Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
கீற்றில் தேட
கீற்றினை வளர்த்தெடுக்க
உதவுங்கள்...

 

இரத்த சோகை என்பது இரத்த சிவப்பணுக்களில் உள்ள mm 3 ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் குறைவாக இருத்தலே ஆகும். சாதாரணமாக ஆண்களுக்கு 5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 15 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும். பெண்களுக்கு 4.5 மில்லியன்/mm3 சிவப்பணுக்களும் 14.5 கிராம் சதவிதம் ஹீமோகுளோபின் இருக்கும்.

ஆனால் நம் நாட்டில் அனைவருக்கும் இப்படி உள்ளதா என்றால், அது முற்றிலும் தவறு. அப்படியானால் நாம் அனைவரும் இரத்த சோகை உள்ளவரா என்று கேள்வி நிச்சயம் எழும்.

நடைமுறையில் ஆண்,பெண் இருபாலருக்கும் சுமாராக 10.5 கிராம் முதல் 12 கிராம் வரை இருந்தாலே இவர்கள் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்று நாம் எடுத்துக்கொள்ளலாம். நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்குத்தான் இரத்த சோகையினால் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது எனினும் ஆண்களும் இதற்கு விதிவிலக்கல்ல.

இரத்த சோகைக்கான காரணங்கள்: 

1. இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் வைட்டமின்கள் குறைவான உணவுப்பொருட்களை உட்கொள்ளுதல்.

2.     உண்ட உணவில் உள்ள சத்து சரியான விகிதத்தில் உறிஞ்சப்படாமையும், மேலும் பயன்படுத்தப்படாமையும் காரணமாக இருக்கலாம்.

3.     கிருமிகள் தொற்று (கீரைப்பூச்சி, நாக்குப்பூச்சி, நாடாப்பூச்சி) சிறுநீரின் தொற்று ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.

4,     இரத்தப்போக்கு.

அ) பல நாள்பட்ட இரத்தப்போக்கு

1. பெண்களுக்கு மாதந்தோறும் 30 லிருந்து 50 மில்லி என்ற அளவில் இல்லாமல் அதிக அளவில் மாதவிடாய்.

2.     மூலத்தினால் மலக்குடலில் இரத்தக்கசிவு (மூலவியாதி).

3. உணவுக் குடலில் இரத்தக்கசிவு (பெப்டிக்அல்சர்,இரத்தக்கசிவு).

ஆ) திடீர் இரத்தப்போக்கு

1.     பிரசவத்தின் போது (அ) கருக்கலைதலின் போது ஏற்படும் இரத்தப்போக்கு

2.     விபத்தினால் ஏற்படும் இரத்தப்போக்கு

3.     அடிக்கடி மகப்பேறு மற்றும் பிறப்பிற்கு பின் குறைவான கால இடைவெளியில்

இரத்த சோகை உடையவரின் தோற்றம்:

பார்ப்பதற்கு அழகாக மஞ்சள் பூத்த முகத்துடனோ, அழகான உப்பிய முகத்துடனோ, வறண்ட மெலிந்த செம்பட்டையான தலைமுடியோடோ, வற்றிய வறண்ட கன்னத்தோடும், குழி விழுந்த கண்களோடும், கருவளையத்தோடும், பட்டாம்பூச்சி போன்ற படர் முகத்தோடும், சோர்ந்தும், நாவில் பல வண்ணமும், பலவித கோலங்களும், வெளுத்தும், படபடக்கும் நெஞ்சத்தோடும் மூச்சிரைப்போடும், மெலிந்த கரத்தோடு, உப்பிய வயிறு, ஊதிய கால்கள், அழகற்ற நொடிந்து போகக்கூடிய வளைவுகள் மிகுந்த குழிவான நகத்தோடு காணப்படுவர்.

ஒரு சிலர் சாதாரணமாகவே நடந்து செல்லக்கூட முடியாத நிலையில் இருப்பதும். அதுவே அதிக அளவில் இரத்த சோகை காணப்பட்டால் மூச்சுத் திணறல் கூட ஏற்பட வாய்ப்புள்ளது. பசியின்மை, சோர்வு, வழக்கமாக செய்யக்கூடிய வேலைகளை செய்ய முடியாத நிலை ஆகியவை ஏற்படும்.

சிறு குழந்தை முதல் பெரியவர் வரை இரத்த சோகையை எப்படி கண்டறிவது என மேற்கூறிய அறிகுறிகளை விட்டுவிட்டு வேறெங்கும் நாம் தேடிச்செல்ல வேண்டிய அவசியமில்லை.

சிறு குழந்தை ஒடிவிளையாடாமல் சோர்ந்த முகத்தோடு சூம்பி அமர்ந்து மற்ற குழந்தைகள் விளையாடுவதை ஏக்கத்தோடு கவனித்து கொண்டிருக்கும். அதிகளவில் தூக்கம், உணவு உட்கொள்ளாமல் சூம்பிய கை கால்களுடன் வயிறு மட்டும் வீங்கிக் காணப்படும். உணவு உட்கொண்ட உடனே மலம் கழிக்க ஓடுகையில் கண்கூடாக பூச்சிகள் வயிற்றிலிருந்து வெளியேறுவதைக் காணலாம்.

அதே சற்று வளர்ந்த குழந்தை படிப்பில் நாட்டமின்மை, எந்த வகையான போட்டியாக இருந்தாலும் தனக்கும், அதற்கும் எந்த தொடர்பும் இல்லை என ஒதுங்கிவிடுதல், எளிதில் சோர்ந்து காணப்படுதல்.

வளரிளம் பருவத்தினராகிய பெண்கள் பூப்படைவதில் தாமதம் அல்லது மாதவிடாய்க் கோளாறு, அதுவே ஆண்களாக இருந்தால் துள்ளித்திரியும் இவ்வயதில் சோர்ந்து காணுதல் மேலும் படிப்பிலும், தான் செய்யும் வேலையிலும் ஆர்வமின்றி காணப்படுவர்.

இரத்த சோகை பாதிக்கப்பட்ட மகளிருக்கு பிறக்கும் குழந்தை சவலக்குழந்தையாக, எடைகுறைவாக(3 கிலோவுக்கும் குறைவாக) பலகீனமான குழந்தையாக பிறக்க வாய்ப்புள்ளது. போலிக் அமிலம் குறைவாக இருந்தால் இவர்களுக்கு நரம்பு மண்டல பாதிப்பு (மண்டை ஒடு அற்ற நீர்க்குடம் போன்ற முதுகெலும்பில் விண்ணம்) ஏற்பட வாய்ப்புள்ளது.

தாய்மார்களின் இறப்பு 20 விழுக்காடு நேரிடையாகவும், மேலும் 20 விழுக்காடு மறைமுகமாகவும் ஏற்படும் நிலை உள்ளது. இவர்களுக்கு பிறக்கும் குழுந்தைகளின் இறப்பு விகிதமும் கணிசமாக காணப்படுகிறது.

ஆண்களோ தன் உடல்நிலை பாதிப்பால் குடும்பத்தை சரிவர பராமரிக்க இயலாத நிலையும் இதனால் குடும்பத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே படும் பல அவலங்களும் கண்கூடு.

இவற்றை தடுப்பது எப்படி? ஆதலால் 12வயது வரும்போதே நம் இளம் சிறார்கள் 12/12 என்ற விகிதத்தில் அதாவது 12வயது உடையவர் 12 கிராம் ஹீமோகுளோபின் இருப்பதற்கு நம்மால் ஆவன செய்ய வேண்டும். முதலில் நம் நாட்டில் உள்ள எளிமையான, உன்னதமான உணவை உட்கொண்டாலே போதும்.

அதற்கு சத்தான உணவு உட்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

என்ன உணவு?

இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் பி12

போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி. கால்சியம் சத்து நிறைந்த உணவுப்பொருட்கள்

தானிய வகைகள்:  கேழ்வரகு, கொள்ளு, சாமை, பொட்டுக் கடலை, சோயா பீன்ஸ் மற்றும் பட்டாணி.

கீரை வகைகள்:  முருங்கைக்கீரை, புளிச்சக்கீரை, தண்டுக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, அரைக்கீரை, குப்பைக்கீரை, மற்றும் மணத்தக்காளி கீரை.

காய் வகைகள்:  பாகற்காய், சுண்டைக்காய், கொத்தவரை, வாழைக்காய், பீன்ஸ்.

கனி வகைகள்:  பேரீட்சை, உலர்ந்த திராட்சை, சீத்தாப்பழம், அன்னாசிப்பழம், மாதுளை, தர்பூசணி, வெல்லம்.

அசைவ உணவு:  ஈரல், இறைச்சி, முட்டை, மீன், இறால்.

இரும்பு பாத்திரங்களில் சமைத்தல் என்பது மிக முக்கியமானதாகும். மேலும், மலம் கழிக்கும் முன்னும், பின்னும் கை கழுவுதல், எங்கும் செருப்பு அணிந்து செல்லுதல் என்பதும் முக்கியமானதாகும். மேற்கூறியவை அனைத்தும் இரத்த சோகை வராமல் தடுக்க நாம் பின்பற்ற வேண்டும்.இரத்த சோகையின் அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஹீமோகுளோபின் அளவு மற்றும் இரத்த சோகைக்கான காரணங்களை கண்டறிந்து இரத்த சோகையின் வீரியத்திற்கு தகுந்தாற்போல் மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

மிதமான இரத்த சோகை  இரும்புச் சத்து மாத்திரைகள், போலிக் அமிலம், கால்சியம் மற்றும் சத்தான உணவுஅதிகமான இரத்த சோகை  ஊசி மூலம் இரும்புச் சத்து செலுத்துதல், இரும்புச் சத்து மாத்திரைகள், சத்தான உணவுமிக அதிகமான இரத்த சோகை  தீவிர தொடர் கவனிப்பு பகுதியில் சேர்க்கப்பட்டு இரத்தம் ஏற்றுதல் அல்லது சமமான மாற்று சிகிச்சை மேற்கூறியபடி செயல்பட்டு இரத்த சோகையற்ற திடமான,வளமான, இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து பாடுபடுவோம்.

(கட்டுரையாளர் கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை மருத்துவர்)

கீற்றில் வெளியாகும் படைப்புகள்/பின்னூட்டங்கள், எழுதியவரின் சொந்தக் கருத்துக்களே! அவை கீற்றின் நிலைப்பாடல்ல. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: editor@keetru.com. அநாகரிகமான பின்னூட்டங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்படும்.

Comments   

0 #1 krishnan 2011-03-22 16:43
thanks for your kindly information. write more information about our body
Report to administrator

Add comment


Security code
Refresh