Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 

ஒளிவெள்ளத்தால் உறக்கமிழந்த ஒரு மனிதனின் மனநிலை எப்படி இருக்கும்? எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வு படிக்கச் சுவையானது.

ஆய்வின் முதல்படியாக, இயல்பான பகல்-இரவு சுழற்சியில் உறங்கி எழுந்த எலிகளின் மனநிலை பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது படியாக, இரவு முழுவதும் ஒளிவெள்ளத்தால் எலிகளின் உறக்கத்திற்கு செயற்கையான இடையூறு ஏற்படுத்தப்பட்டது. மறுநாள் எலிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்தபோது அவை உளச்சோர்விற்கு ஆளாகி இருப்பது தெரியவந்தது. இருபத்திநான்கு மணிநேரமும் ஒளிவெள்ளத்திலேயே இருக்குமாறு செய்யப்பட்ட எலிகளிடம் உளச்சோர்விற்கான அறிகுறிகள் இன்னும் அதிகமாக தென்பட்டன. ஆய்வின் அடுத்தபடியாக, நிரந்தர ஒளிவெள்ளத்தில் இருக்கவேண்டிய எலிகளுக்கு ஒதுங்கிக்கொள்ள ஏதுவாக ஒரு இருட்டுத்துளையும் கூடுதலாக ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த இருட்டுத்துளைக்குள் ஒதுங்கி ஓய்வெடுக்கும் எலிகளின் உளச்சோர்வு, மற்ற எலிகளைக் காட்டிலும் குறைவாக இருந்தது.

2009 டிசம்பர் 28, நாளிட்ட Behavioural Brain Research இதழில் ஓஹியோ பல்கலைக்கழக மாணவி லாரா ஃபோன்கென் என்பவரின் ஆய்வுமுடிவுகள் வெளியாகி உள்ளன. இந்த ஆய்வு ஒரு தெளிவான முடிவை அறிவிக்கிறது. இரவு நேரத்தில் ஒளியை அதிகமாக பயன்படுத்துபவர்கள் மறுநாள் அதிகமான உளச்சோர்விற்கு ஆளாகிறார்கள் என்பதுதான் அந்த முடிவு.

இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட 24 ஆண் எலிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டன. முதல் குழுவைச் சேர்ந்த 12 எலிகளும் நாளொன்றிற்கு 16 மணிநேரம் முழுமையான ஒளிவெள்ளத்திலும் 8 மணிநேரம் இருட்டிலும் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டாவது குழுவைச் சேர்ந்த 12 எலிகளும் 24 மணிநேரமும் முழுமையான ஒளிவெள்ளத்திலேயே இருக்குமாறு செய்யப்பட்டது. ஒவ்வொரு குழுவிலும் 6 எலிகளுக்கு மாத்திரம் வேண்டும்போது ஒளிவெள்ளத்தில் இருந்து மறைந்துகொள்ளும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.

மூன்று வாரங்களுக்குப்பிறகு இந்த 24 எலிகளின் உடலில் சுரக்கும் கார்டிகோஸ்டிரான் என்ஸைமைக்கொண்டு பல தொடர்ச்சியான சோதனைகள் நடத்தப்பட்டன. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்து வெளிப்படும் உண்மை இதுதான்: “உளச்சோர்வு, மனக்கலக்கம், மன உளைச்சல் இவையெல்லாம் ஒரே செடியில் பூத்த பூக்களைப்போன்றவை. கார்ட்டிகோஸ்டிரான் என்னும் என்சைம்தான் இந்த உளவியல் நோய்களுக்கு காரணமானவை. இரவில் அதிகமாக செயற்கை ஒளியை பயன்படுத்துபவர்களின் உடல்நலமும், மனநலமும் நிச்சயமாக பாதிக்கப்படும்.”

மாறிவரும் தற்கால சூழ்நிலையில் இந்த எச்சரிக்கை அலட்சியப்படுத்த இயலாதது. நமது வீடுகளில் நள்ளிரவில் வெகுநேரம் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இப்போதெல்லாம் ஒரே அறையில் இரண்டு தொலைக்காட்சிப்பெட்டிகளுடன் ஒரே நேரத்தில் இரண்டு திரைப்படங்களை நள்ளிரவுவரை இரசிக்கும் வழக்கம் பரவிவருகிறது.

இந்த ஆய்வுகள் இன்னும் விரிவாக நடைபெற்று வருகின்றன. இரவு-பகல் சுழற்சியில் உறங்கியெழும் உயிரினங்களைக் கொண்டு இந்த ஆய்வுகள் நடத்தப்படும்போது இன்னும் தெளிவான முடிவுகள் வர இருக்கின்றன. உறக்கமிழந்து விழிப்பதைக் காட்டிலும் இப்போதே விழித்துக் கொள்வது நல்லது அல்லவா?

இன்னும்படிக்க: http://www.sciencedaily.com/releases/2009/10/091021101812.htm

தகவல்: மு.குருமூர்த்தி

 

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 anbu 2013-01-10 23:11
மிக பயனுள்ள தகவல் , நன்றி நன்பரே .
Report to administrator

Add comment


Security code
Refresh