ஆட்டிசம் என்ற பிறவிக் குறையுடைய குழந்தைகள் அந்நியர்கள் மட்டுமல்லாது பெற்றோர்களின் கண்களையும் நேரடியாகப் பார்க்க விரும்புவதில்லை. தொட்டு அணைத்துத் தூக்கினால் கத்திக் கதறி ஆர்ப்பாட்டம் செய்வார்கள். இதன் காரணத்தால் பெற்றோர்களிடம் மன இறுக்கமும் தாங்கொணாத துயரமும் ஏற்படுகிறது.

குழந்தைக்கு பெற்றோர்களின் அரவணைப்பு பிடிக்காததால் மற்ற குழந்தைகள் சிரித்து பேசக் கற்றுக் கொள்வதுபோல் எதையும் கற்றுக் கொள்ள முடிவதில்லை. எப்போதும் தனக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள்.

ஆட்டிசத்திற்குக் காரணம் ஃப்ராஜைல் எக்ஸ் குரோமோசோம் சின்றோம் என்ற குரோமோசோம் குறையே. இவர்களது எக்ஸ் குரோமோசோம் பிய்ந்து போவதுபோல் இருக்கும். அதனால் சில ஜீன்கள் சரிவர வேலை செய்வதில்லை. அதில் ஒன்று எக்ஸ் ஃப்ராஜைல் மென்ட்டல் ரிடார்டேஷன் புரோட்டீன் ஜீன் ஆகும்.

இந்த ஜீனின் புரதம் பிழையாக வேலை செய்வதால் ஆட்டிசம் ஏற்படுகிறது. மன ஒடுக்கத்திற்குக் காரணமான இந்தப் புரதம் தாயின் வயிற்றில் வளரும்போதே சிசுவின் மூளை வளர்ச்சியில் தாமதத்தை ஏற்படுத்துகிறது. சென்சொரி கார்ட்டெக்ஸ் எனப்படும் தொடு உணர்ச்சி நரம்பு மண்டலம் மூளையில் தாமதமாக வளருவதால் மொத்த மூளையின் அமைப்பிலேயே பெரும் குழப்பம் ஏற்பட்டு விடுகிறது.

இதன் காரணமாக குழந்தை பிறந்த பிறகு அதற்கு அன்னையின் ஸ்பரிசம் வெறுக்கத்தக்கதாக இருக்கிறது. அரவணைப்பு அந்நியமாகவும் புரியாததாகவும் இருப்பதால், பய உணர்ச்சி ஏற்படுகிறது. பயம் நாளடைவில் வெறுத்தொதுக்கும் உணர்வாக மாறிவிடுகிறது. ஆட்டிசத்தின் மர்மம் சற்றே புரிந்திருக்கிறது. சீக்கிரமே இதற்கு விடிவும் கிடைக்கும் என்று நம்பலாம்.

- முனைவர் க.மணி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It