நிலம் கையகப்படுத்தல் சட்டம் குறித்து, கடந்த மூன்று மாதங்களாக நாடாளுமன்றத்திலும், அரசியல் கட்சிகளிலும், உழவர்களிடமும், ஊடகங்களிலும் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. தலைநகர் தில்லியிலும், மாநிலங்களிலும் உழவர்கள் கண்டனப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இந்த விவாதத்திற்கு வித்திட்டது - நரேந்திர மோடி தலைமையிலான நடுவண் அரசு 2014 திசம்பர் 31 அன்று, “நிலம் கையகப்படுத்தலில் நியாயமான இழப்பீடு, வெளிப்படைத்தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் உரிமைச் சட்டம் 2013” ((Right to Fair Compensation and Transparency in Land Acquisition, Rehabilitation and Resettlement Act 2013)என்கிற சட்டத்தைத் திருத்துவதற்காகப் பிறப்பித்த அவசரச் சட்டமே ஆகும்.

கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாகக் கடுமை யான முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் பிறகு 2013 - நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில் உழவர் களின் உரிமைகளைப் பாதுகாத்திட செய்யப்பட்டுள்ள ஆக்கக் கூறுகளை அடியோடு அகற்றிவிட்டு, முதலாளி களுக்கும், மனை வணிகக் கொள்ளையர்க்கும் தடை யின்றி உழவர்களிடமிருந்து நிலத்தைப் பறித்துத் தரவேண்டும் என்பதே இந்த அவசரச் சட்டத்தின் நோக்கமாகும்.

பிரித்தானியரின் ஆட்சியில் 1894இல் ஏற்படுத்தப் பட்ட நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்படி, தனியார் நிலத்தை, அதன் உரிமையாளரின் ஒப்புதல் இல்லா மலே, ‘பொதுநலத் தேவைக்காக’ என அரசு கையகப் படுத்தலாம். கையகப்படுத்தலை எதிர்த்து நீதிமன்றத் தை அணுகச் சட்டத்தில் இடமில்லை. ஆனால் இழப்பீடு போதவில்லை என்று மட்டும் நீதிமன்றத்தை நாட லாம். பிரித்தானிய ஆட்சியில் இச்சட்டத்தின் படிதான், இரயில் பாதைகள், நெடுஞ்சாலைகள், தொழிற்சாலை கள், மருத்துவமனைகள், துறைமுகங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கான நிலம் தனியாரிடம் கையகப்படுத்தப்பட்டது.

சுதந்தர இந்தியாவில் 1950 முதல் இதே தன் மையில் 1894ஆம் ஆண்டின் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்தல் மேலும் அதிகமாயிற்று. அணைகள், மின்உற்பத்தி நிலையங்கள், பொதுத்துறை நிறுவனத் தொழிற்சாலைகள் முதலானவற்றுக்காகப் பல இலட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் இவ் வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள், காடுகள் ஆகிய வற்றிலிருந்து வெளியேற்றப்பட்ட உழவர்கள், பழங் குடியினர், நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் முதலானோர்க்கு உரிய மறு வாழ்வு, மறுகுடியமர்த்தல் அளிக்கப்படவில்லை. நிலம் சார்ந்த தங்கள் வாழ்வாதாரத்தைப் பறிகொடுத்த வர்கள் இழப்பீடாகக் கிடைத்த சிறுதொகையையும் விரைவில் இழந்து, புலம்பெயர்ந்து பஞ்சைப் பராரி களாக வாழ்ந்து மடிந்தனர்.

நிலம் மாநில அதிகாரப்பட்டியலில் இருக்கிறது. 1955இல் ஆவடியில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரசுக் கட்சியின் மாநாட்டில், நேருவின் தலை மையின்கீழ், ‘சோசலிச பாணியிலான சமுதாயத்தைப் படைத்தல்’ என்பது காங்கிரசின் கொள்கையாக அறிவிக் கப்பட்டது. எனவே 1955 முதல் பத்து ஆண்டுகளுக் குள் எல்லா மாநிலங்களிலும் நில உச்சவரம்புச் சட்டங் கள் இயற்றப்பட்டன. இதன்படி ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்துள்ளவர்களின் நிலத்தை அரசு கைப்பற்றிக் கொள்ளலாம். இச்சட்டத்தால் இடைநிலைச் சாதியினரில் பலர் நிலவுடைமையாளர்களானார்கள். பெருநிலவு டைமையாளர்களாக இருந்த மேல்சாதியி னரில் ஒரு பிரிவினர் தங்கள் நிலங்களை விற்று விட்டுத் தொழில் முதலாளிகளாக மாறினர்.

ஆனால் 1991 முதல் தாராளமயம், தனியார் மயம், உலகமயம் என்பது நடுவண் அரசின், மாநில அரசுகளின் புதிய பொருளாதாரக் கொள்கையாக ஏற்கப்பட்டது. நில உச்ச வரம்பு எனும் கோட்பாடு புதை குழிக்குப் போனது. ஒரு தொழில் நிறுவனம், முதலாளி எவ்வளவு நிலம் வேண்டுமானாலும் வைத்துக் கொள் ளலாம் என்ற நிலை ஏற்பட்டது. அந்நிய மூலதனத் துக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டதால், பன்னாட்டு நிறுவனங்கள் படையெடுப்புப் போல இந்தியாவில் நுழைந்தன.

நாட்டின் வளர்ச்சிக்காகப் பெருமுத லாளிய நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு என்ற பெயரில் அரசு, அரசு நிலத்தைக் கொடுத்தது டன், தனியார் நிலத்தையும் பறித்து அளித்தது. சிறப்புப் பொருளியல் மண்டலங்கள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தொழிற்பேட்டைகள், நகர விரிவாக்கம் என்ற பெயரில் முதலாளிகளுக்கு உழவர்களின் நிலங் களைக் கையகப்படுத்தி மலிவு விலையிலும், நீண்ட காலக் குத்தகை என்ற பெயரிலும் அளித்தது. கடந்த பத்து ஆண்டுகளில் 150 இலட்சம் எக்டர் நிலம் வேளாண்மை அல்லாத துறைகளுக்கு மாறியுள்ளது என்று நடுவண் அரசின் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

1990களில் மேதா பட்கர், நருமதை அணைக் கட்டப்படுவதால், பல ஆயிரக்கணக்கான வளமான காடுகள் அழிக்கப்படும்; தொன்றுதொட்டு அக்காடு களைச் சார்ந்து வாழ்ந்துவரும் பழங்குடியினரும், உழவர்களும் பல ஆயிரக்கணக்கில் வெளியேற்றப்படு வார்கள்; அதனால் அணையின் உயரத்தை 110 மீட்டருக்குமேல் உயர்த்தக்கூடாது; வெளியேற்றப்படு வோர்க்கு முறையான மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் ஆகியவற்றுக்கு உறுதியான ஏற்பாடுகளைச் செய்யும் வரையில், அணையின் கட்டுமானத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன் வைத்துப் பழங்குடியினரைத் திரட்டித் தீவிரமாகப் போராடினார். உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத் தார். அதன்விளைவாக, 1994 முதல் 2000 வரை அணையின் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டன.

மேதாபட்கர் பத்து பதினைந்து ஆண்டுகள் பழங் குடியினருடன் இணைந்து தொடர்ந்து நடத்திய போராட்டத்தால்தான், நிலத்தை நாட்டின் வளர்ச்சிக்கு என்ற பெயரில் பறிகொடுத்துவிட்டு வெளியேற்றப்படு வோருக்கு மறுவாழ்வு அளித்தல், மறுகுடியமர்வு செய்தல் என்பதன் தேவை-முதன்மை என்கிற கருத்து இந்திய அளவில் வலிமை பெற்றது.

1990 வரையில் அரசின் வளர்ச்சித் திட்டப் பணி களுக்காகத் தங்கள் நிலத்தை, வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள், அவர்களுக்கு அளிக்கப்பட்ட மறுவாழ்வு பற்றிய விவரம் அரசிடம் இல்லை.

1994 இல் இந்திய சமூக ஆய்வியல் மய்யம் என்ற அமைப்பு இது குறித்து ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில், 1951-1990 காலத்தில் அரசின் திட்டங்களுக்காகத் தங்கள் வாழிடங்களிலிருந்து 3 கோடி மக்கள் வெளி யேற்றப்பட்டனர் என்று கூறியுள்ளது. தனியார் மயம், தாராள மயம் என்ற பெயரில் பெரு முதலாளிய நிறுவனங்களுக்குக் கடந்த 25 ஆண்டுகளில் பல இலட்சம் ஏக்கர் நிலத்தை உழவர்களிடம், பழங்குடியினரிடம் பறித்து வழங்கியதால், கிட்டத்தட்ட 6 கோடி மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். எனவே 1950 முதல் இவ் வாறு விரட்டியடிக்கப்பட்ட 9 கோடி மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே பிச்சைக்காரர்கள் போல் வாழும் நிலைக் குத் தள்ளப்பட்டனர். இக்கொடுமை மக்களிடம் மனக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 2007ஆம் ஆண்டு மேற்குவங்க மாநிலம் சிங்கூரில், ‘ஒரு இலட்சம் உருவாவுக்கு ஒரு மகிழுந்து’ என்கிற ‘நானோ’ மகிழுந்து தொழிற்சாலை அமைக்க வளமான 1000 ஏக்கர் நிலத்தை 90 ஆண்டுகள் குத்தகைக்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் தலைமையிலான இடதுசாரிகள் ஆட்சி டாடா நிறுவனத்துக்கு அளித்தது. இதை எதிர்த்து உழவர் களும் மக்களும் கடுமையாகப் போராடினர். குசராத் முதல்வராக இருந்த மோடி, ‘நான் நிலமும் பணமும் தருகிறேன் வாருங்கள்’ என்று டாடாவுக்கு அழைப்பு விடுத்தார்.

இதன்படி டாடாவுக்கு, குசராத் அரசு 1100 ஏக்கர் அரசு நிலத்தை அளித்தது. சிங்கூரில் டாடா மகிழுந்து தொழிற்சாலையைக் கைவிடுவதாகவும், குசராத்தில் அதைத் தொடங்குவதாகவும் 7-10-2008 அன்று மோடியும் டாடாவும் கூட்டாக அறிவித்தனர். இதேபோன்று மேற்குவங்கத்தில் நந்திக்கிராம் பகுதி யில் பன்னாட்டு நிறுவனங்களுக்காக 10,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்துவதை எதிர்த்து ஆயுத மேந்திய போராட்டத்தை மக்கள் நடத்தினர். அரசின் துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். உழைக்கும் மக் களை வஞ்சித்து முதலாளிகளைக் கொழுக்க வைப் பதே அரசின் நிலம் கையகப்படுத்தல் திட்டம் என்ற சூழ்ச்சி அம்பலமானது.

மக்களின் பேரெழுச்சியும், பெரும் போராட்டங் களும் தான், ஆளும் வர்க்கத்தை, ஆட்சியாளர்களை அதிரவைத்தது. சிக்கலைத் தீர்ப்பதற்குச் சிந்திக்கச் செய்தது. சிங்கூர், நந்திகிராம் போராட்டங்களின் எதிரொலியாக 2007 திசம்பர் 6 அன்று நடுவண் அரசு நிலம் கையகப்படுத்தல் சட்ட வரைவை நாடாளு மன்றத்தில் முன்மொழிந்தது. ஊரக வளர்ச்சித் துறை யின் நாடாளுமன்ற நிலைக் குழுவின் ஆய்வுக்கு அந்த வரைவு அனுப்பப்பட்டது.

அக்குழுவின் அறிக்கை 2008 அக்டோபர் 21 அன்று நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தல் சட்டம் 2009 பிப்பிரவரி 25 அன்று - நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவடையும் கடைசி நாளுக்கு முதல்நாளில் வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மாநிலங்கள் அவை யில் 2009 பிப்பிரவரி 26 அன்று முன் மொழியப்பட்ட இச்சட்டம் நிறைவேறவில்லை. 2009 ஏப்பிரல்-மே மாதங்களில் நாடாளுமன்றத்துக்குத் தேர்தல் நடை பெற்றதால் 2009ஆம் ஆண்டின் நிலம் கையகப் படுத்தல் சட்டம் காலாவதியாகிவிட்டது.

2009ஆம் ஆண்டின் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தில், ஒரு திட்டத்திற்குத் தேவைப்படும் நிலத்தில் 70 விழுக்காடு நிலத்தை முதலாளியக் குழுமம் விலைக்கு வாங்கிய பிறகுதான், மீதி 30 விழுக்காடு நிலத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என்று கூறுப் பட்டிருந்தது. மக்களின் வலிமையான போராட்டத்தால் தான், அரசு, முதலாளிகளுக்குத் தேவையான மொத்த நிலத்தையும் வாங்கித்தரும் பொறுப்பிலிருந்து ஒரு பகுதி விலகிக் கொண்டது. எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அதற்காகப் பயன்படுத்த வில்லையெனில், அந்நிலம் அதன் சொந்தக்காரருக்கே திருப்பி ஒப்படைக்கப்படும் என்றும் இச்சட்டம் கூறியது.

மேலும் இச்சட்டத்தில், 70 விழுக்காடு நிலத்தை முதலாளிய நிறுவனம் வாங்குவதால் அந்நிலங்களி லிருந்து வெளியேற்றப்படும் மக்களின் மறுகுடியமர்வு, மறுவாழ்வுக்கு முதலாளிய நிறுவனமே பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு கையகப்படுத்தும் 30 விழுக்காடு நிலத்திலிருந்து வெளியேற்றப்படுவோரின் மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் பொறுப்பை அரசு ஏற்கும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த 70:30 ஏற்பாடு நடைமுறை யில் பெரும் குழப்பத்தை உண்டாக்கும் என்று பலரும் கருத்துரைத்தனர்.

2009 தேர்தலில் காங்கிரசு தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைந்தது. 2011 மே 25 அன்று சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை மீண்டும் கொண்டு வருவது என்று முடிவு செய்யப்பட்டது. பத்திரப் பதிவுத் துறையின் விலையைவிட ஆறு மடங்கு அதிகமாகக் கையகப்படுத்தும் நிலத்தின் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். நிலம் சார்ந்த வாழ்வாதாரத்தை இழப்பதற்காகத் தனியார் நிறு வனங்களும் இழப்பீடு வழங்க வேண்டும்.

நிலமற்ற தொழிலாளர்கள், கைவினைஞர்கள், மீனவர்கள், காடுகளில் இயற்கைப் பொருள்களைத் திரட்டி வாழும் பழங்குடியினர் ஆகியோர், அவர்களின் வாழிடங்களி லிருந்து வெளியேற்றப்பட்டால், மாதத்திற்கு 10 நாள் களுக்குரிய குறைந்தபட்சக் கூலித் தொகையை 33 ஆண்டுகளுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய ஆலோசனைக்குழு மன்மோகன் தலைமையிலான நடுவண் அரசுக்குப் பரிந்துரை செய்தது.

இதன் அடிப்படையில் நடுவண் அரசு, நிலம் கையகப்படுத்தல் சட்டம்-2011 என்பதை முன்மொழிந் தது. ஆனால் இச்சட்டத்திலும் பல குறைபாடுகள் இருப் பதாகப் பலரும் எதிர்த்தனர். ‘ஏக்தா பரிஷத்’ (ஒற்று மைச் சங்கம்) என்ற அமைப்பின் முன்னெடுப்பால், 2012 அக்டோபர் 2ஆம் நாள் மத்தியப் பிரதேசம் குவாலியரிலிருந்து ஒரு இலட்சம் உழவர்கள் 2011-நிலச் சட்டத்தைத் திருத்தக் கோரி தில்லியை நோக்கிப் பரப்புரைப் பயணம் மேற்கொண்டனர். 350 கிலோ மீட்டர் தொலைவு நடந்து, 2012 அக்டோபர் 29 அன்று தில்லியை அடைந்தனர்.

தில்லியில் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். தில்லி நகரமே ஒரு இலட்சம் உழவர்களின் போராட்டத்தால் ஆட்டங்கண்டது. ஊரகத்துறை அமைச் சராக இருந்த ஜெயராம் ரமேஷ் தலைமையில் சரத்பவார் உள்ளிட்ட நடுவண் அரசின் எட்டு அமைச் சர்கள் போராட்டக்காரர்களுடன் வீதியில் அமர்ந்து பேசினர். 80 விழுக்காடு உழவர்களின் ஒப்பு தல் பெற்ற பிறகே நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும்; சந்தை விலையைவிட 10 மடங்கு இழப்பீடு தர வேண்டும்; மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் ஆகியவற்றுக்குத் திட்டவட்டமான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்; நிலம் கையகப்படுத்தல் தொடர்பாக மனக்குறை ஏற் பட்டால் நீதிமன்றத்தை அணுகும் உரிமை இருக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்றுவ தாக எழுத்துவடிவில் அமைச்சர்கள் உறுதியளித்த பிறகே, ஆறு நாள்கள் நடந்த தில்லி முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்தப் பின்னணிகளின் அடிப்படையில்தான், 2013இல் “நிலம் கையகப்படுத்தலில் நியாயமான இழப்பீடு, வெளிப்படைத் தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் உரிமைச் சட்டம்” நடுவண் அரசால் இயற்றப்பட்டுக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப் பட்டது.

இச்சட்டத்தின்படி, நிலத்தைக் கையகப்படுத்தும் போது, தனியார்-அரசு கூட்டுத் திட்டங்களுக்கு உழவர் களில் 80 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறவேண்டும். அரசுத் திட்டங்களுக்கு 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறவேண்டும். இந்த ஒப்புதல் எழுத்து வடிவில் இருக்க வேண்டும்.

ஊரகப் பகுதியில் கையகப்படுத்தப்படும் நிலத்துக் குச் சந்தை விலையைவிட நான்கு மடங்கும், நகர்ப் புறத்தில் சந்தை விலையைவிட இரண்டு மடங்கும் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும். இழப்பீட்டுத் தொகையை முழுமையாக அளித்த பிறகே நில உரிமையாளரை வெளியேறுமாறு கூறமுடியும். நேரு தொடங்கி வைத்த பக்ராநங்கல் அணைத் திட்டத்தி னால் நிலம் இழந்தவர்களுக்குரிய இழப்பீடு நான்கு தலைமுறைகள் கடந்த பின்னும் இன்னும் முழுமை யாகத் தரப்படவில்லை என்பது இங்கு நினைவுகூரத் தக்கதாகும்.

மேலும் நில உரிமையாளருக்கு மட்டுமின்றி, அந்நிலத்தின் குத்தகையாளர், நிலமற்ற வேளாண் தொழிலாளர்கள், வேளாண்மை சார்ந்த கைவினை ஞர்கள், சிறு கடைக்காரர்கள் ஆகியோருக்கும் நிலம் கையகப்படுத்தப்படுவதால் ஏற்படும் பாதிப்புகளைக் கண்டறிந்து இழப்பீடு அளிக்கவும் 2013-சட்டம் வழி வகுத்துள்ளது. இதற்காக இச்சட்டத்தில், ‘சமூகத் தாக்கம் குறித்து மதப்பீடு’ (Social Impact Assessment - SIA) செய்ய வேண்டும் என்பது நிலம் கையகப்படுத் தலின் முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியுள்ளது. ஒரு பெண்ணுக்கு அவள் உடல்-உணர்வு மீதான உரிமை உறுதி செய் யப்பட வேண்டும் என்பது போல, ஒரு உழவனின் உடலாகவும் உயிராகவும் உள்ள அவனுடைய நிலத்தின் மீதான உரிமையைச் சட்டத்தின் இப்பிரிவு அங்கீகரிக்கிறது.

நிலம் கையகப்படுத்துவதால் அங்கு வாழும் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினரின் கருத் தைக் கலந்துரையாடல் கூட்டம் நடத்தி அறிய வேண்டும். ஊராட்சி மன்றம் அல்லது கிராம சபையின் கருத்தைக் கேட்டறிய வேண்டும். திட்டத்திற்குத் தேவை யான நிலத்தின் அளவு, பாதிக்கப்படும் குடும்பங் களுக்கு மறுவாழ்வு, மறுகுடியமர்த்தல் செய்தல், சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு முதலானவை குறித்து வெளிப்படையாகப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்பதே சமூகத் தாக்கம் குறித்த மதிப்பீட்டின் நோக்கமாகும்.

எந்த நோக்கத்திற்காக நிலம் கையகப்படுத்தப்படு கிறதோ அதற்காக அய்ந்து ஆண்டுகளுக்குள் பயன் படுத்தாவிட்டால், நிலத்தை அதன் உரிமையாளரிடம் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கூறுகிறது இச்சட்டம். இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை இயக்குநரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சிறப்புப் பொருளியல் மண்டலங்களுக்காக ஒதுக்கப் பட்ட 45,653 எக்டரில், 28,488 எக்டரில் மட்டுமே வேலை தொடங்கப்பட்டுள்ளது.

5402 எக்டர் இலாப நோக்கத்திற்காக மற்றவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. தில்லியை ஒட்டியுள்ள நொய்டா சிறப்புப் பொருளியல் மண்டலத்தில் உழவர்களிடம் ஒரு சதுர மீட்டர் நிலம் ரூ.820 விலையில் வாங்கப் பட்டது. அதன்பின் ஒரு சதுர மீட்டர் நிலம் ரூ.35,000/-க்கு வேறொருவருக்கு விற்கப்பட்டது. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் தேவைக்கு அதிகமாகக் கையகப்படுத் தும் நிலத்தில் ஒரு கணிசமான பகுதி மனை வணிகக் கொள்ளைக்காகப் பயன்படுத் தப்படுகிறது.

நிலம் மற்றும் நில மேம்பாடு மாநில அதிகாரப் பட்டியலில் இருப்பினும், நிலம் கையகப்படுத்தல் பொது அதிகாரப் பட்டியலில் இருக்கிறது. இந்தியாவில் நிலம் தொடர்பாக 100 சட்டங்கள் உள்ளன. ஆயினும் நடுவண் அரசினிடம் உள்ள 16 சட்டங்களே முதன் மையானவை. 95 விழுக்காடு நிலங்கள் இந்த 16 சட்டங்கள் மூலம்தான் கையகப்படுத்தப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2013 நிலச்சட்டம் இயற்றப்படு வதற்குமுன், அதை ஆய்வு செய்த நாடாளுமன்ற நிலைக் குழு, முன்னர் கூறியதைச் சுட்டிக்காட்டி, உழவர்களின் ஒப்புதல் பெறல், சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை நடுவண் அரசின் 16 சட்டங்களுக்கும் பொருந்தும்படியாகச் சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

ஆனால் 16 சட்டங்களில், சிறப்புப் பொருளியல் மண்டலச் சட்டம், கன்டோன்மெண்ட் சட்டம், பாதுகாப் புத் துறை தொடர்பான வேலைகள் சட்டம் ஆகிய 3 சட்டங்கள் மட்டும் உழவர் ஒப்புதல், சமூகத்தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகியவற்றுக்கு உட்பட்டவை என்று மன்மோகன் அரசு 2013 சட்டத்தில் கூறியுள்ளது.

மீதி 13 சட்டங்களை இந்தப் பாதுகாப்பு வலையத்தில் ஓராண்டிற்குள்-அதாவது 2014 திசம்பர் 31க்குள் சேர்த் திட நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் நடவடிக்கை எடுக் கப்படும் என்று கூறியது. 2014ஆம் ஆண்டில் நாடாளு மன்றத்துக்குத் தேர்தல் நடைபெறவிருந்ததால், வாக்கு வங்கியை நோக்கமாகக் கொண்டு, 2013-க்குள் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அரசியல் நெருக்கடி காங்கிர சுக் கட்சிக்கும், அரசுக்கும் இருந்தது.

2014 திசம்பர் 31க்குள் உழவர்களின் ஒப்புதல், சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஆகியவை 13 சட்டங் களுக்கும் கட்டாயமாக்கப்படும் என்று மன்மோகன் அரசு தெரிவித்தது. அந்த 13 சட்டங்கள் பட்டியல் :

1.            நிலக்கரி வளம் உள்ள பகுதிகள் கையகப்படுத்தல் மற்றும் வளர்ச்சி சட்டம், 1957.

2.            தேசிய சாலைச் சட்டம், 1956.

3.            நிலம் கையகப்படுத்தல் (சுரங்கம்) சட்டம், 1885.

4.            அணுசக்திச் சட்டம், 1962.

5.            இந்திய டிராம்வே சட்டம், 1886.

6.            இரயில்வே சட்டம், 1889.

7.            பழங்கால நினைவகங்கள், தொல்பொருள் ஆய்வுச் சட்டம், 1958.

8.            பெட்ரோலியம், கனிம வளக் குழாய் வழிச் சட்டம், 1962.

9.            தாமோதர் பள்ளத்தாக்குக் கார்ப்பரேஷன் சட்டம், 1948.

10.          மின்சாரச் சட்டம், 2003.

11.          அசையாச் சொத்து, கேட்பு மற்றும் கைப்பற்றுதல் சட்டம், 1952.

12.          நிலம் கையகப்படுத்துவதால் இடம்பெயர்ந்தோர் களுக்கான மறுகுடியேற்றச் சட்டம், 1948.

13.          மெட்ரோ இரயல்வே கட்டுமான வேலைச் சட்டம்.

2014 திசம்பர் 31 அன்று மோடி பிறப்பித்த 2013 - நிலம் கையகப்படுத்தல் அவசரச் சட்டத்தில், இந்த அவசரச் சட்டம் பிறப்பிப்பதற்கு முதன்மையான காரணம், மேலே குறிப்பிட்டுள்ள 13 சட்டங்கள் மீது மன்மோகன் அரசு நடவடிக்கை எடுக்காததே என்று பழிபோட்டுவிட்டு, இனிமேல் இந்த 13 சட்டங்களின் கீழ் நிலம் கையகப்படுத்த உழவர்களின் ஒப்புதலோ, சமூகத் தாக்க மதிப்பீட்டு அறிக்கையோ தேவை யில்லை என்று அறிவித்தன் மூலம் உழவர்களின் உரிமையைப் பறித்துவிட்hர்.

மேலும் மிச்சம்மீதியில்லாமல் நிலத்தின் மீதான உழவர்களின் உரிமைகளைப் பறித்து, நிலத்தைத் தங்கத் தட்டில் வைத்து முதலாளிகளுக்குத் தருவதற் காக மோடி அரசு மேலும் பின்வரும் 5 பிரிவுகளை விதிவிலக்குப் பட்டியலில் சேர்த்துள்ளது.

1.            தேசியப் பாதுகாப்புத் தொடர்பானவை.

2.            இராணுவம் தொடர்பானவை.

3.            மின்சாரத் திட்டத்தை உள்ளடக்கிய அடிப்படை ஆதார வசதிகள்.

4.            தொழில் பூங்காக்கள் (இன்டஸ்டிரியல் காரிடார்°).

5.            ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டங்கள் (தனியார்-அரசு பங்களிப்புடன் கூடிய திட்டங்களான இவற் றில் நிலத்தின் உரிமை அரசிடமே இருக்கும்).

எனவே, மோடி அரசு பிறப்பித்துள்ள அவசரச் சட்டம் - கூட்டிக் கழித்துப் பார்த்தால், காலனிய ஆட்சியில் 1894ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலம் கை யகப்படுத்தல் சட்டத்தைவிடக் கேடான சட்டம் என்பது திட்டவட்டமாகப் புலப்படுகிறது.

இந்த அவசரச் சட்டம் மக்களவையில் 10-3-15 அன்று சட்டமாக நிறைவேற்றப்பட்டது. மாநிலங்கள் அவையில் பா.ச.க. கூட்டணிக்குப் பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்ற முயலவில்லை. இந்த அவசரச் சட்டம் 2014 ஏப்பிரல் 5-க்குள் நாடாளு மன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஒரு மாத விடுமுறைக்குப்பின் ஏப்பிரல் 20 அன்று தான் கூடுகிறது. ஆனால் அதற்குள் அவசரச் சட்டம் காலாவதியாகிவிடும். மீண்டும் ஒருமுறை அவசரச் சட்டமாகப் பிறப்பிக்க மோடியின் கார்ப்பரேட் அரசு முடிவு செய்துள்ளது.

2013-சட்டத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும், உழவர்களின், நிலம் சார்ந்து வாழும் மற்ற மக்களின் சில உரிமைகளைக் காக்கிறது. மோடி பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தில் ஊரகப் பகுதியில் நிலத்திற்கு நான்கு மடங்கு விலையும், நகரப் பகுதியில் இரண்டு மடங்கு விலையும் தரப்படும் என்கிற ஒன்றைத் தவிர, 2013 சட்டத்தில் உள்ள மற்ற ஆக்கக் கூறுகள் அனைத் தையும் அழித்து ஒழித்து விடுகிறது.

எனவே மோடியின் கம்பெனி அரசு மீண்டும் ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்காமல் தடுக்கவும், 2013 - நிலம் கையகப்படுத்தல் சட்டம் அப்படியே நீடிக்கவும் அனைத்துப் பிரிவினரும் உழவர்களுடன் சேர்ந்து வீதியில் இறங்கி கடுமையாகப் போராட வேண்டும்.

இச்சட்டம் பற்றி ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல கட்டுரைகளில் ஷேக்°பியர் எழுதிய வெனிசு நகர வணிகன் நாடகத்தில் கூறப்படும் ஒரு வசனத்தைக் குறிப்பிட்டுள்ளனர். அதுவே இக்கட்டுரையின் இறுதி வரி : ‘எந்த வாழ்வாதாரத்தைக் கொண்டு நான் வாழ்ந்து வருகிறேனோ, அதை நீ பறிக்கும் போது என் உயிரையே பறிப்பதாகும்’ - “you take my life/ when you take the means whereby I live”.