பழங்கால வானியல் பதிவுகளைப் புரட்டினால் அவற்றை வானவியலாளர்கள் கலை நுணுக்கத்துடன் செய்துள்ளது தெரிய வருகிறது. 20 ம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் வானைநோக்கி அறிவது தனியான துறையாக கணிக்கப்பட்டது. நிலா ஒவ்வொரு மாதமும் 8 நிலைகளை கடக்கிறது. ஒரு முறை பூமியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் 29.5 நாட்களை ஒரு மாதம் எனக் கணக்கிடுகிறோம். இதனால் 27 வருடங்களுக்கு ஒருமுறை ஒரு மாதத்தில் இருமுறை முழுநிலா, பௌர்ணமி ஏற்பட வாய்ப்புள்ளது. இதனை நீல நிலா என்கிறோம்.

தொலைநோக்கி கண்டுபிடிக்கும் முன்பே சில முக்கிய வானியல் கண்டுபிடிப்புகள் அக்கால கட்டத்தில் நிகழ்ந்தன. சாய்வான சூரியக்கதிர்வீதி கி.மு. முதலாம் நூற்றாண்டிலேயே சீனர்களால் கண்டறியப்பட்டது. சால்டீன் என்ற விஞ்ஞானி சூரியனில் கொஞ்சூண்டு, வெப்பம் குறைவான பகுதி உள்ளது என்றார். அவற்றை கரும்புள்ளிகள் எனவும் குறிப்பிட்டார். அவை மீண்டும் மீண்டும் ஒரு காலகதியில் (11 ஆண்டுகள்) சுழன்று மீண்டும் அவ்விடத்திற்கே வரும் என்றும் சொன்னார். கி.மு.2ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹ‌ப்பார்க்கஸ் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் 3.2 இலட்சம் கி.மீ. என்று கணித்தார். கி.மு.276-195ல் வாழ்ந்த எரட்டோதெனிஸ் என்ற கணிதவியலாளர் எந்தவித கருவியும் இன்றி பூமியின் சுற்றளவைத் துல்லியமாகக் கண்டறிந்தார். அவரே அட்சரேகை. தீர்க்க ரேகைகளையும் கண்டுபிடித்தவர். மத்திய காலங்களில் 13‍ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவில் அறிவியலில் ஒரு தேக்கம் ஏற்பட்டது. இதனை கருப்பு ஆண்டுகள் என்று கூறுகிறோம். பின்னர் நாம் இன்று பார்க்கும் வானவியல் பெர்சிய சாம்ராஜ்ஜியத்திலும், இஸ்லாமிய உலகிலும் பெரிதளவில் வளர்ந்தது. இன்று விண்மீன் கூட்டத்திற்கு சூட்டப்பட்ட பெயர்கள் அனைத்தும் அரேபியப்பெயர்களே; இஸ்லாமியர் நாமகரணம் செய்தவையே.

இந்தியாவில் பிறந்து வாழ்ந்த ஆரியபட்டர் (பிறப்பு கி.பி.496), வராகமிகித (499-577), பாஸ்கரா (பிறப்பு 1114) போன்றோர் நம்மிடம் போதுமான கருவிகள் சாதனங்கள் இன்றியே சூரிய கிரகணம், சந்திர கிரகணம், பூமியின் வடிவம், அதன் சுற்றுவேகம், அது சூரியனைச் சுற்றி வருவது மற்றும் பிறகோள்களின் புறச்சூழல்கள் போன்றவற்றை கணிதத்தின் மூலம் அனுமானித்து கண்டறிந்தனர்.

விண்மீனின் தூரம் மற்றும் கோணம் அறியும் கருவியைக் கண்டுபிடித்த ஹைப்பேஷியாவும் (கி.மு.37-410) பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்ன ஜியார்டானோ புரூனோவும் (கி.பி.1545-1600) கொடூரமாக மதவாதிகளால் கொலைசெய்யப்பட்டனர். மறுமலர்ச்சிக்காலத்தில் வாழ்ந்த நிகோலஸ் கோப்பர் நிக்கஸ் (கி.மு.1473-1449) இந்த உலகம் அதாங்க நம்ம பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என்பதை ரகசியமாக (மதவாதிகளுக்கு பயந்துதான்) எழுதிவைத்தார். இந்த விஷ‌யம் மதவாதிகளுக்குத்தெரிந்தால் தலையை ஒரே சீவுதான். எனவே அவர் இறக்கும்வரை அவர் எழுதி வைத்த தகவல்கள் வெளிவரவில்லை. இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் அவரது சீடர்கள் கோப்பர் நிக்கஸின் கருத்துக்களை புத்தகமாக வெளியிட்டனர். கோப்பர் நிக்கஸ் எழுதிய சூரியனை மையமாக வைத்த சூரிய மண்டலமும், பூமி சூரியனைச்சுற்றுவதும் அவர் இறந்தபின்பே இந்த உலகத்திற்குத் தெரியவந்தது.

கலிலீயோ கலிலி என்ற இத்தாலிய விஞ்ஞானி (கி.பி.1564-1642) பூமி சூரியனை மையமாக வைத்து சுற்றுகிறது என வெளிப்படையாக சொன்னார். கடவுள் உருவாக்கிய பூமி சூரியனைச் சுற்ற முடியாது என நம்பிய மதவாதிகள் கலிலியோவை சிறையில் அடைத்தனர், சித்திரவதை செய்தனர். அவர் சிறையில் பைத்தியம் பிடித்து செத்துப்போனார். பிறகு ஐசக் நியூட்டன் (1642-1727) தலையில் ஆப்பிள் விழுந்தது. நண்பருடன் இருந்த நியூட்டனுக்கு ஞானம் பிறந்ததது. ஆச்சரியம். ஈர்ப்பு விசைக்கொள்கையை, வானவியலின் ஆற்றலை, கோள்களின் நகர்வு பற்றிய விஷ‌யங்களை தெளிவாகக் கூறினார் நியூட்டன். வில்லியம் ஹெர்சல் 1781ல் யுரேனஸ் என்ற கோளைக் கண்டுபிடித்தார். அதன் கிரிடம்... அதாம்பா அதன் வளையம் பற்றி இப்போதுதான் அறிகிறோம்.

1846ல் செப்டம்பர் 23-ம் நாள் ஜெர்மனின் காட்பிரட் கேலி சூரியனைச்சுற்றும் எட்டாவது கோளைக் கண்டுபிடித்தார். அதற்கு ரோமானிய நீர்க்கடவுளின் பெயரான நெப்டியூனை சூட்டினார். நாம் சூரிய மண்டலத்தில் தனியாக இல்லை, நம் குடும்பம் மிகப்பெரி..ய்..ய..து. கோள்களுக்கு வெளியே கியூப்பியர் வளையம், அதைத்தாண்டி ஊர்ட் மேகங்கள், அவைகளிலிருந்து கிளம்பி ஒழுங்காகவும், தன் இஷ்டப்படியும் சூரியனை வலம்வரும் வால்மீன்கள் எல்லாம் சூரியக்குடும்ப உறுப்பினர்களே. எனவே நம் குடும்பம் மிகப்பெரியதாக பால்வழி மண்டலம் வரையில் நீண்டுள்ளது. சூரியக்குடும்பம் பால்வழி மண்டத்தின் ஒரு ஓரத்தில், ஆப்பத்தின் ஓரத்தில் ஒட்டிய சர்க்கரைத்துளி போல ஒட்டிக்கொண்டு சுற்றுகிறது. இந்த உண்மை 20ம் நூற்றாண்டில் தான் நமக்கு தெரியவந்தது.

உலகில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்ட சூப்பர் நோவா, கி.பி.1054ல் சீன வானிலையாளர்களால் கண்டறியப்பட்டது. அது காணப்பட்ட நாள் ஜூலை 4 (அமெரிக்காவின் சுதந்திர நாள். ஆனால் சூப்பர் நோவா கண்டறியப்பட்டபோது, அமெரிக்கா என்ற கண்டத்தில் மக்கள் வாழ்க்கை இல்லை. அதன் வயது 400 வருடங்கள் தானே). சூப்பர் நோவா தொலைதூர அண்டங்களில் அடிக்கடி உருவாகி வருகிறது. டேனீஸ் நாட்டு வானிலையாளர் டைகோபிராகி 1572ல் ஒரு சூப்பர் நோவாவை கண்டுபிடித்தார். அது இன்றும்கூட தெரிகிறது. அதிலிருந்துதான் முதன்முதலில் காமா கதிர்கள் (வானின் வண்ணக்கோலங்கள்) கண்டுபிடிக்கப்பட்டன. பிராக்கியின் சூப்பர் நோவாவை மக்கள் பகலில் பார்த்தனராம். பின்னர் ஜெர்மன் வானிலையாளர் ஜொகன்ஸ் கெப்பளர் 1605ல் ஒரு சூப்பர் நோவாவைப் பார்த்து பதிவு செய்தார்.

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It