுமே 1999 முதல் 2010 வரையில் சேமித்த தொகை 13,399 கோடி. அவர்கள் இம்முறைகளை அமல்படுத்துவதற்குச் செய்த முதலீட்டை 20 மாதங்களில் திரும்பப்பெற்றனர். இதைச் சொல்வதும் இந்திய அரசின் ஆற்றல் துறைதான்!

       2008ல் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தேசிய நடவடிக்கை (National Mission on Enhanced Energy Efficiency) அறிவிக்கப்பட்டு 4 வருடங்களில் 7500 மெகா வாட் அளவு மின்சாரத்தை சேமித்து மின் நிலைய நிறுவுதிறன் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிறது மத்திய திட்டக்குழு. அதாவது 2010 முதல் 2011 ற்குள் மட்டும் மக்கள் வரிப்பணச் செலவு எதுவுமே இல்லாமல் 5039 மெகாவாட் மின்சேமிப்பு நடந்திருக்கிறது என்கிறது. 2008-ல் தான் இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பது கவனத்திற்கு உரியது.

       1994-ல் இருந்தே திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளின் முக்கியத்துவம் அரசிற்குத் தெரிந்திருந்தும், புதிதாக கவனத்திற்கு வந்தது போல், 2011 முதல் 2015ற்குள் 19000 மெகா வாட் மின் சேமிப்பு செய்வோம் என்கிறது மத்திய அரசின் ஆற்றல் துறையின் வலைத்தளம்.

நிதி    ஒதுக்கீடு: இவ்வளவு முக்கியமான திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டுத் துறைக்கு நிதி எவ்வாறு மத்திய அரசு வழங்குகிறது தெரியுமா? மாநில அரசுகள் ஒரு குறிப்பிட்ட தொகையை (சில கோடிகள்) அளிக்க வேண்டும். அப்படி அளித்த தொகையிலிருந்து தொகுப்பு நிதி உருவாக்கி ஒவ்வொரு மாநிலத்திற்கும் மத்திய அரசு நிதி உதவி செய்யும்! 2009-2010 முதலான கடந்த மூன்று நிதி ஆண்டுகளுக்கு இந்தியா முழுமைக்குமாக உயர்ந்தபட்சமாக 70 கோடி ரூபாயை மாநில ஆற்றல் சேமிப்புத் தொகைக்கு திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு கொடுக்கலாம். (தெளிவில்லாமல் இருப்பது ஆற்றல்துறை வலைத்தளத்தினால்).

       மத்திய அரசு திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான தேசிய நடவடிக்கை (National  Mission on Enhanced Energy Efficiency) என 2008ல் அறிவித்து, 24 ஜூன், 2010-ல் மத்திய மந்திரி சபை ஒப்புதல் வழங்கி, 11வது 5 ஆண்டுத் திட்ட காலத்தில் எஞ்சிய ஆண்டுகளுக்கு (2009-2010, 2010-2011, 2011-2012) அத்திட்டத்திற்கு 235.35 கோடி ரூபாய் என்று கணக்கிட்டு, 108.03 கோடி ரூபாயை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கி உள்ளது.

       மத்திய திட்டக்குழு ஆராய்ச்சிக்கான தொகைகளைப் பட்டியலிடுகிறது. அணு ஆராய்ச்சிக்கு 610 கோடி ரூபாயும், மற்ற ஆற்றல் தொடர்பான அனல், புனல், திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் சேர்த்து 70 கோடி ரூபாய் செலவழிப்பது எவ்வளவு நியாயம்?

திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளைப் பற்றிய விழிப்புணர்வு

       திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளை பற்றியெல்லாம் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பதோடு, இன்றளவும் இந்த பேருண்மை மூடி மறைக்கப்பட்டு வருகிறது. கூடங்குள அணுஉலைகளை ஒட்டிய இந்த விவாதத்தின் போதும் அது மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை.

       மின் பயன்பாட்டில் பெருமளவிலான (70% மேல்) பயன்பாடு மின் மோட்டர்களில் தான். கோவை போன்ற தொழில் நகரங்களில் தொழில் முனைவோர் நல்ல மோட்டார்கள் வாங்கத் திணறி வருகின்றனர். அதிகரித்து வருகிற மின்சார விலையின் தீவிரத்தில் தொழில்கள் முடங்கி வருகின்றன. ஏற்கனவே நசிந்து வருகிற விவசாயத்துறையில் இம்மாதிரியான திறம்பட்ட ஆற்றல் முறைகள் பம்ப் செட்டுகளின் வாழ்நாளை நீட்டிக்கும், அரசிற்கு ஆகும் செலவினத்தைக் குறைக்கும். நம் விவசாயிகள் விவரம் அறியாத நிலையில் அரசால் வைக்கப்பட்டு இருக்க, அவர்கள் படிப்பறிவு பெரிதும் இல்லாத நம் ரீவைண்டர்களிடம் கொடுத்து அடிக்கடி மோட்டாருக்கான காயில் சுற்றி வருகிறார்கள். இதனால் தேவையற்ற மின்விரையம் ஆகிறது.

       மோட்டார் உற்பத்தித் தொழிலில் இருப்போர் திறம்பட்ட மோட்டார்களைத் தயாரிக்க தேவையான பாகங்கள் கோவை மட்டுமல்ல, இந்தியாவின் இதர இடங்களில் இருந்தும் கிடைப்பதில்லை. அதனால் திறம்பட்ட மோட்டர் பாகங்களுக்காக வெளிநாடுகளை நோக்கி கையேந்த வேண்டிய நிலை உள்ளது.

       அரசால் திறம்பட்ட மின்மோட்டர் தயாரிக்க போதுமான ஊக்கம் அளிக்கப்படவில்லை. மக்களுக்குத் தெளிவாக இவை பற்றி எல்லாம் விளக்கப்படாததால், ஏற்கனவே பல்வேறு பொருளாதாரச் சுமையில் உள்ள மக்கள், குறைந்த விலை உள்ள மோட்டர்களையே வாங்குகின்றனர். இதனால் உயர்ந்த திறன் கொண்ட மோட்டார்கள் உருவாக்கப்படுவது மிகச் சொற்பமாக இந்தியாவில் இருந்து வருகிறது. இதனால் இந்த குறைந்த விலை மோட்டர்களை பயன்படுத்துவோருக்கு, மின்துறை, அரசு என்று அனைவருக்குமே நஷ்டம் தான்!

       கிராமங்களில் உள்ள குண்டு பல்புகளை CFL விளக்குகளைக் கொண்டு மாற்றுகிறோம் என்ற திட்டத்தை மட்டும் மத்திய அரசு கூறுகிறது. அது பற்றி அணு உலை அமைக்கக் காட்டும் முனைப்பைக் காட்டவில்லை. இப்போது LED விளக்குகள் மிகக்குறைந்த அளவுதான் செலவிடுகின்றன என்று தெரிய வந்துள்ளதே! பெருந்தொழில் நிறுவனங்கள் LED விளக்குகளுக்கு மாறிப் பயனடைவதாக தகவல்கள் உள்ளதே! இது பற்றி செய்தியைக் கூட விவரமாக திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டிற்கான அமைப்பு தரவில்லை. LED விளக்குகளின் விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

       மேலை நாடுகளில் மின் மோட்டார்களை திறம்பட்டவையாக உருவாக்குவதற்கான தரக்கட்டுப்பாட்டு நிர்ணயங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் Frost free ப்ரிட்ஜ், ஏ.சி., டியூப்லைட் (Tube light), பகிர்மான டிரான்ஸ்பார்மர்கள் (Distribution Transformers) என நான்கிற்கு மட்டும் தர நிர்ணயம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏன் மின்மோட்டர்களுக்கான தரக்கட்டுப்பாடுகள் அமல்படுத்தவில்லை?

மக்கள் விஞ்ஞானம், மக்கள் பொருளாதாரம்: இந்தியாவின் தேசிய உற்பத்தித் திறன் கவுன்சில் தற்போதைய மின் தேவைகள் அனைத்தையும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நிறைவு செய்துவிடலாம்; இம்முறைகளை குறுகிய காலத்தில், குறைந்த செலவில் செய்து முடிக்கலாம்; இவற்றுக்காகச் செலவிடப்படும் தொகை ஆற்றல் செலவுகள் குறைவதால் 3 வருடங்களுக்குள் திரும்பக் கிடைத்துவிடும் என்கிறது.

அதை விட முக்கியமானது, இம்முறைகளைக் கடைப்பிடிப்பதனால் 2 வழிகளில் நம் ஆற்றல் செலவுகள் குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

1. நேரடியாக, நம் ஆற்றல் செலவுகள் குறைவதால் ஆற்றலுக்கு நாம் செலவிடும் கட்டணங்கள் குறைகின்றன.

2. இம் முறைகள் அரசு ஃ பிற அமைப்புகள் செய்யும் செலவுகளைக் குறைக்க வழிவகுப்பதால், அரசு மற்றும் பிற அமைப்புகளால் நிர்ணயிக்கப் படுகிற ஆற்றல் கட்டணங்கள் குறையும்! உதாரணமாக, தமிழக மின் துறை, தமிழகத்தில் குண்டு பல்புகளை சி.எப்.எல். பல்புகளால் மாற்றினால் 600 மெ. வா. மின்திறனை காலை, மாலை வேளைகளில் தேவையற்றதாக்கலாம். வருடத்திற்கு தமிழக அரசு அதிக விலை கொடுத்து இந்நேரங்களில் வாங்கும் மின்சாரத்திற்கான தொகையான சுமார் ரூ. 1200 கோடியை தேவையற்றதாக்கலாம்.

       இந்தியாவில் ஒருங்கிணைந்த ஆற்றல் திட்டத்தை வகுக்கும் மத்திய திட்டக்குழு ஆற்றல்களுக்கான கட்டணங்களை கூட்டத் துடிக்கிறது. பாரதப் பிரதமரோ கட்டணங்களைக் கூட்டினால் தான் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு அதிகரிக்கும் என் கிறார். உண்மையில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டு முறைகளைக் கடைப்பிடிப்பது ஆற்றல் கட்டணங்களைக் குறைத்து மக்களின் பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதாக இருக்கும், மாற்றமில்லாமல் மக்கள் அனைவரும் விரும்புவதாக இருக்கும். நம் பொருளாதார நிபுணரான பிரதமர் மக்கள் சார்பாக ஏன் சிந்தித்துச் செயல்படுவதில்லை?

       உண்மை இப்படி இருக்க தற்போதைய தமிழக மின் தட்டுப்பாட்டைப் போக்க அணுசக்தியைத் தவிர வழியே இல்லை என்று மேதகு முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல்கலாம் அவர்களும் பொருளாதார நிபுணரான பிரதமரும், எவ்வாறு கூறுகின்றனர்?

இந்தியாவில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டின் முக்கியத்துவம், பயன்பாட்டாளர்களுக்கான அதன் பயன்களையும் மக்களுக்கு விளக்குவதே இல்லை. இது வளர்ந்த நாடுகளில் உள்ள நிலைக்கு முற்றிலும் மாறானது. வளர்ந்த நாடுகள், புதிய ஆற்றல் மூலங்களுக்கான தேவையைக் குறைப்பதில் திறம்பட்ட ஆற்றல் பயன்பாடு முதன்மையான பங்கு வகிக்கின்றன என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப செயல்திட்டங்களை வகுக்கின்றன.

ஆற்றல் பிரச்சனைகளை இப்படி அணுகவில்லை எனறால் வண்டியில் உள்ள ஓட்டை ட்யூபில் நாம் காற்றடித்துக் கொண்டே இருப்பதற்குச் சமம்!

வீட்டின் தண்ணீர்த் தேவைக்கு ஒழுகுகிற மேல்நிலைத் தொட்டியை வைத்துக் கொண்டு ஏற்கனவே உள்ள கிணறு போதவில்லை, புதிதாகக் கிணறு தோண்ட வேண்டும் என்று சொல்வதற்குச் சமம்! ஒழுகல்கள் அனைத்தையும் அடைத்த பின் தேவை இருக்கிறது என்று கணக்கீட்டில் தெரியவந்தால் புதிய கிணறுகள் அவசியம் என்ற நிலையை உலக அறிவியலாளர்கள் எடுக்கின்றனர். இதை அறிய அறிவியல் அறிய வேண்டியது இல்லை. இது சராசரி புத்திக் கூர்மையில் தெரியவருவது. நம் அணு விஞ்ஞானிகளோ ஒழுகல்கள் அல்ல, ஓட்டைகள் இருந்தாலும், கணக்கிடக் கூட தரவுகள் இல்லாத நிலையில் புதிய மூலங்கள் அவசியம் என்று புதிது புதிதாய்க் கிண்றுகள் தோண்டும் கனவை மெய்ப்பிக்க இறங்கி உள்ளனர் தலைகீழாக.

எதைச் செய்வது புத்திசாலித்தனம்…?

உலகமே நீடித்து நிலைத்த வளர்ச்சிக்கும், மக்களுக்கும் சாதகமற்றது என்று அறிந்து ஒதுக்கும் ஒன்றை வரப்பிரசாதம் என்பதும், உலகமே அதிமுக்கியமானதாகக் கருதும் திறம்பட்ட ஆற்றல் பயன்பாட்டை மக்களின் கண்ணில் கூடக் காட்டாது மறைப்பதும் அரசாலும், அரசு விஞ்ஞானிகளாலும் இங்கு நடைபெற்று வருகிறது.

நம் ஊரில் ‘விஞ்ஞானம்’ என்பது வேறுபட்டது போலும்!

- கோபால் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It