medical_uoonaruvar-jeyakumமுடிவெடுக்கும்போது அறிவைப் பயன்படுத்த வேண்டுமா? அல்லது உணர்வைப் பயன்படுத்த வேண்டுமா? என்று கேட்டால் எல்லாரும் அறிவுடன்தான் முடிவெடுக்கவேண்டும். உணர்வுடன் எடுத்த முடிவால் நிறையபேர் சங்கடப் படுகிறார்கள். "ஏதோ உணர்ச்சியிலே அப்படி செய்திட்டேன் அப்ப அறிவ பயன்படுத்தியிருந்தன்னா இந்த நிலைமை வந்திருக்காது'' என்று டயலாக் அடிப்பதை கேட்டிருப்பீர்கள். சொல்லுங்கள் உண்மையில் நாம் எப்படி முடிவெடுக்கிறோம்? அறிவுடனா, உணர்வுடனா? இதோ ஒரு பரிசோதனை.

நீங்கள் ஒரு ரயில்வே சிப்பந்தி. ரயில்கள் செல்லும் டிராக்குளை மாற்றும் வேலை செய்கிறீர்கள். வெயிட்டான ஒரு லீவரை மடக்கிப் போட்டால், டிராக்குகளை மாற்றி ரயில் வேறு தண்டவாளத்தில் செல்ல வைக்கலாம். ஒரு டிராக்கில் ஐந்து இளைஞர்கள் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த டிராக் வழியாக ரயில் வந்துகொண்டிருக்கிறது. சில நொடிகளில் ரயிலில் அடிபட்டு ஐந்துபேரும் அல்ப்ப ஆயுளில் செத்துப்போவார்கள். டிராக்கை மாற்றினால் அவர்களைக் காப்பாற்றி விடலாம். ஆனால் அடுத்த டிராக்கில் ஒரு குடும்பஸ்த்தர் கீழே விழுந்த கண்ணாடியைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

ஒருவர் செத்தாலும் பரவாயில்லை ஐந்துபேரை காப்பாற்றுவது தர்மம் என்று அறிவு பூர்வமாக முடிவெடுப்பீர்களா? அல்லது என்னயிருந்தாலும் தெரிந்தே கொல்லுவது பாவம் என்று உணர்வு மேலிட செய்யாமல் விட்டுவிடுவீர்களா? சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் நான் காப்பாற்றி விடுவேன் என்றெல்லாம் தயவு செய்து ஸீன் போட வேண்டாம். உள்ளதைச் சொல்லுங்கள் நீங்கள் என்ன முடிவெடுப்பீர்கள். வரவு செலவு கணக்கை கராராகப் போட்டு அறிவு பூர்வமாக செயல்படுவீர்களா? இந்தக் கேள்வி கேட்கப்பட்ட ஆயிரக்கணக்கானப் பேர்கள் இது தர்ம சங்கடமான கேள்வி எப்படி முடிவெடுப்பது என்று தெரியவில்லை என்றுதான் சொல்கிறார்களே தவிர ஐந்து பேரைக் காப்பாற்ற ஒருவரைக் கொல்லலாம் என்று அறிவாகச் சொல்வதில்லை. உணர்வுதான் ஜெயிக்கிறது.

- முழுமை அறிவியல். க. மணி

Pin It