Bed wetting or Enuresis

சிறு குழந்தைகள் தன்னை அறியாமல் படுக்கையில் இரவு பகலென்று பாராமல் சிறு நீர் கழித்து விடுவது உண்டு. அதுவே 5 அல்லது 6 வயதுக்கு மேலும் சுய கட்டுப்பாடு இல்லாமல் , குறிப்பாக இரவில், படுக்கையில் சிறு நீர் கழித்தால் அதற்கு காரணங்கள் பல. காரணமறிந்து அப்பழக்கத்தை மாற்றுவது பெற்றோர் கடமை.

சாதாரணமாக குழந்தைகள் கழிப்பறையில் தான் சிறு நீர், மலம் கழிக்க வேண்டும் என்ற பழக்கத்தை 5 - 6 வயதிற்குள் பழகி விடுவார்கள். 5 - 6 வயதிற்கு மேலும் இரவில் மாதம் இரண்டு முறைக்கு மேல் படுக்கையில் சிறு நீர் கழித்தால், அது கவனிக்கப்பட வேண்டிய Bed wetting அல்லது Nocturnal Enuresis என்ற குறையாகும்.

கழிவறை செல்ல பழக்கப் படுத்திய பின், ஆறு மாதங்கள் வரை படுக்கையில் சிறு நீர் போகாமலிருந்து, மீண்டும் அந்தப் பழக்கம் ஏற்பட்டால் அதை Secondary Enuresis என்கிறார்கள். இது குழந்தைகளின் தவறோ அல்லது பெற்றோரின் தவறோ அல்ல. இது ஒரு சில குடும்பங்களில் வழி வழியாய் வர வாய்ப்புண்டு. ஏழு வயது வரையிலும் கூட 9% ஆண் குழந்தைகளும், 6 % பெண் குழந்தைகளும் இரவில் படுக்கையை ஈரமாக்குவதாகச் சொல்லப்படுகிறது.

உடல் நிலை கோளாறு, மனோ நிலை பாதிப்பு அல்லது சரியான தூக்கமின்மை போன்றவை இதன் காரணங்களாக இருக்கலாம்.

இது இயற்கையாகவே அந்தந்த குழந்தைகளுக்கு இரவில் அதிகமாக சிறு நீர் உற்பத்தியாகி, விழிப்பு வராமல் இருக்கலாம்.

சிறு நீர்ப்பை நிறைந்தது என்பதை அந்த குழந்தையின் மூளைப் பகுதி உணராமல் இருக்கலாம்.

தண்டுவடத்தில் ஏற்படும் கோளாறு, பிறவியிலேயே சிறு நீர்ப்பாதையில் ஏற்படும் மாறுபாடு மற்றும் தொற்று நோய், சர்க்கரை நோய் ஆகியவையும் காரணங்களாக இருக்கலாம்.

ஆறு வயதுக்கு மேல் படுக்கையில் சிறு நீர் கழிப்பது தொடர்ந்தால், குழந்தையை தகுந்த குழந்தை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது நலம்.

இவர் நோய்க் குறிகளை (History) பெற்றோரிடம் கேட்டறிந்து, குழந்தையை முழுமையாகச் சோதிப்பார்.

சிறு நீரில் சர்க்கரை நோய்க் குறி, நோய்க் கிருமித் தொற்று இருக்கிறதா எனப் பரிசோதிப்பார்.

தேவையானால், சிறு நீரகம், சிறு நீர்ப்பை (X Ray Kidney Urinary Bladder area) மற்றும் பிற சோதனைகள் செய்யலாம்.

குழந்தைகள் படுக்கையில் சிறு நீர் கழிக்காமல் இருக்க எளிய யோசனைகள்:

இரவில் குழந்தைகள் படுக்கையில் சிறு நீர் கழிப்பதைப் பற்றி பெற்றோர் கவலைப் படாமல் இருப்பதோ, தண்டிப்பதோ சரியான அணுகு முறையாகாது.

எனவே குழந்தைக்கு தைரியம் சொல்லி, இது குணப்படுத்தக் கூடியது என்பதைப் புரிய வைக்க வேண்டும்.

விளையாட்டு மும்முரத்தில் சிறு நீரை அடக்காமல் பகல் நேரங்களிலும், மாலை வேளைகளிலும் தகுந்த இடைவெளிகளில் கழிவறை சென்று சிறு நீர் கழிக்கப் பழக்கப் படுத்த வேண்டும்.

படுப்பதற்குச் சில மணி நேரத்திற்கு முன்பிருந்து அதிகமாக திரவ பானங்களை கொடுப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

படுப்பதற்கு இரண்டு மணிக்கு முன் 250 மி.லி அளவு மட்டும் திரவ பானங்கள்-தண்ணீர் அல்லது பால்-கொடுக்கலாம்.

படுப்பதற்கு முன் கண்டிப்பாக குழந்தையை கழிவறையில் சிறு நீர் கழிக்கச் செய்ய வேண்டும்.

இரவில் அலாரம் வைத்து, ஒரு முறையாவது குழந்தையை எழுப்பி, கழிவறைக்கு கூட்டிச் செல்ல வேண்டும்.

அலாரத்திற்கு குழந்தையும் விழித்து கழிவறை செல்ல பழக்கப் படுத்துக் கொள்கிறது.

ஒவ்வொரு நாளும் இரவில் படுக்கையில் ஈரமாக்காத நாட்களில் குழந்தையைப் பாராட்டி, சிறு சிறு பரிசளித்துப் பாராட்டுங்கள்.

குழந்தை மருத்துவரின் ஆலோசனைப்படி,

1. DDAVP  (Desmopressin)  என்ற மருந்தும், Tricyclic antidepressants (Imipramine) என்ற மருந்தும் கொடுக்கலாம். இதனால் சிறு நீர் உற்பத்தி குறைகிறது.

2. சிலருக்கு Oxybutynin (Ditropan) அல்லது Hyosyamine (Levsinex) அல்லது Tolterodine (Detrol) என்ற மருந்தும் தரலாம். இதனால் சிறு நீர்ப்பை சுருங்குவது குறைந்து அதன் கொள்ளளவும் கூடுகிறது. சிறு நீர் அடிக்கடி செல்வதும் தவிர்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட மருந்துகளால் பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மருத்துவர் ஆலோசனையின்றியும், தொடர்ந்து வெகு நாட்களுக்கும் கண்டிப்பாக சாப்பிடக் கூடாது.

மேலே சொன்ன எளிய முறைகளைப் பின் பற்றினால் மாத்திரைகளுக்குத் தேவையில்லாமல், படுக்கையை ஈரமாக்குவதை சரி செய்யலாம்.

வ.க.கன்னியப்பன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It