உயிர்கள் – உருவாவது, வளர்வது, நகர்வது, வயதாவது, சிதைவது இறப்பது போலவே வான்பொருட்களும் முக்கியமாக விண்மீன்களும் பிறந்து, வளர்ந்து, தேய்ந்து, வயதாகி இறந்து போகின்றன. நாம் தான் இவற்றைக்கண்டு கொள்வதே இல்லை, நமக்குத் தெரிவதும் இல்லை. உலகிலுள்ள அனைத்துப் பொருட்களுக்கும் ஆக்கம், வளர்ச்சி, அழிவு உண்டே. நம் குடும்பத் தலைவனான சூரியன் இன்னும் 600 கோடி ஆண்டுகளில் இல்லாமல் போகப் போகிறது என்பது தெரியுமா? நம் பூமியும் சூரியனைச் சார்ந்துள்ள செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனியெல்லாம் எங்கே போகும்? அப்போது அது சுற்றுமா, சுற்றாதா? அது நடக்க சுமார் 700 கோடி தலைமுறைகள் ஆகலாம், நம் வால் போக (அதாவது நம் முன்னோரான குரங்காரிடமிருந்து நமது வால் போன கதைதாங்க) சுமார் அரை கோடி ஆண்டுகள் ஆயினவே. 600 கோடி ஆண்டுகளில் மனிதன் என்னவாக மாறியிருப்பானோ? இதற்கிடையில் சூரியனின் கிழட்டுப்பருவம் வந்த பின் சக்தி இல்லாத நிலையறிந்தும் விஞ்ஞானிகள் நம்மை வேறு ஒரு சூரிய மண்டலத்திற்கு கொண்டு செல்லலாம்.

பிரபஞ்சத்தின் பிறந்த தினம்

 பிரபஞ்சம், இது ஒரு தனிமைமிக்க இடம் தான். பிரபஞ்சவெளி மிகமிகப்பெரியது, சூனியமானது. பிரபஞ்சம் இடைவிடாமல் விரிந்துகொண்டே செல்கிறது. இது எப்போது பிறந்தது? பிறந்திருக்கவே வேண்டியது இல்லை என சில வானியலாளர்கள் கருதுகின்றனர். பிரபஞ்சத்தின் உருவம் எப்படி? நீங்கள் ஒரு கண்ணாடி முன் நிற்கிறீர்கள். அதனுள்ளே உங்கள் உருவம் தெரிகிறது. அதற்குள் இன்னொரு கண்ணாடி. அங்கும் உங்கள் உருவம். அதற்குள்ளும் இன்னொரு கண்ணாடி. இன்னொரு கண்ணாடி, இப்படியாக போயக்கொண்டே இருந்தால்... என்ன தலை சுற்றுகிறதா நண்பரே! இதுதான் பிரபஞ்சம். ஒவ்வொரு நாளும் விண்மீன்களில் உருவெடுக்கும் ஹைட்ரஜன் பிரபஞ்சத்தை நிறைத்துக்கொண்டேயிருக்கிறது. இது விண்மீன்களுக்கிடையே பரவுகிறது. இடை இடையே அண்டங்கள் வயதாகி இறக்கின்றன; விலகியும் செல்கின்றன; தொடர்ந்து புதிய அண்டங்கள் பிறந்துகொண்டேயிருக்கின்றன பில்லியன் கணக்கில். என்ன சொல்லலாம் இதை? ஒவ்வொரு நாளும் பிரபஞ்சத்தின் பிறந்த நாள் தான்...

- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)