உடல் வளம், வயது, பிற சூழ்நிலைகளுக்கேற்பப் பலதரப்பட்ட அழுத்தத்தால் எலும்புகள் உடைகின்றன. கெட்டியானதும் வலுவானதும் இணைக்கும் இழைமங்களைக் கொண்டும் ஆக்கப்பட்டிருப்பதால் உடையும் முன் அல்லது முறியும் முன் மிகுதாக்காற்றலைத் தன்பால் தாங்க வல்லது. ஆனால் நோயால் எலும்பு மென்மைப்பட்டிருக்கும்போது அல்லது வயதிற்கேற்ப வலுவிழந்திருக்கும்போது முறிவுகள் சிறுவிபத்துகளால் கூட ஏற்படலாம். தானாகவும் உடையலாம்.

குழந்தைகளின் எலும்புகள் முழு வளர்ச்சி பெறாதன, இன்னும் அவை நெகிழ்வுடையன. குழந்தைப் பருவத்தில் ஒரு கடுமையான அடிபடுதல் அல்லது விழுதல் எலும்புகளை இரண்டு துண்டுகளாய்ப் போகச் செய்யாமல் அவற்றை வளைவுடையதாய்த் தோன்றச் செய்யும். இதனை ஒருபுற எலும்பு வளைக்கும் மறுபுற எலும்பு முறிவு (“greenstick” fracture) என அழைப்பர்.

முறிந்த எலும்பின் இருபக்க நுனிகள் காயவிசையால் அடர்த்தியான நெருக்கப் பெற்று நசுங்கியது போல் தோன்றும். இந்த முறிவைத் தாக்க முறிவு என்பர் (impacted fracture), அவ்வாறில்லாமல் எலும்பின் நுனிகள் சிதறிப் போய் பல துண்டுகளாய்க் கிடப்பதுண்டு. இவ்வாறு ஏற்படும் முறிவை நுண்துகளான முறிவு (comminuted fracture) என்பர். தோல் கிழியாமல் ஏற்படும் முறிவை எளிய முறிவு (simple fracture) என்றும் தோல் கிழிந்து எலும்பு வெளிப்பட்டுத் தள்ளி வருமாறு ஏற்படும் முறிவைச் சிக்கலான முறிவு (compound fracture) என்றும் கூறுவது வழக்கம்.

முறிந்த துண்டுகள் புதிய இழைமங்களின் உற்பத்தியால் இணைக்கப்பட்டுத் தாமாகவே ஆறிவிடும் போக்கை எல்லா முறிவுகளும் கொள்ள முயல்கின்றன. முதலில் இந்த இழைமம் மெழுகு அல்லது மக்குப் (putty) போன்று இருக்கும். எளிதில் காயப்பட்டு விடும். ஆகையால் முடமாகிய எலும்பு நேர்படுத்தப்பெற்று அசையாமல் பாதுகாப்பாக இருப்பதற்காக அரை சாந்துக் கட்டால் (plastic cast) ஆறிவரும் வரை கட்டிவைப்பர். புதிய இழைமம் அல்லது உடைந்த என்புப் பொருள் (callus) முதிர்ந்த எலும்பாக மாறும்.